அத்தியாயம் 14
அறையின் ஒருபுறம் முழுக்க இருந்த திரையில் கடல் அலையடித்துக் கொண்டிருந்தது. ஜன்னல்கள் எதுவும் இல்லாத நீண்ட அறையின் நடுவில் ஒரு நீள்வட்ட மேஜையில் ஒரு டஜன் நாற்காலிகள் இருந்தாலும் நான்கைந்து பேர்தான் அமர்ந்திருந்தார்கள். எதற்காக வந்திருக்கிறோம் என்று யாருக்கும் தெரிந்திராததால் “அப்புறம், எப்படி இருக்கிறீர்கள்?” என்று காலம் கடத்திக்கொண்டிருந்தார்கள்.
கதவு திறந்தது. துப்பாக்கியுடன் இரண்டு காவலாளிகள் உள்ளே நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு “வரலாம்” என்று சொல்ல குடியரசுத்தலைவர் உள்ளே வந்தார்.
அறை அமைதியாகி அனைவரும் எழுந்து நின்றனர்.
பிரவீண் தன் கண்ணாடியைக் கழட்டி கோட்டுக்குள் நுழைத்துக்கொண்டே “உங்களையெல்லாம் பார்த்தே பல வருடம் ஆகிவிட்டது” என்றார்.
”தேவைகள் இல்லையே. எல்லாம் சுமுகமாகச் சென்றால் எங்கள் நினைவு எதற்கு வரப்போகிறது?” அப்போதுதான் அமர்ந்த ஒருவர் நண்பரிடம் பேசுவது போன்று இயல்பாகப் பேசினார். குடியரசுத் தலைவரிடம் பேசும் நடுக்கமோ மரியாதை கலந்த பயமோ தென்படவில்லை.
“புதிய மருத்துவத் திட்டம் வரைவு எல்லாம்?”
ப்ரேம் சிங் சைனிக் என்ற பலகைக்கு முன் அமர்ந்திருந்தவர், ”திட்டம் எல்லாம் தயார்தான். ஆனால் மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். அவர்களாக மருந்து வழங்கும் இடத்துக்கு வராவிட்டால் இந்தப் பெரிய அளவுத் திட்டத்தை ஆகஸ்ட் பதினைந்து அன்று அமல்படுத்த முடியாது.”
“வருவார்கள். அதற்குத்தானே மாஸ்மைண்டர்ஸ். முதலில் விருது வழங்கிவிடலாம், அப்போதுதான் மற்றதெல்லாம் ஒழுங்காக நடக்கும்” விருது என்பதைக் கொஞ்சம் அழுத்திச் சொன்னார். “அந்த நானூறு பேர். வந்துவிடுவார்கள்தானே?”
“அழைப்புகள் சென்றுவிட்டன, நூற்றைம்பதாவது சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. அதற்கு முன்னோட்டமாக ஆகஸ்ட் ஒன்று பாரதரத்னா விழா. வராமல் இருக்கும் அளவுக்கெல்லாம் இன்னும் யாருக்கும் உணர்வுகள் மாறியதாகத் தெரியவில்லை. ஓரிரு ஆட்களுக்குக் கொஞ்சம் கோபம் வரத்தொடங்கி இருக்கிறது. ஆனால் பயணத்தில் சரி செய்யும் அளவுக்குதான். கவலை வேண்டாம். அந்த விழா திட்டமிட்டபடி நடக்கும்.”
“பிரஜாபதி, உங்களிடம் மறுபடி கேட்கவேண்டியதாக இருக்கிறது. இந்த நானூறு பேரும்..”பிரவீண் இழுத்தார்.
“தேவைதான். நம் பழைய சுத்திகரிப்புத் திட்டங்கள் போதாமல் போய்க்கொண்டிருக்கும் நேரம் வந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு உணர்வுகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் விட்டாலும் பழைய மாதிரி ஊடகங்கள் பெருகும், பிரசாரங்கள் செய்வார்கள், கலவரங்கள் நடக்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே கட்டுக்கடங்காமல் போய்விடும். Prevention is better than cure” என்றார் பிரஜாபதி.
“அது புதிய மருத்துவக் கொள்கை. அதை நான் கேட்கவில்லை. இந்த நானூறு பேர்?”
“இந்தப்பட்டியல் முக்கியமான பட்டியல். மக்களில் பெரும்பான்மையானவர்கள் முட்டாள்கள். அவர்களைச் சமாளிப்பது சுலபம். இந்த நானூறு பேரும் அறிவுஜீவிகள். இவர்கள் என்ன நடக்கிறது, நடந்தது என்பதை ஊகிக்கத் தொடங்கிவிட்டால் இவர்கள் வேகமாக மக்களை மாற்றக்கூடியவர்கள். நடந்ததெல்லாம் தெரிந்தால் நாம் உலகத்துக்கு எவ்வளவு பதில் சொல்ல வேண்டியிருக்கும் தெரியுமில்லையா?” சக்ஸேனா பெருமூச்சு விட்டார். “எந்தக் கோர்ட்டிலும் தப்பிக்க முடியாது.”
”ஆனாலும்..” பிரவீண் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தார்.
“ஜனாதிபதி அவர்களே.. இருபது ஆண்டுகளுக்கு முன் நாம் சாதித்ததற்கு முன் இந்த விழா, புதிய மருத்துவக்கொள்கை – எல்லாம் சில்லறைத் திட்டங்கள்.” என்றார் பிரஜாபதி.
பிரவீண் யோசித்தார். அப்போது நடந்த வாதப்பிரதிவாதங்கள், சண்டைகள்..
இளமையாக இருந்த பிரவீண், ”பிரஜாபதி – உங்களால் இதைச் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.
”நிச்சயம் பிரவீண். அனந்தனின் அத்தனைத் தகவல்களையும் காபிரைட் என்று சொல்லிக் கைப்பற்றிவிட்டோம். ஜோன்ஸ் – அதுதான் அந்த சால்மர்ஸ் யூனிவர்ஸிட்டி ஆள் – 3டி பயாலஜிகல் பிரிண்டிங் செய்முறைகளையும் காசு கொடுத்து நமதாக்கிக் கொண்டுவிட்டோம். சந்தேகம் இருந்த இடங்களை ஹூபர்ட்டிடம் கேட்டுத் தெளிந்துகொண்டோம். சக்ஸேனாவின் தேர்ந்தெடுத்த ஆட்கள் குழு இதுவரை மூவாயிரத்து இருநூறு நபர்களிடம் எல்லாவிதமான சோதனைகளையும் செய்துவிட்டது. எல்லாமே வெற்றிதான். “
” இந்தத் திட்டத்தின் அளவுக்கு முன்னால் மூவாயிரம் என்பது மிகச்சிறிய குறுக்குவெட்டு. இல்லையா சக்ஸேனா?”
“மாண்டி–கார்லோ முறைப்படி செய்த சோதனை சார். இது சரியான சாம்பிள்தான். எல்லா வயது, பால், இன, மொழி வகை மக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.”
“தைரியமாக முன்னெடுக்கலாமா? விளைவுகளை உங்களால் பார்த்துக்கொள்ள முடியுமா?” பிரவீண் குரலில் கவலை தெரிந்தது.
”கவலைப்படாதீர்கள் பிரவீண். 2077 புதிய வருடத்தில் நாம் புதிய நாடு! நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.”
தற்போதைய பிரவீண், “இருபது ஆண்டுகள்.. நேற்றுவரை கூட நினைவுத்திருத்தங்கள் செய்யவேண்டி இருந்திருக்கிறது. அந்த மறுசீராக்கம் எவ்வளவோ நன்மைகளைக் கொடுத்திருக்கிறது என்றாலும் தொடர்ச்சியாக இதைக் கண்காணித்துக்கொண்டே இருக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதே போன்று இன்னொரு முறையுமா? காலத்துக்கும் அதே வேலையாகத்தான் திரிய வேண்டியிருக்குமே..”
பிரவீண் கவலையுடன் தொடர்ந்தார். “நானூறு அறிவியலாளர்கள். போன தலைமுறையின் சிற்பிகள். அவர்களை என்ன செய்வதாக உத்தேசம் பிரஜாபதி?”
“நினைவுத்திருத்தங்கள் போதாது பிரவீண். அந்த நிரல் கொஞ்சம் பலவீனமாகிவிட்டது. மாஸ்மைண்டர்ஸ் சொல்வதையும் பார்த்தால் வயதானவர்களுக்குக் கோபமெல்லாம் வருகிறது. இவர்கள் விஷயத்தில் எந்த வாய்ப்பும் எடுக்க முடியாது.” பிரஜாபதி சொன்னதில் இருந்த நிதானம் பிரவீணுக்குக் கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது.
“வெளிநாட்டுக்காரர்களையுமா? கேள்விகள் வராது?” பிரவீண் நெற்றியைச் சுருக்கினார்.
“அதைச் சரி செய்துவிடலாம். எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் டெலிபோர்ட் செய்ய நம் நிரலைத்தான் உபயோகிக்கவேண்டும். அது பார்த்துக்கொள்ளும். என்ன, மருந்து கொடுக்கும் இடங்களுக்கு மக்கள் தாமாக வரவேண்டும். அந்த ஒத்துழைப்பு இல்லையென்றால் பிரச்சினைதான்.”
பிரவீண் யோசித்தார். “சரி. நீங்கள் அந்த விழாவில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள், மக்கள் ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி என்பதற்கு மாஸ் மைண்டர்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
”பிரயாணம் சௌகரியமாக இருந்ததா கௌஷிக்?” அஸ்வினி வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்றாள். “இங்கே பக்கத்தில் டெலிபோர்ட் இல்லை. பத்து நிமிடமாவது நடக்கவேண்டியிருக்கும். கஷ்டமாக இருந்திருக்குமே?”
“பத்து நிமிடம் எல்லாம் ஒரு நடையா? ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது நடந்தால்தான் உடம்பு உடம்பாக இருக்கும். “ சிரித்த கௌஷிக், “இது பாவ்னா. மாஸ் மைண்டர்ஸில் அரசியல் பிரிவில் இருக்கிறாள். உங்களிடம் அவளுக்குத்தான் ஏதோ பேசவேண்டும்.”
பாவ்னாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் அஸ்வினி. “உங்களை எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. எப்படி இருக்கிறீர்கள்?” இறுக்கமான கை குலுக்கல்.
பாவ்னா சுருக்கமாகத் தன் வேலையைப்பற்றிச் சொன்னாள். அதிகத் தகவல்களைத் தராமல் “எனக்கு மூளை வழி மருத்துவம் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.” என்றாள்.
“அரசியல் பிரிவு என்றா சொன்னீர்கள்? அதற்கும் மூளைக்கும் என்ன சம்பந்தம்?” அஸ்வினி சிரித்தாள்.
“மூளை உள்ள எல்லாரையும் அடக்கி ஆளும் துறை அல்லவா அது? விஞ்ஞானிகள் என்ன என்னவோ கண்டுபிடிக்கிறார்கள். அது மக்கள் வரை சென்று அடைய அரசியல்வாதிகள்தானே வழி அமைக்கவேண்டும்? ஆக்குதலுக்கும் அழித்தலுக்கும் அம்பு மட்டும்தானே விஞ்ஞானம் தருகிறது? எய்வது அரசியல்தானே?”
“அடடா.. சும்மா நகைச்சுவைக்குச் சொன்னேன். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.” என்றவள் கொஞ்சம் தீவிரமான தொனியில் “நீங்கள் மூளை வழி மருந்துகள் ஏதாவது எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?”
“அதில்லாமல் எப்படி? கல்லூரி நாட்களில் நிறைய படிக்கவேண்டிய நாட்களில் தூங்காமல் இருக்க பேட்ச்கள், தூக்கம் வராத நாட்களில் தூங்க சிலவேளை பேட்ச் தேவைப்படும். பெண்ணாகப் பிறந்துவிட்டேனே.. மாதாந்திர அவஸ்தைகளின் போது வலி வந்தால் பேட்ச்..”
“அந்த பேட்ச்கள் எப்படி வேலை செய்கின்றன என்று தெரியுமா?”
“வேலை செய்கின்றன. அது தெரியும். எப்படி என்றெல்லாம் கேட்டால்? எனக்கும் அறிவியலுக்கும் ஆகாது.”
“டெலிபோர்ட்டிங் எப்படி நடக்கிறது என்று தெரியுமா?”
“மனிதனை ஒரு இடத்தில் முழுமையாக ஸ்கான் செய்து இன்னொரு இடத்தில் முப்பரிமாணமாக அச்சடிக்கிறார்கள் – சரிதானே?” என்றாள் பாவ்னா தயக்கமாக.
”ஏறத்தாழ சரிதான். விஞ்ஞானத்தின் மிகப்பெரிய விந்தை அந்தக் கண்டுபிடிப்பு. டெலிபோர்ட்டிங் சாத்தியமானதால் அதனுடன் சேர்ந்து பலப்பல புதிய – முன் எப்போதும் எதிர்பார்த்திராத சாத்தியங்கள் உருவாகின. அதில் ஒன்றுதான் இந்த மூளைவழி மருத்துவமும்.” ஒரு பெரிய உரைக்குத் தயாராவது போல் அஸ்வினி தொடங்க, பாவ்னா கைப்பையில் இருந்து குறிப்பேட்டை எடுத்துக்கொண்டாள்.
“ஒரு மனிதன் என்பது அவன் உடல், நினைவுகள் இரண்டின் சங்கமம். நினைவுகள் என்று பொதுவாகச் சொன்னாலும், அது பெரும்பாலும் மூளையின் செயல்பாடுதான். உங்கள் பேனாவை எடுக்க நினைக்கிறீர்கள், எடுக்கிறீர்கள். இந்தச் சுலபமான செயல்பாட்டுக்கு எத்தனை விஷயங்கள் ஒத்துழைக்கவேண்டும் தெரியுமா?” அஸ்வினி பதிலை எதிர்பாராதது போலத் தோன்றியதால் பாவ்னா அமைதியாகவே கேட்டுக்கொண்டிருந்தாள்.
“உங்கள் மூளையில் இருந்து ஒரு கட்டளை நரம்புகள் வழியாக கைக்குப் போகவேண்டும். கையின் ஒவ்வொரு விரலும் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு அசைய வேண்டும். பொருளை விரல்களின் மூலமாக உணர்ந்தது அதைப் பற்றிய விபரங்கள் மூளைக்குச் செல்லவேண்டும். அதை எடுக்கத் தேவையான சக்தியைப் பிரயோகிக்கவேண்டும். எடுக்கவேண்டும்..”
பாவ்னாவுக்குப் பிரமிப்பாக இருந்தது.
அவள் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டது போல “நான் சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ நுணுக்கமான விஷயங்கள் உண்டு.”
எனத் தொடர்ந்தாள். “ஆனால் அத்தனைச் செயல்பாடுகளையும் மென்பொருளாகவும் வன்பொருளாகவும் இரண்டே பிரிவாக ஆக்கும் விஷயத்தைத்தான் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.. இன்னும் சொல்லப்போனால் இவர்தான் கண்டுபிடித்தார்.” வரவேற்பறைக்கு நடந்து வந்த அனந்தனைக் காட்டிச் சொன்னாள்.
பாவ்னாவுக்குச் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி. வரலாற்றுப்புத்தகங்களில் பார்த்த மனிதனை நேரில் பார்க்கிறாள். எழுந்து வணங்கினாள்.
அனந்தன் பாவ்னாவை ஏற இறங்கப் பார்த்தார்.“மன்னிக்கவும். ஒரு புத்தகம் எடுக்க வந்தேன். உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன்” அனந்தன் மென்மையான குரலில் சொன்னார்.
“என் மாமனார். என் வாழ்நாள் சாதனை இவர் மகனைக் கைப்பிடித்ததுதான்.” அஸ்வினி முகத்தில் பூரிப்பு. “காபி தரட்டுமாப்பா?”
“வேண்டாம் வேண்டாம். நான் கீழே போயிடறேன். நீங்கள் தொடருங்கள்.” பொறுமையாகப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு படியிறங்கினார்.
அஸ்வினி,” எங்கே விட்டேன்?” கொஞ்சம் யோசித்துவிட்டு,” உடல் – எலும்பு தசை, நரம்பு இதெல்லாம் வன்பொருள், மூளை மென்பொருள் என்று முழு மனிதனையும் பிரித்துவிட்டார். மென்பொருளைத் தரவிறக்கச் செய்ய, படிக்க, ஆராய – எல்லாவற்றுக்கும் வழி கண்டுபிடித்துவிட்டார். வன்பொருளை வேறிடத்தில் முப்பரிமாண அச்சுப்போல உருவாக்கிவிடலாம் என்பது வேறு ஒரு உயிரியல் விஞ்ஞானி – பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள் – ஜோன்ஸ் – கண்டுபிடித்தார். இந்த மென்பொருளை அனுப்பிவிட்டால் அங்கே அந்த உடம்புடன் சேர்ந்து அதே மனிதன் உருவாகிவிடுவான், நொடிப்பொழுதில் எங்கிருந்தும் எங்கும் சென்றுவிடலாம்.”
பாவ்னாவுக்குப் பல எண்ணங்கள் மனதுக்குள் ஒரே நேரத்தில் ஓடின. அனந்தனைச் சந்தித்துப் பேசமுடியுமா? ஹூபர்ட்டைச் சந்தித்தது பற்றிச் சொல்லலாம். அஸ்வினி என்ன பேசிக்கொண்டிருக்கிறாள்? மருத்துவம் பற்றிக் கேட்டால் டெலிபோர்ட்டிங் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள்.
அதைப் புரிந்துகொண்டவள் போல அஸ்வினி,“இதில் மருத்துவம் எங்கே வருகிறது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். மூளை என்பதே ஒரு கணினிக் கோப்பு என்றாகிவிட்டால், அந்தக்கோப்பில் பிழை திருத்துவதும் எளிய விஷயமாகிவிடுகிறது, இல்லையா?”
பாவ்னாவுக்கு எதோ புரிவது போலிருந்தது. அஸ்வினி தொடர்ச்சியாக, “மூளைக்கு வெளிப்பக்கமிருந்தும் கட்டளைகள் தருவதும் சுலபமாகி விடுகிறது. நீங்கள் உபயோகித்த கணினி மருந்துகள் எல்லாம் அப்படிப்பட்ட கட்டளைகள்தான். தூங்கு என்று ஒரு கட்டளை. வலியா? அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஒரு கட்டளை.அசையாதே என்று கட்டளையிட்டால் அசையமாட்டார்கள். ஏறத்தாழ ஹிப்னாடிஸம் போல.”
பள்ளி அறிவியலில் படித்தது நினைவுக்கு வந்து “வலி என்பது எதோ ஒரு பிரச்சினையைச் சுட்டிக்காட்டுவதுதானே? வலியை மறந்துவிட்டாலும் அந்தப்பிரச்சினை சரியாகாதே?” பாவ்னா கேட்டாள்.
“சரியாகாதுதான். ஆனால் உடல் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மருத்துவமனைகளில் புதிய உடலாகவேகூட முழுமையாகத் தயாரித்துவிடலாமே. உங்களுக்குத் தெரியாததா?” போன மாதம் ரிச்சர்ட் எதோ வலி என்றதும் டெல்லிக்குப் போய்விட்டு வந்து அதைச் சொல்லாததும் ஞாபகம் வந்தது. மருத்துவமனைகளில் காசுள்ளவர்கள் உடல் உறுப்புகளை மாற்றிக்கொள்வதும் மேம்படுத்திக்கொள்வதும் கேள்விப்பட்டிருக்கிறாள்.
குறிப்பேட்டுப்பக்கங்கள் நிரம்பியே விட்டன. “நீண்ட நேரம் உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேன். இதைக் கொஞ்சம் படித்துவிட்டு, சந்தேகம் இருந்தால் நாளை கேட்கட்டுமா?”
“அவசியம். கௌஷிக் மட்டும்தான் என்னைத் தொந்தரவு செய்யவேண்டுமா? மாஸ்மைண்டர்ஸிலிருந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம்.”
நாளை வரும்போது டாக்டர் அனந்தனைப் பார்த்துக்கொஞ்சம் பேசவேண்டும்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சடகோபன் விடாப்பிடியாக இண்டெலிஜென்ஸ் அலுவலகத்தை அழைத்துக்கொண்டிருந்தார். பதில் சொல்லும் வரை விடப்போவதில்லை.
ஒரு வழியாக “பல்வீர் சிங் பட்டி பேசுகிறேன். யார் பேசறது?” என்ற குரல் கேட்டவுடன் துள்ளி எழுந்தார்.
“நான் சடகோபன். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர். என் மாணவர் டைசனை காவலர்கள் நேற்று காலை அழைத்துச் சென்றார்கள், இன்று வரை அவர் வரவில்லை .”
“டைசன்? பெயர் கேள்விப்பட்டது போல இல்லையே. ஒரு நிமிடம்..”
”கோபி? உனக்கு யாராவது டைசனைத் தெரியுமா?” போனை மூடவெல்லாம் இல்லை. வேண்டுமென்றேதானோ?
“நேற்று இங்கே வந்திருந்தாரே அந்த டைசனா? கனடா வெடிமருந்து எக்ஸ்பர்ட்?”
வெடிமருந்தா? சடகோபன் அதிர்ந்தார். மாட்டிக்கொண்டோமா?
பல்வீர் அந்தப்பக்கமிருந்து “கனடாவில் இருந்து வந்தவரா?”
சடகோபன். “ஆமாம். கனடாதான். ஆனால் அவர் அகழ்வாராய்ச்சி”
முழுமையாக முடிக்க விடாமல் “ஒரு சின்ன விசாரணைக்காகத்தான் அழைத்திருந்தோம்.. அவர் நேற்றே திரும்பிவிட்டாரே.. ”
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.