அத்தியாயம் 7
நெல்லூரைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது கார். எதோ ஒரு பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சடகோபன் பொதுவாகவே குறைவாகப் பேசுபவர். கடந்த இரண்டு மணிநேரமாக ஒன்றுமே பேசவில்லை.
சாலைபெரும்பாலும் சமச்சீராகவே இருந்தது. ஓடுவது சில அரசாங்க வண்டிகளும், சிறப்பு அனுமதி பெற்ற தனியார் வண்டிகளும்தானே. அதனால் பராமரிப்பெல்லாம் அதிகம் தேவைப்படாமல் சாலை நன்றாகவேதான் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறொரு வாகனமும் படவில்லை. அவ்வப்போது பிரம்மாண்ட தானியங்கி ட்ரக்குகள் “அரசாங்கப்பணி” என்று அறிவித்துக்கொண்டு அதிவேகமாகக் கடந்தன.
“பழைய உடல்கள் வரும். புதிய கார்ட்ரிட்ஜ்கள் செல்லும். உணவுப்பொருட்கள், துணிமணிகள்.. போயே தீரவேண்டிய விஷயங்கள் எல்லாம் இந்த ட்ரக்குகளில்தான் போகும்” சடகோபன் டைசனுக்கு விளக்கினார்.
தூரத்தில் ஒரு பழைய டோல்பூத் கண்ணில் பட்டது.
டைசன் “நான் பின்னால் போக வேண்டுமா?”
“சொல்ல மறந்துவிட்டேன். உங்களுக்கும் – அதாவது டைசன் என்னும் என் அகழ்வாராய்ச்சி மாணவனுக்கும் – சேர்த்தே அனுமதி வாங்கி விட்டேன். அதுவும் இல்லாமல் இது ஆளில்லாச் சுங்கச் சாவடி”
வண்டி சீரான குலுக்கலுடன் ஓடிக்கொண்டிருந்தது. காரின் திரை விஜயவாடாவை நெருங்கிக்கொண்டிருந்ததை அறிவித்தது. ட்ரக்குகளின் எண்ணிக்கை சற்றே அதிகமானதாகத் தோன்றியது.
“நிறைய வாகனங்கள் ஓடுகின்றன..” என்றான் டைசன்.
“இது விஜயவாடாவின் லாஜிஸ்டிக்ஸ் தொழிற்சாலை. அதோ தூரத்தில் ஒரு புகைமூட்டம் தெரிகிறதா?”
ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம் அந்த சிம்னி. நெடிய உயரம், அதிலிருந்து வெளிவந்த புகை சிம்னியின் வடிவிலேயே நேர்க்கோடாக இருபது முப்பது மீட்டர் பயணித்துவிட்டுப் பின்னர் கலைந்தது, அந்தப்புகையின் வேகத்தை எடுத்துக்காட்டியது.
“லாஜிஸ்டிக்ஸ்?” டைசன் பலமுறை டெலிபோர்ட் செய்திருக்கிறான். ஆனால் அதன் உள்நுணுக்கங்கள் தெரிந்திருக்கவில்லை.
“மிருகங்களைப்பற்றிச் சொன்னேன் இல்லையா?”
“ஆமாம், அந்தத் தசைகளும் உள்ளுறுப்புகளும்தான் கார்ட்ரிட்ஜ் ஆக்குகிறார்கள், அதன்மூலம்தான் புதிய மனிதன் தயாராகிறான் என்று சொன்னீர்கள்..”
“பழைய மனிதன் என்னாவான்?”
அதையும்தானே சொன்னார். “அதிலிருந்தும் கார்ட்ரிட்ஜ் தயாராகும் என்றீர்களே?”
”முழுக்க உபயோகப்படாது. கொஞ்சம் இங்கே வரும். மிச்சம் உள்ள மனிதன்..”
ஒருநொடி நிறுத்திவிட்டுச் சொன்னார்.
“அதோ அந்தப்புகையாகப் போவான்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அனந்தன் தெருவில் நடந்துகொண்டிருந்தார். எங்கே போவது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லாத வேகமான இளைஞனின் நடை. ஆனால் எங்கே போய்க்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
தெருவின் முடிவு முட்டுச்சந்து போலிருந்தாலும் திடீரென ஒரு வழி மட்டும் திறந்தது. அந்தப்பாதையில் தொடர்ந்தார். புகைவீச்சம் அதிகமாக இருந்தது. தூரத்தில் தெரிந்த கிணற்றில் இருந்து புகை மண்டிக்கொண்டு வெளிவந்தது. அவ்வப்பப்போது தீயின் கிரணங்களும் தெரிந்தன.
கூட்டம் கூட்டமாக மனிதர்கள் நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தார். ஒரு வரிசையாகச் சென்றாலும் அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து எழுந்துதான் சென்றார்கள். பிறகுதான் கவனித்தார், அவர்கள் வரிசையை அவர்கள் முடிவு செய்யவில்லை, இருபுறமும் கனத்த இரும்புச் சங்கிலிகள் அவர்களை வழிப்படுத்திக் கொண்டு சென்றன. அந்தச்சங்கிலியின்மேல் விழுவதும் எழுவதுமாக நீண்ட வரிசை அந்தக் கிணற்றை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு கூட்டம் இருந்தாலும் கொஞ்சம்கூடச் சத்தமே இல்லை. பொருள் இல்லாத முனகல்கள், கனைப்புகள், கர்ஜிப்புகள். பத்தடிக்கு ஒருவர் வீதம் சீருடை ஆசாமிகள் அவர்களை வரிசையின் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்கள்.
அனந்தன் அந்த வரிசை எங்கே தொடங்குகிறது என்று எதிர்த்திசையில் சென்று பார்த்தார். நீண்ட தூரத்துக்கு மக்கள் கூட்டம். யாரும் பேசவில்லை, செலுத்தப்பட்டவர்கள் போலச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் எந்தஒரு ஒற்றுமையும் இல்லை. ஆப்பிரிக்காக்காரர்கள், சீனாக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாவகையாகவும் இருந்த மக்கள். அடுத்தவர்கள் மேல் இடித்துக் கீழே விழுந்தாலும் விழுந்தபடி இருந்தார்கள். சீருடைக்காரர்கள்தான் தூக்கிவிட்டார்கள்.
வரிசையின் ஆரம்பத்துக்குச் செல்ல வெகுநேரம் பிடித்தது. பெரிய டிரக்குகளில் இருந்து மேலும் மேலும் ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள், சீருடையாட்கள் அவர்களை வலுக்கட்டாயமாக இறக்கி வரிசைக்குள் செலுத்திக்கொண்டிருந்தார்கள். எங்கிருந்து வருகிறார்கள் இவர்கள் எல்லாம்?
திரும்பி வந்த வழியே சென்றார். வரிசையின் முடிவில் முன்பு பார்த்த நெருப்புக் கிணறு இருந்தது.
சீருடையாட்கள் ஒருவர்பின் ஒருவராக வரிசையில் வந்த ஆட்களை அந்தக் கிணற்றில் தள்ளிக்கொண்டிருந்தார்கள். கிணற்றில் விழும்போதும் ஒரு சத்தமும் வரவில்லை .
அனந்தன் இதையெல்லாம் இனம் புரியாத பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். வரிசையின் முடிவில் ஒரு பெண்மணி சங்கிலி தடுக்கிக் கீழே விழுந்ததைப் பார்த்தார்.
அந்தப் பெண்ணின் முகம் அனந்தனின் கலவரத்தை அதிகப்படுத்தியது. “திவ்யா..” என்று கத்தினார். அந்தப்பெண் திரும்பவில்லை. ஒரு சீருடை ஆசாமி அவளைத் தூக்கிக் கிணற்றில் போட்டான்.
அனந்தன் வேகமாக ஓடி அவளைப் பிடிக்க முனைந்தார்.
வியர்த்துக்கொட்டி விழித்துக்கொண்டார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
”நீ என்ன கேட்கிறாய் என்பதை உணர்ந்துதான் கேட்கிறாயா பாவ்னா?” திரையில் மாஸ்மைண்டர்ஸ் என்றெழுதி இருந்தது. பாவ்னாவின் மேலதிகாரி ரிச்சர்ட் முகம் காட்டாமல் பேசிக்கொண்டிருந்தார். வீட்டில் இருப்பார் போலிருக்கிறது.
“ஆமாம் சார். குடியரசுத் தலைவரிடம் பேசிவிட்டு வந்தவுடன் அங்கிருந்தே என்னை கேம்ப்ரிட்ஜ் அனுப்பிவிட்டார்கள். நானும் எந்த விஷயமும் தெரியாமலேயே கிளம்பி வந்துவிட்டேன். இங்கே ஹூபர்ட்டிடம் பேசியவுடன் தான் எனக்கு எவ்வளவு தீவிரமான வேலையில் இறங்கி இருக்கிறோம் என்றே தெரிகிறது. இன்னும் இதில் தகவல்கள் தெரியாமல் பேசுவதில் அர்த்தம் இல்லை. எனக்கு முழு விவரங்களும் தெரிந்தால்தான் இந்த வேலையை ஒழுங்காகச் செய்ய முடியும்” பாவ்னா படபடப்பாகவே பேசினாள்.
“பிரவீண் போன்ற ஓர் ஆளுமை நம்மைப்போன்ற நிறுவனத்தை அணுகியதே பெரிய விஷயம். இந்த நிறுவனத்துக்கு கடந்த முப்பது ஆண்டுகள் வந்த மொத்தப் பணவரவை விட இந்த ஒரே ஒரு கணக்கு இரு மடங்கு, தெரியுமில்லையா? கேள்விகள் கேட்பது நம் வேலையில்லை.”
“இவ்வளவு பணம் வருகிறது என்றால் அந்த அளவுக்கு அபாயமும் இருக்கும் என்றுகூடப் புரியாமலா இதில் இறங்கியிருப்பீர்கள்? உங்களுக்குத் தெரியாததில்லை – குப்பைத் தகவல்களை வைத்துச் செய்யும் ஆராய்ச்சியும் குப்பையாகத்தான் இருக்கும். GIGO.”
“புரிகிறது. நான் கௌஷிக்கை இந்த அழைப்பில் இணைக்கிறேன். அவன் என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம்.”
கௌஷிக் கொல்லப்புடி மாஸ்மைண்டர்ஸில் மருத்துவப் பிரிவில் ஆராய்ச்சியாளன். மக்கள் தேவைக்காகச் செய்யும் மூளை மருந்துகளின் தேவையை ஆராய்ச்சி செய்து மருந்துக்கம்பெனிகளுக்குச் சொல்லும் விற்பனன். அவனுக்கு அரசியல் பிரிவு இல்லை என்பதால் இதுவரை அவனை அழைக்கவில்லை. அவன் வந்ததும் பாவ்னா சுருக்கமாக விவரங்களைச் சொன்னாள்.
“நீ ஹூபர்ட்டைப் போய்ப் பார்த்ததே தேவையில்லாத விஷயம். ஹூபர்ட் ஒரு விஞ்ஞானி. அவருக்குக் கருத்துருவாக்கம்தான் தெரியும். செயல்படுத்தத் தெரியாது.” கௌஷிக் நறுக்கென்று சொன்னான்.
“புரியவில்லை.”
“ஒரு புதிய வைரஸ் வருகிறது என்று வைத்துக்கொள். அது எப்படி வந்தது, அதன் டி என் ஏ என்ன, அது என்ன செய்யும் என்றெல்லாம் விஞ்ஞானி கண்டுபிடிப்பார். ஆனால் அதை எப்படி அழிக்க முடியும், அதற்குத் தடுப்பூசி எப்படித் தயார் செய்ய முடியும் என்று கண்டுபிடிப்பது வேறு ஆள். அந்த மருந்தை உருவாக்குவது இன்னொரு ஆள். சந்தைப்படுத்துவதுதான் நாம். “
“இப்போதும் நாம் பேசும் விஷயத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை” என்றார் ரிச்சர்ட்.
“இப்போது நமக்குத் தேவை புதிய மருத்துவத் திட்டத்தை அமல்படுத்துவது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள், என்ன மனமாற்றம் நடந்தால் அந்த ஒத்துழைப்பு கிடைக்கும் என்றுதான் ஹூபர்ட் சொல்வார். அந்த மனமாற்றத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பதை அவர் சொல்லவும் மாட்டார், செய்யவும் மாட்டார். சரிதானே கௌஷிக்?” பாவ்னா கேட்டாள்.
“வாவ். வேகமாப் புரிஞ்சுகிட்டே.”
“அப்புறம் ஏன் குடியரசுத்தலைவர் அலுவலகம் என்னை இங்கே அனுப்பியது? அதை ஹூபர்ட்டிடம் நேரடியாகக் கேட்க முடியாது. அவருக்கு உகந்த மாதிரிப் பேசி, அவரிடம் விஷயம் கறக்கப் பார்க்கிறேன். ரிச்சர்ட், நீங்கள் என் மின்னஞ்சலில் கேட்டிருந்த தகவல்களை எனக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்..”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
மதுரை / 0048 என்றது அந்த மொட்டை மாடியின் பலகை. வெளியே என்ற அறிவிப்புக்குப் பக்கத்தில் காத்திருந்தான் சிம்சன். அவன் அணிந்திருந்த சீருடை இண்டெலிஜன்ஸ் என்றது. உள்ளிருந்த நர்ஸ், “அடுத்து வரப்போவது அவர்தான்.”
எத்தனை முறை பார்த்திருந்தாலும் டெலிபோர்ட்டின் இயக்கத்தில் ஓர் ஆச்சரியம் இருந்தது. முதலில் ஒரு கணினிக் கரம் வேகமாக வந்து எலும்புகளை அமைத்தது. அந்தக்கரம் காலில் இருந்து தொடங்கி தலைக்கு நகர்வதற்கு முன்னாலேயே இன்னொரு கரம் தசைகளை நரம்புகளை அமைத்துக்கொண்டே தொடர்ந்தது. இன்னொரு கரம் தோலைப்போட்டு மூடிக்கொண்டே வர ஒரு நொடிகூட முடிந்திருக்காது. தலை முடிகள் தயாராகி ஆள் இருந்தான்.
“உயிர் கொடுத்துரலாமா?” டெலிபோர்ட் சிப்பந்தி கேட்க சிம்சன் “மொத்த மெமரியும் எடுத்துட்டீங்களா? இண்டெலிஜன்ஸ்க்குத் தேவைப்படுது.” என்றான்.
“ஆச்சு.”
சிம்சன் “கோபி.. உங்களுக்குத் தகவல் வந்துவிட்டதா? ஆறுமுகத்தின் மொத்த மெமரியும் உங்களுக்கு அனுப்பிவிட்டேன். வாரண்ட் படி நீங்கள் இந்த ஞாபகங்களை இரண்டு நாள் வைத்துச் சோதனை செய்துவிட்டு அழித்துவிட வேண்டும்”
ஆறுமுகம் உயிர்பெற்றதும் அவன் கைத்திரை அழைத்தது. “வந்துட்டேம்மா.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்டுல இருப்பேன்..”
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.