அத்தியாயம் 12
அந்த அறையின் சுவர்கள் சாம்பல் வண்ணம்தான். வெளிச்சம் இல்லாதால் கருப்பாகத்தான் தெரிந்து. எந்த ஒளியையும் பிரதிபலிக்காமல் இருந்த சுவர், இரும்புத் தடிமனைக் காட்டிய பெரிய கதவு, இன்னொரு பக்கம் இரட்டை ஜன்னலைப்போன்ற கண்ணாடி. அதில் சடகோபனின் முகம் பிரதிபலித்தது. அந்தப்பக்கம் யாரோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு இரும்புமேஜை, உட்கார வசதி இல்லாத இரும்பு நாற்காலி. அறையே விரோதமாக – இங்கே வந்தால் நீ குற்றவாளிதான், பேசாமல் குற்றத்தை ஒப்புக்கொள் என்று சொல்வதுபோல் இருந்தது. தண்ணீர்கூடத் தராமல் இருபது நிமிடங்கள், யாரும் உள்ளே வரவில்லை. தனிமையில் யோசி, அரசாங்கத்தின் இரும்புக்கரங்கள் எவ்வளவு பலமானவை என்று யோசி என்பதுபோல் விட்டுவிட்டிருந்தார்கள்.
கதவு திறந்தது. உள்ளே நுழைந்த அதிகாரிக்கு ஒரு நாற்பது வயது மதிப்பிடலாம். எண்பதாகவும் இருக்கலாம்.
“நான் பல்வீர் சிங் பட்டி. இண்டெலிஜன்ஸ் அதிகாரி.” கைகுலுக்கினார்.
“நான் சடகோபன்..” இது தெரியாமல்தான் இங்கு அழைத்து வந்திருக்கிறார்களா என்ன?
“சொல்லுங்கள்” என்றார் பல்வீர்.
“என்ன சொல்ல வேண்டும்? திடுதிப்பென்று என் வீட்டு வாசலுக்கு வந்தீர்கள், என்னைக் காரணம் சொல்லாமல் இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள், கைது செய்வேன் என்ற மிரட்டல் வேறு.. நீங்கள்தான் கேட்க வேண்டும்.”
“நேற்று நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?”
“உங்களுக்கு அது தேவையில்லாத விஷயம். இருந்தாலும் என் மடியில் கனமில்லை என்பதால் சொல்கிறேன். எலூரு என்ற கிராமத்துக்கு. விஜயவாடா அருகில் இருக்கிறது.”
“அங்கே உங்கள் வேலை? “
“விஜயநகர சாம்ராஜ்யம் என்றால் என்ன தெரியுமா உங்களுக்கு? அவர்களின் செப்பேடுகளின் பிராகிருதம் கலந்த தெலுங்கை உங்களால் படிக்க இயலுமா? உங்கள் மொழிமாற்றிகளுக்கு அப்பாற்பட்ட மொழிகளும் இந்த உலகத்தில் எவ்வளவோ இருக்கின்றன, அவற்றை வெளியே கொண்டுவர சில கிழவர்கள் உழைக்கிறார்கள் என்பதாவது?” சடகோபன் குரல் கடுமையானது.
“சரி, அதற்கு விஜயவாடா வரை டெலிபோர்ட்டில் போயிருக்கலாமல்லவா?” பல்வீர் சடகோபனின் கோபத்தை மதிக்கவில்லை. ஆனால் குறிப்பெடுத்துக் கொண்டார். இவருக்குக் கோபம் எல்லாம் வருகிறது.
“எனக்கு டெலிபோர்ட் செய்ய விருப்பமில்லை. எத்தனையோ அரசு அலுவலகங்கள் ஏறி இறங்கி சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறேன் என் வாகனத்தை எடுத்துச் செல்ல.. இந்தக்கதை உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த நாற்காலிக்குத் தகுதியில்லாதவர்.”
“உங்களுடன் யாராவது வந்தார்களா?”
“என் ஆராய்ச்சி மாணவன், டைசன், கனடாவில் இருந்து வந்திருக்கிறான், அவனும் வந்திருந்தான்.”
“உங்கள் வண்டியின் பாதையைப் பார்த்தபோது விவகாரங்கள் துறையின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்கு மிக அருகில் சென்றிருக்கிறீர்கள் என்பது தெரியவருகிறது. அனுமதி இல்லாமல் ஒரு ட்ரோன் பறந்திருக்கிறது.இதுபற்றி ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?”
“நான் ஏதும் சொல்லவிரும்பவில்லை. கிருஷ்ணதேவராயருக்கும் அவருடைய அமைச்சர் திருமலை ராயருக்கும் கட்டுப்படுத்தப்படப்போகும் இடத்தின்கீழ் செப்பேடுகளை வைக்கக்கூடாது என்று தெரியவில்லை, அவ்வளவுதான்..”
சடகோபன் தன் கணினியில் செப்பேடுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் மென்பொதியைக் காட்டினார். அது எப்படி ட்ரோன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது, அதற்குக் கீழே என்ன இருக்கிறது என்று தெரியாது என்றெல்லாம் விளக்கி முடிக்கையில் மதியமாகிவிட்டது.
“உங்கள் மாணவன் டைசன் எங்கே?” பல்வீர் குரலில் முன்பிருந்த நம்பிக்கை போய் குழப்பம்.
“அவனை வேறோரு இடத்துக்கு அனுப்பியிருக்கிறேன், செப்பேடுகளைப் பிரதி எடுக்க வேண்டும்” பல்வீரின் குழப்பத்தைப் பார்த்து, சடகோபன் தைரியம் அடைந்தவராக, “அவ்வளவுதானா? நான் போகலாமா? இனி ஒரு நொடி நான் இங்கு இருக்கவேண்டுமென்றாலும் என் பேரில் நீங்கள் குற்ற அறிக்கை தயார் செய்யவேண்டும்”
பல்வீர் ஒன்றும் சொல்லாமல் கையை அசைத்தார்.
வெளியே வந்த சடகோபன் அஷோக்கை அழைத்தார். “என்னால் சொன்னது போல மாலை நாலு மணிக்கு வர முடியாது.. சில சிக்கல்கள். என் மாணவன் வருவான். அவனிடம் உடனடியாக என் அலுவலகத்துக்கு வரச்சொல்லிச் சொல்லிவிட முடியுமா?”
சடகோபன் அலுவலகத்துக்கு விரைந்தார். அவசரமாக டைசனை ஆராய்ச்சி மாணவனாக்கவேண்டும்..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“அம்மா இறந்ததுக்கு சடகோபன் காரணமா? என்னப்பா சொல்றீங்க நீங்க?”
அனந்தன் சிந்தனையில் மூழ்கினார்.
திவ்யா பரபரப்பாக இருந்தாள். கிளம்பிவிடலாமா? வீடு ஒரு அடுக்கக வளாகத்தில் இருந்தது. அதன் மொட்டைமாடியில் ஒரு டெலிபோர்ட், அங்கிருந்து ஜெர்மனி அலுவலகத்தின் மொட்டை மாடி. .
“பயம் எல்லாம் ஒண்ணும் இல்லைதானே அனந்த்?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அடுத்த தெருக்கு ஆயிரம் முறை போயிருக்கே. அதே கான்சப்ட்தானே இங்கேயும்” அனந்தன் மனைவியின் வெளிநாட்டுப் பயணத்துக்குக் கலவரமாவதைப்பார்த்துச் சிரித்தார்.
“இருந்தாலும் இது எவ்ளோ தூரம். முன்னாடி பத்து மணிநேர விமானப்பயணம்.. காலை மடக்கக்கூட இடம் இருக்காது.” திவ்யா சராசரிக்கு அதிகமான உயரம். கால்கள் மட்டுமே தனி நீளம் என்பதால் அவளே அடிக்கடி சொல்வாள் – I am not designed for travel.
“உன்னை மாதிரி ஆளுங்களுக்காகத்தான் இந்த டெக்னாலஜி எல்லாம். இன்னும் மூணு நிமிஷத்துல ஜெர்மனி போயிடுவே. அதுலயும் ரெண்டு நிமிஷம் மாடி ஏறத்தான். வேலையை முடிச்சா சாயங்காலம் வீடு. வந்து காபி போட்டுக்கொடு”
“அப்பவும் நீ காபி போட மாட்டே? எம் சி பி!”
“கிளம்பு காத்து வரட்டும், அங்கே போய்த் திரும்பிவந்தா நீ ஒரு பெண்ணாதிக்கப் பன்றி.” பெரிய ஜோக் போலச் சிரித்த அனந்தனை முறைத்தாள் திவ்யா.
பத்து நிமிடங்கள். ஜெர்மனியில் இருந்து அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அனந்தனுக்கு அழைப்பு வந்தது. ஜெர்மனி இல்லை. சடகோபன்.
“திவ்யா ஜெர்மனி நாளைக்குதானே போறதாச்சொன்னா? இல்லை நெக்ஸ்ட் வீக்கா? ”
“இல்லையே.. இன்னிக்குதான். இப்பதான் கிளம்பினாள்”
சடகோபன் கோபமாகக் கத்தத் தொடங்கினார் “முட்டாள்.. இந்த டெலிபோர்ட்டிங் எழவெல்லாம் வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா? இப்ப பாரு..”
“என்னாச்சு?” சடகோபன் சொல்ல அனந்தன் பரபரப்பாகி மொட்டை மாடிக்கு ஓடினார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
டைசன் சடகோபனின் அலுவலகத்துக்குள் நுழைந்தான்.
“அடுத்து என்ன வேலை செய்யவேண்டும்?” என்றான் சடகோபனைப்பார்த்து.
அவர் பதில் சொல்வதற்குள் இரண்டு பேர் அலுவலகத்துக்குள் வந்தார்கள். “டைசன் என்பது?”
“நான் தான். உங்களுக்கு என்ன வேண்டும்?”
“எங்களுடன் கூட வாருங்கள், இண்டெலிஜென்ஸ் அதிகாரி உங்களுடன் பேச விரும்புகிறார்.”
“என்னிடமா? எதற்கு?”
“இரண்டுநாள் முன் நீங்கள் கனடாவில் இருந்து வந்தீர்கள்தானே? அது குறித்துப் பேசவேண்டும்.” சடகோபன் கொஞ்சம் கலவரமானார். டைசன் அந்த விசாரணையைத் தாங்குவானா?
“நேற்று எடுத்துவந்த செப்பேடுகளை அட்டவணைப்படுத்த வேண்டும். ஒரு மணிநேரத்தில் கிளம்பலாமா?” என்றான் டைசன்.
“அதற்கெல்லாம் நேரமில்லை.. உடனே கிளம்புங்கள்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
புதுடெல்லி வந்தடைந்த பாவ்னா இடத்தைப் பார்த்தாள். அலுவலக மாடிதான். உடனே அலுவலகத்துக்கு நடந்தாள்.
கௌஷிக்கையும் ரிச்சர்டையும் சந்திக்க வேண்டும். கணினி பத்துமணிக்குச் சந்திப்பு என்றது. கையில் இருந்த குறிப்புக் காகிதத்தைப் பார்த்துக்கொண்டாள்.
“மருந்துகள் மூலம் மாற்றலாமா? கௌஷிக்கிடம் பேசிப்பார். ரிச்சர்ட் வந்தவுடன் ஊதிய உயர்வு கேள்” இதையா எழுதிவைத்திருக்கிறேன்.. எழுதிய ஞாபகமே இல்லையே.
கௌஷிக் அவன் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் இவளைப் பார்த்து நின்றான். “பாவ்னா?”
“கேம்ப்ரிட்ஜில் இருந்தபோது நீங்கள் செய்த உதவிக்கு நன்றி” என்றாள் பாவ்னா. என்ன உதவி செய்தான்?
“நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன். கொஞ்சம் திசை காட்டினேன் அவ்வளவுதான்.”
ரிச்சர்டும் அதே நேரத்தில் உள்ளே வர “எப்படி இருந்தது பயணம்?” என்று இரண்டுபேரும் ஒரே நேரத்தில் கேட்டுக்கொண்டு சிரித்தார்கள்.
பாவ்னா கௌஷிக்கிடம் “உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. அதற்குத்தான் சந்திப்பே ஏற்பாடு செய்ய நினைத்தேன். ஆனால் இப்போது ஞாபகமே வரமாட்டேனென்கிறது” என்றாள்.
“எதோ கேட்டீர்கள்.. ____ கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டீர்கள்.. ஆனால் என்ன என்று சரியாகக் காதில் விழவில்லை.”
பாவ்னா விழித்தாள். ”என்ன யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. வந்ததும் கேட்கிறேன்.” அசட்டுத்தனமாகச் சிரித்தாள்.
ரிச்சர்ட் விழித்துக்கொண்டு நின்றார். ”நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே புரியவில்லை. ஜனாதிபதி மாளிகை மீட்டிங்கில் நான் எடுத்த குறிப்பையும் காணவில்லை. ஹைதராபாத்துக்கு ஏன் போனேன் என்றே தெரியவில்லை. அங்கே அலுவலகத்துக்குப் போய் வெட்டியாக நின்று திரும்பிவிட்டேன்” என்றார்.
பாவ்னாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இரண்டு பேருக்குமே நினைவுகளில் எதோ ஒரு தடங்கல். பயணத்திற்குப் பிறகுதானா?
மணிச்சத்தம் கேட்க கணினியைப் பார்த்தாள். ஹூபர்ட் ஒன்றும் பேசாமல் கையை மட்டும் அசைத்துக்கொண்டு நின்றிருந்தார். ஒரே வினாடி ஒரு காகிதத்தைக் காட்டிக் கசக்கினார். அதில் “உள்வட்ட ஆலோசனைக்குழு” என்று எழுதியிருந்தது.
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.