நாள் 19 அத்தியாயம் 29& 30
29. மன்னிப்பு
பல்லாவரத்தின் மேற்கே திருநீர்மலையின் யாருமில்லாத உச்சியில் வெயிலில் அமர்ந்து இருந்தார் ஜெகதீசன். மனம் மிகுந்த சஞ்சலத்திற்கு உள்ளாகும் போது இங்கு வருவது வழக்கம். ஆனால் இம்முறை இருக்கும் மனஅழுத்தம் இதுவரை அவர் வாழ்க்கையிலேயே சந்தித்து இராதது. வெயிலில் காய்ந்து கொண்டிருந்த பாறை மீது அமர்ந்து அழுத்தம் தாங்காமல் வெடித்து அழுதார்.

ஒரு கணம் மலையில் இருந்து குதித்து விடலாமா என அவருக்குத் தோன்றியது. எப்பேர்ப்பட்ட நம்பிக்கை துரோகத்தை விளையாட்டுத்தனமாக செய்து விட்டோம் என நினைக்கும் போது அவரின் நெஞ்சு வலித்தது. அதைவிட அதிக அளவு வலி தனது நெருங்கிய நண்பனால் ஏமாற்றப்பட்டதை நினைக்கும் போது ஏற்பட்டது.
“இனி எப்படி ஸ்டேஷனுக்கு போவது? எப்படி கார்த்திக் ஆல்டோ முகத்தில் விழிப்பது? என்ன காரணம் சொல்வது? சொன்னாலும் அவர் நம்புவாரா? நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை? அசட்டையாக எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கேன்?”
ஒரு முடிவு எடுத்தவராக திருநீர்மலையில் இருந்து கீழிறங்கினார். நேராக பல்லாவரம் காவல் நிலையம் வந்தார். யாரிடமும் பேசாமல் சரசரவென ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எழுதத் தொடங்கினார்.
“அன்புள்ள கார்த்திக் ஆல்டோ அவர்களுக்கு,
நேற்று வெளியாகிய அந்த விபத்து வீடியோவை மொபைலில் எடுத்தது நான் தான். நீண்ட வருடங்களாக எனக்குப் பழக்கமான நண்பன் ஒருவன் கடந்த சில மாதங்களாக என்னுடன் நெருங்கிப் பழகினான். அவன் தேசியக் கட்சியில் ஒரு பதவியில் உள்ளான். என்னை குடியரசு தலைவர் விருதுக்கு பரிந்துரைக்க மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளதாக ஆசைகாட்டி நெருங்கினான். அவனது உள்நோக்கம் அறியாமல் நானும் நெருங்கிப் பழகினேன். பேச்சுவாக்கில் ஆரச்சாலை வழக்கு தொடர்பான சில விசயங்களையும் கேட்டறிந்தான். அவனை ஆபத்தற்றவன் என நினைத்து செல்வ இளங்குமரன் அறிக்கை தொடங்கி பல விசயங்களை அவனுடன் நான் பகிர்ந்து கொண்டேன். அப்படியாக நேற்று நான் எடுத்த வீடியோவையும் பகிர்ந்தேன். ஆனால் அவர்கள் அதை வைத்து இவ்வளவு கேவலமாக அரசியல் செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பிரச்சனைகள் அனைத்திற்கும் நானே காரணம். இதற்கு நிர்வாக ரீதியாகவும், நீங்கள் தனிப்பட்ட முறையிலும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளேன். நான் செய்த குற்றம் மன்னிக்க இயலாதது. இருந்தாலும் இதற்கு மன்னிப்பு கோருவது ஒன்றே வழி. தயவு செய்து மன்னிக்க முயற்சிக்கவும்.
இப்படிக்கு
ஜெகதீசன், ஆய்வாளர், எஸ்.5 பல்லாவரம் காவல் நிலையம். ”
கலங்கிய கண்களும், வீங்கிய முகமுமாக கையில் கடிதத்துடன் ஆல்டோவின் அறைக்குள் நுழைந்தார்.
“என்ன ஜெகதீசன் சார் முகமெல்லாம் வீங்கி இருக்கு நைட் தூங்கலயா?” ஆல்டோ இயல்பாகக் கேட்டான்.
எதுவும் பேசாமல் அந்தக் கடிதத்தை கொடுத்தார். ஆல்டோ அதைப் பொறுமையாகப் படித்தான்.
“அந்த வீடியோ எடுத்த ஆங்கிள் பார்த்த உடனே கண்டுபிடிச்சிட்டேன். எனக்கு லெப்ட் சைட்ல இருந்து எடுத்த வீடியோ. நேத்து நைட் எனக்கு லெப்ட் சைட்ல ரொம்ப நேரம் இருந்த ஒரே ஆள் நீங்க தான்.”
“என்னோட நெருங்கிய நண்பன்னு நினைச்சேன் சார். அவன் இப்படி செய்வான்னு எதிர்பார்க்கல. நான் கொஞ்சம் கரடு முரடான ஆளு. திமிரா எடுத்தெறிஞ்சு பேசுவேன். ஆனா கடவுள் சத்தியமா யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்ய நினைச்சதில்லை சார்.” மீண்டும் கண்ணீர் வழிந்தது.
“எதுக்கு சார் இவ்ளோ ஃபீல் பண்றீங்க. ஃப்ரீயா விடுங்க.”
“எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு, நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு நம்புறேன். ஆனா அந்த நம்பிக்கையை, கூட இருக்க இன்னொரு மனுஷன் வாழ்க்கையை நாசமாக்க நான் பயன்படுத்த மாட்டேன். பயன்படுத்த விடவும் மாட்டேன்.”

“தமிழ்நாட்ல பெரும்பாலானவங்க அப்படித்தான் ஜெகதீசன் சார். நான் தான் எதுவுமே சொல்லலயே.”
“என்னைய திட்டிருங்க சார். வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோங்க. இதை எல்லாம் செய்தது நான் தான்னு என் கைப்பட எழுதி கொடுத்துருக்கேன். டிப்பார்ட்மெண்ட்ல என்ன ஆக்சன் வேணும்னாலும் எடுத்துக்கோங்க.”
“ஒரு மனுசனோட நோக்கத்தை தெரிஞ்சுக்கிறது பெரிய விசயமே இல்ல. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். இதை எல்லாத்தையும் இங்கயே மறந்துடுங்க.”
ஆல்டோ அந்தக் கடிதத்தை மெதுவாகக் கிழித்துப் போட்டான்.
“எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். தமிழ்நாட்டுக்காரனா இருந்துட்டு இவ்வளவு ஈஸியா அவனுங்க கிட்ட ஏமாந்துட்டிங்களேன்னு மட்டும்தான் வருத்தம். நம்ம பொறுப்பை நம்ம உணரனும் சார்”
தலைகவிழ்ந்து நின்றார்.
“அடுத்த வேலையைப் பார்ப்போம். இனிமே தான் நமக்கு நிறைய ஒர்க் இருக்கு. கிருஷ்ணகுமாரை கண்டுபிடிக்கனும். திருவும் ஹாஸ்பிடல்ல இருக்கார்.”
“இல்ல சார், இனிமே நான் இந்த கேஸ்ல இருக்கது நல்லாயிருக்காது. நான் விலகிக்கிறேன்.”
“ஏன் ஜெகதீசன், நான் சொல்றத கேட்கவே கூடாதுன்னு முடிவோட வந்துருக்கீங்களா? ஐ டோல்ட் டு ஒர்க் ஆன் திஸ் கேஸ்” ஆல்டோ குரலை உயர்த்தினான்.
“ஸாரி சார். யெஸ் சார்.”
“கிருஷ்ணகுமார் பத்தி இந்த ஸ்டேசன்ல இருக்க எல்லா டிடெயிலும் இன்னும் அரை மணி நேரத்தில் என் டேபிளுக்கு வந்தாகனும்.”
“யெஸ் சார்.”
“ஜெகதீசன், ஒரு முக்கியமான விசயம். அந்த லேடி, மீனா அகர்வால் கிட்ட திரும்ப ஜூம் கால் ஏற்பாடு பண்ணுங்க. உடனே, இம்மீடியேட்டா. பிரஸ், கிருஷ்ண குமார் மேட்டரை லீக் பண்றதுக்கு முன்னாடி நம்ம மீனா அகர்வால் கிட்ட பேசியாகனும்.”
“ஓகே சார்.”
அரைமணி நேரமாக ஆல்டோ காத்திருந்தான். ஜெகதீசன் வரவில்லை. எழுந்து ஜெகதீசனின் அறைக்குச் சென்றான்.
“சார் அந்தம்மா ஆஃப்லைன்ல இருக்காங்க. மொபைலும் நாட் ரீச்சபிள். எவ்வளவோ டிரை பண்ணிட்டேன்.”
“அகர்வால் அசோசியேட் நம்பர் இருக்கா?”
“நெட்ல தேடிப்பார்த்தா கிடைக்கும் சார்”
“ஹலோ அகர்வார் அசோசியேட்? கேன் ஐ ஸ்பீக் டு மீனா அகர்வால்?”
“ஸாரி சார். ஷி இஸ் நாட் அவய்லபிள்.”
“கேன் யூ ஹெல்ப் மீ டூ காண்டாக்ட் ஹெர்?”
ஆல்டோவின் பேச்சை கேட்காமல் மறுமுனை வைக்கப்பட்டது.
அப்போது ஜெகதீசனின் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
“நான் பயணத்தில் இருக்கிறேன். இரண்டு மணி நேரம் கழித்து கால் செய்யவும். – மீனா அகர்வால்.”
ஆல்டோ தளர்வாக நாற்காலியில் அமர்ந்து மொபைலை எடுத்தான்.
30. அரட்டை
“எல்லா நியூஸ் பேப்பர்லயும் உன் பேர் தான். ஒரே நாள்ல ஹீரோ ஆயிட்ட போல.” ஆல்டோவின் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் வந்தது.
“ஹீரோவா? கரணம் தப்பினால் மரணம்ன்னு இருந்தேன். கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா, இந்த கேஸ் சிபிஐக்கு போய்ருக்கும். மொத்த டீமுக்கும் பெருத்த அவமானம் ஆயிருக்கும். சொல்ல முடியாது, திருநாவுக்கரசு ஆக்ஸிடெண்ட் விசயத்தில் என்னை சஸ்பெண்ட் கூட செஞ்சிருப்பாங்க.”
“எத்தனை கேஸ் சால்வ் பண்ணிருப்ப, இந்த ஒரு பிரச்சனைக்காகவா சஸ்பெண்ட் பண்ணப் போறாங்க?”
“உனக்கு வயசு என்ன?”
“சொல்லமாட்டேன்.”
“தெரிஞ்சுக்கிறதுக்காக இல்ல. ஒரு எடுத்துக்காட்டுக்காக கேட்கிறேன்.”
“அந்த எடுத்துக்காட்டை உன் வயசை வச்சு சொல். எதுக்கு என் வயசு?”
“சரி நம்ம ரெண்டு பேர் வயசும் வேண்டாம். மூனாவது யாரோ ஒரு ஆள்ன்னு வச்சுக்குவோம். அவருக்கு வயசு முப்பது. அவர் எத்தனை வருசம் தொடர்ச்சியா மூச்சு விட்டுருப்பார்?”
“இதென்ன கேள்வி? முப்பது வருசமா தொடர்ச்சியா மூச்சு விட்டுருப்பார்.”
“சரி, முப்பது வருசமா தொடர்ச்சியா மூச்சு விடுறார்ல? பத்து நிமிசம் நிறுத்தி ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப மூச்சு விடலாமா?”
“அதெப்படி முடியும்? செத்துருவார்ல?”
“அப்படித்தான் வேலையும். எத்தனை வருசம் தொடர்ச்சியா நல்லா வேலை பார்த்தோம்ங்கிறது முக்கியம் இல்ல. எப்ப சறுக்குறமோ அப்ப மேல மண்ணைப் போட்டு மூடிருவாங்க. வேலை மட்டுமில்ல சொந்தபந்தம் கூட அப்படித்தான். நூறு உதவி செஞ்சு நூத்தி ஒன்னாவது தடவை செய்யலன்னா அவ்ளோ தான்.”
“ஒருவேளை அந்த சுவர்ல இருந்த மெசினை நீ கண்டுபிடிக்கலன்னா என்ன ஆகியிருக்கும்?”
“அன்னைக்கு லீக் ஆன திரு ஆக்ஸிடெண்ட் வீடியோ வைரல் ஆகியிருக்கும். என் மேல என்க்கொயரி வச்சிருப்பாங்க. போலீஸ்காரரை பலி வாங்கிய ஆரச்சாலை ஆவிகள்ன்னு யூடியூப்ல வீடியோ போட்டுருப்பாங்க. டைரக்டர் அருள்மொழிக்கு எம்பராசிங்கா ஆயிருக்கும். கேஸ் சிபிஐக்கு போயிருக்கும்.”
“இந்த எல்லாமே ஒரே ஒரு இன்சிடெண்ட்டால மாறிடுச்சு. அந்த மெசினை கண்டுபிடிச்ச உடனே இவ்ளோ நாள் இழுத்துட்டு இருந்த ஆவி, பேய் கதை எல்லாம் ஒரே நிமிசத்தில் நொறுங்கிடுச்சு.”
“நமக்கு புரியாத வரை தான் ஆவி, பேய், அமானுஷ்யம் எல்லாம். புரிஞ்சிருச்சுன்னா எல்லாமே சாதாரண விசயம் தான்.”
“அதெல்லாம் ஓகே. எனக்கு ஒரு விசயம் புரியல. எதுக்கு இதையெல்லாம் கிருஷ்ணகுமார் செய்யனும்? முதல் ரெண்டு ஆக்ஸிடெண்ட் எப்படி நடந்துச்சு?”
“ஜெகதீசன் விசயத்துக்கு பிறகு இதை எல்லாம் யார நம்பியும் சொல்லலாமான்னே தெரியல.”
“சொன்னா முழுசா சொல்லனும். இல்லன்னா சொல்லாமயே இருக்கனும். இப்படி அரைகுறையா பாதியில் நிறுத்தக்கூடாது.”
“சரி முழுசா சொல்றேன். முதல்ல நடந்த சத்யா-தேவி விபத்து இந்த லிஸ்ட்லயே வராத வேற ஒரு இன்சிடெண்ட். ஓகேவா?”
“ஓகே.”
“இரண்டாவது ஆக்ஸிடெண்ட் சுகேஷ் விபத்து ஹிட் அண்ட் ரன். சுகேஷ் பைக் மேல இன்னொரு பைக் மோதி ஏற்பட்ட ஆக்ஸிடெண்ட்.”
“ஆனா அந்த ஆக்ஸிடெண்ட் சுகேஷ் தவறி விழுந்து இறந்ததா தானே பதிவாகியிருக்கு?”
“எஸ். ஏன்னா இன்னொரு பைக் மோதுனதை பார்த்த ஒரே சாட்சி கிருஷ்ணகுமார் மட்டும் தான். ஆனா சர்கம்ஸ்டன்சியல் எவிடென்ஸ் எல்லாமே சுகேஷ் தவறி விழுந்து இறந்ததுக்கு சாதகமா இருந்ததால மந்தம்ன்னு பேர் வாங்கின கிருஷ்ண குமாரோட வாக்குமூலத்தை யாரும் பெருசா எடுத்துக்கல.”
“ஓஹ். அதனால கிருஷ்ண குமார் கோபமாகிட்டாரா?”
“யெஸ். ரெண்டு வருசத்துக்கு முன்ன வரை ரேடியல் ரோடு பைக் ரேசர்ஸ்க்கு ரொம்ப பிடிச்ச ரோடு. அப்படி ரேஸ் போன ஏதோ ஒரு பைக்கர் தான் சுகேஷை இடிச்சது. இதனால அவங்களை பழிவாங்க நினைச்சார் கிருஷ்ணகுமார்.”
“நான் கூட கேள்விப்பட்டுருக்கேன். இப்ப தான் ஆரச்சாலை most haunted road. முன்ன அதுக்குப் பேரு பைக் ரேஸர்ஸ் ரோடு.”
“அந்த சமயத்தில் கிருஷ்ணகுமார் கையில் அவர் செஞ்ச புராஜக்ட் ரெடியா இருந்திருக்கு. அதை அப்படியே இம்ப்ளிமெண்ட் பண்ணிட்டார். இனி சிம்பிளா ஒவ்வொரு தடவை ரிமோட் அழுத்தும் போதும் ஒரு பைக் பறந்து போய் விழுகும்.”
“ஆனா இந்த சீரிஸ் ஆக்ஸிடெண்ட்ல பைக் ரேசர் மட்டுமில்லாம சாதாரண ஆட்களும் இறந்துருக்காங்க. ஏன்?”
“கிருஷ்ண குமாரோட டார்கெட் வேகமா போய் அடுத்தவங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துற எல்லாரும். நைட் டைம் இருட்டுல ஸ்பீடா ஒரு பைக் போச்சுனா அந்த நேரத்தில் அது பைக் ரேஸரா, இல்லை சாதாரண ஆளான்னு பிரிச்சு பார்க்க முடியாதுல?”
“இத்தனை பேரை கொன்னதால கிருஷ்ண குமாருக்கு என்ன கிடைச்சது?”
“ஒரு சாட்டிஸ்ஃபேக்ஷன் தான். தன் பையன் சாவுக்கு பழி வாங்குன திருப்தி.”
“ஆனா தலைமறைவா இருந்துட்டு எப்படி இதெல்லாம் செய்ய முடியும்?”
“ரொம்ப சிம்பிள். இரயில்வே ஸ்டேசன்லயோ, பிளாட்ஃபார்ம்லயோ, வேற ஏரியாலயோ, இல்ல வேற ஒரு ஊர்லயோ பேரை மாத்திட்டு தங்கிக்கலாம். திருப்பதியில் மாறுவேசத்தில் மூனு வருசம் தங்கியிருந்த கிரிமினலை எனக்குத் தெரியும். தேவைப்படும்போது கிளம்பி வந்து ரிமோட்டை அழுத்தி பைக் ஆக்ஸிடெண்ட் பண்ணலாம்.”
“அந்த காலேஜ் புராஜக்ட்ல கிருஷ்ணகுமார்ன்னு ஒரே ஒரு பேர் இருக்கதை வச்சு எப்படி இவ்ளோ கண்டுபிடிக்கிற?”
“Common sequences are more common than uncommon sequences”
“ஆ ஊன்னா இத ஒன்ன சொல்லிரு. ஒன்றரை வருசமா தலைமறைவா இருக்க கிருஷ்ண குமாரை எப்படி பிடிக்கப் போறீங்க?”
“அந்த யூடியூபர் ஆக்ஸிடெண்ட்டுக்கும், திரு ஆக்ஸிடெண்ட்டுக்கும் இடையில் ஒரு வாரம் கேப். ரெண்டு ஆக்ஸ்டெண்ட்ஸ்லயும் பக்கத்தில் இருந்து தான் ரிமோட் ஆபரேட் பண்ணிருக்கார். ஸோ இங்க தான் எங்கயோ கைக்கு எட்டுற தூரத்தில் இருக்கனும்.”
எங்கே?
தொடரும்…
One comment on “ஆரச்சாலை – சென் பாலன்”
jeraldwilson
வயதை சொல்ல தயங்கும் யாரோ ஒருவரிடம் ஆல்டோ இவ்வளவு விசயங்களை தெரிவிப்பது நெருடலாக உள்ளதே! தேசிய கட்சியின் ஹனி டிராப்?