அத்தியாயம் 15
போனை வைத்த சடகோபன் கொஞ்ச நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தார். மாலை மங்கிவிட்டிருந்தது. விளக்கு வெளிச்சம் தேவைப்பட்டது – ஆனால் அதைச் செய்யக்கூடத் தோன்றாமல் வெறித்த பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.
எங்கு தவறு செய்திருப்போம்? கவனமாகத்தானே நினைவு மாற்றல்களைச் செய்தோம்? இப்போது சித்திரவதை செய்தே கேட்டாலும் டைசன் ஆராய்ச்சி மாணவன் என்றுதானே சொல்வான்? எவ்வளவு நாள் முயற்சி? இதற்காக இரண்டு பேர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஞாபகங்களை மணிக்கணக்காக ஆராய்ந்து எத்தனை முறை நினைவுகளை மாற்றினாலும் குழப்பம் ஏற்படாத வண்ணம் குறைகளைக் களைந்து.. உழைத்தது எல்லாம் வீணா?
ஒருவேளை அவர்கள் சொன்னது போல விட்டுவிட்டார்களா? வாய்ப்பில்லை. டைசன் ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் நேரடியாக என்னிடம்தான் வந்திருப்பான். இல்லை தீவிரவாதியாக இருந்தாலும் இங்கே வருவதைத் தவிர அவனுக்கு வேறுவழியில்லை. நிச்சயம் பொய்தான் சொல்கிறார்கள்.
டைசனின் கணினியைத் தேடினார். வெளிச்சம் தேவைப்பட்டது. விளக்கு போட்டு அதை எடுத்தால் கடவுச்சொல் கேட்டது. சிரிப்புதான் வந்தது. எல்லாக் கடவுச்சொல்லும் பாதுகாப்பு இல்லாதவைதாம். ஒருமுறை வெளியூர் போய் வந்தால் அரசாங்கத்துக்குக் கிடைத்துவிடும். தன்னைப்போன்ற தடைசெய்யப்பட்ட ஆராய்ச்சிக்கூடங்களுக்கும் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் அவன் நினைப்பில் இருப்பதுதானே.
கணினியில் லாஜிஸ்டிக்ஸ் தொழிற்சாலையின் வரைபடத்தைத் தேடி எடுத்தார். சின்னச் சின்னக் கணக்குகள். எந்தப்புள்ளிக்கு வெடி அனுப்பவேண்டும், எவ்வளவு அனுப்பவேண்டும் எல்லாக் கணக்குகளும் தெளிவாக இருந்தன. இனி டைசன் வராவிட்டாலும் பரவாயில்லை.
அஷோக்கை அழைத்தார். “இன்று மாலை உங்களைச் சந்திக்க முடியுமா?”
“ஓ.. அவசியம் வாருங்கள்..”
அவரை வழிக்குக் கொண்டுவரவேண்டும். அபிதாதானே அவருடைய காணாமல் போன மகளின் பெயர்?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அஸ்வினி கதவைத் திறந்தபோது பாவ்னா தனியாக நின்றுகொண்டிருந்தாள். “கௌஷிக் வரவில்லை?”
“அவருக்கு டெல்லியில் வேலை வந்துவிட்டது. சாயங்காலமாக வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.”
வரவேற்பறையில் அமர்ந்தவுடன் பாவ்னா கொஞ்சம் தயக்கத்துடன் “அஸ்வினி, உங்களுடன் பேசிய விஷயங்களை நான் மீண்டும் ஒருமுறை மனதில் ஓட்டிப் பார்த்துவிட்டேன். அதை ஒரு அறிக்கையாகத் தயார் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன். ஆனால்..” இழுத்தாள்.
“என்ன எதாவது சந்தேகமா? சொல்லுங்கள், தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்.”
“இப்போதைக்கு எதுவும் சந்தேகம் இல்லை. எழுதும்போது எதாவது குழப்பினால் நிச்சயம் அழைக்கிறேன். இப்போது நான் வந்தது அந்த விஷயம் சம்பந்தமாக அல்ல.. டாக்டர் அனந்தனைச் சந்தித்துப் பேச வேண்டும்”
“அப்பாவையா? அவர் யாருடனும் பேசுவதில்லையே.. அதுவும் குறிப்பாக அவர் கண்டுபிடிப்பைப் பற்றியோ அவர் ஆராய்ச்சியை ஏன் நிறுத்தினார் என்பது பற்றியோ பேசுவதே இல்லை. திடீரென வருத்தம் போன்ற உணர்வுகள் எல்லாம் வந்துவிடுகின்றன என்பதால் கோபி அதை அனுமதிப்பதில்லை. மனநல மருத்துவரிடம் மட்டும் பேசவே அவர் கெஞ்சவேண்டியதாகிவிட்டது.”
பாவ்னாவுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. ”எதாவது அனுமதி வேண்டுமென்றால் வாங்கிவிடுகிறேன்.” கிடைக்குமா? என்ன சொல்லி வாங்குவது?
“என்ன பேச வேண்டும்?”
“நான் சமீபத்தில் கேம்ப்ரிட்ஜ் சென்றிருந்தேன். அங்கே டாக்டர் ஹூபர்ட் என்ற ஒரு பேராசிரியரைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது இவர் பற்றிய பேச்சு வந்தது. அதைச் சொல்லிவிடலாம் என்றுதான்..”
“தெரியவில்லை. கோபியை ஒரு வார்த்தை கேட்டுவிடுகிறேனே. இதுபோன்ற விஷயங்களில் அவனைக் கேட்காமல் நான் மாமாவிடம் போகக்கூடாது.”
”நிச்சயம். நான் காத்திருக்கிறேன்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கோபி வேகமாக நடந்துகொண்டிருந்தான். வெறிச்சோடிய சாலை. வெயில் குத்தியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் நடந்துகொண்டிருந்தார்கள். காலை வேளையிலாவது அதிகம் பேர் நடப்பார்கள். பதினோரு மணியாகிவிட்டதால் போக்குவரத்து குறைந்துவிட்டது. பதினான்கு மாடிக் கட்டடத்தின் வாசலில் பாதுகாப்புக் கூண்டுக்கருகில் வந்து தரையில் வரைந்திருந்த கால்தடத்தில் தன் காலை ஒழுங்காகப் பொருத்தி நின்றான். திரையின் சிவப்புப் புள்ளியைப் பார்த்தான். “எதாவது சொல்லுங்கள்”
கோபி அன்றைய தேதியையும் கிழமையையும் சொல்ல குரல் பரிசோதனை முடிந்து கதவு திறந்தது.
இரண்டு மாடிகள் கீழிறங்கி “பல்வீர் சிங் பட்டி” என்ற அறையின் கண்ணாடிக்கதவை மரியாதைக்காகத் தட்டினான். பல்வீர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். இவனை உள்ளேவரச் சொல்லிக் கைகாட்டினார்.
“ஆமாம். சந்தேகம் வலுவாகத்தான் இருக்கிறது.” பேசிக்கொண்டே விரலைக் காட்டினார். டைசனின் படம் இருந்தது.
“தெரியும், ஒரு வாரம் முன் தான் பதினைந்து பேருக்கு அனுமதி வாங்கினோம். ஆனால் அப்போதே இவர்மீது சந்தேகம் இருந்தது..” கொஞ்சம் பயந்துகொண்டே பேசினாரோ?
”அந்தப் பதினைந்து பேரும் தற்செயலாகக் கணினியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களில் இவரைச் சேர்க்க முடியாது.” கோபியைக் காபி போடச்சொல்லி சைகை காட்டினார்.
“ஒரு வாரமா? அவ்வளவு நாள் கைது செய்யாமல் வைக்க முடியாதே. வெளியே விட்டால் பறந்து விட வாய்ப்பிருக்கிறது.”
”ஒரு நிமிடம். இந்த வழக்கில் என் அலுவலர் கோபியும் விசாரித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கும் கேட்கும்படி பேசலாமா?”
அந்தப்பக்கச் சத்தம் இப்போது கோபிக்கும் கேட்கத் தொடங்கியது.
“கோபி.. எப்படி இருக்கிறீர்கள்? என் பெயர் சக்ஸேனா, நீதித்துறை.”
உச்சநீதிமன்ற நீதிபதி அல்லவா இவர். இந்தச் சிறுவிஷயத்துக்கெல்லாம் இவ்வளவு உயரம் போகுமா என்ன?
“வணக்கம் நீதிபதி அவர்களே. இந்த விசாரணை அனுமதி கொஞ்சம் அவசரமாகத்தான் தேவைப்படுகிறது.”
சக்ஸேனா எதிர்முனையில் சிரித்தார். “நீங்கள் கேட்பது நெறிமுறைகளுக்குப் புரம்பானது. அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் இருந்து எனக்கு வழக்கு வந்திருக்கிறது. உங்கள் அவசரத்துக்கு நீதித்துறை செயல்பட முடியாது. அதன் பல்சக்கரங்கள் வேகமாக ஓடினால் அநீதித்துறை ஆகிவிடும்.”
“இப்போது அவரைக் கைது செய்யாமல் விசாரிப்பதும் அநீதிதானே?” கோபி மடக்கினான்.
“அவரை அழைத்து வருவதற்கு முன்பே அனுமதி பெற்றிருக்க வேண்டும்” சரிதான். இவர் சட்டப்புத்தகத்தில் கொசு செத்துக்கிடந்தால்கூட அதையும் சட்டமாக நினைக்கும் விதிமீறா வித்தகர் போலிருக்கிறது.
சக்ஸேனாவே தொடர்ந்தார். “ஒன்று செய்யலாம். டைசனை விடுதலை செய்துவிடுங்கள். ஆனால் அவர் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு இடம்காட்டும் கருவியைப் போட்டு அனுப்புங்கள், அதற்கு அனுமதி தருகிறேன். எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்ளலாம்.”
“நன்றி சக்ஸேனா” பல்வீர் அவசரமாக அழைப்பைத் துண்டித்தார். “இதுக்கு மேல எல்லாம் இவங்ககிட்ட எதிர்பார்க்க முடியாது. இந்த உதவி கிடைக்கும்னே நான் நினைக்கலை”
கோபி யோசித்தான். “லொகேஷன் டிடெக்டர் போட்டு அனுப்பிரலாம், சரி. ஆனா அது உடம்புக்கு மட்டுந்தானே? மெமரிஸ் ஆல்டர் பண்ணா என்ன டிடெக்ட் பண்ணும்? நம்ம சந்தேகமே அங்கேதானே?” என்றான்.
பல்வீர் அதை யோசித்திருக்கவில்லை. “ஆமால்ல?”
”சரி இருக்கறதை வச்சிதான் எதாச்சும் பண்ணனும். அவன் எங்க எங்க போறான்றது நம்ம ரெகார்ட்ல வந்துடும். மெமரிஸ்ல எதாச்சும் க்ளிட்ச், ஜம்ப் இருந்துச்சுன்னா, எங்கே மாத்தினாங்கன்றதையும் சேத்தே கண்டுபிடிச்சிரலாம் இல்லையா?”
“அதுவும் சரிதான். ஒண்ணும் இல்லாததுக்கு எதோ ஒண்ணு.” என்று கோபி சொல்லும்போதே. அஸ்வினிஅழைத்தாள்.
“சான்ஸே இல்லை” உடனே சொன்னான் கோபி. “ஃப்ரெண்டைப் பார்த்ததை எல்லாம் சொன்னா அவர் பழைய மாதிரி மூடி ஆயிருவார். இப்பதான் ஆறுமாசமா கொஞ்சம் பேசறார். மாடிக்கு வரார்.. மேபி அந்த கவுன்சலிங்னாலகூட இருக்கலாம். பழைய கதை எல்லாம் பேசறது டிரிக்கர் ஆயிடும். அந்தப் பொண்ணுகிட்ட தாட்சண்யமே இல்லாம இல்லைன்னு சொல்லிடு.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அறையில் அசைய இடம் இல்லாத அளவுக்கு அடைத்துக்கொண்டிருந்தது தேக்கு மேஜை. ட வடிவத்தின் முடிவில் ப வடிவம் இணைத்தது போன்ற நீண்ட மேஜை. ஜஸ்பாத் சக்ஸேனா, உச்ச நீதிபதி என்று எழுதியிருந்த பலகைக்கு மேலே திறந்த நிலையில் இரண்டு புத்தகங்கள் ஒரு கணினி ஒரு காபிக்கோப்பை. நீதிபதியின் நாற்காலி தரைக்கு ஒன்றரை அடி உயரத்தில் இருந்தது. எதிரில் இருந்த நாற்காலிகள் நீதிபதியின் திரையை மறைக்காமல் கீழே இருந்தன.
திரையில் பிரஜாபதி இருந்தார்.
“சரி, இண்டெலிஜென்ஸ் அனுமதி கேட்கிறார்கள், கொடுத்துவிட வேண்டியதுதானே? நாம் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நினைவுகளைப் பரிசோதனை செய்கிறோம், மாற்றி அமைக்கிறோம்.. ஒரு நபருக்குச் செய்வது பற்றி என்ன பிரச்சினை?” பிரஜாபதியின் குரலில் ‘இதற்கா என் வேலையைத் தொந்தரவு செய்தாய்’ தொனி இருந்தது.
“பிரச்சினை அது இல்லை. என்ன காரணத்துக்காகக் கேட்கிறார்கள் என்பதில்தான்.”
“என்ன காரணம்?” சீக்கிரம் சொல்லித் தொலையேன் வெளிப்படையாகவே தெரிந்தது.
“இந்த டைசன் என்னும் நபர், தீவிரவாதி என்று சந்தேகிக்கிறார்கள். ஆனால் அவனோ நான் ஆராய்ச்சி மாணவன் என்று அடம் பிடிக்கிறான். அதைத் தெரிந்துகொள்வதுதான் நோக்கம்”
“இதோ பார் சக்ஸேனா.. விஷயத்தைச் சீக்கிரம் சொல். புதிய மருத்துவத்திட்டத்தில் பல கடைசிநேரத் திருத்தங்கள் பாக்கியிருக்கின்றன. இவ்வளவு இழுக்கிறாய்.. இதுவரை இது ஏன் எனக்குத் தெரியவேண்டும் என்று சொல்லவே இல்லை..”
“பொறு. வருகிறேன். ஆராய்ச்சி மாணவன் என்று சொன்னேனில்லையா? அவன் ஆராய்ச்சி பண்ணுவது தொல்பொருள் துறையில். அவன் பேராசிரியர் பெயர்..”
பிரஜாபதி முகம் மாறியது. “சடகோபன் என்று சொல்லிவிடாதே..”
“சாட்சாத் சடகோபனே..” சக்ஸேனா உற்சாகமான குரலில்,”இப்போதும் உன்னை அழைத்ததற்குக் கடுப்பாகத்தான் இருக்கிறாயா? அப்புறம் பேசட்டுமா?”
பிரஜாபதி கோபமாகி ,”இதில் என்ன மகிழ்ச்சி வேண்டிக்கிடக்கிறது? இது உடனடியாக சரி செய்யவேண்டிய விஷயம். அவனைக் கைது செய்து வைத்திருக்கிறார்களா?”
“உனக்கு மட்டும் கோபம் வரலாமா? யாராவது பார்த்தால் சந்தேகப்படுவார்கள்.” எச்சரித்த சக்சேனா, ”விசாரணைக்கான நேரம் முடிந்துவிட்டது, கண்காணிப்பு பேட்ச் போட்டு அனுப்பப்போகிறார்கள்.”
“நல்லது. அந்த கண்காணிப்பு விவரங்களை அனுப்பு, நான் அவனைத் தூக்கிவிடுகிறேன். வேறு யாரிடமும் மாட்டக்கூடாது. சடகோபன் இன்னமும் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் மிகச் சிலரில் ஒருவன். முதலில் அவனையே கவனிக்கிறேன்.”
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.