அத்தியாயம் 8
“என்னப்பா? சத்தம் கேட்டுது. லைட்டு போடட்டுமா?” கோபி விளக்கைப் போட்டுக் கேட்டான். தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்ததால் கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்தான்.
“ஒண்ணுமில்லை. விழிப்பு வந்துருச்சு.”
“மறுபடி கனவா? இன்னிக்குதானே டாக்டர்கிட்டே போய்ட்டு வந்தே? மாத்திரை தந்தாங்களே? போட்டுக்கலையா? அஸ்வினியை வேணா எழுப்பட்டுமா? நிம்மதியாத் தூங்கலாம்..”
“இல்லைடா.. சரியாய்ப்போயிடும். நீ போய்த் தூங்கு.” என்ற அனந்தனுக்கு இன்னும் வியர்வை வடிவது நிற்கவில்லை . கனவின் சம்பவங்கள் இன்னும் அவருக்குள்ளே தொந்தரவு செய்துகொண்டிருந்தன. பின்னிரவு என்பதில் இருந்து விடிகாலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது நேரம். தண்ணீரை முகத்தில் அடித்துத் துடைத்தார். படுக்கைக்கு வந்து படுத்துக் கொஞ்சநேரத்தில் விழிப்பா கனவா என்று தெரியாத நிலையில் தொடர்ந்தார்.
“உங்கள் இழப்புக்கு நாங்கள் வருந்துகிறோம்.. ஆனால்” கோட்டணிந்த ஆசாமி சொன்னதைக் கேட்டு அனந்தன் கோபமாக முப்பதடி பாய்ந்து அவனை அடித்தார். அவனோ ஒன்றும் ஆகாதது போல “எங்கள் அலுவலகம் உங்களைத் தொடர்புகொண்டு நஷ்ட ஈட்டைத் தீர்மானிக்கும். உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் முடிக்கச்சொல்கிறேன்” அனந்தன் ஒரு கட்டையை எடுத்து அவனை அடித்தார். அவன் அங்கே இல்லவே இல்லை போல கட்டை பின்னால் சுவரில் விழுந்தது.
“இந்தத் தேசம், ஏன் உலகமே உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதும் வெவ்வேறு துறைகள் சார்ந்த விஷயங்கள், டெலிபோர்ட்டிங் துறை அவர்களுடைய விதிகளை மீறவில்லை என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது” நீதிபதியின் மண்டையைக் குறிவைத்து ஒரு கல்லை எறிந்தார் அனந்தன்.
“உங்கள் வருத்தத்தில் நாங்கள் பங்கேற்கிறோம். உங்கள் ஓய்வு முடிவை கனத்த இதயத்துடன் தான் ஏற்க முடியும். மறுபரிசீலனை செய்ய முடியுமா?” என்ற சக அதிகாரி அடுத்த நொடியில் மற்ற அதிகாரிகளுடன் ரகசியமாக
“வேறு வழியில்லை. டாக்டர் அனந்தன் அடுத்தபடி எங்கேயாவது போனால் அவருடைய நினைவுகளைக் கொஞ்சம் மாற்றி அமைத்துவிடுங்கள். அவருக்குத் திருமணமே ஆகவில்லை என்பது போல” திடீரெனத் திறந்த கதவு அனந்தனைக் காட்ட “நாங்கள் உங்களைச் சொல்லவில்லை” என்று சமாளிக்க முயல அவருக்கு நீண்ட வாளால் ஒரு வீச்சு.
மறுபடி விழித்துக்கொண்ட அனந்தன் கட்டில் மேலிருந்த நிழற்படத்தை வருடினார். அவர் காரின் பானெட்மேல் அமர்ந்திருந்த திவ்யாவை.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கார் நெடுஞ்சாலையில் இருந்து பக்கத்துச் சின்னச் சந்துக்குள் திரும்பி நின்றது. சடகோபன் “கார் இங்கேயே இருக்கட்டும். இனி நாம் நடக்கலாம்” என்றார்.
ஒரு பெரிய பெட்டியில் சில சாதனங்களை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். மூன்று கிலோமீட்டர் நடந்த பின் ஒரு இரும்பு வேலி தெரிந்தது “லாஜிஸ்டிக்ஸ் தொழிற்சாலை. மின்சார வேலி. அத்துமீறி நுழைந்தால் உயிர் போய்விடும். ” என்றது அறிவிப்புப் பலகை.
“இந்த வேலியில் மின்சாரம் பாய்கிறது. இதைத்தாண்டி அடுத்தது கருங்கல் சுவர். அதையும் தாண்டி இன்னும் இரண்டு வேலிகள். அதற்குள்தான் இருக்கிறது விலங்குப்பண்ணை” என்றார் சடகோபன்.
பெட்டியில் இருந்து ஒரு ட்ரோனை எடுத்து “பார்க்கலாமா?” என்றார்.
டைசன் கணினித்திரையில் ட்ரோன் ஒளிப்பதிவைப் பார்த்தான். சடகோபன் சொன்னது சரிதான். பல வேலிகள். அத்தனையையும் தாண்டி உள்பக்கத்தில் வெட்டவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகள் தனியாகவும் சிம்பன்ஸிகள் தனியாகவும் இன்னும் பெயர் தெரியாத விலங்குகள் தனித்தனியாகவும் உலவிக்கொண்டிருந்தன. அந்தரத்தில் சில கொக்கிகள் காணப்பட்டன.
“அந்தக்கொக்கிகள் என்னது?”
“நீங்களே பாருங்கள்.”
திடீரென ஒரு கொக்கி ஆவேசம் வந்ததுபோல பயணித்து ஒரு சிம்பன்ஸியிடம் வந்து நின்றது. வேகமாக ஓடத்தொடங்கிய சிம்பன்ஸியைச் சில நொடிகளில் பிடித்துவிட்டது அந்தக்கொக்கி. சிம்பன்ஸியை அலேக்காகத் தூக்கி பத்தடி உயரத்துக்குக் கொண்டுபோனது கேமராவில் தெளிவாகத்தெரிந்தது. குரங்கின் முகத்தில் கலவரம் வரை தெளிவாகத் தெரிந்த துல்லியம். சிம்பன்ஸி கதறக் கதற கொக்கி இழுத்துச் செல்லப்பட்டது. டைசன் கேமராவில் அதைத் தொடர்ந்தான்.
“அந்தக் கொக்கிகள் கொக்கிகள் அல்ல, கணினிக்கரங்கள். அவை மெல்லிய கம்பிகளால் பிணைக்கப்பட்டு இந்தப்பண்ணையின் எந்தப்புள்ளிக்கு வேண்டுமானாலும் முப்பரிமாணத்திலும் துல்லியமாகச் செல்லும். எந்த விலங்கு வேண்டுமோ அதைச் சரியாகப் பிடிக்கும்.” சடகோபன் விளக்கினார்.
பேக்டரியின் உள்பக்கத்துக்குச் சென்றதில் திரை இருண்டது. டைசன் வெளிச்சத்தை அதிகப்படுத்தினான்.
நீண்ட கன்வேயர் பெல்ட்டில் குரங்கைப் படுக்கவைத்து அசையாமல் இருக்க விலங்கிடப்பட்டிருந்து. இயந்திரக்கரங்கள் குரங்கைப் பகுதி பகுதியாகப் பிய்த்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பியது.
பிரம்மாண்டக் குடுவைகளில் பல மனித உடல்கள் திரவத்தில் தொங்கிக்கொண்டிருந்ததும் தெரிந்தது.
“ஒரு துளி விடாமல் குரங்கைப் பங்கு பிரித்துவிட்டார்கள். எந்தப் பகுதியைத் தொடரட்டும்?” டைசன் கேட்டான்.
“எதை வேண்டுமானாலும் தொடரலாம். இந்தக் குரங்கின் பிரிந்த எல்லாப் பாகங்களும் கூழ்போல ஆக்கப்படும்.. சதை தனியாக, எலும்புகள் தனியாக, ரத்தம் க்ரூப் வாரியாக.”
”ஓ. அதைத்தான் கார்ட்ரிட்ஜுகள் ஆக்குகிறார்களா?”
“ஆம். இது மூலப் பொருள். இந்த மூலப்பொருள்கள் டெலிபோர்ட்டில் சென்றவுடன், அங்கிருந்து வரும் தகவல்கள், அமினோ அமிலங்களின் அடுக்கு – அதுதான் டி என் ஏ படி எல்லாம் மாற்றி அமைக்கப்படும், ஒரு நொடியின் லட்சத்தில் ஒரு பாகத்துக்குள். பிறகு அதே மனிதன் உருவாவான்.”
“புரிகிறது. இந்த கார்ட்ரிட்ஜ்கள் இல்லாவிட்டால் டெலிபோர்ட்டிங் நடக்காது. அதைத் தடுக்கவேண்டும், இல்லையா?”
“உடனே நிற்காது. எல்லா டெலிபோர்ட் மையங்களிலும் ஒரு நான்கைந்து நாட்களுக்குத் தேவையான உடல்கள் இருக்கும். இதெல்லாம் இப்போது மிகத் துல்லியமாக நடக்கிறது. ஆனால் முன்னாலெல்லாம்..”
டைசன் அமைதி காத்தான்.
“டெலிபோர்ட்டிங் ஆரம்பித்த காலத்தில் கார்ட்ரிட்ஜ்கள் இவ்வளவு இருக்காது. தகவல் வேகமாகப் பரவாது. சிலர் ஓரிடத்தில் கிளம்பி இன்னோரிடத்தில் உருவாகத் தேவையான தகவல் கிடைக்காமல் போனதும் உண்டு..”
சடகோபன் சொல்லிவிட்டு அமைதியானார். மனதுக்குள் ஏதோ முணுமுணுத்தார். கண்ணில் லேசாக நீர் திரையிட்டது. சத்தமாகவே சொல்லிவிட்டார் “திவ்யா போல..”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
”உன்னை இரண்டு நாளாகக் காணவில்லையே? இந்தியா திரும்பிவிட்டிருப்பாய் என்று நினைத்தேன்” ஹூபர்ட்டின் குரலில் கிண்டல் தொனித்தது போலத் தோன்றியது பாவ்னாவுக்கு.
பாவ்னா திரையில் காட்டிய நேரத்தைப் பார்த்தாள். ஜூலை 22 என்றது. “கொஞ்சம் பின்னணித் தகவல்கள் தேவைப்பட்டன. அவற்றைத் தெரிந்துகொண்டு உங்களிடம் பேசலாம் என்று..”
“முதல் முறை வரும்போதே முழுமையான தயாரிப்போடு வந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். சரி. இப்போது என்ன வேண்டும்?”
இவருடைய குத்தலில் தன் தயாரிப்புகள் எல்லாம் வீணாய்ப் போனமாதிரி உணர்ந்தாள் பாவ்னா. “குடியரசுத் தலைவரிடம் சொல்லிவிட்டேன்.. அவர் நினைப்பது நடக்காது என்று..”
“யார்? பிரவீணிடம்? இதை என்னை நம்பச் சொல்கிறாயா? அனந்தன் கதை தெரியுமா உனக்கு?”
“ஓரளவு தெரியும். அவர் மனைவி திவ்யா கொலை செய்யப்பட்டது..” நீதிமன்றம் அதைக் கொலை என்று சொல்லவில்லைதான். ஆனால் ஹூபர்ட் அந்த வழக்கில் சாட்சியாக இருந்ததைப் படித்திருந்தாள்.
“அதை மிகச் சுலபமாக தவிர்க்க முடியாத விபத்து என்றார் பிரவீண். அது தெரியுமா?” இந்தியாவின் குடியரசுத்தலைவர் ஒரு கொலைவழக்கைப் பற்றிக் கருத்து சொன்னாரா? இது ஏன் இவள் படித்த ஆவணங்கள் எதிலுமே இல்லை?
“Collateral damage என்றா சொன்னார்? நீதிமன்றத்திலா சொன்னார்?”
“எதோ ஆபத்தில்லாத வார்த்தை போல் இருக்கிறது இல்லையா? நீதிமன்றத்துக்கெல்லாம் ஏன் மாட்சிமை தங்கிய தலைவர் வரப்போகிறார்? திவ்யா மரணத்துக்குப் பிறகு அனந்தன் நடைப்பிணமாகிவிட்டார். டெலிபோர்ட்டிங் தொழில்நுட்பத்தை முழுமையாக்க அவருடைய தேவை இருக்கத்தான் செய்தது. ஆனால் அவரால் வரமுடியவில்லை. எனவே இரண்டாவதாக இருந்த நான் அங்கே வந்தேன். அப்போது என்னிடத்தில் சொன்னார்,”
அனந்தன் மேல் அபரிமிதமான மரியாதை வைத்திருக்கிறார் போல. அனந்தன் ஏன் வரமுடியவில்லை?
பாவ்னா தன் தயாரிப்புக் குறிப்புகளை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். சடகோபன் தானே அனந்தன் மனைவி குற்ற வழக்கில் கைதானவர்? போட்டுப்பார்க்கலாம். “எல்லாம் அந்த சடகோபனால் வந்த பிரச்சினை.. அவர் மட்டும் தேவையில்லாமல் போராடாமல் இருந்திருந்தால்..”
ஹூபர்ட் திடுமெனப் பதட்டப்பட்டார். “கிளம்பு. வெளியே போ. இனி வராதே.. “ அவர் உடல்நிலைக்கு அவர் எழுந்த வேகம் ஒத்துழைக்கவில்லை. தடாலெனச் சாயப்போனார். பாவ்னாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இதுபோன்று யாரும் செயல்பட்டு அவள் வாழ்நாளில் பார்த்திருக்கவில்லை. இதுதான் கோபம் என்பதா? எதோ உந்துதலில் அவரைக் கையில் ஏந்தி “மன்னித்துவிடுங்கள் சார். எனக்கு இன்னும் முழுமையாகப் புரியவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்”
“தண்ணீர்..” திக்கினார் ஹூபர்ட். குடித்துவிட்டுக் கொஞ்சம் அமைதியானபிறகு “நீதிமன்றம், பத்திரிகை, அரசாங்கம் – இவையெல்லாம் எதைச் சொன்னாலும் முழுமையாக ஏற்றுக்கொண்டுவிடக்கூடாது. அவர்கள் அவர்கள் வசதிக்காக எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்வார்கள்.”
“என்னதான் நடந்தது? கொஞ்சம் சொல்ல முடியுமா?”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அஸ்வினி திரையில் பார்த்து வேகமாகச் சொன்னாள், “கடந்த ரெண்டு வருஷத்துல இந்தியால நம்ம தயாரிப்புகள் இருபது சதவிகிதம் விற்பனை குறைஞ்சிருக்கு. இது நம்ம டீமோட தோல்வின்னுதான் மாஸ்மைண்டர்ஸ்ல சொல்றாங்க.”
அஸ்வினியின் குழுவில் இருந்தவர்கள் யாரும் பதில் சொல்ல முனையவில்லை. அடுத்தவன் சொல்வான் என்றே எல்லாரும் அமைதிகாத்தார்கள் போலிருக்கிறது.
“உடல்ன்னு இருந்தா அதுல வலின்னு ஒண்ணு வரும். எல்லா வலியும் நமக்கு விற்பனைக்கான வாய்ப்புகள். அதைச் சரியா உபயோகப்படுத்தினாலே போதும், நம்ம குவார்ட்டர்லி ரிஸல்ட் இவ்ளோ மோசமா இருக்காது.”
”வலி வருதுதான். ஆனா அதைக் கவனிக்காம விட்டுட்டுப் போகத் தயாராகிட்டிருக்காங்க. நேத்து என் வீட்டுப் பக்கத்துல ஒண்ணு பார்த்தேன். பழைய காலப் புத்தகத்தில் எல்லாம் பிரசவம்ன்றது ஒரு பெரிய வலியாச் சித்தரிக்கப்பட்டிருக்கு. ஆனா இப்ப குழந்தைத் தொழிற்சாலைகள்ல ஒரு அழுகை கேட்குதா?” ஒரு நபர் திடீரென்று பதில் சொன்னார்.
“ஒருமுறை வெளியூர் டெலிபோர்ட்ல போயிட்டு வந்தா கம்ப்ளீட் பாடியை சரி பண்ணிக்கற வாய்ப்பு இருக்கு. சின்னச் சின்ன உபாதைகளுக்குதானே நாம மருந்து வச்சிருக்கோம்.. டெலிபோர்ட்டிங்தான் நமக்கு காம்படிஷன்”
“இது சும்மா சாக்குபோக்கு. சாதா தலைவலி, தொண்டைக்கமறல், ஜலதோஷம் – இதுக்கெல்லாம்கூடவா டெலிபோர்ட்டிங்கைக் குறை சொல்வீங்க?” அஸ்வினியின் குரலில் ஏமாற்றம் தெரிந்தால் சத்தம் அதிகமானது. கோபி அடுத்த அறையில் இருந்து கதவைத் தட்டி “எனி ப்ராப்ளம் அஸ்வினி?” என்றான்.
அலுவலகக்குரலை அமுத்திய அஸ்வினி” சாரி கோபி. திஸ் டீம்.. எதுக்கெடுத்தாலும் சாக்கு சொல்றாங்க.” என்றாள்.
“உன் குரல் உசந்தவுடனே கோபம்னு நினைச்சுட்டேன்.. நானே கோபி, எனக்கே கோபம் வர்றதில்லை. மருந்துக்காரிக்கு எதுக்குக் கோபமெல்லாம் வரப்போகுது?” ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, “கதவை மூடிக்கோ. எனக்கும் ஒரு கால் வரப்போகுது.”
கோபி தன் அலுவலகத்துக்குத் திரும்பி “பல்வீர்.. ராண்டமா பதினைந்து இருபது பேரைச் செக் பண்ணியாச்சு. அவங்களுக்கே தெரியாம அவங்க மெமரிஸ் எடுத்துப்பார்த்தாச்சு. ஆறுமுகம் துபாய்ல சின்ன வீடு வச்சிருக்கான். ஆனா பாவம் டெரரிஸ்ட் எல்லாம் இல்லை.”
“சின்னவீட்டுக்காரி டெரரிஸ்ட்டா இருந்தா?”
“எவ்ளோ தூரம்தான் செக் பண்ணிகிட்டே போறது? என்ன தேடறோம்னே தெரியாம தேட முடியுமா என்ன?”
“சரிதான். ஓக்கே, விட்டுடு. வேற ஒரு சின்ன க்ளிட்ச்..”
“என்ன சொல்லு”
பல்வீர் தயக்கமாகச் சொன்னார் “மே பி நத்திங். ஆனா விஜயவாடால ஒரு அனுமதிக்கப்படாத பறவை பறந்திருக்கு. பூச்சியா பறவையான்னு கூட தெரியலை. இதோ பாரு..”
அவர் தன் திரையைப் பகிர கோபி “இது பறவையோ பூச்சியோ இல்லை.. ட்ரோன்” என்றான்.
“ஆர் யூ ஷ்யூர்?”
“அட.. எங்கப்பா எனக்கு சின்ன வயசுல விளையாட வாங்கித்தந்த அதே மாடல்.” என்றவன், “அப்பல்லாம் அது இல்லீகல் கிடையாது” என்றான் தற்காப்பாக.
“இப்பல்லாம் அதைத் தயார் செய்யறதே இல்லையே?”
“ஒருவேளை அதே பழைய மாடல் ட்ரோன்தானோ என்னவோ?”
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.