அத்தியாயம் 5
மேஜை மேலிருந்த பொம்மையைப் பார்த்தான் டைசன். என்ன பொம்மை இது? சுற்றிப்பார்த்தபோது காயலான் கடை போலச் சம்பந்தமே இல்லாத பல விஷயங்கள் இருந்தன. சட்டத்துக்குள் பழுப்பேறிய புகைப்படங்கள். கண்ணாடிக்கதவில் திரும்பி இருந்த எழுத்துகள் இவனுக்காக மறுபடி திரும்பி மொழிமாறி “சடகோபன், பேராசிரியர்” என்று காட்டியது.
ஓ.. சடகோபனா? அட்வான்ஸ் வாங்கிய நினைவு வந்தது. இந்தியாவில் வேலை என்றார்கள். அனுமதிக்காக என்னவோ மாற்றம் செய்யப்போவதாகச் சொன்னார்கள்.
கடிகாரத்தைப் பார்த்தான். இந்திய நேரம் என்று காட்டியது. இந்தியா வந்துவிட்டோமா?
சடகோபன் காப்பிக்கோப்பையுடன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். “கருங்காப்பிதானே? சர்க்கரை இல்லாமல்?”
அதை வாங்கிக் குடித்தான்.
“உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று சடகோபனைக் கேட்டான்.
“சில பேக்டரிக்கள். அவற்றை அழிக்க வேண்டும். அங்கிருக்கும் உயிர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது. முடியுமா?”
“பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி? என்ன பேக்டரி, என்ன உயிர்கள் என்றெல்லாம் சொன்னால்தானே திட்டம் போட முடியும்?”
“இந்தியாவில் மொத்தம் இருநூற்றைம்பது இடங்களில் இந்த பேக்டரிகள் இருக்கின்றன. இவை வேலை செய்யாவிட்டால் டெலிபோர்ட்டிங் நடக்காது..”
“அப்படியா? என்ன பேக்டரி?” டைசன் அவர் டேபிளில் இருந்த பிஸ்கட் பாக்கட்டை சுவாதீனமாகப் பிரித்துச் சாப்பிடத் தொடங்கினான்.
“நீங்கள் இப்போது கனடாவில் இருந்து வந்தீர்கள் அல்லவா? எவ்வளவு நேரம் ஆனது?”
“கனடாவில் இருந்து நான் வந்தேனா? எனக்கு ஞாபகமே இல்லை..”
சடகோபன் தலையில் தட்டிக்கொண்டார். “என் தவறுதான். வந்தது நீங்கள் இல்லை. உங்கள் உடலும் என் மாணவன் சிந்தனையும்.. அதை நானே மறந்துவிட்டேன். சொல்ல வந்தது அதில்லை. நீங்கள் டெலிபோர்ட் ஆகும்போது, உங்கள் சிந்தனைகளை ஆப்டிகல் பைபர் வழியாக போகும் இடத்துக்கு அனுப்பிவிடுவார்கள். உங்கள் உடல் அளவுகள், உறுப்புகளின் நிலை ஆகியவற்றை ஸ்கான் செய்து, வேறொரு கோப்பாக அனுப்பினால், அந்தக் கோப்பை வைத்து இங்கே 3டி ப்ரிண்டர், அதேபோல அச்சடித்து, இணைத்து, நினைவுகளையும் இணைத்துவிடும்.”
“இது எனக்குத் தெரியாதா?”
“மன்னிக்க. நிறைய பேர் டெக்னாலஜியை உபயோகிக்கிறார்களே தவிர, அது எப்படிச் செயல்படுகிறது என்று தெரியாமல்தான் இருக்கிறார்கள். அதனால்தான் விளக்க வேண்டியதாகிவிட்டது.”
“சரி மேலே சொல்லுங்க.”
“3டி பிரிண்டிங் என்று சொன்னேனே, அதற்கு மூலப்பொருட்கள் தேவை இல்லையா? இவையெல்லாம் கார்ட்ரிட்ஜ்களாக ஒவ்வொரு டெலிபோர்ட்டுக்கும் வந்து சேர்கின்றன. உடல் தசைகள், எலும்புகள், நரம்புகள், இதயம் போன்ற உள்ளுறுப்புகள் – ஒவ்வொன்றுக்கும் ஒரு கார்ட்ரிட்ஜ். இந்த கார்ட்ரிட்ஜ்கள் எப்படி உருவாகின்றன? யார் தயார் செய்கிறார்கள்? இதற்கெல்லாம் மூலப்பொருள் – கச்சாப்பொருள் எங்கிருந்து வரும்?”
“எங்கிருந்து வரும்?” டைசன் முன்பு அவசரப்பட்டுச் சொன்ன எல்லாம் தெரிந்த தனம் குட்டு வெளிப்பட்ட குறுகுறுப்போடு கேட்டான்.
“இரண்டு வகையில். ஒன்று, உங்கள் பழைய உடல். அது உருத்தெரியாமல் ஆக்கப்பட்டு எல்லாப் பொருட்களும் அரைக்கப்பட்டு, பதப்படுத்தப்படும். ஆனால் அது மட்டும் போதாது. இந்த முறையில் நிறையச் சேதாரம் ஏற்படும். எனவே அந்தக் குறைவைச் சமன் செய்ய அரசாங்கங்கள் பல மிருகங்களை வளர்க்கின்றன. சிம்பன்ஸி குரங்குகள், பன்றிகள், மாடுகள்.. அவையும் அரைக்கப்பட்டு மாவாகி, கார்ட்ரிட்ஜ்கள் ஆகும். ”
“அந்தக் கார்ட்ரிட்ஜ்களை உருவாக்கும் பேக்டரிகளை அழிக்க வேண்டுமா? அப்புறம் எப்படி டெலிபோர்டிங் நடக்கும்?”
“பழைய கால சொர்க்கத்துக்குப் போவோம்.. விமானங்கள் கார்கள் புகைவண்டிகள்..”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“கோபமா சாந்தி?” அனந்தன் சாந்தியைக் கேட்ட தொனியில் வருத்தத்தைவிடக் கிண்டல்தான் அதிகமாக இருந்தது. கோபம், வருத்தம் எல்லாம் சாதாரண மக்களுக்குப் பழக்கப்படாத உணர்வு என்று அவருக்குத் தெரிந்திருந்த்து.
சாந்தி ஒன்றும் சொல்லவில்லை. கோபம் இல்லைதான். ஆனாலும் எதோ தூண்டப்பட்டது போல.
“பன்றி என்பதை இங்கே நான் திட்டும் வார்த்தையாக உபயோகிக்கவில்லை. உண்மையை மட்டும்தான் சொன்னேன். நீங்கள் மின்வழிப்பயணம் ஒருமுறையாவது செய்திருக்கிறீர்களா?”
“பலமுறை செய்திருக்கிறேன். இன்றுகாலைகூட நொய்டாவிலிருந்து சென்னைக்கு அப்படித்தான் வந்தேன்.”
“அப்படியென்றால் நீங்கள் சென்னைப் பன்றி. பன்றி மட்டும் இல்லை. கொஞ்சம் குரங்கு, நிறைய மாடு..”
“உங்கள் குற்ற உணர்ச்சிக்காக என்னைத் தாழ்த்துவது சரியான தீர்வு கிடையாது டாக்டர் அனந்தன்.” டாக்டரை அழுத்தி உச்சரித்தது நமக்கிடையே ஒட்டுதல் இல்லை என நிறுவுவது போல் இருந்தது. கோபம் வரக்கூட வாய்ப்பிருப்பது போல் தெரிந்தது. அனந்தன் நம்பிக்கையுடன் தொடர்ந்தார்.
“தாழ்த்தவெல்லாம் இல்லை. உங்களுக்கென்ன, நாற்பது வயது இருக்குமா? சின்ன வயதில் தெருவில் நாய்கள் மாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?”
யாரை யார் கேள்வி கேட்க வேண்டும்? இப்போது நோயாளி கேள்விக்கு டாக்டர் பதில் சொல்லவேண்டியதாகிவிட்டது.
“ஏன் பார்க்காமல்? இரவானால் தெருநாய்கள் குரைத்தே என் தைரியத்தைக் குலைக்குமே.”
“கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?”
சாந்திக்கு இந்தக்கேள்விக்கு விடை தெரியவில்லை. “ஒரு இருபது இருபத்தைந்து வருஷம்..” என்று இழுத்தாள்.
“எங்கே போயின எல்லா மிருகங்களும்? மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றிரண்டு இருக்கின்றன. உணவுக்கான மிருகங்கள் பண்ணைகளில் தயாராகின்றன, உடலுக்கான மிருகங்கள் அரசாங்கத் தொழிற்சாலைகளில். அது தவிர்த்து தெருவில் மட்டுமல்ல, காடுகளிலும் மிருகங்களே கிடையாது. கட்டுப்படுத்த முடியாத எல்லாவற்றையும் அழிப்பதில் மனிதனுக்கு நிகரே கிடையாது. கிருமிகள் இல்லை. பயமுறுத்தும் பூச்சிகள் இல்லை. எல்லாப் பூக்களும் தாவரங்களும் அறிவியலின் கட்டுப்பாட்டில்தான் தயாராகின்றன . இயற்கை என்பதை மனிதன் தொலைத்துப் பல ஆண்டுகள் ஆகின்றன. மனிதனாவது மனிதனாக இருக்கிறானா? பாதி உணர்ச்சிகளை மறந்துவிட்டுத்தான் இருக்கிறான்.”
சாந்திக்கும் இந்தத் தகவல்கள் புதிதானவைதாம். “சரி அதற்கும் உங்கள் குற்ற உணர்வுக்கும் என்ன சம்பந்தம்?”
“எல்லாம் இந்தத் தொழில்நுட்பத்தில் இருந்துதான் ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வேளைக்கு ஓர் அடி வீதம் உலகத்தைத் திரும்பச் செல்ல முடியாத பாதைக்குச் செலுத்திக்கொண்டிருக்கிறது.”
“எல்லா மாற்றத்துக்கும் நீங்கள்தான் காரணம் என்றெல்லாம் நினைத்துக்கொள்வதும் ஒரு மனவியாதிதான். அரசாங்க அனுமதிபெற்று ஒரு Guilt-wipe செய்துவிட்டால் போதும்..”
“இப்படி ஏதேனும் நடக்கும் என்று எனக்குத் தெரியாதா? அப்படியெல்லாம் நீங்கள் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த மருத்துவமனையையே நான் தேர்ந்தெடுத்தேன். ” என்றவர், “என் அனுமதி இல்லாமல் அரசாங்க அனுமதியுடன் செய்ய முடியும்தான். ஆனால் அந்த அளவு அரசாங்கம் இந்தப் பழைய பஞ்சாங்கத்தைக் கவனிக்குமா? ” விரக்தியாகச் சொன்னார் கிழவர்,
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“ரொம்ப கண்ட்ரோல்டா இருக்கற ப்ராஸஸ் கோபி இது. சும்மா பயத்தைக் கிளப்பாதே” என்றார் பல்வீர்.
“நாம பாடியைக் கண்ட்ரோல் பண்றோம். அரசாங்கத்துக்குத் தெரியாம ஒரு மிருகத்தையும் யாரும் வளர்த்துட முடியாது. எந்த உணவையும் வாங்க முடியாது, எல்லாம் சரிதான். ஆனால் நினைவுகள்? மூளையில் உள்ள தகவல்கள்?” கோபி விடாப்பிடியாகக் கேட்டான்.
“அந்த சைஸ் இன்பர்மேஷனையெல்லாம் ஹாண்டில் பண்ற அளவுக்கு யார்கிட்டயும் ரிசோர்ஸஸ் கிடையாது கோபி. இப்ப இருக்கற சிஸ்டம் எவ்ளோ ஜெடாபைட், எவ்ளோ ஸ்பீட்ல இயங்குது தெரியுமா? அந்த ஸ்பீட் மெஷின் எல்லாம் இப்ப ப்ரைவேட் ஆளுங்ககிட்ட கிடைக்கவே முடியாது..”
“என் அப்பா முதல்முதல்ல என்னைத்தான் டெலிபோர்ட் செஞ்சார்.. சொல்லியிருக்கேன்ல?”
“ஆமாம், இண்டர்வியூல ஆரம்பிச்சு முன்னூத்திப் பதினைஞ்சு தடவை..”
“சொல்லாததும் இருக்கு. அவர் யூஸ் பண்ண சிஸ்டம்ல இவ்ளோ ஸ்பீட் எல்லாம் கிடையாது. ரெண்டு மூணு மணிநேரம் ஆச்சு நான் முழுசா மறுபடியும் வேற இடத்துல பார்ம் ஆக. “
“என்ன சொல்ல வரே?”
“சிஸ்டம் ஸ்லோவா இருக்கலாம். ஆனா வேலையே செய்யாதுன்னு சொல்லாதீங்க. கொஞ்ச அதிக நேரம் ஆகும், அவ்வளவுதான். ஆனா நிச்சயம் செய்ய முடியும்..”
பல்வீர் முழுதாகக் குழம்பிவிட்டார். “சரி ஓக்கே. நீ சொல்றது சரின்னே ஒரு வாதத்துக்கு வச்சுப்போம். இல்லீகலாவும் ஆட்கள் வரமுடியும்னு சொல்றியா?”
“முழுசா இல்லை. ஆட்களை வேற நினைவுகள் போட்டு லீகலா அனுப்பிட்டு, நினைவுகளை மட்டும் இல்லீகலா டார்க் வெப் மூலம் கொண்டுவந்து ஜாயின் பண்ண முடிஞ்சா?”
பல்வீர் யோசித்தார். “ஆமாம். இது சாத்தியம் மாதிரிதான் தோணுது. நான் ஒரு ஐடியா சொல்றேன், அதும்படி செய்யலாமா?”
“சொல்லுங்க சார்..”
“ரேண்டமா ஒரு ஒரு பத்து பதினைஞ்சு பேரை செலக்ட் பண்ணி, நம்மகிட்ட இருக்கற அப்ளிகேஷனையும் அவங்களோட கரெண்ட் மெமரீஸையும் க்ராஸ் வெரிபிகேஷன் பண்ணலாம். கடைசியா வந்த ஆட்கள்ல இருந்து ஆரம்பிப்போம்.”
கோபி தன் கணினியில் பெயர்களைத் தேர்ந்தெடுக்க ஆணையிட்டான்.
முதலாவதாக வந்த பெயரின் நீலச் சுட்டியை அழுத்தினான். “டைசன்?”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பாவ்னா குடியரசுத் தலைவர் இல்லத்தின் டெலிபோர்ட்டுக்குச் சென்ற போது அவளுக்கு வரவேற்பு பிரமாதமாக இருந்தது. சீருடைக்காவலர்களுக்குத் தகவல் வந்துவிட்டதால் நேரடியாக உடல் பரிசோதனை வட்டத்துக்கே சென்றுவிட்டாள்.
“ஒரு பத்து விநாடிகள்தான், தயவு செய்து காத்திருக்கவும்.” என்றார் ஒரு டாக்டர். தயவு செய்து? பாவ்னாவுக்குக் காலை டெலிபோர்ட் செய்தபோது அரசாங்க அதிகாரிகளின் முகச்சுளிப்பு ஞாபகம் வந்தது. முக்கியப்புள்ளியாகப் பயணம் செய்தால் இப்படியெல்லாம் கூட சௌகரியங்களா?
சொன்னதுபோல பத்து வினாடிகளில் இன்னொரு டாக்டர் வந்து பாவ்னாவை அந்த வட்டத்தில் இருந்து வெளியே கொண்டுவந்தாள். “கேம்ப்ரிட்ஜுக்கு நல்வரவு. உங்கள் இலக்கு இந்த மின்வண்டிக்குத் தெரியும்.” என்று கையில் அவள் கணினியைக் கொடுத்துவிட்டாள். அதே மாடல் இங்கிலாந்திலுமா?
வண்டி செல்லும்போது லேசாக மழை தூறத் தொடங்கியது. திறந்த வண்டி என்பதால் மழைத்துளி மேலே பட காதில் கணினி “பயப்படவேண்டாம், மிகச் சுத்தமான நீர். 6.8 பிஎச், மொத்த திடப்பொருள்கள் 48 பிபிஎம்” என்றது. அப்படியென்றால் என்னவென்று அரசியல் மாணவிக்குப் புரியுமா என்ற கவலைகூட இல்லாத கணினி.
ஐந்து நிமிடங்கள் வண்டி ஓடியது. இவ்வளவு தூரமா?அருகில் எதுவும் டெலிபோர்ட் இல்லையா? நடக்கும்போது காரணம் புரிந்தது.வருடங்கள் ஓடினாலும் கட்டிய மன்னராட்சிக் காலத்தை அப்படியே காட்டிக்கொண்டிருக்கும் இங்கிலாந்துக் கட்டடங்கள். 1927ஆ 2097ஆ என்று தெரியாத செங்கல் சுவர்களில் கதவுகள் மட்டும் நவீனத் தொழில்நுட்பத்தில் முகம்பார்த்துத் திறந்தன. உள்ளே சென்றால் நவீனம் தெரிந்தது. வரவேற்பறைக் கணினிக்கு முகத்தைக் காட்டிச் சொல்ல ஆரம்பித்தபோதே ஹூபர்ட் ஒரு கைத்தடி உதவியுடன் தாங்கித் தாங்கி நடந்துவந்தார்.
நேற்று கணினியிடம் ஹூபர்ட் என்றதும் “கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் ப்ரையன் ஹூபர்ட்டையா கேட்கிறீர்கள்? ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பாரத ரத்னா பெறப்போகும் விஞ்ஞானிகளுள் அவரும் ஒருவர்.” என்றது நினைவு வந்தது.
”நவீன மருத்துவத்தில் இதையெல்லாம் ஒருநொடியில் சரிசெய்துவிடலாமே.” பாவ்னா அவர் கையைக் குலுக்கியவுடன் கேட்டாள், கைத்தடியைக் காட்டி.
“சரி செய்து? என்ன சாதிக்கப்போகிறேன்.. 68 வருடங்களாக இந்தக்கால் என்னைக் கைவிடவில்லை – மன்னிக்கவும் – கால்விடவில்லை” சிரிக்க முயற்சி செய்தார். முகம் எல்லாப்பக்கமும் நடனமாடியது.
“உங்கள் உதவி தேவை என்றதும் ஒப்புக்கொண்டதற்கு நன்றி.”
“அனந்தன் மாட்டேன் என்றுவிட்டாரா?” ஹூபர்ட் சிரித்தார்.
“இல்லை. அவரைவிட நீங்கள்தான் இதற்குச் சரியானபடி உதவமுடியும் என்று பாரத ஜனாதிபதியே சொன்னார்,” பாவ்னா கொடுத்த அழுத்தம் அவருக்கு பெருமை சேர்க்கும் என்று நினைத்துதான் சொன்னாள். ஆனால் அவர் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.
”என்ன வேலை?”
“புதிய மருத்துவக் கொள்கையை மக்களிடம் பரவலாக்கவேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும்… இதுதான் என் தேவை.”
“ஏன் பழைய சாதனையெல்லாம் போதாதாமா அவர்களுக்கு?”
“இது மனித குலத்துக்கான இன்னும் ஒரு பிரம்மாண்ட சாதனையாக அமையும் என்கிறது இந்திய அரசாங்கம்.” பாவ்னா திட்டத்தில் எழுதியிருந்த வாசகங்களை மாற்றாமல் சொன்னாள்.
ஹூபர்ட் சிரித்தார். “யாருக்குச் சாதனை? மனிதகுலத்துக்கா? பிரவீணுக்கா?”
தொடரும்…
One comment on “அறிவே சிவம் – ராம்சுரேஷ்”
kumar
சிறப்பு. தொடர்கிறேன்.
வாழ்த்துகள் அண்ணா.