அத்தியாயம் 6
பாவ்னா காட்டிய ஆவணங்களை எல்லாம் பொறுமையாகப் படித்தார் ஹூபர்ட். “உங்கள் பிரவீணுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது”
“அது என்னுடைய கவலை இல்லை சார். என்னுடைய கவலை, எனக்குச் சொன்ன வேலைகளைச் செய்வது, அவ்வளவுதான்.”
“அப்படி என்ன வேலை உன்னுடையது? மாஸ்மைண்டர்ஸ் என்றுதானே சொன்னாய்?”
“ஆமாம் சார். எங்கள் நிறுவனம் ஒரு ஆலோசனை நிறுவனம்தான். கருத்துக்கணிப்புகளை நடத்துவது, மக்கள் மனங்களை அறிந்து எதைத் தயாரிப்பது, எப்படி விளம்பரம் செய்வது என்றெல்லாம் ஆலோசனை தருவோம்.”
“பெரும்பான்மை மக்களின் மூளைகளைச் சலவை செய்யும் நிறுவனம்? மாஸ் – மைண்டர்ஸ்?”
பாவ்னா சிரித்தாள். “மூளைச் சலவை என்பதெல்லாம் பெரிய வார்த்தை – அது குறிப்பாக உங்களைப் போன்றவர்களின் வேலை. நாங்கள்..” ஆரம்பித்தவள் பாதியிலேயே நிறுத்தினாள், ஹூபர்ட் அதை ரசிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டு. “தவறாக எதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்..”
“தவறாக.. இல்லை. இப்படித்தான் புரிந்துகொள்வீர்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கத்தான் வேண்டும். சரித்திரம் முழுக்க அதற்கான உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எங்கள் தவறுதான்..”
பாவ்னாவுக்கு எதோ சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டது புரிந்தது. எப்படிச் சரிசெய்வது என்று புரியவில்லை. அமைதியாக இருந்தாள்.
ஹூபர்ட் சுதாரித்தவர் போல செயற்கையாக ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு “சரி, மூளைச் சலவை செய்யவில்லை, வேறு என்ன செய்கிறீர்கள்?”
“எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு ஒன்றும் புதியதெல்லாம் இல்லை.. சந்தை ஆராய்ச்சி! எந்த வயதுக்காரர்களுக்கு என்ன பிடிக்கும், எந்த ஊர்க்காரர்களுக்கு எப்படி விளம்பரம் செய்தால் மனதுக்குள் நுழையும், பெண்களை எப்படிக் கவர்வது, குழந்தைகளுக்கு என்ன நிறத்தில் சாக்லேட் அட்டை செய்வது போன்ற ஆலோசனைகள். சாண்டா கிளாஸ் சிவப்பு அங்கி அணிந்தது எங்களைப் போல ஒரு நிறுவனம் சொல்லித்தான். இதிலெல்லாம் எந்தத் தகிடுதத்தமும் இல்லை.”
“கோபிக்காதே. ஆனால் இப்போது நீ வந்திருப்பது எந்த விளம்பரத்துக்காகவும் இல்லை. பிரவீணுக்காக, இல்லையா?”
“…” பாவ்னாவுக்குப் பதில் ஒன்றும் தோன்றவில்லை.
“இப்போது பிரவீணுக்கு புதிய மருத்துவத் திட்டத்தைக் கொண்டுவரவேண்டும். கொண்டு வர வேண்டியதுதானே? அவருக்கு இல்லாத அதிகாரமா?”
“மக்களின் ஒத்துழைப்போடு செய்ய ஆசைப்படுகிறார். இல்லாமலும் அவரால் செய்ய முடியும்தான்..”
“செய்ய முடிந்தால் நிச்சயம் செய்திருப்பார். ஆனால் நிச்சயமாக ஒத்துழைப்புதான் தேவை என்றால் — இந்தத் திட்டத்தில் ஏதோ தில்லுமுல்லு இருக்கிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி முழுமையாக உனக்குத் தெரியுமா? உங்கள் நிறுவனத்தை வைத்து ஏதோ தகிடுதத்தம் செய்யப்பார்க்கிறார். அந்தத் தகிடுதத்தத்தை எப்படிச் செய்வது என்றுதான் என்னைக் கேட்க அனுப்பியிருக்கிறார்!”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
டைசன் யார் அழைக்கிறார்கள் என்று தெரியாமல் விழித்தான். அருகில் இருந்த சடகோபன் “பிரச்சினை போலிருக்கிறதே.. இண்டெலிஜென்ஸ் அலுவலகத்தில் இருந்து அழைக்கிறார்கள்” என்றார்.
டைசன் எடுத்து “ டைசன் பேசுகிறேன். உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றான் பணிவாக.
அந்தப்பக்கம் இருந்த கோபி “இது ஒரு வழக்கமான அழைப்புதான். நேற்று நீங்கள் கனடாவில் இருந்து வந்திருக்கிறீர்கள் அல்லவா?”
“ஆமாம்.”
“இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” அது தெரியாதா எல்லாம் தெரிந்த இண்டெலிஜென்ஸுக்கு?
“இப்போது நான் என் கல்லூரியில் பேராசிரியரோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன், என் முனைவர் படிப்பு சம்பந்தமாக.”
“பேராசிரியர் பெயர் சொல்ல முடியுமா?”
“விண்ணப்பத்திலேயே எழுதி இருந்தேனே.. சடா..” பெயரைச் சுருக்கியதற்கு சடகோபன் கையசைத்துத் திருத்தினார். “சடகோபன். பேராசிரியர் சடகோபன்” என்றான் டைசன் திருத்தி.
“உங்கள் அருகில் உள்ள டெலிபோர்ட்டுக்குச் செல்ல முடியுமா? கொஞ்சம் நினைவுகளைச் சரிபார்க்க வேண்டியுள்ளது.”
“உடனே முடியாதே.. “ என்றவனுக்கு சடகோபன் மூன்றுவிரல்களைக் காட்டிச் சைகை செய்ததைப்பார்த்து, “மாலை மூன்று மணிக்குச் செல்ல முடியும்” என்றான்.
“சரி. உங்களுக்கு ஒரு சரிபார்ப்பு எண்ணை அனுப்பியுள்ளேன். அதைக்காட்டினால் டெலிபோர்ட்டிலேயே உடனே பரிசோதித்துவிட்டு அனுப்பிவிடுவார்கள்.”
போனை வைத்ததும் சடகோபன் “சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறது. ஒன்று செய்யலாம். இரண்டு மணிநேரங்களில் அதே மாணவனின் நினைவுகளை உங்களுக்கு ஏற்றி டெலிபோர்ட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். ஏமாந்துவிடுவார்கள்”.
“இது ஒரு சங்கடம். இதனால் நம் வேலை கொஞ்சம் தாமதப்படும்.” சடகோபன் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் சொன்னார். ஒரு நொடி விட்டத்தைப் பார்த்தார். “முடிந்தவரை விரைவாக்கலாம். கால தாமதத்தை என்னளவில் குறைக்கிறேன்” யாரிடமோ சொன்னது போல் இருந்தது டைசனுக்கு.
“இப்படி ஒரு பிரச்சினை என்றால் ஒவ்வொரு முறை டெலிபோர்ட் செய்யும்போதும் இதே பிரச்சினை தொடரும், அல்லவா?”
“நீங்கள் இனி வேலை முடியும் வரை டெலிபோர்ட்டே செய்ய முடியாது. அகழ்வாராய்ச்சிக்காக ஆட்டோமொபைலில் செல்வதற்குச் சிறப்பு அனுமதி வாங்கி இருக்கிறேன். நான் ஓட்டிச் செல்வேன், நீங்கள் ஒவ்வொரு செக்போஸ்ட்டுக்கும் டிக்கியில் ஒளிந்துகொள்ள வேண்டியிருக்கும்”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
டைசனுடனான உரையாடலை முடித்த கோபி அடுத்து இருந்த பெயரை அழைத்தான். சமீபத்துல வந்த பதினைந்து வெளிநாட்டுப் பிரயாணிகளைச் சரிபார்க்க ஏற்பாடுகளைச் செய்து முடிக்கும் நேரத்தில் பல்வீர் அழைத்தார்.
“எத்தனை பேரை க்ளியர் செஞ்சிருக்கே?”
“பதினஞ்சுபேர்.. அதுல பத்து பேர் மெமரீஸ் டவுன்லோட் பண்ணி செக் பண்ணியாச்சு. சிலரால உடனே டெலிபோர்ட்க்கு போக முடியலை.”
“நாம பண்றது கம்ப்ளீட்டா லூப்ஹோல்ஸைக் கவர் பண்ணுதுன்னு சொல்ல முடியுமா கோபி?”
“ஏன்.. இதுல எதாச்சும் பிரச்சினை இருக்கா?”
“மெமரீஸ் மாத்தறதுக்கு அரசாங்கம் தவிரவும் இன்னொரு மெத்தட் இருக்குதுன்னா, நீ கூப்பிட்டவுடனே அவனால ரிவர்ஸ் பண்ணவும் முடியுமில்லையா? இப்பவே அஞ்சு பேர் டைம் கேட்டிருக்காங்க. அந்த டைமுக்குள்ள அவங்க என்னவேணா பண்ண முடியும். அரசாங்கம் ஒருநொடியில பண்ற மெமரி ஸ்வாப்பை அவங்க என்னதான் ஆயிரம் மடங்கு குறைவான ஸ்பீட்ல பண்ணாலும் ஒரு கால் மணிநேரத்துல முடிச்சுடலாம்–அப்படித்தானே சந்தேகப்படறோம்?”
பல்வீர் சொல்வது உண்மைதான்.
“நான் என்ன சொல்றேன்னா, இந்த இன்வெஸ்டிகேஷனை அப்படியே நிறுத்து. ரேண்டம் பிரயாணிகளை செலக்ட் செய்து அவங்களை போலீஸ் வச்சு கண்காணிக்கச் சொல்லு. அவங்க லொகேஷன், யார்கூடப் பேசறாங்க என்ன பேசறாங்க – எல்லாத்தையும் சிஸ்டத்துகிட்ட கொடுத்தா, அது பார்த்துக்கும். பைனலா நாம பண்ண வேண்டியதைப் பண்ணலாம்.”
“அவ்ளோ ரிசோர்ஸ் இருக்கா சார் நம்மகிட்டே?”
“அலாவுதீன் பூதத்தைத் திறந்துவிட்டுட்டு, கேள்வியா கேக்கறே நீ? இருக்கோ இல்லியோ பண்ணிதான் ஆகணும். ஒரு நாளைக்குக் கேட்டுப்பாக்கறேன். அதுக்கு அப்புறம் வேணுமானா ரெண்டு நாளுக்கு எக்ஸ்டண்ட் பண்ணலாம். இருபது பேரெல்லாம் வேண்டாம், கம்ப்யூட்டர்கிட்ட சொல்லி, ப்ரொபைல் பாத்து பத்து பேரை செலக்ட் செய்யலாம்.”
“இப்ப ஒரு அஞ்சு பேரு செக் அவுட் ஆகாம இருக்காங்க..”
“அவங்களை சிஸ்டம் செக் அவுட் பண்ணா மட்டும் போதும்”
அடுத்த செலக்ஷனில் முதல் பெயர் ஆறுமுகம். “யாருப்பா நீ?” என்று ஆராய ஆரம்பித்தான் கோபி.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“நான் அப்படி தேவையில்லாத சிகிச்சை எல்லாம் செய்யமாட்டேன். எங்களுக்கும் நியாயம் தர்மம் எல்லாம் தெரியும்” சாந்திக்கு இப்போதும் கோபம் வந்தமாதிரித் தெரியவில்லை. எப்படி அவ்வளவு சுலபமாக வரும்? எத்தனை ஆண்டுகளாகத் தடுக்கப்பட்ட உணர்ச்சி?
“உன்னை மிரட்டுவதற்காகச் சொல்லவில்லை. கடந்த பத்து வருஷமா நான் டெலிபோர்ட் செய்வதில்லை. மருத்துவமனைக்கும் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறேன். இதயம் வலுவிழக்கத் தொடங்கிவிட்டது. பன்றி இருதயம் வேண்டாம். சிம்பன்ஸி கணையம் வேண்டாம் என்று எதையும் மாற்றுவதில்லை. எப்போது வேண்டுமென்றாலும் சாகத் தயாராக இருக்கிறேன்..”
“தற்கொலை எண்ணம் ஏதாவது?” சாந்தி மறுபடி டாக்டராகி விட்டாள்.
“தற்கொலை செய்யும் அளவுக்குத் துணிச்சல் எனக்கு இல்லை. இயற்கை என்பதே இல்லாமல் போய்விட்ட உலகில் இயற்கையாக இறந்தேன் என்றாவது இருக்கட்டுமே. தற்கொலையும் இயற்கை இல்லையே..”
நேரம் ஆகிவிட்டிருந்தது என்பதை வெளியே இருந்த இளம்பெண் வந்து மணிக்கட்டைச் சுட்டிக் காட்டினாள்.
“அடுத்த ஆலோசனைக்கு எப்போது வரமுடியும் அனந்தன் சார்?”
“வருகிறேன். நேரம் அமையும்போது. அதுவரை எனக்கு ஒரு தூக்க மாத்திரை..”
“ஒரு நொடி எண்ணங்களைக் காட்டினால் மெமரியை மாற்றி தூக்கத்தை வரவழைத்துவிடுவார்களே, அதற்கு எழுதித்தரட்டுமா?”
“இல்லை. எனக்கு பழைய மாதிரி மாத்திரைகள்தான் வேண்டும். வேலியம் – ஆம்பியன் மாதிரி..”
“அதைத் தருவதற்குப் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. என் மேலதிகாரியின் ஒப்புதல் வேண்டும், உங்கள் வரலாறு காரணமாக, உங்கள் மகனின் ஒப்புதல் வேறு வேண்டும்.”
“பரவாயில்லை காத்திருக்கிறேன்.”
வெளியில் காத்திருக்கும்போது கோபி அழைத்தான் “உனக்கு என்னத்துக்கு இப்ப தூக்க மாத்திரை? அஸ்வினிகிட்ட சொன்னா ஒரு செகண்ட்ல மூளைக்கு ஒரு கமாண்ட் பண்ணி தூங்க வைக்கப்போறா..”
“இல்லடா. எனக்கு பழைய மெத்தட்தான் வேணும்”
என்று பையை நிரடினார். இப்படி வாங்கிவைத்திருந்த ஐம்பது ஆம்பியன் மாத்திரைகள் தெரிந்தன.
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.