அத்தியாயம் 10
“கனிமத்தை எடுக்க எந்த மாதிரி வெடி மருந்து தேவை என்பதை முடிவு செய்வதற்கு, கனிமம் எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது, மேல்மண்ணின் கெட்டித்தன்மை, சுற்றுப்புறத்தில் உள்ள காடுகள் கிராமங்கள் ஆகியவற்றின்மேல் வெடியின் தாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்” அஷோக் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது சடகோபனின் அழைப்பு வந்தது.
பாடத்தை முடித்துவிட்டு அஷோக் அழைத்தார்.
“சடகோபன்.. எவ்வளவு நாள் ஆகிறது பார்த்து?”
“காலம் அப்படி. பழைய நண்பர்கள் எங்கே தொடர்பில் இருக்கிறோம். கேம்ப்ரிட்ஞில் 7- 75 இல் பார்த்தோம் இல்லையா?”
“ஆமாம். அப்போது அந்த அனந்தனும் கூட இருந்தார், இல்லையா? அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய மாநாடு.அவர்தான் அந்த மாநாட்டுக்கே உச்ச நட்சத்திரம்.”
சடகோபன் எதிர்முனையில் மௌனமானார்.
“ஓ.. மன்னியுங்கள் சடகோபன். அவர்பற்றி உங்களுக்கு நினைவூட்டியிருக்கக் கூடாது..”
“அதனாலென்ன பரவாயில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..”
“தெரியாமல் என்ன? எல்லாச் செய்திகளும் பொதுவெளிக்கு வந்தவைதானே. அவர் உங்கள் மேல் பழிபோட்டு சிறைக்கு அனுப்பியதும் நீங்கள் நிரபராதி என்று வெளியே வந்ததும்..”
“பழங்கதையெல்லாம் எதற்கு. இப்போது அவரே மனநல மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருக்கிறாராம். வினை விதைத்தார், இப்போது அறுக்கிறார். சரி அதை விடுங்கள். உங்களுக்கும் பத்மபூஷண் கிடைக்கப் போகிறதாமே.. வாழ்த்துகள்:
“கூட்டத்தில் ஒருவன். எதற்காக என்றுகூடத் தெரியாத ஒரு விருது” அஷோக் மேலோட்டமாகச் சொன்னாலும் குரலில் மகிழ்ச்சி தெரிந்த்து.
சடகோபன் ஒரு நொடி விட்டு, ”எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
“என்ன உதவி? என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன். உலகம் நம்மைக் கேட்டோ கேட்காமலோ மாறியிருக்கலாம். நாம் பேசியதெல்லாம் எனக்கு இன்னும் மறக்கவில்லை. நாம் ஏதேனும் செய்யத்தான் வேண்டும்.”
“நாம் நேரில் சந்திக்க வேண்டும்.. நாளை நேரம் கிடைக்குமா?” சடகோபனின் குரலில் ஒரு அவசரம் தெரிந்தது.
“நிச்சயம். நாலு மணிக்குமேல் எனக்கு வகுப்புகள் இல்லை. நாளை நாலரைக்குச் சந்திக்கலாமா? இரவுணவையும் சேர்ந்தே சாப்பிடலாம்..”
“என்னுடன் இன்னொரு நபரும் வருவார், அவர் பெயர் டைசன், என் மாணவன்..”
டைசன் என்ற பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் அந்த உரையாடல் சேமிக்கப்பட்டு இண்டெலிஜன்ஸ்க்கு அனுப்பப்பட்டது.
சடகோபன் கார் ஓட்டிக்கொண்டிருந்தவர், பக்கத்து இருக்கையில் இருந்த டைசனைப் பார்த்தார். அவன் தன் கணினியில் அந்த ட்ரோனை இடவலம் திருப்பி நோட்டம் பார்த்ததைத் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். கரங்கள் செல்லும் வலைப்பின்னல்களின் மூல அச்சின் வயர்களைத் தொடர்ந்து கணினிகள் இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கண்ணாடி வரை பதிவாகியிருந்ததை மீண்டும் பார்த்துக் கணக்குகள் போட்டுக்கொண்டிருந்தான்.
சடகோபன் ”அந்தக் கட்டுப்பாட்டு அறையையே தகர்த்துவிட்டால் என்ன?” என்றார்.
“அது மிகச்சுலபம். ஏன், வெடிமருந்துகூட வேண்டாம். நாம் பார்த்த ட்ரோனில் ஒரு துப்பாக்கிக் குண்டை அனுப்பினாலே போதும். ஆனால் அதனால் பிரயோஜனமில்லை” என்றான் டைசன்.
கேள்வியாகப் பார்த்த சடகோபனிடம், “கணினிகளை மாற்றுதல் மிகச்சுலபம். பத்து நிமிடம் ஆகும். செலவும் அதிகமாகாது. உடைத்தோம் என்று தெரியும் அவ்வளவுதான். தொழிற்சாலை நிற்காது.”
ட் ரோனைத் திரும்பவழைத்துப் பெட்டிக்குள் அமர்த்தினான். “CX-7க்கு ஏற்பாடு ஆகிவிட்டதா?”
“இல்லை. இப்போது சென்னைக்குதான் போய்க்கொண்டிருக்கிறோம், ஒரு பேராசிரியரைச் சந்திக்க.”
“சரிதான். இன்னொரு பேராசிரியரா?”
“இவர் சுரங்கவியல் துறைப் பேராசிரியர். அந்தத்துறையில் அவருக்குத் தெரியாததே கிடையாது. பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அஷோக் பாண்டே.”
ஆச்சரியகரமாக அவன் கேள்விப்பட்டிருந்தான். சுரங்கத்துக்கு வெடிவைக்கும் தொழில்நுட்பத்தை டைசன் படித்திருக்கிறான். சுரங்கத்தில் வெளிநோக்கிவெடித்து மண்ணும் கல்லும் நாலாபுறமும் சிதறும் எக்ஸ்ப்ளோஷனுக்கும், நகர்ப்புற வீடுகளை உள்நோக்கி வெடிக்கவைத்து, வெளியில் எதையும் சிதறவிடாத இம்ப்ளோஷனுக்கும் எப்படி வெவ்வேறு இடங்களில் குண்டுகள் அமைக்கவேண்டும் என்ற கணக்குகளைப் போடுவதற்கு அஷோக் எழுதிய புத்தகத்தைத்தான் அவன் படித்திருந்தான்.
“அவரை உங்களுக்குத் தெரியுமா? அவரை ஏன் சந்திக்கவேண்டும்?”
“அவர்தான் நமக்கு CX-7 ஏற்பாடு செய்து தரப்போகிறார். அவர் மாணவர்கள் இப்போது அங்கீகரிக்கப்பட்ட சுரங்கங்களில் அதிகாரிகளாக இருப்பார்கள். அவர்கள் மூலம் வெடிமருந்தைச் சேகரித்துத் தருவார்.”
“அவருக்கும் உங்களுக்கும் ஒரே கொள்கையா? ஆச்சரியமாக இருக்கிறதே..”
“இதுவரை இல்லை. அவரைச் சேர்க்க உங்கள் வலிமை தேவைப்படும்” சிரித்தார் சடகோபன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
”உலக தேசங்களின் வரலாற்றில் விடை தெரியாத கேள்விகள் சில இருக்கலாம். பல வருடங்களாக கேள்வியே இல்லாத புதிர் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது.” ஹூபர்ட் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு சொன்னார்.
பாவ்னா ஹூபர்ட்டை முழுமையாகக் கவனிக்கவில்லை. அவள் எண்ணம் எங்கெங்கோ அலைபாய்ந்துகொண்டிருந்தது. பலகைக் கணக்குகள், தடிதடி நரம்பு விஞ்ஞானப் புத்தகங்கள், மனித மூளை வரைபடம், பல்வேறு நிலைகளில் தலையில் மின்சாரக்கம்பிகள் கட்டிய ஆட்களின் புகைப்படங்கள் – அறையில் இருந்த கலந்துகட்டி சமாசாரங்களை அவள் கண் பார்த்தாலும் எதிலும் அவள் கவனம் போகவில்லை. இவரிடம் எப்படி தன் வேலைக்கான தகவல்களை வாங்குவது என்றுமட்டுமே யோசித்துக்கொண்டிருந்தாள்.
“பலநூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்த தேசம் வல்லரசாக இருபதாண்டுகள் போலத்தான் தேவைப்பட்டன. இந்த மாற்றம் எப்படி சாத்தியப்பட்டது என்பதை எல்லாரும் வரலாற்றுப்பாடங்களில் படிக்கிறார்கள். உலகத்துக்கு மிகத் தேவையான டெலிபோர்ட்டிங்கைத் தொடங்கியது இந்தியா. அதன் காபிரைட்களில் இருந்து ஏகப்பட்ட பணம், உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவுக்குக் கடனாளிகளாக்கியது. இந்தியாவில் இருந்து தகவல்கள் வருவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து காணாமலே போய்விட்டன. வெளிநாட்டு ஊடகங்கள், அரசாங்கங்கள் ஆரம்பத்தில் கேள்விக்ள் கேட்டார்கள்தான். ஆனால் அவற்றை இந்திய அரசாங்கம் மதிக்கவில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால், இல்லையா? இந்த வெற்றி, மற்ற நாடுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, அங்கும் ஊடகங்கள் குறைந்து கேள்விகள் கேட்பதே நின்றுவிட்டது. மதப்பிரச்சினைகள் கட்சித்தகராறுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துவிட்டன. சுபிட்சம் ஏற்பட்டால் சண்டைகள் குறையும் என்பது உண்மைதான். ஆனால் குழுக்கலவரங்கள் எப்படிக் காணாமல் போயின? ஊடகம் என்ற மகாசக்தி எப்படி கேள்வி கேட்பதை மறந்தது? எல்லாரும் இந்தியத்தலைவரை வழிபடுகிறார்களே ஏன்? அவரிடம் நானும் பேசியிருக்கிறேன், ஏன் நீயும் பேசியிருக்கிறாய். அவர் எப்போதாவது ஊடகங்களுடன் பேசியிருக்கிறாரா? அவர் அளிக்கும் அறிக்கைகளையே கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை.” இப்போதுதான் பாவ்னாவை நிமிர்ந்து பார்த்தார். “கவனிக்கிறாயா?”
“ஆம் கவனிக்கிறேன்” என்றாள் சுதாரித்துக்கொண்டு. “நீங்கள் அந்தக் காரணத்தைக் கேட்டிருக்கிறீர்களா?” அவர் சொன்னதை அரைகுறையாகத்தான் கேட்டிருந்தாள். அதைக் கொஞ்சம் திருப்பி யோசிக்கும் பொழுது. கோவையாக ஒரு வடிவு வந்தது.
ஹூபர்ட் தொடர்ந்தார், “இல்லை. ஆனால் அவர் என்னை அழைத்தபோது இந்தியா 2075 என்று நினைக்கிறேன். ஒரு வறுமைப் பிரதேசமாகத்தான் இருந்தது. இளமையான குடியரசுத்தலைவர். எதிர்பாராத மிருகபலப் பெரும்பான்மையுடன் பிரதமராக நாடாள வந்தவர் அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றி அசைக்கமுடியாத சக்தியுடன் கூடிய குடியரசுத்தலைவராக மாறியிருந்தார். அனந்தனின் செல்லத் திட்டம் பற்றி எதுவும் தெரியுமா என்று கேட்டார்.”
”உங்களுக்குத் தெரிந்திருந்ததா?”
“அப்போது நான் அனந்தனின் உதவியாள் போலத்தான் இருந்தேன். இரண்டு பிஎச்டி முடித்திருந்தும் அவருடைய சிந்தனைக்கும் மேதைமைக்கும் முன்னால் நான் ஒரு சிறுபிள்ளை போலத்தான். ஆனால் அவர் என்னைச் சமமாகப் பாவித்து எல்லாவற்றையும் சொல்லித்தந்தார்.” ஹூபர்ட் இன்னும் அனந்தனைக் கடவுளாகத்தான் பார்த்தார் என்பது அவர் குரல் தழுதழுத்ததில் தெரிந்தது.
“பிரவீண் உங்களை அழைத்தபோது..”
“பிரவீண் என்னை அழைத்தபோது நான் அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இல்லை. அதை அவரிடம் சொல்லியும் விட்டேன்.”
“அப்புறம் எப்படி?”
“நான் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி. கல்வியாளன். பிரவீண் மிகச்சுலபமாக என்னிடம் தேவையான விஷயங்களை வாங்கிக்கொண்டார்.. ஓர் அரசியல்வாதிக்கு எந்த வகையிலும் உதவமாட்டேன் என்று உறுதியே எடுத்திருந்தாலும் ஒரு மாணவனைக் கைவிட என் மனம் வராது என்று தெரிந்து வைத்திருந்தார். அதுதான் அவர் பலமே. யாரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது அவருக்குத் தெரியும். ஒரு விடுமுறைக் கால பயிற்சி என்ற பெயரில் ஏழெட்டு மாணவர்களை என் கீழ் வேலை செய்யப் பணித்தார்.”
ஹூபர்ட் தன்னைத்தானே நொந்துகொள்வதுபோல அமைதியாக இருந்தார். பாவ்னா அவரைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாள்.
அமைதி நீண்டுகொண்டே போனதால், “யார் அந்த மாணவர்கள்?”
“அப்போது தெரியாது. அவர்கள் பெயர்கள் எதுவும் சரியாக ஞாபகமே இல்லை. புத்திசாலிகள். அறிவியல் மட்டுமில்லை. வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்கள். ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள். அந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விலகிவிட்டனர்.அவர்கள் யார், எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள்தான் பிரவீணின் உள்வட்ட ஆலோசனைக்குழு என்று வெகுநாட்கள் கழித்துத்தான் எனக்குப் புரிந்தது.”
ஏழெட்டு பேரா? ரிச்சர்டிடம் சொல்லவேண்டும்..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“என்னுடன் இன்னொரு நபரும் வருவார், அவர் பெயர் டைசன், என் மாணவன்..”
கோபி இந்த உரையாடலை இரண்டுமுறை போட்டுக்கேட்டான். இந்தப்பேச்சில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லையே.. இரண்டு பேர் பேசிக்கொள்கிறார்கள். எனக்குத் தனிப்பட்ட முறையில் இதில் கொஞ்சம் வம்பு இருக்கிறது. ஆனால் இமிக்ரேஷன் துறைக்கு என்ன இருக்கிறது?
அந்த உரையாடலின் மேல் தகவல்களைப் பார்த்தான். அழைப்பைத் தொடங்கியது அஷோக், இந்திய தொழிநுட்பப்பயிலகத்தின் சுரங்கவியல் துறைத்தலைவர். அழைப்பை ஏற்றது சடகோபன், அண்ணா பல்கலைக்கழகம், அகழ்வாராய்ச்சித் துறைப் பேராசிரியர். ஒரு நிமிடம் நாற்பத்தாறு நொடிகள் பேசியிருக்கிறார்கள். பார்த்துக்கொண்டே வந்தபோது பொறி தட்டியது. சென்னையில் இருந்து அழைத்திருக்கிறார்கள். விஜயவாடா அருகில் அழைப்பு ஏற்கப்பட்டிருக்கிறது. காலையில் பல்வீர் சொன்ன தகவல் நினைவுக்கு வந்தது – அத்துமீறிப்பறந்த ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டது விஜயவாடா அருகில். சடகோபன் விஜயவாடா செல்ல அனுமதி வாங்கியிருக்கிறார்.
பல்வீரை அழைத்தான். அவசரமாகத் தன் கண்டுபிடிப்புகளைச் சொன்னான். இனி அவர் பார்த்துக்கொள்வார்.
அப்பாவின் பணிமனைக்குச் சென்றான். அனந்தன் அதேபோல வெறித்த பார்வையுடன் தூக்கமா விழிப்பா என்று சொல்லமுடியாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
“அப்பா..”
திடுக்கிட்டு எழுந்தார். “என்னாச்சு”
“தூங்கிகிட்டு இருந்தீங்களாப்பா.. சாரி. “
“தூக்கம்ன்னு இல்லை. கொஞ்சம் அரை மயக்கம். என்ன சொல்லு..”
“எனக்கு சின்ன வயசுல ஒரு ட்ரோன் வாங்கிக்கொடுத்தீங்க ஞாபகமிருக்காப்பா? பதினாலாவது பிறந்தநாளுக்கு..”
கொஞ்சம் யோசித்தவர்.. “ஓ.. அஜாக்ஸ் கம்பெனி ட்ரோன்.. லாஸ்ட் பேட்ச்ன்னு நினைக்கறேன். அதுக்கப்புறம் ட்ரோனையெல்லாம் அரசாங்கம் தடை பண்ணிருச்சு..”
“ஆமாம். ஓவர்நைட் தடை பண்ணாங்க இல்லை? இருந்த ஸ்டாக்கையெல்லாம் ஸ்க்ராப் பண்ணாங்க, இல்ல?”
“எனக்கு அந்த ஆர்டர் வரப்போறது ஒரு ரெண்டு நாள் முன்னாடியே தெரிஞ்சிருச்சு. நீ கேட்டதால வாங்கலாம்னு போனேன். சின்னப்பையந்தானே, யாருக்கும் தெரியாம விளையாடிக்கோன்னு கொடுத்தேன். ரெண்டாவே வாங்கினேன். என் ஃப்ரெண்டுக்கும் ஒண்ணு.” என்றவர் ஒரு நொடி நிறுத்தி ,”அன்னிக்கு எல்லாம் ஃப்ரெண்டுதான்..”
“யாருப்பா?”
“ஆர்க்கியாலஜி சடகோபன்..”
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.