அத்தியாயம் 9
சடகோபன் சொன்னார்: “எல்லா லாஜிஸ்டிக் தொழிற்சாலைகளும் ஒரே அளவுகளில் ஒரே மாதிரித்தான் இருக்கும். இந்த அளவுகளை வைத்துத் திட்டம் போட்டால் இருநூற்றைம்பது தொழிற்சாலைகளுக்கும் ஒரே மாதிரி திட்டம் வைத்துக்கொள்ளலாம்.”
“இது விஜயவாடா – சின்ன ஊர் இல்லையா? மற்ற பெரிய ஊர்களுக்கும் இதே அளவா?” டைசன் அந்தச் சின்ன ட்ரோனை இயந்திரக்கரங்களுக்கான வலைப்பின்னல்களுக்கு ஊடாக ஓடவிட்டபடி கேட்டான்.
”இதே அளவுதான். ஆனால் இடத்துக்கு, தேவைக்குத் தகுந்ததுபோல இரண்டு மூன்று என்று தொழிற்சாலைகள் இருக்கலாம்.” சடகோபன் சொன்னார். அவர் கண்ணில் இன்னும் நீர்ப்படலம் இருந்தது. டைசன் யோசித்தான் “அழுகிறாரா? அதெல்லாம்தான் உலகெங்கிலும் அனுமதிக்கப்படாத உணர்ச்சியாயிற்றே? திவ்யா.. யாராக இருக்கும்?”
கொஞ்ச நேரம் அதே இடத்தில் அமர்ந்தபடி கணக்குகள் போட்டான் டைசன். மனித நடமாட்டமே சுத்தமாக இல்லை. முன்பு பார்த்த சிம்னி இப்போதும் தூரத்தில் புகைவிட்டுக்கொண்டிருந்தது..
திடுதிப்பென்று நினைத்துக்கொண்டவன் போல “CX-7 தயார் செய்ய முடியுமா?” Controlled Explosion 7 என்று அழைக்கப்படும் வெடிமருந்து, தேவைப்படும் அளவு குறைவாக இருந்தாலும் வெடிப்பு துல்லியமாக இருக்கும். அரசாங்க அனுமதியுடன் கட்டடங்களை இடிக்க டைசன் வழக்கமாக உபயோகப்படுத்துவான், கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி அனுமதியில்லாமலும் வெடித்திருக்கிறான், எல்லாம் வேறு ஊர்களில். இங்கே கிடைக்குமா?
“எவ்வளவு வேண்டும்” என்றார் சடகோபன்.
“இந்தத் தொழிற்சாலைக்கு ஆணிவேர், அந்தக் சர்ஜிகல் கரங்கள். அவை நகர்வது கம்பிகளில். எல்லாக் கம்பிகளும் இதோ” கணினியைக் காட்டினான்.”இந்த அச்சில் இருந்துதான் இயங்கத் தொடங்குகின்றன. அந்த அச்சைத் தகர்த்தால் எல்லாக் கம்பிகளும் அறுந்து கீழே விழுந்துவிடும். மறுபடி எல்லாவற்றையும் சரி செய்யக் குறைந்தபட்சம் பத்து நாட்களாவது ஆகும். அதற்கு, மிகக் குறைந்தபட்சமாக ஒரு முறைக்கு இருபது கிராம் தேவைப்படும்.” என்றான்.
“பத்து நாட்களுக்குத்தானா?”
“ஆமாம். மீண்டும் எல்லாவற்றையும் அமைக்கும்வரை காத்திருந்து, இன்னொரு இருபது கிராம், இன்னொரு பத்து நாட்கள். இப்படி நாலைந்து முறை செய்தால் தொடர்ந்து செய்வது கஷ்டம். மூலப்பொருள்கள் பஞ்சம் வந்துவிடும்.”
“அப்போது இந்தியாவில் உள்ள இருநூற்று ஐம்பது மிருகப்பண்ணைகளுக்கும் சேர்த்து, ஒரு பண்ணைக்கு இருபது கிராம் வீதம், ஐந்து கிலோ போதுமா? ஒரு முறைக்கு ஐந்து கிலோ என்றால் ஐந்து முறைக்கு இருபத்தைந்து கிலோ”
“கணக்கை எல்லாம் சுலபமாகப் போடுகிறீர்கள். இருபத்தைந்து கிலோ CX-7 கிடைப்பது எவ்வளவு கடினம் தெரியுமா? நான் கிராம்களுக்கே அல்லாடுவேன்.”
“அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் திட்டத்தைத் தொடருங்கள்” என்ற சடகோபன் தன் கணினியில் எதையோ தேடினார். “டாக்டர் அஷோக் பாண்டே..”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“இவ்வளவு சின்ன ட்ரோன் எப்படி ராடாரில் மாட்டியது?” என்றான் கோபி ஆச்சரியத்துடன்.
“அதிர்ஷ்டம் மட்டும்தான். வேறெதுவும் இல்லை. ரேண்டம் ஸ்வீப்பிங். இப்போதுதான் ட்ரோன் என்றே தெரியும்.”
“இதுக்கும் அந்த தீவிரவாத வார்னிங்குக்கும் சம்பந்தம் இருக்குமா?”
பல்வீர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டார். “செக் பண்ணிடத்தான் வேணும். விஜயவாடா போறியா?”
“இல்லை பாஸ். வீட்ல அப்பா இருக்கார். இன்னும் நீங்க கொடுத்த மேனுவல் அப்ரூவல் வேலைங்க இருக்கு.. வேற யாரும் ஏஜண்ட் இல்லையா?”
“விவேக் இருக்கான். அவன் ஒரு ஹாட்ஹெட். துப்பாக்கி எடுத்துகிட்டுப் போகட்டுமா பாஸ்ன்னு கேப்பான்.”
“இது டெரரிஸ்ட் த்ரெட்ன்னா துப்பாக்கியைத் தூக்கிட்டுப் போகறதுல தப்பில்லை இல்ல?” என்ற கோபிக்கு உடனே ஒரு எண்ணம் வந்தது. “விஜயவாடாக்கு இண்டர்நேஷனல் அரைவல்ஸை செக் பண்ணலாமில்ல?”
“அதோட இன்னும் ஒண்ணும் பண்ணலாம். டெலிபோர்ட்ல இருந்து லாஜிஸ்டிக்ஸ் தொழிற்சாலை இருபது கிலோமீட்டர் இருக்கும். எங்கிருந்தும் அவ்வளவு சுலபமா நடந்து வரமுடியாது. அதனால , விஜயவாடா சைடுக்கு யாராவது கார் ஓட்ட பர்மிஷன் வாங்கினாங்களான்னு பாரு.”
“கரெக்ட் சார். இதோ செக் பண்றேன்..”
பேராசிரியர் சடகோபனும் அவர் மாணவன் டைசனும் அந்த லிஸ்டில் மூன்றாவது நான்காவது பெயர்களாக இருந்தார்கள்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பெரிய திரை நன்றி எனக்காட்டியது. ரிச்சர்ட் அதை வழிமொழிந்து “இதுவரை என் உரையைக் கேட்ட அனைவருக்கும் நன்றி” என்றார். யாரும் கையைத் தட்டவில்லை. குறைந்தபட்சம் புன்னகை கூடச் செய்யவில்லை.
வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை சமுத்திரமாக இருந்தது அறை. திண்டுகளைக் கட்டிக்கொண்டு சிலர். பிரம்பு நாற்காலியில் சிலர். அந்தச் சூழலுக்குப் பொருந்தாமல் கோட் அணிந்திருந்தது ரிச்சர்டைத் தவிர குடியரசுத் தலைவர் மட்டும்தான்.
”உட்காருங்கள் ரிச்சர்ட்.” என்று அதிகாரத்தொனியோடு சொல்லிக்கொண்டே மாநாட்டு அறையின் நடுவுக்கு வந்தார் பிரவீண். முகத்தில் தெரியாவிட்டாலும் குரலில் கோபம் கொப்புளித்தது. மற்றவர்களுக்கு அந்தக் கோபம் எப்படிப்பட்ட உணர்வு என்றே புரியாமல் அமைதி காத்தார்கள்.
“என்ன செய்யப்போகிறோம்? ராய்ப்பூர்? சமோசா சாப்பிட்டாகி விட்டதுதானே? வாய் காலியாகத்தானே இருக்கிறது எதாவது சொல்லுங்களேன். ”
ராய்ப்பூர் “ம்..ம்” குரல் வரவில்லை.
“ஹைதராபாத்.. பெங்களூர்.. லக்னோ, பதான்கோட்..” ஒவ்வொருவரையும் பார்த்து அவர் கோபமாக அழைத்தார். ஒருவருக்கும் பதில் சொல்லவில்லை .
“2075 நினைவிருக்கிறதா? பொருளாதாரம் அதலபாதாளத்தில் இருந்து. உணவுக்குப் பஞ்சம். அவனவன் கலவரத்தில் அடித்துக்கொண்டு செத்துக்கொண்டிருந்தான். அந்தக் கொடுமையான சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்தோம். வந்ததில் இருந்து, இருபத்திச் சில்லறை ஆண்டுகள் – ஒரு ஆள்கூட பசியால் சாகாத அளவுக்கு நாட்டை மாற்றி இருக்கிறோம். தண்ணீருக்குப் பஞ்சமா? அதெல்லாம் பழைய காலம். மின்சாரம்? மிகையாக இருக்கிறது.. மதக்கலவரம் ஜாதிக்கலவரம் ஒன்றும் கிடையாது.. பிறகேன் நமக்கு ஆதரவு குறைகிறது? ” பதில் வரவில்லை.
“என்னுடைய அந்தரங்க ஆலோசகர்கள் நீங்கள். இங்கிருந்தபடியே உங்களூரைக் கண்காணிக்கத்தானே உங்களை வைத்திருக்கிறேன்? நீங்கள்தானே மக்களுடன் இருக்கிறீர்கள்? சொல்லுங்களேன்..”
“அறுபது வயதுக்கு மேலான ஆட்கள்தான் பிரச்சினை.. அவர்களுக்குப் பழைய காலத்தின் மேல் இன்னும் காதல் இருக்கிறது..”
“நாமும்தான் அறுபதுக்கு மேல்.. இந்தப் புதிய மருத்துவத்திட்டமும் முக்கியமாக அந்த வயது ஆட்களுக்காகத்தான். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி சாத்தியப்படுத்துவது?”
திருவனந்தபுரம் எழுந்தார். “இங்கே உண்மையைத்தான் சொல்லவேண்டும். சும்மா பூசி மழுப்பிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.”
பிரவீண் அவரைப்பார்த்து “சொல்லுங்கள். நமக்குள்தானே பேசிக்கொண்டிருக்கிறோம். “
“குறைந்த வயதுக்காரர்களுக்கு ஒன்றும் ஞாபகம் இருக்காது. இந்த டெலிபோர்ட்டிங் ஆரம்பித்தபோது – 2077-78 இல் ஓரிரவில் மற்ற எல்லாப் பயணங்களும் தடை செய்து ஆணை பிறப்பித்தீர்கள். அப்போது ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் வெளியூர் போனவர்கள் திரும்பவே இல்லை. கொஞ்ச நாட்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்குப்பிறகு தொடர்பே இல்லாமல் போய்விட்டார்கள். எனக்கும் அதே நிலைமைதான். என் மகன் ஆஸ்திரேலியா போனான். அவனை ரொம்பநாள் மறந்திருந்தேன். ஆனால் கடந்த கொஞ்சநாளாக அவனைப் பார்க்க என் மனம் ஏங்குகிறது. ஆனால் அவனுக்கு என் நினைவே இல்லை. எனக்கு இதுபற்றி இவ்வளவு நாள் கேள்வி இருந்ததில்லை. இப்போது கேள்வி வரத் தொடங்கி இருக்கிறது. இதுபோலத்தான் அந்த வயதினர் எல்லாருமே இருப்பார்களோ என்னமோ..”
பிரவீண் கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி “நன்றி திருவனந்தபுரம். மிகச்சரியாகப் பிரச்சினையைச் சொன்னீர்கள். இதைச் சரி செய்யத்தான் புதிய மருத்துவத்திட்டம். இது புரியாமல் இதற்கே ஒத்துழைப்பு தரமாட்டேன் என்கிறார்கள்.”
திருவனந்தபுரம் குழம்பினார். “இந்தப்பிரச்சினைக்கு மருத்துவத்திட்டம் எப்படி தீர்வு அளிக்கும்?”
“எல்லாம் சொல்கிறேன். அடுத்த சந்திப்பில்” சடக்கென்று வெட்டி, சந்திப்பு முடிந்துவிட்டதை உணர்த்தி வேகமாக வெளியேறினார்.
வாசலில் உதவியாளரிடம், “எங்கே போய்விட்டார் இந்தப் பிரஜாபதி? அவருக்கு இந்தக் கூட்டத்தைப் பற்றிச் சொல். ரிச்சர்டுக்கு இதைக் கேட்கும் அந்தஸ்து கிடையாது. அப்படியே திருவனந்தபுரத்தையும் கவனிக்கச் சொல்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
வீட்டுக்குக் கீழே இருந்த பேஸ்மெண்ட் பணிமனை போல் இருந்து. அனந்தன் தன் சாய்வு இருக்கையில் ஏறத்தாழப் படுத்திருந்தார். சுவரில் அவர் வெவ்வேறு விஞ்ஞானிகளுடன் எடுத்த படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. இரண்டு பெரிய பலகைகளில் பலவிதக் கணக்குகள் போடப்பட்டிருந்தன. நான்கு கணினித்திரைகளில் ஒன்றே ஒன்று பாஸ்வேர்டுக்காகக் காத்திருந்தது. இரண்டு சுழல் நாற்காலிகள் ஏறத்தாழக் கிடைமட்டமாகப் படுக்க வசதியாகச் சாய்ந்து கிடந்தன. தலைப்பகுதியில் ஒரு கண்ணாடிக்கூண்டு இருந்தது, அதிலிருந்து பல வயர்கள் கணினிக்குச் சென்றுகொண்டிருந்தன.
அனந்தன் விழித்திருக்கிறாரா தூங்குகிறாரா என்றே தெரியாத நிலையில் இருந்தார். அழைப்பொலி கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். “அப்பா லஞ்ச் டைம்.. வரியா, எடுத்துகிட்டு வரட்டுமா?”
“இங்கேயே வந்துருடா.”
இரண்டு தட்டுகளுடன் வந்தான் கோபி. “வெங்காய தோசைப்பா”
அனந்தன் தோசையின் நீள அகலத்தைப் பார்த்தார். “இவ்ளோ பெரிசாடா? உங்கம்மா எவ்ளோ குட்டிக்குட்டியா தோசை வார்ப்பாள் ஞாபகமிருக்கா?”
“இது நான் பண்ணினது இல்லைப்பா.. வெளியில இருந்து வந்திருக்கு. சமைக்கவெல்லாம் யாருக்கு நேரமிருக்கு?”
“திவ்யா டெய்லி சமைச்சிருவா”
“அதெல்லாம் இந்தக்காலத்துல எதிர்பார்க்கமுடியாதுப்பா.”
“அட.. அதைச்சொல்லலைடா.. செத்துப்போன பொண்டாட்டி பத்தி நினைச்சுப்பாக்கக்கூடக் கூடாதா? நான் யாரையும் குறை சொல்லலை. காலம் மாறிகிட்டிருக்கறதுக்குத் தனிநபரைக் குறைசொல்ற அளவுக்கு ஆளா நான்?”
“அதில்லப்பா.. அம்மா பத்தி நீங்க நினைக்கவேணாம்னு பேச்சை மாத்தினேன்.”
“என்னோட அண்டர்க்ராஜுவேஷன்ல இருந்து நாலு பிஎச்டி வரைக்கும் மனித நினைவுகள் பத்தியும் அதை எப்படி மாத்தலாம்னு ப்ரோகிராம் பண்றதைப்பத்தியுமே யோசிச்சுகிட்டிருக்கவன் நான். எனக்கே நீ மைண்ட் சேஞ்ச் பண்றியா?” கிண்டலாகக் கேட்டார்.
“போற புண்ணியவதி போயிட்டா.. யோசிச்சு என்ன பிரயோஜனம்.. யோசிக்கறதால எதாச்சும் நடக்கவா போகுது?”
“யோசிக்காம இந்த உலகத்துல எந்த நல்லது கெட்டதுமே நடந்தது இல்லைடா.. கீப் திங்கிங்.. மாற்றங்கள், மாற்றத்துக்கு மாற்றங்கள் எல்லாம் யோசனைலதான் ஆரம்பிக்கும்..”
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.