நாள் 24 அத்தியாயம் 36 & 37
36. பரமபதம்
“ஒருவேளை ஆட்டோமேட்டட் சிஸ்டமா இருக்குமோ கார்த்திக்? குறிப்பிட்ட இடைவெளியில் அதுவா ஆக்டிவேட் ஆகி ஆக்ஸிடெண்ட் உண்டாக்குற மாதிரி?” அருள்மொழி கேட்டார்.
“வாய்ப்பே இல்ல சார். அந்த மெசினோட பவர் கன்சம்ப்ஷன் அதிகம். அதனால தான் அந்த மெசின் ஆபரேட் ஆகும் போது தெருவிளக்கு எல்லாம் அணையுது. அதேமாதிரி மெசின் மொத்தமே 10-20 செகண்ட்ஸ் தான் ஆன்ல இருக்கும். அது ஒரு பல்ஸ் மாதிரி….. ஒரு அலை மாதிரி எலக்டிரோ மேக்னடிக் ஃபீல்டை உருவாக்கும். அதுக்குள்ள பைக் அந்த இடத்தை கிராஸ் பண்ணனும். புரொஃபசர் சுதாகரும் மேனுவலா ரிமோட் வச்சு ஆபரேட் பண்ணிதான் விபத்து உண்டாக்க வாய்ப்பிருக்குக்குன்னு சொன்னார். அந்த மெசின்ல ஆட்டோமேட்டட் சர்கியூட் இல்ல. ஆனா ரிமோட் வச்சு ஆபரேட் பண்ண வழி இருக்கு.”
“மீடியன் சுவர்ல கிருஷ்ண குமார் இந்த மெசின் வைக்கும்போது அங்க இருக்க சிசிடிவி கேமரால ரெகார்ட் ஆகலையா?”
“சிசிடிவி கேமரா இன்ஸ்டால் பண்ணுனது தொடர்ச்சியா நிறைய ஆக்ஸிடெண்ட் நடக்க ஆரம்பிச்ச பிறகு தான். அது மட்டுமில்லாம அந்த சிசிடிவி கேமரால 15 நாள் ஸ்டோரேஜ் மட்டும் தான் இருக்கு. பழசு டெலீட் ஆயிடும். ஆக்ஸிடெண்ட் ஆன வீடியோஸ் மட்டும் தனியா ஸ்டோர் பண்ணி வச்சுருக்காங்க”
“இப்ப அடுத்து என்ன பிளான்?”
“அதான் எனக்கும் புரியல சார். கேஸ் முடிஞ்சதுன்னு நினைச்சு கிட்ட நெருங்கும் போது கானல் நீர் மாதிரி எல்லாம் காணாமல் போய்டுச்சு. திரும்பவும் ஸ்கொயர் ஒன் வந்த மாதிரி இருக்கு.”
“அந்த மெசின் எங்க இருந்து வாங்குனதுன்னு எதுவும் டிரேஸ் பண்ண முடியுமா?”
“எல்லாமே கள்ள மார்க்கெட் சார். கடத்தி வரப்பட்ட மெசின்ஸ். நோ ரெகார்ட்ஸ்”
“லெட் அஸ் சீ. இப்போதைக்கு அந்த மெசினை கண்டுபிடிச்சதே பெரிய நிம்மதி. இதுக்கும் ஒரு வழி கிடைக்கும்” அருள்மொழி தன் ஆறுதலுக்காக அப்படிப் பேசுகிறார் என உணர்ந்தான் ஆல்டோ.
பத்து நாட்களாக தூக்கமின்றி அலைந்ததால் ஆல்டோவின் கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் வந்திருந்தன. ஒழுங்காக சவரம் செய்யாத முகத்துடன் இப்போதைய விரக்தியும் சேர்ந்து அவன் பொலிவைக் குறைத்துக் காட்டின. தொங்கிய முகத்துடன் தன் அலுவலகத்திற்கு வந்தான்.
கிருஷ்ணகுமாரின் மடிக்கணினி அலுவலக மேசை மீது இருந்தது. சுரத்தை இல்லாமல் அதை எடுத்தான். அந்த பைனரி எண்களைக் கொண்டு எழுதப்பட்ட கடிதம் இல்லை என்றால் எங்கேனும் மறைந்து கொண்டு கிருஷ்ண குமார் இன்னும் விபத்துகளைச் செய்வதாகக் கூட விசாரிக்கலாம். அல்லது வேறு கூட்டுக்காரர்களுடன் சேர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும் கருதலாம். ஆனால் அப்பட்டமாக குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிய பின் என்ன செய்ய? எப்படி விசாரிக்க?
அந்த கடிதத்தை மறுபடியும் கிளிக் செய்து பார்த்தான். திரை முழுக்க முட்டைகளும் கோடுகளும். ஏற்கனவே கண்ணில் இருந்த சோர்வை அந்த எண்கள் அதிகப்படுத்தின.
மூடிவிட்டு வேறு போல்டர்களை திறந்து பார்த்தான். துறைசார்ந்த பிடிஎப் மென்புத்தகங்கள் நிறைந்திருந்தன. வேறு சில வரவு செலவு கணக்குகள் எக்ஸெல் கோப்புகளாக இருந்தன. பாடம் எடுக்கப் பயன்படும் பவர் பாயிண்ட் பிரசண்டேசன்கள் இருந்தன. ஒரு ஃபோல்டர் முழுக்க புகைப்படம். அதற்குள் சுகேஷ் இறுதிச் சடங்கு என ஒரு துணை ஃபோல்டர். அதைத் திறந்து பார்த்தான். சுகேஷின் இறப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தன. ஒவ்வொருவரும் அஞ்சலி செலுத்துவது வரிசையாக பதிவாகி இருந்தது. சுகேஷ் உடலின் அருகில் மீனா சோகமாக இருப்பதும் தூரத்தில் கிருஷ்ணகுமார் குற்ற உணர்ச்சியுடன் நிற்பதும் பதிவாகியிருந்தது. சில புகைப்படங்களில் மீனாவின் கணவர் அகர்வால் இருந்தார். புகைப்படங்களை மாற்றிக் கொண்டே இருந்த ஆல்டோ ஒரு புகைப்படத்தைக் கண்டதும் உறைந்து நின்றான்.

“இந்த சின்ன விசயத்தை கவனிக்காம விட்டுட்டோமே….”
பேராசிரியர் சுதாகரின் உதவியாளர் பூஜாவிற்கு போன் செய்தான்.
“அந்த புராஜக்ட் டிடெய்ல் அன்னைக்கு சொன்னீங்கள்ள?”
“ஆமா…..”
“அந்த புராஜக்ட் செஞ்சது யார் யார்ன்னு திரும்ப ஒரு தடவை பார்த்துச் சொல்ல முடியுமா?”
“ஒரு நிமிசம் சார்..”
இரண்டு நிமிட காத்திருப்புக்கு பிறகு சொன்னார்.
“‘இ.எம்.பி பேஸ்டு நான்-காண்டாக்ட் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டம்’ – புராஜக்ட் பை – அபிநயா சண்முகம், பிரவீண் முருகேசன், ஆனந்த் நவீன்குமார். அண்ட் . ஃபேகல்டி கைட் – கிருஷ்ண குமார்…..”
“காட் இட்.. ரொம்ப ரொம்ப நன்றி.”
ஆனந்த் நவீன்குமார்.
ஈஸ்வரி சக்தி பீடத்தின் நவீன். இந்திய அரசின் பெருநிறுவன விகாரங்கள் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இருந்த முழுப்பெயர்.
37. பின்கதை
தாம்பரம் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முன், ஆணையரைச் சந்திப்பதற்காகச் சென்றான் ஆல்டோ. ஓடிவந்து கார்த்திக் ஆல்டோவை கட்டியணைத்தார் ஆணையர் இராஜேந்திரன்.
“இதை நான் எதிர்பார்க்கவே இல்ல. நிரூபிச்சுட்டீங்க ஆல்டோ. ஒத்துக்கிறேன், நீங்க திறமைசாலி தான். எப்படி அந்த நவீனை சுத்தி வளைச்சீங்க?”
“சுகேஷ் இறுதிச் சடங்கு போட்டோஸ்ல ஒரு இடத்தில் நவீன் இருந்தான். ஈஸ்வரி பீடம் போன அன்னைக்கு அவன் இஞ்சினியரிங் படிச்சதா சொன்னான். ஆனா என்ன காலேஜுன்னு நான் கேட்கல. அதேமாதிரி விக்டிம்ஸ் போட்டோஸ் காட்டும் போது யாரையுமே தெரியாதுன்னு சொன்னான். ஆனா இங்க கிருஷ்ண குமார் லேப்டாப்பில் அவன் போட்டோ இருந்துச்சு. அப்புறம் லின்க் பண்ணிப் பார்க்கும் போது ஒருவேளை இவன் படிச்சது பால்ஸ் காலேஜா இருக்கலாமோன்னு ஒரு சந்தேகம் வந்தது. இன்னும் ஆழமா யோசிக்கும் போது இவனும் அதே புராஜக்ட்ல வேலை பார்த்திருக்கலாம்ன்னு தோணுச்சு. அதான் பூஜாவுக்கு கால் பண்ணுனேன். நான் சந்தேகப்பட்டது சரின்னு ஆயிடுச்சு.”
“ஆனா அரெஸ்ட் பண்ண இது மட்டும் பத்தாதே? நமக்கு ஸ்டிராங் எவிடென்ஸ் வேணும்.”
“ஆள் யாருன்னு தேடுறதுதான் கஷ்டம் சார். ஆள் யாருன்னு தெரிஞ்சா எவிடென்ஸ் தேடுறது ரொம்ப ஈசி. நிறைய ஆதாரங்கள் இனி கிடைக்கும். நம்ம அந்த மெசினை கண்டுபிடிச்ச உடனே அவன் உஷாரா அந்த மெசின் ரிமோட்டை பல்லாவரம் ஏரியில் தூக்கிப் போட்டுட்டான். அவனுக்கும் மெசினுக்கும் இடையில் இருக்க ஒரே தொடர்பு அந்த ரிமோட் மட்டும் தான். அதை தூக்கிப் போட்டுட்டா தப்பிச்சிடலாம்ன்னு நினைச்சுட்டான்.”
“ப்ரில்லியண்ட்டா தான் யோசிச்சு இருக்கான். ரிமோட் இல்லன்னா எவிடென்ஸ் இருக்காதே?”
“மண்டையை மறைச்சவன் கொண்டையை மறைக்கல. அந்த ரிமோட்டை அமேசான்ல வாங்கியிருக்கான். ஆன்லைன் ஆர்டர் ஹிஸ்டரியை செக் பண்ணும்போது மாட்டிக்கிட்டான். அதோட அவன் செஞ்ச புராஜக்ட் பவர் பாயிண்ட்டையும் காட்டுன பிறகு, எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான். இன்னும் ஆக்ஸிடெண்ட்ஸ் ஆன அன்னைக்கு மொபைல் டவர் லொகோசன், மத்த ஆதாரங்களையும் எடுத்தா அவன் தப்பிக்கவே முடியாது.”
இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது இயக்குநர் அருள்மொழி நுழைந்தார். ஆல்டோ எழுந்து நின்றான். அவனது உடலை இழுத்து கட்டியணைத்து கைகுலுக்கினார்.

பரமபதத்தில் பாம்பு இருந்தா ஏணியும் இருக்கும் கார்த்திக். நேத்து எவ்வளவு சோகமா இருந்தீங்க? முகமே தொங்கிப் போய் இருந்துச்சு. இன்னைக்கு அவ்ளோ சிரிப்பு.”
“உண்மை தான் சார். ஏதோ ரோலர் கோஸ்டர் ரைடு மாதிரி இருந்தது இந்த கேஸ். ஒருநாள் அவ்வளவு தான் முடிஞ்சிருச்சுன்னு இருக்கும். மறுநாள் முடியவே முடியாது போலன்னு தோணும்.”
“எல்லாமே ஈசியா முடிஞ்சிட்டா நம்ம பிரான்ச் எதுக்கு? இந்த ஸ்பெஷல் டீம் எதுக்கு?”
ஆல்டோ சிரித்தான்.
“ஒரு விசயம் மட்டும் இன்னும் நெருடலா இருக்கு கார்த்திக். முதல் மூனு விபத்துக்கு காரணம் கிருஷ்ண குமார். அதுக்குப் பிறகு இறந்துட்டார். அதை எப்படி இந்த நவீன் கண்டினியூ பண்ணினான்? எப்படி இந்த மெசின் கிருஷ்ணகுமார் கையில் இருந்து நவீன் கைக்கு வந்தது?”
“ரெண்டு பேருமே அந்த புராஜக்ட்ல ஒர்க் பண்ணிருக்காங்க. முதல் சில ஆக்ஸிடெண்ட்ஸ் பார்த்த உடனே நவீனுக்கு புரிஞ்சிடுச்சு இது அவங்க செஞ்ச புராஜக்ட்டுன்னு. அதேமாதிரி கிருஷ்ண குமார் பையன் இறந்த இடத்தில் இந்த விபத்து நடந்ததை வச்சு அவர் தான் செய்யுறார்ன்னு உறுதி பண்ணிட்டான்.”
“ஓகே…?”
“அவனே எதிர்பாராத விதமா ஆரச்சாலையில் விபத்துகள் நிறைய நடந்த பிறகு ஈஸ்வரி பீடத்துக்கு கூட்டம் அதிகமாகியிருக்கு. இதை நவீனும் ஈஸ்வரி அம்மாவுமே நினைச்சுப் பார்க்கல. ஆனா திடிர்ன்னு விபத்து நின்னு போயிடுச்சு. கூட்டம் குறையத் தொடங்கிருச்சு.”
“அதாவது கிருஷ்ண குமார் செத்த பிறகு?”
“ஆமா. அப்ப நவீன் கிருஷ்ணகுமாரை தேடிப்பார்த்திருக்கான், கண்டுபிடிக்க முடியல. உடனே அந்த ஆக்ஸிடெண்ட் இடத்தைப் போய் பார்த்திருக்கான். மெசின் டிஸ்கனெக்ட் ஆகியிருந்துருக்கு. திரும்ப பவர் கூட கனெக்ட் பண்ணி, புது ரிமோட் வாங்கி இவனே ஆபரேட் பண்ண ஆரம்பிச்சுட்டான்.”
“இவனே கிருஷ்ணகுமார் ஆயிட்டான்?”
“யெஸ். திரும்ப ஈஸ்வரி பீடத்துக்கு கூட்டம் அதிகமாயிடுச்சு. வருமானம் அதிகமாயிடுச்சு. இதனை தொடர்ச்சியா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.”
“தேவையில்லாம திரு பைக்கை ஆக்ஸிடெண்ட் செய்ததால தான மாட்டுனான்? இல்லன்னா இப்ப வரை கண்டுபிடிச்சுருக்க முடியாது.”
“அதான் மனுஷ ஈகோ சார். அதை டச் பண்ணுனேன், மாட்டிக்கிட்டான். ஆனாலும் அவன் அன்னைக்கு ஆக்ஸிடெண்ட் பண்ணலன்னாலும் வேற வழியில் மாட்டியிருப்பான். என்ன கொஞ்சம் டைம் ஆகியிருக்கும்.”
“ஈஸ்வரியை அரெஸ்ட் பண்ணியாச்சா?”
“இதுவரை ஈஸ்வரி டைரக்ட்டா இன்வால்வ் ஆனதுக்கு நமக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கல சார். என்னோட கெஸ் சரியா இருந்தா நவீன் எல்லாத்தையும், தான் மட்டும் செஞ்சதா ஒத்துக்கிட்டு ஈஸ்வரியை காப்பாத்திடுவான்.”
“சார் பிரஸ்மீட் ரெடி” ஒரு காவலர் வந்து உரையாடலை கலைத்தார். மூவரும் எழுந்தனர்.
வெளியில் வந்த கார்த்திக் ஆல்டோவிற்கு அந்த வாட்ஸ் ஆப் செய்தி வந்தது.
“என்னால ஒரு விசயத்த மட்டும் ஏத்துக்கவே முடியல. நீ அந்த புரொஃபசருக்கு கால் பண்ணிருக்கலாம். ஆனா ஏன் பூஜாவுக்கு பண்ணுன?” ஆல்டோவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இவர்களுக்கு மட்டும் எப்படி இப்படி சிந்தனை வருகிறது.
“எவ்வளவு பெரிய கேஸை சால்வ் பண்ணிருக்கேன்? ஊர் உலகமே பாராட்டுது, உனக்கு மட்டும் ஏன் இப்படி தோணுது?”
“பேச்சை மாத்தாத. இதை என்னால ஏத்துக்கவே முடியல, எத்தனை வருசம் ஆனாலும் மறக்க மாட்டேன்.”
“ம்ம்ம். மறக்காத.”
“ஒரு முக்கியமான டவுட். அதெப்படி சத்யாசோமா தேவசோமா பெயரும், சத்யா-தேவி பெயரும் ஒன்னா அமைஞ்சது?”
“சிம்பிள். Reverse Engineering. என்ன பேரு கிடைக்குதோ, அதுகூட ஏற்கனவே இருக்க கதையை மேட்ச் பண்ணிடுறது, இல்லன்னா அதை வச்சு புதுசா ஒரு கதை எழுதுறது. நம்ம ஊர்ல கதைக்கா பஞ்சம்?. “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்?” டைப் கதை எழுதுறதுக்குன்னே ஒரு பெரிய டீமே இருக்காங்க.”
“ஒரு வழியா கேஸ் முடிஞ்சது. இனிமேலாவது ஒழுங்கா மெசேஜ் அனுப்புவியா?”
“கேஸ் முடிஞ்சதா? இனிமே தான் ஆரம்பிக்கப் போகுது?”
“என்ன சொல்ற? அதான் முக்கிய குற்றவாளியை கண்டுபிடிச்சுட்டீங்களே?”
“இந்த கேஸ்ல மட்டும் கவர்னர் ஆபிஸ் அதிக இன்வால்வ்மெண்ட் காட்டி ஏன் நெருக்கடி கொடுத்தாங்கன்னு தெரியுமா?”
“ஏன்?”
“ஜெகதீசனுக்கு விருது ஆசை காட்டி அவரை மெனிபுளேட் செய்ய திட்டம் போட்டு கொடுத்தது யார் தெரியுமா?”
“யாரு?”
“லீக்கான திரு ஆக்ஸிடெண்ட் வீடியோ வச்சு ஆர்ப்பாட்டம் நடத்துறதுக்கு தேசிய கட்சிக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது யார் தெரியுமா?”
“யாரு?”
“கேஸை சிபிஐக்கு மாத்தி, எல்லா விபத்தையும் காணாமல் போன கிருஷ்ண குமார் மேல எழுதி நவீனை காப்பாத்த முயற்சி பண்ணுனது யார் தெரியுமா?.”
“யாரு?”
“மீடியா நெக்ஸஸ் மூலமா இந்த கேஸ் பத்தி தொடர்ந்து தலைப்புச் செய்தி வரவச்சு விசாரணை டீமை பிரஷர்லயே வச்சிருந்தது யார் தெரியுமா?”
“யாரு?”
“கேஸ் முடியப் போற நேரத்தில் தாம்பரம் கமிசனரை தூண்டிவிட்டு, அவருக்கு என்மேல கெட்ட அபிப்ராயம் உண்டாக்கி, வாய்ப்பே இல்லாத
டெட்லைன் வைக்க காரணமா இருந்தது யார் தெரியுமா?
“இதெல்லாம் யாரோ ஒருத்தர் வேணும்னே பண்ணுன வேலையா? நான் எதேச்சையா நடந்ததுன்னு நினைச்சேன். இதுக்கு பின்னாடி யார் இருக்கா? ஏன் செய்றாங்க?”
“நிரூபிக்கப்படாத வரை எதுவுமே எதேச்சை இல்லை அப்படிங்கிறது குற்றவியல்ல அடிப்படைப் பாடம். நவீனுக்கு பின்னால் ஈஸ்வரி இருக்கது தெரியும். ஆனால் அந்த ஈஸ்வரிக்கும் பின்னால் இருக்க அந்த ஆள். சாதாரண ரோடு சைட் சாமியார இருந்த ஈஸ்வரி அம்மாவை இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க பிரபலப்படுத்திய ஆள்.”
“ஈஸ்வரிக்கு பின்னால் இன்னொரு ஆளா? யார் அவர்?”
“முன்னாள் ஐஏஎஸ் ஆஃபிசர் பூர்ணசந்திரன்.”
“ஐ ஏ எஸ் ஆஃபிசர் பூர்ணசந்திரனா? நான் காலேஜ் படிக்கும் போது எங்க காலேஜ்ல கூட வந்து பேசியிருக்கார். அருமையா பேசுவார். அவரா இதையெல்லாம் செஞ்சார். நம்பவே முடியல.”
“அவர் ஆட்டுவிக்கிற மாதிரி ஆடுற பொம்மைகள்தான் இந்த ஈஸ்வரி, நவீன் எல்லாருமே. திருட்டு பைக் வித்த ஈஸ்வரி இன்னைக்கு 50 கோடி இடம் வாங்குற அளவு வந்திருக்கான்னா அதுக்கு பின்னாடி இருக்க பவர் செண்டர் பூர்ணசந்திரன். நான் அந்த பவர் செண்டர் மேல கை வச்சிருக்கேன். இனிமேதான் உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கப் போகுது. Common sequences are more common than uncommon sequences”
தூரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆணையர் பேசிக்கொண்டிருந்தது ஒலிப்பெருக்கியில் கேட்டது.
“இந்த சதிவேலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நவீன் என்பவரை கைது செய்துவிட்டோம்.”
புன்னகைத்துக் கொண்டே மருத்துவமனையில் இருக்கும் திருவைப் பார்க்கக் கிளம்பினான் ஆல்டோ.
முற்றும்.
எழுத்தாளரைத் தொடர்பு கொள்ள: senbalan@gmail.com
One comment on “ஆரச்சாலை – சென் பாலன்”
jeraldwilson
அருமையான விறு விறுப்பான திகில் தொடர். சற்றும் போரடிக்காமல் எப்பொழுது வேகம் எடுக்க வேண்டுமோ அப்பொழுது வேகம் எடுத்து, எங்கு நிதானமாக போக வேண்டுமோ அங்கு வேகம் குறைந்து ஒரு அப்பட்டமான ரோலர்கோஸ்டர் சவாரியை அளித்தீர்கள்! பாராட்டுக்கள் டாக்டர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻