ஹேமா
ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது. இலக்கணத்தின் செய்வினை செயப்பாட்டுவினைக்காக இந்த வாக்கியத்தைச் சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தாள் உறவினரின் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் வினிதா. உண்மையில் ஷாஜகான்தான் தாஜ்மகாலைக் கட்டினாரா? உயரமான பிரம்மாண்டமான கட்டிடங்களையெல்லாம் யார் கட்டினார்கள்? அதற்காக பணம் செலவழித்தவர்களால்தானே அந்தக் கட்டிடம் கட்டட்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
என் அப்பா கட்டிய வீடு, அம்மா கட்டிய வீடு என்பது நாம் பலரும் சொல்லும் வாக்கியங்கள். அம்மா அப்பாவின் உழைத்த பணம் அதிலிருக்கிறது என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ அதைப் போலவே நம் வீடு என்பது முகம் தெரியாத வேறு பலரின் உழைப்பாலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டது என்பதும் மறுக்க முடியாத ஆனால் பலரும் மறந்துவிட்ட உண்மை.
வீடு கட்டி முடித்துவிட்டு பால் காய்ச்சும் போது புது உடை உடுத்திக்கொண்டு நம் உறவினர்களல்லாத சிலர் நம் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டிருப்பார்கள். வெள்ளையடித்த நம் வீட்டைப் போலவே வெள்ளையுஞ் சொள்ளையுமாக ஆண்களும், புதுப் புடவை அணிந்து கொண்டு பெண்களும் வந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வீட்டு முதலாளிகள் சாப்பிட இவர்களை அழைத்திருப்பார்கள். என்னதான் புதுத்துணி உடுத்திக் கொண்டு வந்திருந்தாலும் முகத்திலோ கை விரல் நகங்களிலோ ஆடையிலோ எங்கேனும் ஓரிடத்தில் கொஞ்சம் சிமெண்ட் ஒட்டியியிருப்பதைப் பார்க்க முடியும். சோப்பு போட்டு எவ்வளவு கழுவினாலும், தேங்காய் எண்ணெய்யை கை,காலெல்லாம் பூசிக்கொண்டு வந்தாலும், வெள்ளையாய் சிமெண்ட் கறை அவர்கள் உடலிலோ உடையிலோ எங்கேனும் படர்ந்திருக்கத்தான் செய்யும். புதுத் துணி என்பது வெறும் அந்நிகழ்விற்கான அரிதாரம்.
உண்மையென்பது சிமெண்ட்டோடும் மணலோடும் கலந்த அவர்களின் வாழ்க்கையே. குறைந்த பட்சம் அவர்களைச் சந்தித்துப் பேசிய உரையாடல்களின் தொகுப்பே இப்பதிவு.
நிலைமை: 1
யாராவது சீக்கிரம் ஓடி வாங்க. லட்சுமி அக்கா கால்ல செங்கல்லுங்க அடுக்கடுக்கா விழுந்துருச்சு. ‘ஐயோ அம்மா! வலி தாங்க முடியலையே,’ ‘மொதல்ல செங்கல்ல பூராம் சீக்கிரம் எடுங்கப்பா. கொஞ்சம் வலி பொறுத்துக்க அக்கா. தூக்குப்பா. தூக்கி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்கப்பா துணிய வச்சி ரத்தத்தைக் கட்டுங்க. மேஸ்திரி கிட்ட இருநூறு ரூபாய் வாங்கிட்டு வா. ஆஸ்பத்திரி செலவுக்கு ஆகும்’. இதுபோன்ற கூக்குரல்கள் கட்டிட வேலை செய்யும் எல்லா இடங்களிலும் அல்லது பெரும்பாலான இடங்களில் கேட்பதுண்டு. இங்கு அந்த கூக்குரல் லட்சமி அக்காவினுடையது.
லட்சுமி அக்காவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போய் வீட்டில் விட்டு இன்றோடு மூன்று மாதங்கள் ஆகின்றன. கால் உடைந்து காலில் கட்டோடு நடக்க முடியாமல் இன்னும் வீட்டில்தான் இருக்கிறாள். தினக்கூலிக்காரர்களுக்கு சீக்கு வந்துட்டா நிலைமை என்னவாகும். பசியும் பட்டினியும்தான். அவள் கணவன் அவளை விட்டுப் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அம்மா இறந்து போனாள். திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில்தான் அவள் வீடு. புருஷன் விட்டுவிட்டுப் போன பிறகு வேறு வழியில்லாமல் சித்தாள் வேலைக்கு போனாள். கைக்குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வேலை செய்து களைப்பாக வீடு திரும்புவாள். அம்மா சோறோ கஞ்சியோ எடுத்து வைத்திருப்பார். இப்பொழுது அம்மாவும் இறந்துட்டாங்க. காலும் உடைந்து கேட்க நாதியில்லாமல் அக்கம் பக்கத்தில் உதவியை இரந்து பெறக்கூடிய நிலையிலையே அவள் வாழ்க்கை ஓடுகிறது.
நிலைமை: 2
சென்னை மெரினா கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமையில் காலார வந்திருந்தார்கள் செல்வியும் சபரியும். கடற்கரையில் உட்கார்ந்து இருந்தாலும் கடற்காற்றை உள்வாங்கவில்லை மனம். ஏதோ ஒரு தவிப்பு மனதுக்குள் இருந்து கொண்டேயிருந்தது. அருகில் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தான் மகன் அப்பு . ‘அப்பா பாருங்க பெரிய வீடு கட்டியிருக்கேன். மூணு ரூம் இருக்கு. எனக்கு கூட தனி ரூம். அந்த விஜய் படத்துல வருமே அதுமாதிரி பெரிய வீடு.
‘அப்பு நீ சொல்ற மாதிரியெல்லாம் நடந்தா நல்லாதான் இருக்கும் இல்லைங்க.’ என்றாள் செல்வி. அடி போடி, ஒழுகுற ஓட்ட சரி பண்ண நாதியில்லை. தொடர்ந்து அம்மாவோட மருத்துவ செலவு, வீட்டு செலவு, இதுல மூணு ரூமாம், மாடியாம். போய் நடக்கிற வேலையப் பாப்பியா’.
கடந்த பத்து வருடங்களாக கட்டிடத் தொழில்தான் செய்து வருகிறார்கள் செல்வியும் சபரியும். தினக்கூலி தான். அது வீட்டுச் செலவுக்கும் மருத்துவச் செலவுக்குமே சரியாகி விடுகிறது. இதில் புதிதாக ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது. ‘புது வீடெல்லாம் நம்ம மாதிரி தினக்கூலிகளுக்கு வெறும் பகல்கனவு மட்டும்தான்’ என்று சொல்லி ஏக்கத்தோடு அலைகளை வெறித்துக் கொண்டிருந்தார் சபரி.
நிலைமை: 3
‘வெயில் காலத்தில் வெயிலில் வேலை செஞ்சு செஞ்சு மூஞ்சு முழுக்க வியர்க்குரு வந்துருச்சு. மழைக்காலம் எப்ப வரும்னு இருக்குதுயா.’ மீனா இந்த வார்த்தைகளைச் சொன்னவுடனே கோபமும் சிரிப்பும் ஒன்றுசேர கதிர் சொன்னான், ‘என்ன சொல்ற நீ, வெயில் காலத்துல எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் நமக்கு வேலை இருக்கும். வயித்துல ஈரத் துணியைக் கட்டிகிட்டு தூங்க வேணாம். கட்டிட வேலை நடக்கும். போன வருஷம் மழை பெஞ்சு மூணு மாசம் நாம பட்ட பாட்டை மறந்துட்டியா நீ. பிள்ளைக்கு பால் வாங்கக்கூட முடியாமல் ச்சை… அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.
வெயிலு கியிலுனு பார்த்தால் வேல ஆகுமா? ஏற்கனவே ஹிந்திக் காரங்க நிறைஞ்சு போயிருக்காங்க. குடுக்குற கூலிக்கு வேலை செஞ்சுட்டு போயிடணும். தோ.. குமார் அண்ணே, ‘என்னண்ணே கட்டிட வேலைக்கு வந்தவங்கள, பாத்ரூமெல்லாம் கழுவ சொல்றீங்கன்னு சண்டை போட்டுச்சு. அதோட நாலு மாசமா வேலை இல்லாமதான் இருக்கு. என்ன செய்ய. ஹிந்தி காரங்க பாதி காசுக்கு வேலை செய்ய ரெடியா இருக்காங்க. முறைச்சிக்கிட்டா கிடைக்கற கால்வயிறு கஞ்சிகூட கிடைக்காது.
‘அது என்னவோ சரிதாங்க. வெயிலயும் வேர்க்கூரையுமா பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? பசியைப் பொறுத்துக்கிட்டு வாழ இந்த மனுஷ ஜென்மத்தால முடியாதுல்ல’
லட்சுமி அக்கா கட்டிட வேலையில் கால் உடைந்து கேட்க ஆளில்லாமல் அக்கம் பக்கத்தில் இரந்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டார். சபரி தன் மகன் மணல் வீடு கட்டிக் கொண்டு நாமும் இப்படி ஒரு வீடு கட்டணும்ப்பா என்கிற ஆசையைக் கூறியபோது தன் இயலாமையால் கூனிக் குறுகி நின்றார். பசியைவிட வேறொன்றும் பெரிதில்லை என்கிறார் மீனா.

உண்மைதான் சாமானியர்களின் வாழ்க்கை பசியை மையப்படுத்தியேயிருக்கிறது. அத்தியாவசியத் தேவைகளுக்கு அல்லாடும் மக்கள் நிறைந்த இதே நாட்டில்தான் பணக்கார வர்க்கம் வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது. கட்டிடத் தொழிலையே செய்தாலும் ஒரு ஒழுகாத வீட்டை தன்னால் கட்டிக் கொள்ள இயலாத நிலையில்தான் பல தொழிலாளர்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் நம்மிடம் இருக்கிறதா என்றால் நாம் மீண்டும் உண்மையான மார்க்சியத்தையும் உண்மையான கம்யூனிசத்தையும்தான் கையில் எடுக்கவேண்டும்.
கட்டிடத் தொழிலென்பது இப்போது நாம் சர்வசாதாரணமாக காணும் ஒன்று. இதன் மூலமும், வரலாறும் பற்றி ஒரு சிறு குறிப்பு அறிவோம். ஆறாம் நூற்றாண்டுக்கு முன் கட்டிடக்கலையில் கட்டுமானப் பொருட்களாக வைக்கோல், மூங்கில், மரம், சுடுமண் போன்றவைகளே பயன்படுத்தப்பட்டன. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே கருங்கற்கள் கட்டுமானப்பணியில் பயன்படுத்தப்பட்டன. இப்போது போல படித்த பொறியியல் வல்லுநர்கள் அப்போது இல்லை என்றாலும் காலத்தால் நிலைபெற்று நிற்கக்கூடிய கட்டிடங்களை அக்காலத்து கட்டிடக்கலை நிபுணர்கள் கட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டுமான கோயிலாகும். தஞ்சை கோபுரத்தில் இருபத்தைந்தரை அடி சதுரமும் எண்பதாயிரம் கிலோவும் உடைய ஒற்றைக்கல் ஒன்று கோபுரத்தின் உச்சியில் உள்ளது. இதைக் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் இருந்தாலும், இருநூற்று பதினாறு அடி உயரத்தில் இக்கல்லை அக்காலகட்டத்தில் எப்படி ஏற்றியிருப்பார்கள் என்று சிந்திப்பதே இன்றளவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.
சிலப்பதிகாரத்தில் அக்காலத்து கட்டிடக்கலையைப் பற்றி கூறும்போது எதிரிகளிடமிருந்து தம்மை காத்துக்கொள்ள அரசர்கள் கட்டிடக்கலையில் பல்வேறு உத்திகளைப் புகுத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. பெரிய மதில்களில் ஏற முயலும் எதிரிகளைக் கீழே தள்ளிவிடும் இரும்புக் காப்புகள், எதிரிகள் கோட்டைக்கு அருகில் வரும்போது அவர்கள் மீது சுடச்சுட கொதிக்கும் எண்ணெயை கவிழ்த்துவிடும் பொறிகள், தூண்டில் பொறிகள், சங்கிலிப் பொறிகள், ஊசிப் பொறிகள் போன்ற பலவற்றையும் குறிப்பிடுகிறது அந்நூல்.
உணவு உடை உறைவிடம் என்பதே மனிதனின் தேவைகளாக ஆரம்பகாலத்தில் இருந்தது. உணவும் உடையும் எப்படி நாகரீக மாற்றத்தில் மாறியதோ அதைப்போலவே இருப்பிடங்களும் பாதுகாப்பு மற்றும் அலங்காரம் போன்ற பல்வேறு தளங்களில் மாறுபாடுகளை ஏற்றுக் கொண்டன. இன்று நாம் உலகெங்கிலும் காணும் மிக உயர்ந்த கோபுரங்களும் கட்டிடங்களும்
தொழில்நுட்பத்தின் காரணமாக உருவானதுதான் என்றாலும் அதற்கு மனித உழைப்பே அஸ்திவாரமானது என்பதை மறந்து விட முடியாது. உலக வரலாற்றில் மெசபடோமிய கட்டிடக்கலை, பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை, ஹரப்பன் கட்டிடக்கலை, கிரேக்க கட்டிடக்கலை, பண்டைய ரோமானிய கட்டிடக்கலை போன்றவை மிகவும் முக்கியமானவைகளாகும்.
உலகின் அதியங்களான சீனப் பெருஞ்சவர், ஜோர்தானில் உள்ள பெட்ரா, ரோமின் கொலோசியம், மெக்சிகோவின் சிச்சென் இட்சா, இந்தியாவின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், பிரேசிலிலுள்ள மீட்பரான கிறிஸ்து சிலை போன்றவற்றில் பெரும்பாலும் மனித உழைப்பே உலக அதிசயங்களாக மிளிர்கிறது. எளிய மனிதர்களின் உழைப்பும் சுரண்டல்களும் உலகின் அழகிய காட்சித் தளங்களாக மாறி இருக்கின்றன. வருடக் கணக்கில் கட்டிடத் தொழிலாளர்களின், கட்டிடக் கலை வல்லுநர்களின் அயராத உழைப்பு உலக அதிசயமாக காட்சிப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தாஜ்மகாலை கட்டி முடிக்க இருபத்திரெண்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறன . ஏறத்தாழ இருபத்திரெண்டாயிரம் மனிதர்களின் பல ஆண்டு கால உழைப்பே தாஜ்மகால். ஆயிரம் யானைகள் தாஜ்மகாலைக் கட்டி முடிக்கப் பயன்படுத்தப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. கட்டிட வேலை முடிந்து கட்டைகளையெல்லாம் அவிழ்ப்பதற்கே ஒரு வருடத்திற்கு மேலானது என்ற புள்ளிவிபரம் திடுக்கிட வைக்கிறது.
ஆதியில் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் நாகரீக வளர்ச்சியில் படிப்படியாக் தங்கள் இருப்பிடங்களை மாற்றி அமைத்துக் கொண்டனர். தற்போதுள்ள கட்டிடக்கலையின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பல்வேறு அசாதாரணமான, வானளாவிய, பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள். நவீன தொழில்நுட்பத்தில் ட்ரோன்ஸ் அதாவது ஆளில்லாத சிறிய வகை விமானம் மூலம் கட்டுமானத் திட்டப் பணிகளும், கண்காணிப்பு மேலாண்மையும் செய்யப்படுகின்றன. ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் அதாவது செயற்கை நுண்ணறிவு கொண்டு கட்டிடப் பணிகளின் செயலாக்கம், மேலாண்மை, மாதிரி திட்டங்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கட்டுமானத் தொழிலிலும் மிக முக்கியமான பங்காற்றுகிறது. நிலம் மட்டுமல்லாது கடலிலும் பிரம்மாண்டமான கட்டிடங்களும் பாலங்களும் நம்மிடையே உள்ளன.
தொழில்நுட்பத்தில் இவ்வளவு வளர்ச்சி பெற்ற நிலையிலும் நம்மிடையே கட்டிடத் தொழில் செய்யும் தொழிலாளர்களின் நிலை மட்டும் எவ்விதத்திலும் மாறவேயில்லை எனலாம். இன்றைய காலகட்டத்தில் சாதிய படிநிலைகளைப் போல கட்டிடத் தொழிலிலும் சில படிநிலைகள் உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. கட்டிடத் தொழிலில் வேலை செய்பவர்களை நாம் கொத்தனார், நிமிந்தாள், சித்தாள் , கையாள் போன்ற பெயர்களில் அழைக்கிறோம். இங்கு கொத்தனாரை விட நிமிந்தாளுக்கும் நிமிந்தாளைவிட சித்தாளுக்கும் கூலி குறைவாகவே தரப்படுகிறது. பொதுவாக கொத்தனாரைவிட சித்தாளுக்குதான் உடலுழைப்பு அதிகம். கொத்தனாருக்கு திறமை வேணும் செங்கல்லை அழகாக அடுக்கி பூசுவதற்கு. அதையெல்லாம் கற்றுக்கொண்டு கொத்தனாருக்கு நிகராக திறம்பட வேலை செய்தாலும் சித்தாளுக்கு கொத்தனாருக்கு கொடுக்கப்படுகின்ற கூலி வழக்கப்படுவதில்லை. இந்த சம்பளக் குறைவு என்பது சித்தாள் வேலை செய்யும் பல பெண்களின் மனக் குறையாகவே இருக்கிறது. அவர்களோடு பேசிய சில உரையாடல்களை பெயர் மாற்றங்களோடு இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.

சித்தாளாக சென்னை அம்பத்தூரில் பணிபுரியும் ராணி அக்காவுடனான உரையாடல்:
அக்கா ஏன் இந்த கட்டிட வேலைக்கு வந்தீங்க?
சின்ன வயசுலயே அப்பா செத்துட்டாரு. வீட்டில என் கூடப் பொறந்தவங்க அஞ்சு பேரு. வேலைக்குப் போனாதான் சோறுங்கற நிலைமைக்கு வந்ததுக்கப்பறம் என்ன செய்ய முடியும். எனக்கும் படிப்பும் ஏறல. மூணாம் கிளாஸ்தான் படிச்சேன். அப்ப கொஞ்சநாள் வீட்டு வேலைக்கு அம்மாவோட போயிட்டிருந்தேன். அதுக்கப்பறம் அம்மாக்கும் நோவு. படுத்த படுக்கையா ஆயிட்டாங்க. அப்போலயிருந்நு இந்த கட்டிட வேலைதான் செய்றேன்.
பிள்ளைகள் என்னவாகனும்னு ஆசப் படுறீங்க?
எப்பாடு பட்டாவது படிக்க வெச்சிரணும். சின்னதுக்கு போலிஸ் ஆகனுமாம். பெரிய புள்ளைய டாக்டராக்கனும் ஆச. நாமதான் படிக்கல. இப்படி சிமெண்ட்லயும் மணல்லயும் இருக்கிறோம். புள்ளைங்களுக்கு அந்த நிலமை வரக்கூடாது.
இந்த வேலையில என்ன கஷ்டமா இருக்கு?
கூலி ரொம்ப கம்மியா தராங்க. கொத்தனாருக்கு தர பாதி கூலிதான் சித்தாளுக்கு தராங்க. பொம்பளாளுக்கு அவ்ளோதான் தரமுடியும்னு சொல்றாங்க. என்ன செய்யறது. சில மேஸ்திரிங்க அதுலயும் காசப் புடிச்சிக்கிட்டு குடுப்பாங்க. இஷ்டம் இருந்தா வேலைக்கு வான்னு சொல்லுவாங்க. நானென்ன கலெக்டருக்கா படிச்சிருக்கிறேன். படிப்பில்லாம வேற எந்த வேலைக்குப் போறது. இப்ப இரண்டு புள்ளைங்க வேற ஆயிடுச்சி.
அதுகூட பரவாயில்ல. பொம்பளைங்க இங்க வேல செய்யறதுல வேறு சில பிரச்சனைங்களும் இருக்கு. இரண்டு புள்ள பெத்தவனு கூட பாக்கம சீண்டுவானுங்க. பொதுவா யாராவது தப்பா நடந்துக்கிட்டா மேஸ்திரிட்ட இல்ல சூப்பர்வைசர்கிட்ட சொல்லுவோம். அவங்களே தப்பா நடந்துகிட்டா ரொம்ப கஷ்டம். வேலை வேணும்னா இணங்கிப்போனு சொல்லுவானுங்க. வேலயதான் விட்டுட்டுப் போகணும். ஏன்தான் இந்த பெண் ஜென்மம் எடுத்தேனு அப்பலாம் தோணும்.
தன் மனக்குறையை கண் கலங்க முடித்தார் ராணி அக்கா.
கேரளத்தின் கொச்சியின் உள்ள காக்கநாட்டில் கட்டிட வேலை செய்யும் பிஜூவுடனான உரையாடல் பெயர் மாற்றத்தோடு தமிழ்படுத்தப்பட்டுள்ளது.
பிஜு உங்க சொந்த ஊரே இதுதானா? எவ்வளவு வருஷமா இங்க வேலை செய்றீங்க?
என் சொந்த ஊர் பாலக்காடு. ஒன்பதாவது வரை அங்க படிச்சேன். அப்பறம் மாமாவோட இங்க வந்துட்டேன். ஆறேழு வருஷமா இந்த வேலதான் பாக்குறேன். தமிழ் ஆளுங்க நிறைய பேர் இங்க வேலைக்கு வராங்க.
இந்த வேலைல என்ன கஷ்டமா இருக்கு?
ஆரம்பத்துல வெயில்ல வேலை செய்ய கஷ்டமா இருக்கும். இப்ப பழகிருச்சு. உண்மையில் மழைக்காலம்தான் ரொம்ப பிரச்சனை. இங்க வருஷத்துல அஞ்சு மாசம் நல்ல மழை இருக்கும். அப்போ வேலை ஒன்னும் இருக்காது. அப்போ சில சமயம் தண்ணி கேன் போடுறது எலக்ட்ரிக் வேல அதுபோல போவேன். ஆனால் எல்லா மழைக் காலத்துலயும் வேல கிடைச்சிராது. கிடைக்கலனா வீட்டுக்கு காசு அனுப்ப முடியாது. தங்கச்சி காலேஜ் படிக்கிறா. எதாவது வேல செஞ்சி காசு அனுப்பித்தானே ஆகணும்.
நீங்க வெளிநாட்டுக்கு முயற்சி பண்ணலயா? கேரள மக்கள் பாதிபேர் அங்கதான இருக்காங்க?
கட்டிட வேல அங்க ட்ரை பண்ண பயமா இருக்கு. அங்க அடிக்கற வெயில்ல எப்படி வேல செய்வேன்னு பயமா இருக்கு. அதனால இதுவரை முயற்சி பண்ணல.
மதுரையிலிருந்து துபாய் சென்று கட்டிட வேலை செய்யும் பழநியுடனான உரையாடல்:
எத்தனை வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்றீங்க?
2005லிருந்து வெளிநாட்டில கட்டிடவேலை செய்றேன். முதல்ல சூடானில் கொஞ்ச காலம். அப்பறம் வளைகுடா நாடுகளில் பல இடங்களிலும் வேலை செஞ்சிருக்கேன்.
எங்க வேலை செய்யும்போது ரொம்ப கடினமா உணர்ந்தீங்க?
சூடானில் கட்டிட வேலை செய்யும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ரெண்டு மூணு மணிநேரம்தான் துங்குவோம். அதுவும் சைட்லயேதான்.
வளைகுடா நாடுகளில் வெயில்ல வேலை செய்த அனுபவத்தை சொல்லுங்க?
ஐய்யோ அதையேன் கேக்குறீங்க. தாங்க முடியாத வெயில் அடிக்கும். காலை பதினோரு லிருந்து மதியம் இரண்டு மணி வரை ப்ரேக் தருவாங்க. ஆனால் இரண்டு மணிக்கும் அப்படி ஒரு வெயிலடிக்கும். ஹுயுமிட்ல மூச்சு விட முடியாமல்லாம் சில முறை ஆயிருக்கு. கேம்ப்ல காலைல மூனு மணிக்கெல்லாம் எழுந்து பாத்ரூக்கு லைன்ல நிக்கனும். அப்படி ரெடியானாதான் ஏழு மணிக்கு வந்து சைட்ல சேர முடியும். மாலை ஐந்து மணி வரைக்கும் வேல. சில நேரம் ஓவர் டைமும் இருக்கும்.
நம்ம ஊரு விட்டுட்டு இங்க வந்து வேலை செய்றீங்க. வெளி நாட்டு வேலைனு எல்லாரும் சொல்லுவாங்கள்ல?
சொல்லுவாங்க. அவங்களுக்கு என்ன தெரியும் நாங்க பட்ற கஷ்டம். வெயில்காலம்கூட பரவாயில்லை. குளிர்காலம் வந்துட்டா கைய மடக்க முடியாது. வெரச்சிடும். கிளவுஸ் போட்டுச் செய்வோம். லேபர் கேம்ப் ஒரு ரும்ல ஆறு பேரிலிருந்து இருபது பேர் வரை தங்குவாங்க. குடும்பத்த எல்லாம் விட்டுட்டு இங்க வந்து குளிர்லயும் வெயில்லையும் நாங்க பட்ற பாடு. அதெல்லாம் சொன்னா புரியாதுங்க.
நம்ம ஊர்ல மேஸ்திரிங்க சம்பளத்த புடிச்சிட்டு கொடுக்கறமாதிரி இங்கயும் பிரச்சனை இருக்கா?
இங்க பொதுவா அப்படி பிரச்சனை இருக்காது. ஆனால் லேபர் சப்ளை கம்பெனி மூலமா போனம்னா பாதி சம்பளம்தான் தருவாங்க.
ஊருக்கே திரும்பி போயிடலாம்னு நினைக்கிறீங்களா?
அப்படி நினைச்சிதான் பத்து வருஷத்த ஓட்டிட்டேன். பொண்டாட்டி பிள்ளைங்களோட இல்லாம என்ன வாழ்க்கைங்க? எப்படியாவது வீடு கட்டிருவேனு சொல்லிட்டு வந்தேன். இதுவரைக்கும் அது நடக்கல. எவ்வளவோ பில்டிங் கட்றோம். நமக்குன்னு ஒரு செங்கல்ல நட்ற நாளு என்னைக்கு வருமோ?
எத்தனையோ ஏக்கபெருமூச்சோடுதான் சாமானிய மக்கள் எங்கு வாழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கட்டிட வேலை எனும்போது கொத்தனார்கள் சித்தாள்கள் மட்டுமல்லாது எலக்ட்ரிக் வேலை செய்பவர்கள், கார் பெண்டர்கள் போன்ற பலரும் அடங்குவார்கள். பலரும் சொகுசாக வாழும் இதே பூமியில்தான் வாழ்வாதாரத்திற்காக எத்தனையோ சவால்களை சந்தித்துக் கொண்டிருகாகிறார்கள் இவர்கள். ஒரே பூமிதான். ஒரே வாழ்வுதான். ஓங்கி ஒலிக்காத இது போன்ற எளிய மனிதர்களின் குரல்கள் பலரின் காதுகளாலும் கேட்கப்படுவதேயில்லை. சொந்த வீடு என்பது பலரின் கனவு. வங்கிக் கடன் வாங்கியாவது ஒரு வீட்டை கட்டிவிடத் துடிப்பவர்கள்தான் நாம் எல்லோரும். கட்டிடத் தொழிலிலேயே இருந்துகொண்டு பலருக்கும் அழகான பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்போது பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் எளிய வீடொன்றை கட்டிவிட மாட்டோமா என்கிற இவர்களின் ஏக்கம் நிறைவேறும் காலமும் வருமா?
எளிய மனிதர்களின் வாக்குமூலங்களோடு குரலற்றவர்களின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரும்…
ஹேமா
நன்றி: படங்கள் இணையத்திலிருந்து
12 comments on “கதையல்ல வாழ்வு – 2 “ஒளிரும் கட்டிடங்களும், ஒளிந்திருக்கும் மனித உழைப்பும்””
rajaram
அருமையான கட்டுரை, என் மனதிற்கு நெருக்கமான கட்டுரையும்கூட எங்கள் வீடு கட்டும்போது நடந்த நிகழ்வுகளெல்லாம் நினைவுக்கு வந்தது சிறப்பு.
Hema
அன்பும் நன்றியும் ராஜாராம். நீங்கள் கொடுக்கும் ஊக்கம் மிக முக்கியமானது @Rajaram
JAZEELA BANU
சிறப்பு ஹேமா. நிறைய தகவல்கள். தொடர்ந்து சிமிண்ட்டில் வேலைப் பார்ப்பதால் ஏற்படும் உடல் உபாதைகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.
Akila
கட்டிட தொழிலாளர்களின் பிரச்சனைகளையும், அவர்களின் வலியையும் பிரதிபலிக்கும் பிம்பமாக இந்த கட்டுரையை பார்க்கிறேன். வாழ்த்துக்கள் ஹேமா. I would like to conclude by quoting an optimistic line, If winter comes, can spring be far behind?.
Uma
அருமை ஹேமா...தலைப்பிற்குப் பொருத்தமான நிறைய தகவல்களை அளிப்பது,மேலும் சிறப்பினை சேர்க்கிறது...
kumar
சிறப்பான கட்டுரை. கட்டிடத் தொழிலாளர்களின் உண்மை நிலையைப் பேசும் கட்டுரை. எளிய மனிதர்கள் பற்றிய தொடர் சிறப்பாய் நகர்கிறது. வாழ்த்துகள்.
jeeva
சிறப்பு. தொடருங்கள். இன்னும் எத்தனை எத்தனையோ உதிரித் தொழிலாளிகளின் வாழ்க்கையையும் பாடுகளையும் எழுதுங்கள்.
Hema
மிக்க நன்றி தோழர் அகிலா @Akila
Hema
அன்பும் நன்றியும் உமா மேம் @Uma
Hema
தொடர்ந்து வாசித்து கருத்தளிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி குமார் @சே.குமார்
Hema
நிச்சயமாக தோழர் ஜீவா. மிக்க நன்றி @Jeeva
Hema
மிக்க நன்றி ஜெஸீலா. அதையும் இணைக்க இயலுமா என்று பார்க்கிறேன் @jazeela banu