அத்தியாயம் 4
சாந்தி மனநல ஆலோசனை மையம் என்ற திரையில் கற்காலத்தில் இருந்து தற்காலம் வரை மனிதர்களின் உருமாற்றம் ஓடிக்கொண்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டு வரை மெதுவாக இருந்த உருமாற்றம் அதன் பிறகு அதிவேகமெடுத்தது. அனந்தன் அந்தத் திரையையே பார்த்துக்கொண்டிருந்தார். நீண்டநேரம் எதுவும் பேசவே இல்லை. சாந்திக்கு அலுப்புத்தட்ட ஆரம்பித்தது. “அப்புறம்?” என்றாள்.
அதைக்கவனிக்காத அனந்தன் “இந்த வேகம்.. உனக்குத் தெரியுமா? சக்கரத்தைக் கண்டுபிடித்து ஏறத்தாழ ஐயாயிரம்ஆண்டுகள் மனிதனின் வேகம் மணிக்கு இருபது கிலோமீட்டர்களைத் தாண்டவில்லை. அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் நொடிக்கு இருபது கிலோமீட்டர் செல்ல ஆரம்பித்துவிட்டான். அதற்கடுத்த நூற்றாண்டில்? நேரத்தைச் செலவே செய்யாமல் இடம்மாற ஆரம்பித்திருக்கிறான்.”
“முன்னேற்றம் என்பது எக்ஸ்பொனென்ஷியல் இல்லையா? சென்ற நூறு ஆண்டுகளின் முன்னேற்றம் அடுத்த பத்துஆண்டுகளின் முன்னேற்றத்தைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.”
“உண்மைதான். ஆனால் எதை நோக்கி இந்த ஓட்டம்? எந்த ஓட்டத்துக்கும் ஒரு முடிவுப்புள்ளி வேண்டாமா? எங்கோ ஓரிடத்தில் நிற்பதற்காகத்தானே நூறு மீட்டர் பந்தய வீரனும் ஓடுகிறான் மாரத்தான் வீரனும் ஓடுகிறான்?”
சாந்தி கொஞ்சம் பொறுமை இழந்தவளாகவே கேட்டாள் “இப்போதைய இந்த வேகத்தைச் சாத்தியமாக்கியவர் நீங்கள்தானே?”
அனந்தன் வெற்றுச்சிரிப்பு சிரித்தார், “உண்மைதான். இப்போது அதற்காக மருகாத நாளில்லை. காலப்பயணம் சாத்தியமானால் இந்த மாற்றங்களையே அந்த நாட்களுக்குச் சென்று அழித்திருப்பேன்.”
“கண்டுபிடிக்கும்போது இப்படி வணிகமயமாகும் என்று தெரிந்திருந்தால் செய்திருப்பீர்களா? அணு ஆராய்ச்சியை வைத்து குண்டு போட்டதற்கு விஞ்ஞானி மீது பழிபோட முடியுமா? டி என் டி கண்டுபிடித்த குற்ற உணர்வை மறைக்கத்தானே நோபல் பரிசே உருவானது? நீங்கள் இல்லாவிட்டால் வேறொரு விஞ்ஞானி இதைக் கண்டுபிடித்திருப்பார்.”
மறுபடியும் அனந்தன் அமைதியானார். திரை மீண்டும் கற்காலத்துக்குச் சென்றது. “நான் ஒரு கருவிதான். சர்ஜன் கையில் இருக்கும் கத்தியல்ல, போர்வீரன் கையில் இருக்கும் வாள். அழிக்கத்தான் செய்யும், காக்காது” என்றார் எதோ நினைத்துக்கொண்டவர் போல.
“இப்போது என்ன ஆகிவிட்டது? எவ்வளவோ செலவுகள் குறைந்திருக்கின்றன. ஆட்டோமொபைல்கள் தேவையில்லை, விமானங்கள் கப்பல்கள் ரயில்கள் எல்லாம் பெரும்பாலும் வழக்கொழிந்து போய்விட்டன. சாலைப்பராமரிப்புக்கு சென்ற நூற்றாண்டைவிட நூற்றில் ஒரு பங்குதான் செலவாகின்றது. விபத்துகள் இல்லை, மனித யத்தனங்கள் இல்லாமல் பிரயாணங்கள் நடக்கின்றன. எல்லாம் நல்லபடியாகத்தானே இருக்கிறது?“
“தேக்கம் வந்திருக்கிறதே, அதை நீங்கள் உணரவில்லையா?”
”என்ன தேக்கம்? வேகமான மாற்றங்களை முதலில் திட்டினீர்கள். இப்போது தேக்கம் என்கிறீர்கள். நீங்கள் பேசுவது உங்களுக்கே கேட்கிறதா?” சாந்தி புன்முறுவலுடன் கேட்டாள்.
”தொலைபேசியைக் கண்டுபிடித்தது கண்டுபிடிப்பு. இணையத்தைக் கண்டுபிடித்தது கண்டுபிடிப்பு. தொலைபேசியில் இணையத்தைக் கொண்டுவருவது கண்டுபிடிப்பல்ல, மேம்படுத்தல். நான் சொல்வது கண்டுபிடிப்பில், அதற்கான ஆராய்ச்சியில் ஏற்பட்டிருக்கும் தேக்கம். மேம்படுத்தல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் புதிய சித்தாந்தம் உருவாகவில்லை. இந்த வித்தியாசம் உங்களுக்குப் புரிகிறதா?”
”தேவைகள் இல்லையென்றால் கொஞ்சம் நிதானம் சகஜம்தானே?. எல்லாக் காலகட்டத்துக்கும் எதாவது கண்டுபிடித்துக்கொண்டே இருக்கவேண்டுமா? எனக்கு ஒரு தேக்கமும் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் நீங்கள் என்ன அறிவியலுக்குத் தந்தையா என்ன? உங்களுக்குக் குற்ற உணர்ச்சி ஏன் வருகிறது?”
அனந்தன் சீண்டப்பட்டவர் போல தலையை உயர்த்தினார். “சாந்தி.. நீங்கள் ஒரு பன்றி என்பது உங்களுக்குத் தெரியுமா?”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
”அந்தப்பெண் சொல்வது சரிதான்” என்றார் பிரஜாபதி. குடியரசுத்தலைவரின் அலுவலக அறையில் பிரவீண் அமர்ந்திருக்க, பிரஜாபதி சுற்றி நடை போட்டுக்கொண்டிருந்தார். எதைப்பேசினாலும் நடந்தபடிதான் பேசுவார். உட்கார்ந்து பேசுவது அவருக்கு ஒத்துவராது.
“புதிய மருத்துவத் திட்டம் தேவையான ஒன்று. அதை அமல்படுத்தாவிட்டால் நாடு எவ்வளவு விரைவாக மாற்றம் கண்டதோ அதைவிட விரைவாக பழைய நிலைக்குப் போய்விடும். பழைய நிலைக்குப் போனாலும்கூடப் பரவாயில்லை – அதைவிட மோசமான நிலைக்கு – அதலபாதாளத்தில் விழுந்துவிடும்.” பிரஜாபதி கண்டிப்பாகப் பேசினார்.
“அப்புறம் ஏன் இந்தக் குழுவை அழைத்தீர்கள்? மாஸ்மைண்டர்ஸ் எல்லாம் இப்போது தேவைதானா? அவசரச் சட்டமாக புதிய மருத்துவத் திட்டத்தை அமல்படுத்திவிடலாமே..” பிரவீண் குழப்பமாகக் கேட்டார்.
“இல்லை. அது முடியாது. இவர்கள் முதலில் செய்த ஆய்வே மக்களுக்குச் சில தடை செய்யப்பட்ட உணர்ச்சிகள் திரும்பியது குறித்துத்தான். ஆங்காங்கே சிலர் கோபப்படுகிறார்கள். சிலருக்குப் பழைய காலம் குறித்த வருத்தம் ஏற்படுகிறது. அந்தப் பெண், அவள் பெயர் என்ன? ” ஒரு நொடி யோசித்து,” பாவ்னா, அவள் சொன்னது போலத்தான்.”
“இருந்தால் என்ன? இத்தனை கோடி மக்களில் ஓரிருவர் கோபப்பட்டால் என்ன ஆகிவிடப் போகிறது? யுகப்புரட்சி போல கிழப்புரட்சியா நடக்கப் போகிறது? ” பிரவீண் சிரித்தார்.
“உங்களுக்கு அறிவியல் புரியவில்லை. இந்தக் கோபம் இல்லா வருத்தம் இல்லா நல்வாழ்வு எல்லாரும் பெற, பின்னணியில் நடந்த விஷயங்களின் உள்நுணுக்கம் உங்களுக்குப் புரியவில்லை. தூண்டுதல்கள் சின்னதாகத் தான் ஆரம்பிக்கும். அப்படியே கூடத் தொடங்கும். எவ்வளவோ பெரிய புரட்சிகள், கலவரங்கள் சில முக்கியமானவர்களுக்கு நடந்த வருத்தம், அங்கிருந்து கிளம்பிய கோபம் போன்ற ஒற்றைப் புள்ளிகளில்தான் ஆரம்பித்திருக்கின்றன.” பிரஜாபதி கொஞ்சம் கவலையாகத்தான் பேசினார்.
“எனக்கு அப்படிப்பட்ட நாடு வேண்டாம். எனக்கு இப்போதைய நாடுதான் பிடித்திருக்கிறது. நாம் செய்யும் சீர்திருத்தங்கள் கேள்விகள் கேட்கப்படாமல் ஏற்கப்படுவது பிடித்திருக்கிறது. திட்டம் உருவாக்கி கீழ்சபையில் நிறைவேற்றி மேல்சபையில் தொங்கி நீதிமன்றத்துக்குப் பயந்து..” பிரவீண் குரலில் ஒரு வெறுப்பு தென்பட்டது. “ஒரு ரோடு போட ஆயிரம் சில்லறை அரசியல்வாதிகளைச் சமாதானப்படுத்தும் பழைய நிலைக்குப் போக நான் விரும்பவில்லை. ”
“இந்த நிலைக்கு வர நாம் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. எல்லாவற்றையும் பணயம் வைத்தோம். தடாலடியாகச் சிந்தித்தோம், செயல்படுத்தினோம். இப்போது நடக்கும் மாற்றங்கள் அவற்றைச் செல்லாமல் ஆக்கிவிட வாய்ப்பிருக்கிறது.” பிரஜாபதி பழைய நினைவுகளில் மூழ்கினார்.
“வழக்கம்போல உங்களைத்தான் நான் நம்புகிறேன். அதையே சாதித்த நீங்கள் இதைச் சுலபமாகச் செய்வீர்கள் என நம்புகிறேன்”
“அதைத்தான் நானும் சொல்கிறேன். எங்களை நம்புங்கள். புதிய மருத்துவக் கொள்கையை அமல்படுத்த மாஸ்மைண்டர்ஸ் உதவி நமக்குத் தேவைதான். உலகத்தின் கண் இப்போது நம் மேல் இருக்கிறது. பழைய மாதிரி பயணங்களில் மக்கள் மனதை மாற்றுவது எல்லாம் முடியாது. உலகம் நம்மை உற்றுநோக்கிக் கொண்டு இருக்கிறது. மக்கள் ஒத்துழைப்புடன் தான் இதைச் செயல்படுத்த முடியும்.” பிரஜாபதி தொடர்ந்தார். “ஒன்று வேண்டுமானால் செய்யலாம். முதலில் நாம் செய்த வேலைக்கு உதவியாக இருந்த பேராசிரியரை அந்தப் பெண் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் வைக்கிறேன்.”
“உங்கள் குழு இன்னும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறீர்களா?” பிரவீண் எதோ நினைத்துக்கொண்டவர் போலக் கேட்டார்.
“சந்திப்பு என்று இல்லை. ஆனால் அத்தனை பேரும் தொடர்பில்தான் இருக்கிறோம். வாரம் ஒருமுறையாவது எல்லாருடனும் பேசிவிடுவேன்.”
“நான் ஒருமுறை சந்திக்க முடியுமா?”
“எதற்கு?” எனத் தொடங்கிய பிரஜாபதி அவசரமாக நிறுத்திக்கொண்டார். “மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் மேல்கேள்வி ஏது? ஏற்பாடு செய்கிறேன்.”
“ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விழா?”
“அது திட்டமிட்டபடி வாணவேடிக்கையுடன் நடக்கும். கவலை வேண்டாம்.” வாணவேடிக்கையைக் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பல்வீர் தன் சுழல் நாற்காலியை விட்டு எழுந்து காமராவுக்குத் தொப்பையைக் காட்டிக்கொண்டிருந்தார். “என்ன எமர்ஜன்ஸி கோபி?”
“என் மனைவியோட பேசிக்கிட்டிருந்தப்ப அவங்க டீம் மெம்பர்ஸ் சில பேரைப்பத்திச் சொன்னா”
“மெடிகல் சைட்லதானே இருக்கா உன் வைஃப்? அவங்க டீம் மெம்பர்ஸ் விசா அப்ளை பண்ணாதவரைக்கும் நமக்கென்ன பிரச்சினை?” பல்வீர் ஒரு குழலை உறிஞ்சிப் புகைவிட்டார்.
“அதில்லை சார். நம்ம வேலை கூட நேரடி கனெக்ஷன் எதுவும் இல்லை. ஆனா அவங்க சில பேர் போதை மருந்து மாதிரி பேட்ச் எடுத்துக்கிறதாச் சொன்னா”
“சோ? நான்கூடத்தான் இப்ப வேப் பிடிக்கிறேன். அதுக்கு ஏறத்தாழ அடிக்ஷனே இருக்கு. “
“இதெல்லாம் மைல்ட் போதை சார், அனுமதிக்கப்பட்ட அத்துமீறல். இது சட்டத்தை மீறிய போதை..”
“சப்ஸ்டன்ஸ் அப்யூஸ் மாதிரி சொல்றியா? கொகெய்ன், ஓப்பியம் மாதிரி? அதெல்லாம் இப்ப எப்படி?”
“போதைப் பழக்கம் என்பது வெளிப்புறப் பொருட்களால இருந்த காலம் முழுக்க முழுக்க கண்ட்ரோல் ஆயிருச்சுதான். ஒரு கிராம்கூட அந்த மாதிரிப் பொருட்கள் ஊர்விட்டு ஊர் தாண்ட முடியாது. ஆனால் அந்தப் பழக்கமே இல்லைன்னு சொல்ல முடியாது – இதான் ஷாக்கிங்கான நியூஸ்”
“இப்பவும் எனக்கு நமக்கு இதுல என்ன ரெலவன்ஸ்ன்னு புரியலை. என்ன எமர்ஜன்ஸின்னும் புரிய்லை”
“போதைன்றது என்ன? எந்தப்பொருளால போதை வந்தாலும் நரம்புகள் மூலமா மூளைக்கு ஒரு செய்தி சொல்லி அதை வேறு விஷயங்களை யோசிக்க வைக்கறதுதானே போதை? இவங்க மெமரிஸ்ல விளையாடறாங்க. டெலிபோர்டேஷனுக்கு உபயோகிக்கற அதே டெக்னாலஜியைக் கொஞ்சம் மாத்தி போதையை ஒரு நினைவாச் சேர்த்து, அதோட தூண்டல்கள்னால ஹை ஆகறாங்க.”
“கொஞ்சம் கொஞ்சம் டார்க் வெப்ல இப்படி எல்லாம் நடக்குதுதான். அதுக்கும் நீ சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?”
“அவங்க மெமரியோட விளையாடினா, ஒருத்தனை நல்லவனாவோ கெட்டவனாவோ தேவைப்பட்டா மாதிரி இண்டெலிஜன்ஸ்க்குக் காட்டலாம் இல்லையா?”
“உளறாதே. அரசாங்கம் தவிர இந்த மெமரி டவுன்லோட் அப்லோட் செய்யற டெக்னாலஜி வேற யார் கைக்கும் போகவே முடியாது. எல்லா டெக் பார்ட்னர்ஸும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவங்க. இந்த ப்ராஸஸ் ஓர் இரும்புச் சிறை.” பல்வீர் நம்பிக்கையோடு சொன்னாலும் கொஞ்சம் ஆட்டம் கண்டுதான் போயிருந்தார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சடகோபனைக் குழப்பமாகப் பார்த்தான் டைசன். என் அகழ்வாராய்ச்சி அறிவெல்லாம் கற்பனையா? இந்தப் பொம்மையைப் பார்த்ததும் மொஹஞ்சதாரோ சிற்பம் என்று என்னால் எப்படிச் சொல்ல முடிந்தது? பொதுவாக யாருக்கும் தெரியாத பேராசியர் சடகோபனை ஏறத்தாழ ஒரு தெய்வமாகப் பார்க்கிறேனே அதெப்படி?
கேட்டான் .
“கனடாவில் இருந்து உங்களை இங்கே வரவழைக்கவேண்டியிருந்தது. கொஞ்சம் வேலைகள் செய்யவேண்டும். அதற்காகச் சட்டவிரோத தளங்களின் உதவியோடு ஒரு மென்பொருளைத் தயார் செய்ய வேண்டியதாக இருந்தது.”
“புரியவில்லை..”
“உங்களுக்குச் சில தனிப்பட்ட திறமைகள் இருக்கின்றன. வெடிமருந்துகளைக் கையாளும் திறமை. கணக்கிடும் திறமை. பணத்தின் மேல் ஆசை. – இந்தத் திறமைகள் எனக்குத் தேவைப்பட்டன. அதனால்தான் உங்களைத் தொடர்புகொண்டோம். இங்குவர அனுமதி கேட்டபோது, அந்தத் திறமைகளை உங்கள் உடலில் இருந்து நீக்கி வேறொரு இடத்தில் பத்திரப்படுத்திவிட்டேன்”
டைசன் இன்னமும் குழம்பித்தான் இருந்தான். சடகோபன் தொடர்ந்தார்.
“என் ஆராய்ச்சி மாணவன் ஒருவனின் நினைவுகளைச் சேமித்து, கனடாவுக்கு அனுப்பினேன். நிழல் இணையத்தில் ஒரு நாள் நீங்கள் வந்து அமர்ந்தபோது உங்களுக்கு அந்த நினைவுகளை ஏற்றினேன். அனுமதி பெறுவது சுலபமாகிவிட்டது. உங்களை இங்கு வரவழைத்துவிட்டேன்..”
“என் திறமைகள் என்று சொன்னதையெல்லாம்தான் காபி செய்துவிட்டீர்களே? அதையே உங்கள் மாணவனுக்கு ஏற்றிவிட்டிருந்தால் போதாதா?”
“செய்யலாம். ஆனால் உங்கள் திறமைகள் உங்கள் உடலுடன் தொடர்புடையவை. பத்தடி தாண்டிக்குதிக்க வேண்டுமென்றால் எவ்வளவு எடைக்கு எவ்வளவு சக்தி தேவை என்பது மாறுபடும் இல்லையா? அதனால் மைக்ரான் சுத்தமாக அதே அளவான உடல் தேவை. இப்போது உங்கள் வெடிகுண்டு விற்பன்னர் நினைவுகளை உங்கள் உடலுக்குள் செலுத்தினால் அதே டைசனாக மாறிவிடுவீர்கள்.”
“மாறி?”
“சில மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கின்றன. பழையதோர் உலகம் செய்ய வேண்டியிருக்கிறது.”
தொடரும்…
2 comments on “அறிவே சிவம் – ராம்சுரேஷ்”
kumar
வித்தியாசமான கதைக்களம் என்பதால் கதையைப் புரிந்து ஏற்பதில் சற்றே கடினமாக இருக்கிறது.
நாலைந்து கதைகளாய் (கிளைகளாய்) பிரிந்து பயணிக்கும் கதை.
பலதரப்பட்ட கதாபாத்திரங்கள்.
கதையின் ஆரம்பத்தில் இருக்கிறோம் என்பதால் எழுத்தாளர் கதைகளை விரித்து எழுதுவதைப் புரிந்து கொண்டு வாசிப்பதில் எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் போகப்போக கதை ஈர்த்துக்கொள்ளும் என்பதை எழுத்துநடை சொல்லாமல் சொல்கிறது.
அருமை சுரேஷ் அண்ணா.
கலக்குங்க.
நானும் கதாபாத்திரங்களைப் புரிந்து கதையையும் புரிந்து கொண்டு பயணிக்க ஆரம்பிக்கிறேன்.
ராம்சுரேஷ்
நன்றி குமார். சரியான அவதானம். வாசகரின் புத்திசாலித்தனத்தின்மேல் நிறைய நம்பிக்கை வைத்து எழுதியிருக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.