அத்தியாயம் 13
டைசன் இரும்பு மேஜையில் கையை வைத்துப் பார்த்தான். ஜில்லென்றிருந்தது. இரண்டு மாடிகள் தரைமட்டத்தில் இருந்து கீழே வந்திருக்கிறோம். எந்த ஜன்னல் கதவையும் காணோம். காற்று முழுக்க முழுக்க உத்தரத்தில் இருக்கும் குளிர்சாதனப்பாதை வழியாகத்தான் வருகிறது போலிருக்கிறது.
நீண்ட நேரமாக இங்கே வைத்திருக்கிறார்கள். ஏன் கூட்டி வந்திருக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் ஒன்றும் புரியவில்லை.
ஒருவழியாக உள்ளே வந்த நபர் சீருடை அணிந்திருந்தார். அறிமுகம் எல்லாம் செய்துகொள்ளவில்லை. இவனைக் கவனிக்கக்கூட இல்லை. எதோ கையில் கொண்டுவந்திருந்த காகிதங்களை ஒழுங்குபடுத்தி வைத்தார். ஒன்றும் சொல்லாமலேயே வெளியேறியும் விட்டார்.
டைசன் அந்தக் காகிதங்களைப் பார்த்தான். தலைகீழாக இருந்தாலும் அவனுக்குப் படிப்பதில் எந்தச் சிரமமும் இல்லை. எத்தனை அரைகுறைச் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் படித்திருக்கிறான்!
டொரண்டோ பல்கலைக்கழகத்தின் பட்டச் சான்றிதழ் – டைசனுக்கு முதுகலை அகழ்வாராய்ச்சிக்காக வழங்கப்பட்டது. சில புகைப்படங்கள் – டைசன் நயாகரா அருவியின் முன் நிற்பது போல, ஸ்டோன்ஹெஞ்சஸ் கற்களை ஆராய்ச்சி செய்வது போல – இதென்ன எதோ ஒரு உயர அளவைக்காட்டும் பலகை முன்னால் இவன் முக, பக்கவாட்டுத் தோற்றங்கள்? இதுபோன்ற படத்தை ஏதாவது குற்றம் செய்து மாட்டிக் கைது செய்யும்போதுதானே எடுப்பார்கள்?
டைசனுக்குக் குழப்பம். அப்படி ஒரு சம்பவம் நடந்த நினைவே இல்லை.
கொஞ்ச நேரச் சிந்தனையில் தெளிவானான். இண்டெலிஜன்ஸ்காரர்கள் எதோ திட்டம் போட்டிருக்கிறார்கள். பேராசிரியர் சடகோபனை எதோ வழக்கில் அவரை மாட்டிவிட என்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்த எண்ணுகிறார்கள். அவருக்கும் அரசுக்கும் ஆகாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . இந்தப்படங்களை நான் பார்க்கவேண்டும் என்றே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் எண்ணம் பலிக்காது. எந்தக் குற்றம் சாட்டினாலும் அதை நானே செய்ததாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றாலும் செல்வேனே ஒழிய சடகோபனுக்கு எந்த ஊறும் நேர விடமாட்டேன்.
இன்னொரு படத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்ததை ஏதோ வீதியில் படம் எடுத்துப் போட்டிருந்தது. போட்டிருந்த உடை இப்போது போட்டிருக்கும் உடைதான். ஆனால் சைக்கிள்? எப்போது ஓட்டினேன்?
கதவு திறந்தது. “டைசன்..உங்களை விசாரணை செய்யும் அதிகாரி இன்று வரவில்லை. எனவே உங்களைக் காவலில் வைக்க உத்தரவு..”
“அதெப்படி? உங்கள் பிரச்சினைக்கு என்னைக் காவலில் வைக்க உங்களுக்கு யார் அனுமதி தந்தது? நான் உங்கள் நாட்டுக் குடிமகனே கிடையாது..”
“உங்கள் மேலுள்ள குற்றச்சாட்டே நீங்கள் உங்கள் அனுமதியை மீறி வெளியூர் சென்றதுதான். விஜயவாடா சென்றீர்கள் அல்லவா?”
விஜயவாடாவா? பெயர்கூட கேள்விப்பட்டதில்லை.
கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருந்த பல்வீர் “பொய் சொல்றான்” என்றார்.
கோபி “அவன் ஒண்ணுமே சொல்லலியே.”
“இல்லை.. அவன் பார்வைல ஒரு குழப்பம்தான் தெரியுது. விஜயவாடா என்ற ஊர்ப்பேரையே அவன் கேள்விப்பட்டதில்லைன்னு தோணுது. விஜயவாடான்னு சொன்னவுடன அவன் பார்வை ப்ளாங்கா ஆயிருச்சு கவனிச்சியா?”
“இத்தனை படம் இருக்கு சாட்சியா. சடகோபனும் அவனோட வந்ததை ஒத்துகிட்டார். அப்புறம் எப்படி அவன் விஜயவாடா போகலைன்றீங்க?”
“போகலைன்னு சொல்லலை. அவன் கேள்விப்பட்டதில்லைன்னுதான் சொல்றேன்.”
“மெமரி ஆல்ட்ரேஷன்?”
“ஆமா. முதல்ல இருந்தே இந்த டைசன் கேஸ் நம்மைக் குழப்பிக்கிட்டே இருக்கு. பதினைந்து பேருடைய மெமரி அனலைஸ் செஞ்சோமே, அதில் இவனையும் சேர்த்திருக்கணும். ஆனால் ரேண்டம் சாம்ப்ளிங்ல இவன் பேர் வரலை.”
“ஆனால் நாம செஞ்சு வச்சிருந்த மக் ஷாட்டைப் பார்த்தப்ப அவன் குழப்பம் நம்பறாப்பலதானே இருந்துது?”
“அது நம்ம தப்புதான். திருடனே அந்த மக் ஷாட்டைப் பாத்தாக்கூட, இந்த இடத்துல நாம மாட்டலையேன்னு குழம்பித்தான் போயிருப்பான். இவனோ ரிசர்ச் ஸ்டூடண்ட். இவனும் குழம்பிட்டான். ஆனால் இவனோட மெமரிஸைக் கொஞ்சம் குடாய்ஞ்சா எப்படியும் நேரக்குழப்பம் இருக்கும்னுதான் நினைக்கறேன்..”
கோபி யோசித்தான். “கோர்ட்ல கேட்டுப்பார்க்கலாமா?”
“பதினைஞ்சு பேருக்கே அவ்வளவு இழுத்தாங்க.. இது இன்னும் கஷ்டம். ட்ரை பண்ணிப் பாக்கலாம்.”
“எதாச்சும் ட்ரூத் சீரம் மாதிரி கொடுத்துப்பாக்கலாமா?”
“முடியாது. வெளிநாட்டுக்காரன். அது மட்டுமில்லாமல் பத்து மணிநேரத்துக்கு மேல இவனை வச்சுக்க முடியாது. ப்ரோட்டோகால்.”
“விசா மீறல்ன்னு பயமுறுத்தினீங்களே, அந்தக்கேஸை வச்சு இன்னும் பத்து மணி நேரம் இழுக்க முடியாதா?”
“நீயெல்லாம் இண்டெலிஜன்ஸ்ல வேலை பாக்கறே! அது சும்மா அவனைப் பயமுறுத்தச் சொன்னது. அதையெல்லாம் கோர்ட் ஒத்துக்குமா?”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஹூபர்ட்டின் காகிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று சரியாக இன்னொரு முறை பார்ப்பதற்கு முன் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. எதோ உள்வட்டம் என்றிருந்ததோ?
குறிப்பை ஒருமுறை பார்த்துக்கொண்ட பாவ்னா, “கௌஷிக்.. மூளைவழி மருந்துகள் மூலம் அறுபது வயது ஆட்களின் மனங்களை மாற்ற முடியுமா? ஹூபர்ட் அந்த ஐடியாதான் கொடுத்தார்.” அப்படித்தான் சொன்னாரா? கையில் இருந்த குறிப்புகளில் அப்படித்தான் இருந்தது. அப்படித்தான் சொல்லியிருப்பார்.
“நான் செய்வது மார்க்கெட்டிங் மட்டும்தான். மருந்து என்ன செய்யும், என்னவெல்லாம் செய்ய முடியும் – இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் போதை மருந்து பேட்ச் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்சம் மருந்து போட்டால் உலகமே மறந்துவிடுமாம்.”
“ஓ.. அப்போது அதைப் பற்றித் தெரிந்தவர்கள் யார் என்று சொல்ல முடியுமா? என்ன மருந்து, எப்படி அதைப் பெருமளவு மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது – இதையெல்லாம் ஆராய்ச்சி செய்து ஒரு அறிக்கை தயாரிக்கவேண்டும்..”
கௌஷிக் குறிப்பெடுத்துக்கொண்டான். “எவ்வளவு நாளில்?”
ரிச்சர்ட் குறுக்கிட்டு “நேற்றுக்குள். பிரவீண் அப்படித்தான் கேட்பார்..”
கௌஷிக் சிரித்து “பாவ்னா, நான் உனக்கு ஒருவரை அறிமுகம் செய்து வைக்கிறேன். அவள்தான் மருந்து விஷயங்களில் பெரிய விஷயஞானி. இப்போது அவளும் மார்க்கெட்டிங்கில் இறங்கிவிட்டாளே ஒழிய அவளைத்தவிர வேறு யாராலும் இதற்கு இவ்வளவு சீக்கிரமாக உதவ முடியாது..”
பாவ்னா ஆர்வத்துடன் “யாரது? டெல்லியில் இருக்கிறார்களா?”
“இல்லை. சென்னை. நான் அங்கேதான் நாளை போகப்போகிறேன். நீயும் வருகிறாயா?”
“நிச்சயம். அவர் பேரென்ன?”
“அஸ்வினி கோபிநாத்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அனந்தன் நாற்காலியில் சாய்ந்துகொண்டிருந்தார். கண்ணாடி நெற்றிக்கு மேலிருந்தது. கண்கள் மூடியிருந்தாலும் இரண்டு சொட்டுக் கண்ணீர் தாடைக்கு வழிந்துகொண்டிருந்தது.
அஸ்வினி அவரருகே இருந்த குட்டிமேஜையில் காபிக்கோப்பையை வைத்துவிட்டு அவரை லேசாகத் தட்டி “அப்பா, காபி குடிக்கறீங்களா?” என்றாள்.
திடுக்கிட்டவராக எழுந்து அனிச்சையாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டார். “நீயா.. கோபி இருந்தானே..”
“அவர் பாஸ் கூப்பிட்டார்ன்னு கிளம்பிப் போயிட்டார். நீங்க அப்செட்டா இருக்கறதாச் சொன்னார். என்னப்பா பண்றது?”
“உடம்புக்கு ஒண்ணும் இல்லைம்மா.. மனசுக்குதான்..”
“நான் எதாவது பேட்ச் போடட்டுமா? கொஞ்சம் நிம்மதியாத் தூங்கி எழுந்துக்கங்க, சரியாப்போயிரும்”
“இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து பார்க்கற இல்லை? ஒரு முறையாவது உன் மருந்தை எடுத்திருக்கேனா? அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் அழுதா ஒண்ணும் தப்பில்லை. கரைஞ்சு போயிடமாட்டேன்” அனந்தன் குற்ற உணர்ச்சியை மறைக்கக் கொஞ்சம் கோபத்தொனியிலேயே சொன்னார்.
அஸ்வினிவுக்கு அவர் கோபம் ஆச்சரியத்தைத் தந்தது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. “அம்மாவாப்பா?” என்றாள் மையமாக.
அனந்தன் பதில் சொல்லவில்லை. அந்தச் சபிக்கப்பட்ட நாளுக்கு முன் தினம் சடகோபன் வீட்டுக்கு வந்தது மனதில் கசந்தது.
“கோபி வாசல்ல விளையாடிக்கிட்டிருந்தான். அந்த ட்ரோன் நல்லவேளை கடைசி நாள்ல வாங்கிட்டோம். வீட்ல பிரசன்னாவும் எந்நேரமும் அதையே கட்டிக்கிட்டு அழறான்.” சிரித்துக்கொண்டே நுழைந்தார் சடகோபன்.
“பாத்துடா. என் பையன்னு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருக்கேன். மிஸ்யூஸ் பண்ணாதே.” அனந்தன் கணினியைப் பார்த்துக்கொண்டே சொன்னார்
திவ்யா கொடுத்த காபியைக் குடித்து “அபாரம். அனந்தன் அதிர்ஷ்டசாலி”
“ஆமாண்டா.. உனக்குத் தெரிஞ்சது அவ்ளதான்” சிரித்தார் அனந்தன்.
“நாளைக்கு ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் இருக்கு. மாமல்லபுரம் லாஜிஸ்டிக்ஸ் தொழிற்சாலைன்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்களே, அதுக்குப் பக்கத்துல.” சடகோபன் காபியைக் கீழே வைத்தார்.
“ஏண்டா உனக்கிந்த வேண்டாத வேலை? நாடு முன்னேறினாப் பிடிக்காதே உங்களுக்கு? தோண்டிகிட்டே இருக்காதீங்கடா, புதுசா உருவாக்குங்க”
“அப்படிச் சொல்லாதே.. நீ கான்சப்டை உருவாக்கிட்டு ஈஸி சேர்ல உக்காந்துருவே. அதை ஒழுங்கா உபயோகிக்கத் தெரியுமா இவங்களுக்கு? கொள்ளிக்கட்டையை வச்சு முதுகு சொறிவாங்க.. இந்த அரசியல்வாதிங்ககிட்ட டெலிபோர்ட்டிங் மாதிரி பெரிய பிரம்மாஸ்திரம் எல்லாம் கொடுத்துட்டா அதை வைச்சு ஓட்டு விளையாட்டுத்தான் விளையாடுவாங்க. பிரவீண் சொல்றது வேற செய்யறது வேற.”
“உனக்குத்தான் எல்லாம் தெரியுமாக்கும். எல்லாம் ஒழுங்காத்தான் நடக்குது. நேத்து காலை வரைக்கும் பதினைஞ்சு லட்சம் பேர் உலக அளவுல டெலிபோர்ட்டிங் செஞ்சிருக்காங்க. ஒரு பிரச்சினையும் வரலை. மெதட் எல்லாம் பர்ஃபெக்டா இருக்கு. ஜீரோ ப்ராப்ளம்ஸ். நீதான் ஒண்ணுமில்லாத பிரச்சினையை பூதாகாரமாக்கிக்கிட்டிருக்கே.”
திவ்யா பிரச்சினை வேறு திசை திரும்புவதை அறிந்து “வீட்ல எப்படி இருக்காங்க? கூட்டிகிட்டு வரதுதானே?” திசைமாற்ற முயன்றாள்.
அதைக் கவனிக்காத சடகோபன், “அனந்தா, எனக்கு வர தகவல்கள் வேற மாதிரி இருக்கு. பாம்பா பழுதான்னு சொல்ல முடியலை. இவங்க மேலே நம்பிக்கை இல்லை. இதை வேரோடு கிள்ளிடணும். பெரிசாயிட்டா நிறுத்த முடியாது..”
“அவ்ளோ பெரிய அரசாங்கத்தை எதிர்த்து உன்னால என்ன பண்ணிட முடியும்?”
“முடிஞ்ச அளவுக்குப் பண்ணுவோம்.. நான் தனி ஆளில்லை. நிறைய டெக்னிகல் ஆட்கள் இருக்காங்க. பெரிய சங்கிலிக்கும் பலவீனமான கண்ணி ஒண்ணு இருக்கும். அதைக் கண்டுபிடிச்சுட்டா போதும்”
“நீ பண்றது தீவிரவாதம். ஞாபகம் வச்சுக்க. மாட்டினா பரிதாபப்படக்கூட ஆளிருக்காது. ஏன், நான் கூட வக்கீல் வைக்க மாட்டேன்.”
“நீ இல்லன்னா என்ன.. திவ்யாவே வக்கீல்தானே. எனக்காக வரமாட்டியாம்மா?” சடகோபன் புன்னகைக்க திவ்யாவும் சிரித்தாள்.
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.