அறிவே சிவம் - அத்தியாயம் 1
சுத்த அறிவே சிவம் என்று கூறும்
சுருதிகள் கேளீரோ? – பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை அழிவீரோ?
மகாகவி பாரதியார்
பாவ்னா பதட்டமாக இருந்தாள். அவள் பயந்தபடியே ”உங்கள் ரத்த அழுத்தம் 150/90 எனக் காட்டுகிறது” என்றாள் டெலிபோர்ட் உதவிப் பெண்மணி.
அது ஒரு மொட்டை மாடி. இரண்டு பெரிய கூண்டுகள் ஒரு தள்ளுவண்டி, ஒரு அலுவலர், ஒரு உதவிப் பெண்மணி. புனே / 5467 என்ற மின்பலகை ஜூலை 20, 2097, காலை எட்டு மணி என்றிருந்து எட்டு ஒன்று ஆனது.
“அழுத்தம் அதிகமாக இருக்கிறது. உங்களை இப்போது டெலிபோர்ட்டிங்கில் அனுப்ப முடியாது. சட்டதிட்டங்கள்.” அலுவலர் உணர்ச்சியில்லாமல் சொல்லிவிட்டு அடுத்தது என்பதுபோலப் பார்த்தார். பாவ்னாவும் அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லை.
“கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு வாருங்கள். “ என்று இவளிடம் சொன்ன அலுவலர் “இன்னும் எத்தனை பேர் வருவதற்கு கார்ட்ரிட்ஜ் தாங்கும்?” என்றார் உதவிப் பெண்மணியைப் பார்த்து.
“இந்த வாரம் ஏழு பேர் வருவதற்குத்தான் அனுமதி. நாலு பேர் வந்துவிட்டார்கள். “
அதைக் கவனிக்காமல் பாவ்னா தன் உள்ளங்கைத் திரையில் “வருவதற்குக் கொஞ்ச நேரம் ஆகும்” என்று தகவல் அனுப்பினாள். உடனே அழைப்பு வந்துவிட்டது.
“என்ன காரணம்? எவ்வளவு முக்கியமான சந்திப்பு தெரியுமா இது?” ரிச்சர்ட் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
“ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதாம்.” பாவ்னா மன்னிப்பு கேட்கும் தொனியில் சொல்ல ரிச்சர்ட் ”அவ்வளவுதானே. நல்லவேளை. நான் எதோ கோபம், வருத்தம் என்று பயந்துவிட்டேன். அதெல்லாம் இருந்தால் தனியாக அனுப்பிவிடுவார்கள். மனநல ஆலோசனை மையத்துக்குப் போய், அவர்கள் அனுமதியுடன் மட்டும்தான் பயணம் செய்யவேண்டும்.”
“நல்லவேளை சீக்கிரமே கிளம்பிவிட்டேன். முதல் முறையாக பெரிய சந்திப்பு. அதனால் கொஞ்சம் பதட்டம். அவ்வளவுதான். சரியாகிவிடும்.”
“எல்லா அறிக்கைகளும் தயாரா?”
“நேற்றே அனுப்பிவிட்டிருந்தேனே”
”ஏற்கனவே அலுவலகத்தில் கொஞ்சம் பேர் சொல்லிவிட்டார்கள். சின்னப்பெண்ணை இப்படி ஒரு சந்திப்புக்குத் தனியாக அனுப்புகிறீர்களே என்று.” ரிச்சர்ட் பதிலை எதிர்பார்த்தே சொன்னார்.
பாவ்னா ஒன்றும் சொல்லாமல் யோசித்தாள். எவ்வளவு நாள் படித்தேன். ”உனக்கு வயதுக்கு மீறிய திறமை இருக்கிறது. என் அனுபவத்தில் இவ்வளவு வேகமாக அரசியல் ஆராய்ச்சி செய்யும் மாணவியைப் பார்த்ததில்லை” என்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் நினைவுக்கு வந்தார். “இருபது வயதா? அப்போது நாற்பதுக்குள் மாஸ்மைண்டர்ஸ் தலைமைக்கே போய்விடுவாய்” என்று இதே ரிச்சர்ட் நேர்காணலின் போது சொன்னார். ஏன்? இரண்டு நாட்களுக்கு முன்கூட “அறிக்கை அட்டகாசமாக இருக்கிறது. கேள்விகள் கேட்க வாய்ப்பே இல்லை. நீயே பார்த்துக்கொள்ளலாம். எனக்கு நாளை மறுநாள் சில வேலைகள் இருக்கின்றன. சந்தேகம் வந்தால் மட்டும் அழை. போதும்” என்றாரே.
எவ்வளவு நேரம் காத்திருப்பது? லிஃப்டின் கதவுகளில் தன் பிரதிபலிப்பைப் பார்த்தாள் பாவ்னா. அழகாகத்தான் இருக்கிறேன். ஆனால் அழகா என்னை மேலே கொண்டு வந்தது? இன்றைய செயற்கை உடல் ஜாலங்களில் அழகு என்பது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது மட்டும்தான். பணம் இருந்தால் யாரும் அழகாகிவிடலாம். என் தனித்தன்மை என் வளைவுகளோ, நீலக்கண்ணோ களங்கமற்ற முகமோ இல்லை. என் மூளை. அதை வைத்துதான் இந்தச் சின்ன வயதில் இந்த வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்பா அம்மா என்று என் புகழில் யாரும் பங்குபோட்டுக்கொள்ள முடியாது. அனாதை என்பதை இப்படி உற்சாகமாகக் கூட யோசிக்க முடியுமா? பாவ்னாவுக்குச் சிரிப்பு வந்தது.
”இப்போது பார்க்கலாமா?” என்று அழைத்தாள் உதவியாள்.
”125/85. பார்த்தீர்களா, சொன்னது மாதிரியே கொஞ்ச நேரம் உட்கார்ந்ததில் சரியாகிவிட்டது. உங்கள் கணினியை இந்தப் பெட்டியில் வையுங்கள்.” கணினியில் இருந்த எல்லாத் தகவல்களும் பொதுவெளிக்குச் சென்றுவிடும். போகிற இடத்தில் புதுக்கணினியில் எல்லாம் வந்து சேர்ந்துவிடும்.
இந்த வட்டத்தில் நில்லுங்கள்.”
ஒரு பெரிய வட்டம் அவளை சுற்றி தலைமுதல் கால் வரை வந்தது. மீண்டும் கால் முதல் தலை வரை வந்து நின்றபோது அவள் உடல் சரிந்தது. காத்திருந்த தள்ளுவண்டியில் உடலை வைத்து இழுத்துச் சென்றாள் உதவியாள்.
பாவ்னா கண்ணைக் கசக்கிக் கொண்டாள். எதிரே பழங்காலக் கட்டடம் ஒன்று தெரிந்தது.
“பாதுகாப்புச் சோதனைக்கு எதிரே சாவடி இருக்கிறது. அது தாண்டியதும் வாகனத்தில் செல்லலாம்” என்றாள் உதவிப் பெண்மணி. டெல்லி/0001 என்று எழுதியிருந்தது கூண்டுக்கு வெளியில். நடக்க ஆரம்பித்தாள். அருகில் ஒரு கூண்டில் இவள் பெயர் எழுதி ஒரு கணினி வைக்கப்பட்டிருந்து. முகத்தைக் காட்டி அதை அவள் கணினியாக்கிக் கொண்டாள்.

ஒரு நொடியில் பூனேயில் இருந்து டெல்லிக்கு வந்துவிட்டோம். 2077க்கு முன் பயணம் என்பது எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்? நான் பிறந்ததும் எல்லாம் சரியாகிவிட்டது. டெல்லியின் பிரம்மாண்ட அணிவகுப்பு சாலை தெரிந்தது. டெலிபோர்ட்டிங்கே இந்தியக்கண்டுபிடிப்பு என்ற பெருமிதம் அவளுக்குள் வந்தது. உலகமே இன்னும் இந்தியாவிற்கு ராயல்டியாகப் பெருந்தொகை அளித்துக்கொண்டிருக்கிறது.
”நேராக இந்தப் புள்ளியைப் பாருங்கள்” பார்த்ததும் விஸ்க்கென்று ஒரு கதவு திறந்தது. கதவின் அந்தப்பக்கம் ஒரு தானியங்கி வாகனம் நெற்றியில் பாவ்னா என்று காட்டிக் கொண்டிருந்தது.
இவள் ஏறி உட்கார்ந்ததும் விரையத் தொடங்கியது. தூரத்தில் தெரிவதுதான் இந்தியா கேட்டா? பச்சைப்பசேல் புல்தரைக்கு நடுவில் இருந்த செங்கல் சாலையில் “ஜனாதிபதி இல்லத்துக்கு வருகை செய்யும் உங்களை வரவேற்கிறோம்” என்றபடி விரைந்தது வாகனம்.
“%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தோட்டத்தைப் பார்த்த முழு அளவுக் கண்ணாடி அறை உள்ளே குளிரூட்டப்பட்டிருந்தது. தேவையே இல்லாமல் வரிசை வரிசையாக வெள்ளை விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. சாந்தி மனநல ஆலோசனை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு வண்ண விளக்குகள் வளைவாக எல்லை கட்டி ஒளிர்ந்தன. மேஜைக்குப் பின்புறம் இருந்தவள் யாரிடமோ “நாளை மறுநாள் பதினோரு மணிக்கு வரமுடியுமா?” என்றாள்.
அனந்தன் ஒரு வரட்டு இருமல் இருமினார். தும்மல் வருவது போலிருந்தது. வந்தும் தொலைக்காது. எதற்கும் கைக்குட்டையை மூக்கருகில் வைத்துக்கொண்டார். எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது என்று தெரியவில்லை. அதைப்பற்றிக் கவலையும் வராதது அனந்தனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பொறுமை என்பது சற்றும் இல்லாமல் இருந்த அனந்தன் காணாமலே போய்விட்டான், இல்லையா? ஆனால் பொறுமையான ஆளாக நான் இருந்திருந்தால் இந்த உலகம் இப்படியொரு மாற்றத்தைச் சந்தித்திருக்காது. சோம்பேறிகள், பொறுமையற்றவர்கள்தான் உலகை மாற்றுவார்கள்.
“அனந்தன்?” என்றாள் மேஜைக்காரி.
உட்கார்ந்திருந்த நிலையில் இருந்து உடனே எழுந்து கொள்ள முடியாமல் ஒரு நிமிடம் பாதி மடங்கி நின்று எழுந்தார்.
“டாக்டர் உள்ளே அழைக்கிறார்.” நானே டாக்டர்தானம்மா.
“டாக்டர் அனந்தன்? உங்களைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த உலகத்தையே மாற்றிய நபர் என்னிடம் ஆலோசனைக்கு வருவது என் பாக்கியம்” டாக்டர் சாந்தி தலை முழுக்க நரைத்திருந்தது. சோடாபுட்டிக் கண்ணாடிக்குள்ளே கண் பூதாகரமாகத் தெரிந்தது.
“மனநல ஆலோசனைக்கு யார் வருவதுமே பாக்கியம் இல்லை டாக்டர்”
சாந்தி பதறி..“அதைச் சொல்லவில்லை”
அனந்தன் சிரித்தார். “புரிகிறது. சும்மா கிண்டல் செய்தேன்.”
“உட்காருங்கள் டாக்டர். ”உட்காரும்போதும் அதே பாதி மடங்கி ஒரு விநாடி நின்று அமர்ந்தார். “நடந்து வந்தேனில்லையா?”
”நடந்தா? உங்கள் வீட்டில் இருந்து நல்ல தூரம் இருக்குமே?”
“வேறு வழியில் பயணம் செய்ய விருப்பமில்லை..”
“என்ன டாக்டர். மின்வழிப் பயணத்தைக் கண்டுபிடித்ததே நீங்கள்தான்.. கார் பஸ் கப்பல் என்றிருந்த உலகம் மொட்டை மாடிக்கு மொட்டை மாடி டெலிபோர்ட் என்று வந்துவிட்டது. அப்படி மாற்றிய ஆளுக்கு பயணம் செய்யப் பயமா?”
ஒருவேளை அதனால்தான் இருக்குமோ?” சோபாவில் அமர்ந்த அனந்தன் வசதியாகச் சாய்ந்துகொண்டார்.
“சரி கவனிக்கலாம்.. முதலில் இருந்து சொல்லுங்கள். டெலிபோர்ட்டிங்க்குக்கு முன்னால் நீங்கள் நிறைய பயணம் செய்திருக்கிறீர்களா?”

“தினமும் இருநூறு முந்நூறு கிலோமீட்டர் கார் ஓட்டுவேன். அந்தக் கார் இன்னும்கூட என் வீட்டு வாசலில் இருக்கிறது..”
“மின் வழிப் பயணம் செய்திருந்தாலும் அது எப்படி நிகழ்கிறது என்பது எனக்குத் தெரியாது. உங்கள் கண்டுபிடிப்பைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்” என உரையாடலைத் தொடங்கினாள் டாக்டர் சாந்தி.
“%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
டைசனுக்கு வியர்த்துக் கொட்டியது. அந்தக் கட்டிடத்தை வெடிக்க வைக்க இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் நான் எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தில் இருக்கவேண்டும். ஏற்பாடுகள் எல்லாம் நடந்தாகிவிட்டன. மாற்றினால் காசு வராது. நடப்பதற்கே அதிகத் தூரம் இருந்தது.
சத்தமாகச் சொல்லி விட்டான் போலிருக்கிறது. “இந்த வேகத்தில் நடந்தால் இன்னும் ஏழரை நிமிடங்களில் அங்கே இருப்பாய்” என்றது காதுக்குள் உதவியாளன் குரல்.
தெருவில் பெரிய அளவு நடமாட்டம் இல்லை. அங்கங்கே விளக்குகள் சிவப்பும் பச்சையுமாக மாறி நடக்கும் ஒரு சிலரை அனுமதித்துக் கொண்டிருந்தன.
“அடுத்த வலது.”
திரும்பினான். எதிர்பாராத காட்சி. திடுதிப்பென்று விஸ்வரூபக் காட்சி கிடைத்தது போல. வந்து கொண்டிருந்த சிறிய சந்துக்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல். ஒருபுறம் நீண்ட உயர்ந்த கட்டிடங்கள் வரிசையாக, மற்றொரு புறம் பூங்காவைத் தொடர்ந்து ஒரு ஏரி. பூங்காவில் பனி வெள்ளையாகப் பூக்கத் தொடங்கி இருந்தது.
“வலதுபுறம் உள்ள மூன்றாவது கட்டடம்”
”டொரண்டோ டவர்ஸ்” என்றது கட்டட முகப்பு. வாயிலில் காவல் மென்பொருள் உள்ளிருந்து வந்தவர்களை மட்டும் ஆராய்ந்தது . மொட்டை மாடியில் டெலிபோர்ட் இருக்கிறது. அங்கிருந்து இறங்குபவர்களை மட்டும்தான் பரிசோதிக்கும். உள்ளே வருபவர்களைப் பற்றி அது கவலைப்படப்போவதில்லை.
“நான் எப்படி வெளியே வருவேன்?” என்றான் டைசன். காதில் இருந்து உதவியாளன் “கவலை வேண்டாம், இந்தப் பணிக்கு அரசாங்க அனுமதி இருக்கிறது. பழைய கட்டிடத்தைத்தானே இடிக்கிறோம்?”
“இருபதாவது மாடி.”
லிப்ட் இவனைப் பார்த்ததும் திறந்தது. வெளியே வந்தால் உடற்பயிற்சிக் கூடம் ஆளில்லாமல் காற்று வாங்கிக்கொண்டிருந்தது.
“வலதுபக்கம், தெரு தெரியும். எதிரில் அந்தக் கட்டிடம் தெரிகிறதா?”
டைசன் கொண்டுவந்திருந்த பையைப் பிரித்தான். உள்ளிருந்த சாமான்களை ஒரு குட்டி விமானமாகப் பொருத்த முப்பது விநாடிகளானது.
உள்ளங்கைத் திரைமூலம் விமானத்துக்கு உயிர் கொடுத்தான். அது உயிர்த்தெழுந்த புறா போல சிலிர்த்துக்கொண்டது. அந்த விமானத்தை இயக்கி, திரையில் பார்த்துக்கொண்டே இடிக்கவேண்டிய கட்டிடத்துக்கு அனுப்பினான்.
“இதற்கு வெடிமருந்தை அந்தக் கட்டிடத்திலேயே வைத்திருக்கலாம் அல்லவா?” என்றது காதில் குரல்.
“இல்லை. வெடிமருந்தை இடிக்கவேண்டிய இடத்தில் அமைப்பதெல்லாம் அந்தக் காலம். பாதுகாப்பு காரணங்களுக்காக வெடிமருந்தை அங்கே வைப்பதில்லை. ட்ரோன் மூலமாக மட்டும்தான் அனுப்ப முடியும். ஏற்கனவே அந்தக் கட்டிடத்தின் பலவீனமான புள்ளியைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். அந்தப் புள்ளிக்குக் கொண்டு சென்றுதான் குண்டை இறக்க வேண்டும்.”

”கவனமாக விமானத்தைச் செலுத்தினான். மொட்டை மாடி. ரொம்ப காலமாகப் புழங்காதால் அந்த மாடியில் இருந்த டெலிபோர்ட்டிங் சாதனங்கள் நீக்கப்பட்டிருந்தன. 3டி பிரிண்டர் அமைப்பு இருந்த இடத்தில் அதன் சுவடாக அதன் போல்ட்டுகள் மட்டும் வானம் பார்த்துக்கொண்டு இருந்தன. கீழே இறங்கும் கதவைத் திறக்க வேறொரு திரைமூலம் ஆணை தந்தான். கதவைத் தாண்டி, படிகளில் இறங்கி மின் தூக்கி இருந்த பாதைக்கு வந்தது விமானம்.
நான் இடத்துக்கு வந்துவிட்டேன். இனி எப்போது சொன்னாலும் வெடித்துவிடலாம்.”
“நானும் கட்டிட மேற்பார்வைக்குத் தகவல் அனுப்பிவிட்டேன். வந்தவுடன் சொல்கிறேன்” என்றான் உதவி.
டைசன் காத்திருக்கும் நேரத்தில் தன் சொந்தத் திரையைப் பார்த்துக் கொண்டான். சடகோபன். இந்தியாவுக்கு அழைத்திருக்கிறார்.
“நாளை நான் இந்தியா போகப் போகிறேன். சில நாட்கள் இங்கே வேலை எதுவும் ஒப்புக்கொள்ளாதே” என்றான் உதவியாளனிடம்.
”அப்படியா? நானும் வரவேண்டுமா?”
“இல்லை. என்ன வேலை என்று தெரியவில்லை. அரசாங்க அனுமதி இல்லாத வேலை போலிருக்கிறது. அங்கே செல்வதற்கே என்ன என்னவோ நிபந்தனைகளைப் போடுகிறார்கள்.”
“இந்த வேலையெல்லாம் விட்டுவிட்டாய் என்று நினைத்திருந்தேன். மறுபடி ஆரம்பித்துவிட்டாயா? கனடா ஜெயில் போதாதா? இந்தியா ஜெயில் வேண்டுமா?”
டைசன் சிரித்தான். “இந்த வாழ்க்கை நமக்கும் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் மிகச்சில சுவாரஸ்யங்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பு செய்வதுதான் முக்கியமானது. இவர்கள் போடும் கோட்டிலேயே வாழமுடியுமா?”
“தயாராம். வெடி” என்றான் உதவி டைசன் கேள்விக்குப் பதில் சொல்லாமல்.
அந்தக் கட்டிடம் என்னவோ கிச்சுகிச்சு மூட்டியது போல சிலிர்த்துக் கொண்டது. பிறகு உள்ளிருந்து வெடிக்கத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக உயரம் இழக்கத் தொடங்கியது.
“வருகிறேன் மிஸ்டர். சடகோபன்” டைசன் வெடித்து முடிந்ததும் இறங்கும்போது உற்சாகமாக இறங்கினான்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“அடுப்பு மேலே இருக்கிற ப்ரெட் பழசா?” கோபி குளித்துவிட்டுத் துடைக்காமல் வந்ததில் தலையில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது.
“அதெல்லாம் இல்லை. இந்த வாரம் வாங்கியதுதான். சாண்ட்விச்சா செய்யறே? எனக்கும் ஒண்ணு ப்ளீஸ்” அஸ்வினியின் தூக்கம் கலையாத குரல் படுக்கையறையில் இருந்து கேட்டது.
“எனக்கு நேரம் ஆயிருச்சு. இன்னிக்கு திங்கட்கிழமை. ஹெவி வொர்க் லோட்” கோபி அடுப்பைத் தொடங்கி முட்டையைத் தேடினான்.
“வீட்டுல இருந்து வேலை செய்யறதுக்கு எதுக்குத்தான் இவ்ளோ பில்ட் அப்போ.. நீ ஆரம்பி, நான் பண்ணிக்கொண்டு வந்து வைக்கிறேன்..” அஸ்வினி சமையலறைக்குள் நுழைந்தாள்.
கோபி ஒரு கட்டம் போட்ட சட்டையைத் தேர்ந்தெடுத்துப் போட்டுக்கொண்டு கண்ணாடியைப் பார்த்தான். 30 வயதிலேயே மீசையில் வெண்முடி. சரி அதனாலென்ன.. கணினியைத் தொடக்கினான். கணினி அவனை நீலக்கோட்டால் வருடி, “உன் அம்மா உன்னை எப்படிச் செல்லமாகக் கூப்பிடுவாள்?” என்று கேட்டது.
கோபிக்குச் சிரிப்பு வந்தது. ஒவ்வொரு நாள் கணினியை ஆரம்பிக்கும்போதும் ஒவ்வொரு கேள்வி. என்று எந்தக் கேள்வி வரும் என்று யாருக்கும் தெரியாது. “ஆங்க்ரி யங் மேன்” என்றான். கோபி என்ற பெயரை வைத்ததும் அவள்தான். கோபத்தைச் செல்லப்பெயர் ஆக்கியதும் அவள்தான். திரும்பிப் பார்த்தபோது வீட்டின் ஹாலில் அவள் படம் பெரிதாகத் தெரிந்தது.
“திரு கோபிநாத் அனந்தன், இண்டெலிஜென்ஸ் துறையின் மென்பொருள் பொதி உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் உயரதிகாரி பல்வீர் சிங் பட்டி உங்களிடம் பேச விரும்புகிறார்.”
“வாழ்க பாரத். ஹாய் பல்வீர்” பல்வீர் சென்னையில் பிறந்து வளர்ந்த சர்தார்ஜி. பஞ்சாபியைவிடத் தமிழ் சரளமாக வரும்.
“வாழ்க பாரத். கோபி.. முக்கியமான நியூஸ். இண்டெலிஜென்ஸ்ல இருந்து தகவல் வந்திருக்கு. பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கும்னு நினைக்கறாங்க”
“இதென்ன புதுசா? தீவிரவாதம் எல்லாம் இன்னும் இருக்கா என்ன?”
“ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நானூறு பேருக்கு பாரதரத்னா தராங்க, தெரியுமில்லையா?”
“ஆமாம். அப்பாவுக்கும் அழைப்பு வந்திருக்கு. போகமாட்டேன்னு சொல்லிட்டார். சுண்டல் தரா மாதிரி எல்லாருக்கும் தராங்கன்னு சொன்னார்.”
”அந்த நிகழ்ச்சியிலதான் பிரச்சினை வரும்னு உளவுத்துறை சொல்லுதாம்.”
கோபி யோசித்தான். “வெளிய இருந்தா? உள்ளுக்குள்ளயேவா?”
“உள்நாட்டு பயங்கரவாதம் நம்ம டிபார்ட்மெண்ட் இல்லையே. நமக்கு அதுபத்தியெல்லாம் தகவல் வராது. வெளிநாட்டுல இருந்துதான் வந்தாதான் நம்ம தலைவலி..”
“டெலிபோர்ட்டிங் தவிர வேற வழில நாட்டுக்குள்ள நுழைய முடியுமா என்ன?”
“அதையெல்லாம் கம்ப்ளீட்டா சீல் செஞ்சுட்டாங்க. கடல்வழியா யாரும் வரமுடியாது. விமானங்களை எல்லாம் தடை செஞ்சே ஏறத்தாழ இருபது வருஷம் ஆகப்போகுது. தப்பித்தவறி ஏதாச்சும் பறந்தா ஆண்ட்டி ஏர்க்ராப்ட் கன் போட்டுத்தள்ளிடும்”
கோபி யோசித்தான். “இது டெல்லில நடக்கப்போற நிகழ்ச்சி. நாம சென்னைல இருக்கோம். இங்கே எதுக்கு அலர்ட்?”
பல்வீர்,”கண்ணா, இது டெலிபோர்ட்டிங் யுகம். தூரம் நேரம் எல்லாம் ஒண்ணுமே இல்லை. பிரச்சினை பெரிசு. எல்லாரும் அலர்ட்டா இருக்கறது நல்லதுதானே?”
கோபி விடவில்லை.”டெலிபோர்ட்டிங்ல எப்படி தீவிரவாதி வரமுடியும்? அவன் பாடி ஸ்கான் ஆகி அவனை இங்கே மறுபடி உருவாக்கறாங்க. அவன் ஞாபகங்களை டவுன்லோட் செஞ்சு இங்கே மறுபடி ஏத்தறாங்க. அத்தனை ஞாபகங்களையும், நம்ம இண்டெலிஜன்ஸ் டிபார்ட்மெண்ட் கம்ப்யூட்டர்கள் பார்த்து, பிரச்சினை இல்லைன்னாதானே அப்ரூவலே கிடைக்கும்? பயங்கரவாத ஞாபகங்கள் இருந்தால் அதை எப்படி பைபாஸ் செய்ய முடியும்?”

“அது சரிதான். ஆனா நாம இன்னும் கேர்புல்லா இருக்கணும். ஆட்டோமாடிக் ப்ராசஸ்தானே. அதுல எதாச்சும் குழப்பம் இருக்கலாம். உங்க டீம்தான் மேனுவலா தனித்தனியாப்பார்த்து அப்ரூவல் கொடுக்கணும்.”
“சாதாரண வேலையா? பெண்டு கழண்டுரும்!”
“வேற வழியில்லை. இது முக்கியமான விழா. உலகத்தின் முக்கிய மூளைகள் எல்லாத்தையும் ஒண்ணாக் கூட்டப் போறாங்க. எதாச்சும் நடந்தா அறிவியலே அழிஞ்சுடும். உளவுத்துறைக்குத் தகவல் வந்திருக்குன்னா.. நெருப்பில்லாம புகையாது. எந்த அளவுக்கு எச்சரிக்கையா இருந்தாலும் அதிகம்னு சொல்ல முடியாது.”
செய்யாமல் இருக்க முடியாது. கோபி அலுப்போடு கணினியில் திரை மாற்றினான். “நீங்கள் இன்று இருநூற்று இருபது நபர்களைப் பரிசீலனை செய்து விசா வழங்க வேண்டும். முதல் நபர் டைசன், கனடாவில் இருந்து”
தொடரும்…
3 comments on “அறிவே சிவம் – ராம்சுரேஷ்”
kumar
ஆரம்பமே அசத்தல்.
rajaram
அருமை, சிறப்பான தொடக்கம், 'பாரத ரத்னா' வுக்கு ஒரு குத்து. 400 பேருக்கு 😂😂😂😂
balkarasu
//இதென்ன புதுசா? தீவிரவாதம் எல்லாம் இன்னும் இருக்கா என்ன//
அறிவியல் வளர்ச்சி என்பது இருமுனைக் கத்தி போன்றது, அதில் வளர்ச்சி என்ற ஒரு முனையை கூர் தீட்டி, அழிவு என்ற மறுமுனையை மழுங்கச் செய்திருக்கும் உங்களது கற்பனைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.❤️