அத்தியாயம் 3
கோபி கணினியை அணைத்தான். உடம்பெல்லாம் வலித்தது. அப்பா அடிக்கடி சொல்வார் “விரும்பிச் செய்யும் வேலையில் களைப்பு கிடையாது” அவருக்கென்ன? அதீத புத்திசாலி. ஆராய்ச்சியிலும் வென்று உலகத்தைத் திசைதிருப்பிவிட்டார். ஆலமரத்தடி நிழலில் புல் முளைக்குமா? அப்பா பெயரை எடுத்தாலே பல்வீர் “அவருக்கு இப்படியொரு மட்டி மகன்” என்பார்.
“டின்னர் ஆச்சா?”
“ஆர்டர் போட்டு ரொம்ப நேரம் ஆச்சு. டேபிள்ல போய்ப்பாரு” அஸ்வினியின் குரலிலும் களைப்பு இருந்தது.
“வா. சாப்பிட்டுறலாம்”
டைனிங் டேபிளில் இட்லி சாம்பாரைப் பார்த்தான். “இன்னிக்கு புதன்கிழமையா? பாஸ்தா எதிர்பார்த்தேன்”
“அது நாளைக்குதான். ஒழுங்கா இறைக்காம சாப்பிடு.” சத்தம் போடாமல் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
“இன்னிக்கு நாள் ஒழுங்காப் போச்சா?” என்றான் கோபி.
“சேம் சேம். டீம்ல யாருக்கும் வேலையே புரியலை. சேல்ஸ் கம்மின்னு சொன்னா நாம வேணா நம்ம ப்ராடக்ட்ஸை விரும்பற மாதிரி மனிதர்களின் மெமரிய மாத்திரலாமான்னு கேக்கறான் ஒருத்தன்.”
“கோபம், வலி, துக்கம் எல்லாம் எதாச்சும் புக்குல மட்டுமே படிச்சு வளர்ந்த தலைமுறை நாம. அப்படித்தான் இருக்கும்.” என்றவன் திடீரென்று,”மெமரிய மாத்தறதா? அதெல்லாம் முடியுமா என்ன?”
“நீ என்ன இவ்ளோ லோ டெக்கா இருக்கே? எத்தனையோ அண்டர்க்ரவுண்ட் ஆட்கள் இதைத் தொழிலாவே பண்றாங்க. போதை வஸ்து எதுவும் இல்லாம உணர்வை அஞ்சு பத்து நிமிஷத்துக்கு போதை ஏறினாப்பல பண்ற பாட்ச் எல்லாம் சகஜம். என் டீம் மெம்பர்ஸே ரெண்டு மூணு பேர் செஞ்சதா சொல்லி இருக்காங்க”
“இல்லீகல். பிடிச்சு உள்ளே போடச் சொல்றேன்.”
“உன்கிட்டே சொன்னேன் பாரு. கடமை உணர்ச்சியாக்கும்? உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. இதையெல்லாம் பிடிச்சுகிட்டிருந்தா உனக்கு வேற எதுவும் வேலையே நடக்காது.. சரி, உனக்கு எப்படி போச்சு?”
“முந்நூத்து அம்பது கேஸ் ஒரு நாள்ல. பெண்டு நிமிந்திருச்சு.”
“எதாச்சும் சுவாரஸ்யமா கேஸ் இருந்ததா? சொல்லு.” இரவு உணவு நேரத்தில் அலுவலகக்கதைகள் பேசுவது சொந்தச்சண்டைகளைக் குறைக்கும்.
“ஒண்ணுமே இல்லை. எல்லாரும் அரசாங்கப் பேச்சைக் கேட்கும் நல்லவங்க.. ஒரு ரிஜெக்ஷன்கூட இல்லை.”
“உலகமே நல்லவங்க. வரலாற்றுல படிச்ச மாதிரி கோபம் வருத்தம் சண்டை சச்சரவு எல்லாம் இருந்தாத்தான் நிஜமா உனக்கெல்லாம் வேலை. மத்தபடி சும்மா பேருக்குதான் உன் மேனுவல் அப்ரூவல் எல்லாம்.” அஸ்வினி சிரித்தாள்.
கோபி சிந்தனையிலேயே இருந்தான். “அந்த போதை பேட்ச் பத்திச் சொல்லு.. டெம்பரரியா வேற நினைவுகளை பேட்ச் பண்ண முடியுமா?”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சாந்தி, அனந்தனின் அடுத்த வார்த்தைகளுக்காகக் காத்திருந்தாள். அவர் பொறுமையாக இருமிவிட்டு “நான் இப்போதெல்லாம் வெளியே போவதே இல்லை தெரியுமா?” என்றார்.
“ஏன் டாக்.. சார்?” அவசரமாகத் திருத்திக்கொண்டாள்.
“உள்ளே போவதே நானா என்று தெரியவில்லை. வெளியே வருவது நானாக இருக்குமா? இந்தக்குழப்பம்தான் காரணம்.”
சாந்தி அமைதியாக இருந்தாள். பேசவிடவேண்டும்.
“உனக்கு இந்த டெலிபோர்ட்டிங் எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா?”
“நான் போவேன் வருவேன். எப்படி வேலை செய்கிறது என்பதெல்லாம் எனக்கெதற்கு?”
“அந்தக்காலத்தில் வகுப்புகளில் எல்லாப் பொருள்களும் எப்படி இயங்குகின்றன என்றெல்லாம் சொல்லிக்கொடுத்ததில்லையா?”
“இருந்தது. அதெல்லாம் பல வருடமாயிற்றே. விருப்பப்பாடமும் இல்லை, வேலை செய்யும் பாடமும் இல்லை. மறந்துவிட்டது.”
“உனக்காக எளிமைப்படுத்திச் சொல்கிறேன். ஒரு மனிதன், அவன் உடல்+நினைவுகள் தானே?”
“அப்படி எளிமைப்படுத்திவிடமுடியுமா என்ன? எத்தனையோ சின்னச்சின்னச் செயல்பாடுகள், மனம் மூளை சிந்தை வாக்கு என்று எத்தனை விஷயங்கள்..”
“உனக்கு அப்படிச் சுருக்கிப் பார்ப்பது தவறாகத் தோன்றலாம். உன் மனநலப் படிப்பு அதை அனுமதிக்காது. ஆனால் கணினியைப் பொருத்தவரை எல்லாம் நியூரான் வலைப்பின்னல்கள்தான். அது மட்டும்தான்.”
கொஞ்சம் இருமிவிட்டுத் தொடர்ந்தார். “நினைவுகளை முழுக்க முழுக்க டவுன்லோடு செய்ய முடியும் என்பதுதான் என் ஆராய்ச்சி. 2060களின் முடிவில் இதைக் கண்டடைந்தேன்.”
“ஏறத்தாழ அதே நேரத்தில் சால்மர்ஸ் யூனிவர்சிட்டி ப்ரொபசர்கள் க்ளோனிங்கில் அட்டகாசமான முன்னேற்றம் அடைந்தார்கள். மனித உடலை பயோமெடிக்கல் பொருட்கள் கொண்டு 3டி பிரிண்டிங்காகச் செய்யமுடிவதை நிரூபித்தார்கள். ரத்தம் ஒரு கார்ட்ரிட்ஜ், எலும்பு ஒரு கார்ட்ரிட்ஜ், சதை ஒன்று என்று ஒன்றின்மேல் ஒன்றாக அச்சடித்துவிடலாம். டி என் ஏக்கள் தரும் தகவலை ஏற்றினால் அதே ஆள் மீண்டும் உருவாகிவிடுவான். இந்தத் தகவல்களை வேறிடத்துக்கு அனுப்பினால் அந்த இடத்தில் புதிய மனிதன் உருவாகலாம் என்று எங்கள் ஆராய்ச்சிகள் இரண்டையும் இணைத்தோம். ”
சாந்திக்கு இதெல்லாம் பாடமாகப் படித்தது நிழலாக ஞாபக அடுக்குகளில் இருந்தது.
“நான் டென்மார்க் போனேன். இந்த இரண்டு விஞ்ஞான வளர்ச்சிகளையும் ஒன்றாக இணைக்கும் பரிசோதனைகளை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நிறைய சின்னச்சின்ன தோல்விகள். பிறகுதான் இந்த நிலைக்கு வந்தோம்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பாவ்னா காகிதங்களை அமைத்துக்கொண்டாள். கனைத்துக்கொண்டு தைரியத்தை உருவாக்கிக்கொண்டாள்.
“இருபது வயதிலிருந்து நாற்பது வயது இளைஞர்களிடம் நீங்கள் பிரபலமாகத்தான் இருக்கிறீர்கள். நாற்பதில் இருந்து அறுபது வரை கூடப் பரவாயில்லை. அறுபதுக்கு மேல் உள்ளவர்கள்தான்..”
“கிழவர்கள். எதிர்பார்த்ததுதான். பழமை மறக்காதவர்கள்.” ஜனாதிபதியின் நெற்றியில் சுருக்கங்கள் தென்பட்டன. கோபம் போன்றெல்லாம் தெரியவில்லை.
பாவ்னாவுக்கு அவள் மேலதிகாரி சொன்னது நினைவுக்கு வந்தது. “தலைவருக்குப் பிடிக்காத விஷயம் தலையைச்சுற்றி மூக்கைத்தொடுவதுதான். நேரடியாகச் சொல். வார்த்தை விரயம் செய்யாதே”
“அது மட்டுமல்ல. பழைய விஷயங்களைச் சொர்க்கம் என்று நினைக்கும் தலைமுறை. டிக்கட் புக் செய்து விமான நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் காத்திருந்தவர்கள். மணப்பாறை முறுக்கையும் வாரங்கல் பிரியாணியையும் ரயில் கிளம்புவதற்குமுன் ஓடி வாங்கித் தின்று தேவாமிருதம் என்று நினைத்தவர்கள். ஒவ்வொருநாளும் பத்தாயிரம் அடி நடப்பதற்குப் பெருமைப்பட்டவர்கள்..”
“இவ்வளவு நாள் பேச்சுக் கேட்டுக்கொண்டுதானே இருந்தார்கள். திடீரென்று ஏன் இந்தத் திட்டத்தை எதிர்க்கவேண்டும்? அதுவும் இன்னும் ஒரு மாதத்தில் வரப்போகும் திட்டம்!” பிரவீண் பதில் எதிர்பார்த்துப் பேசியதுபோல் தோன்றவில்லை. ஆனாலும் பாவ்னா பதில் சொன்னாள்.
“எவ்வளவு நல்ல மாற்றமும் பழகிவிட்டபின் புதுப்பிரச்சினைகளை உருவாக்குகிறது. பழையதை எண்ணி ஏங்கவைக்கிறது.”
பிரவீண் அவளை ஆழமாகப் பார்த்தார். சிறு பெண்ணிடம் இவ்வளவு தத்துவம் எதிர்பார்க்கவில்லை.
”இருக்கட்டுமே..அவர்கள் வாழ்க்கையை எவ்வளவு சுலபமாக்கியிருக்கிறோம்.. நன்றி கெட்டவர்கள். “
“அவர்கள் அப்படி நினைக்கவில்லை. புதிதாக ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் அவர்கள் அறிந்த உலகிலிருந்து அப்புறப்படுத்திவிட்டதாக உணர்கிறார்கள். கஷ்டப்பட்டு உருவாக்கிய திறமைகள் எல்லாம் வீணாகிவிட்டதாக உணர்கிறார்கள். திறமையாகக் கணக்குப்போடக் கற்றார்கள், அவர்களைக் கணினி தோற்கடித்தது. அழகாக வண்டியோட்டக் கற்றார்கள். தரைவழிப்போக்குவரத்தே பெருமளவு தடை செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த உலகத்தில் ஒட்டாதது போல உணர்கிறார்கள்.”
பிரஜாபதி குறுக்கிட்டார். “எனக்கு, எவ்வளவு பேர், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், கடந்த ஆறுமாதம் டெலிபோர்ட் செய்யாதவர்கள், அவர்களில் எத்தனை பேர் இந்த புதிய மருத்துவக் கொள்கையை ஏற்கவில்லை என்ற தகவல் வேண்டும்”
பாவ்னா சில பொத்தான்களை அழுத்த பிரஜாபதி திரையைப் பார்த்துச் சொன்னார். “மொத்த எதிர்ப்புமே இந்தக்குழுவில்தான் இருக்கிறது, இல்லையா?”
இதுவரை தகவலை இந்த வடிவில் பார்த்திராத பாவ்னாவுக்கும் ஆச்சரியம்தான். ”ஆமாம்.”
“புதிய மருத்துவத் திட்டத்தை முதலில் கொண்டுவந்துவிட்டு பிறகு இவர்களைக் கவனித்துக் கொள்ளலாமா?” பிரவீண் ஆர்வத்துடன் கேட்டார்.
“அது சரிப்படாது.” பிரஜாபதி திரையைக் காட்டினார், ”இவர்கள் மகிழ்ச்சியே வேண்டாம் என்று இருக்கும் கூட்டம். வலியும் கோபமும் வருத்தமும் சேர்ந்த வாழ்க்கை சிறு வயதில் இருந்து பழகிய மக்கள். அதில் ஒரு சுகம் இருப்பதாக இப்போது நினைக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். வலி கோபம் வருத்தம் இல்லாமல் இருந்த நாட்கள் போதும் என்று நினைப்பதனால் இந்தப் புதிய மருத்துவத்தில் நம்பிக்கையும் போய்விட்டது.. அப்புறம் எப்படி?”
பிரவீண்குமார் ஆழமாகச் சிந்தித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு “இந்தப் புதிய மருத்துவத்திட்டத்தையும் அவர்களுக்காகத்தான் உருவாக்கியிருக்கிறேன். அதுகூடப் புரியவில்லை அவர்களுக்கு.”பெருமூச்சுவிட்டுத் தொடர்ந்தார். ”ஏன்? நானும் அவர்களில் ஒருவன் தான். நான் கற்ற அரசியல் இன்று உதவாது. பிரச்சாரங்களுக்கு நேரம் இல்லை. இலவசங்கள் நலத்திட்டங்கள் எதுவும் வேலைக்காகாது. உங்களைப் போன்றவர்கள் மட்டும்தான் ஏதாவது செய்யமுடியும்”
பாவ்னா காத்திருந்தவள் போல, “டாக்டர் அனந்தன் போன்றவர்கள் நிச்சயம் உதவமுடியும்” என்றாள்.
இதுவரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பிரஜாபதி,”அனந்தனா? வாய்ப்பே இல்லை! அந்த ஆளே மனநல ஆலோசனைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்!”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“பேராசிரியர் சடகோபன்” என்ற பெயர்ப்பலகையைப் பார்த்த டைசன் கண்ணாடிக்கதவைத் தட்டினான். “டைசன்? உள்ளே வாருங்கள்” என்றார் சடகோபன்.
“அகழ்வாராய்ச்சி சம்பந்தமாக..” டைசன் தயங்கித் தயங்கிச் சொன்னான். எவ்வளவு சாதித்த பேராசிரியர். அவர்முன் ஒன்றுமே அறியாதவனாக உணர்ந்தான்.
“அதையெல்லாம் நம்புகிறீர்களா? டைசன்.. டைசன் என்று அழைக்கலாம் இல்லையா?”
“தாராளமாக.” சுற்றுப்புறம் இருந்த தொல்பொருள்கள் டைசனை இழுத்தன. சிந்து சமவெளிப் பொம்மைகள், சுமேரிய மண்பாண்டங்கள் எல்லாம் நிஜமாகவே இருந்தன. பல கல்வெட்டுகள் அறையெங்கும் சட்டத்துக்குள் படங்களாக இருந்தன. இந்தத்துறையின் உச்சபட்ச இடத்தில் இருக்கிறோம்.
“டைசன், நீங்கள் அகழ்வாராய்ச்சி மாணவனாக கடந்த நாற்பத்தெட்டு மணிநேரமாகத்தான் இருக்கிறீர்கள் என்றால் நம்புவீங்களா?”
டைசன் குழப்பமானான். இந்தத்துறைதானே என் வாழ்க்கை. இளநிலைக் கல்வி நாட்களிலேயே சடகோபனை ஆதர்சமாகப் பூஜித்தவன் அல்லவா நான்?
அவன் எண்ண ஓட்டத்தைத் தொடர்ந்தவர் போல “அதெல்லாம் உண்மைதான். ஆனால் அது என்னுடைய இன்னொரு மாணவனின் நினைவுகள். அதை உங்களுக்கு ஏற்றியிருக்கிறோம், தற்காலிகமாக.”
அவரே தொடர்ந்தார். “இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த நினைவுகளை அழித்து உங்கள் நிஜ நினைவுகளை ஏற்றிவிடுவோம்”
டைசனுக்குக் குழப்பம் குறையவில்லை. இது சாத்தியமா? இருந்தாலும் ஏன் இப்படிச் செய்திருக்கிறார்கள்?”
“வெடிகுண்டு விற்பன்னருக்கு இங்கே என்ன வேலை? எனக்குத் தேவையான திறமையை நேரடியாக அழைத்துவர முடியுமா?” சிரித்தார் சடகோபன்.
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.