அத்தியாயம் 16
பாவ்னா டெல்லி அலுவலகத்தின் விடுதியின் மாடியில் இறங்கி லிஃப்ட் பிடித்தபோது போன காரியம் வெற்றியா தோல்வியா என்றே சந்தேகம் வந்துவிட்டிருந்தது. போன காரியம் என்று பார்த்தால் அஸ்வினியைச் சந்தித்து மூளை வழி மருந்துகளைப் பற்றி விவரம் அறிவது. அதில் ஓரளவுக்கு வெற்றிதான். ஆனால் அஸ்வினி விடாப்பிடியாக அனந்தனைச் சந்திக்க விடமாட்டேன் என்று சொன்னது தோல்விதான். அப்படி என்ன நடந்திருக்கும்?
அடுக்ககத்தில் முகம் காட்டிக் கதவைத் திறக்க வைத்து வீட்டுக்குள் நுழைந்தாள். விடுதிக் காப்பாளப் பெண்மணி புன்னகைத்தாள். ”எல்லாம் உள்ளே வைத்திருக்கிறேன். சாப்பாடு எத்தனை மணிக்கு?”
அறையில் இருந்த மின்சார அடுப்பில் காபி போட்டுக்கொண்டாள். குறிப்புகளை அடுக்கி வைத்துக்கொண்டாள். வேலை செய்யலாமா? என்ன சொல்வது ஜனாதிபதிக்கு?
பேய் மாதிரி கொஞ்சம் நேரம் வேலை செய்துகொண்டிருந்தபோதும் குழப்பம் விட்ட பாடில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திடீரென்று ஏன் இவ்வளவு மறதி வந்திருக்கிறது? ஹூபர்ட் ஏதோ காகிதத்தைக் காட்டினார் இல்லையா? அதில் என்ன எழுதியிருந்தது என்று எவ்வளவோ யோசித்தும் ஏன் நினைவில் நிற்கவில்லை?
ஹூபர்ட்டிடம் பேசிய குறிப்புகளை மீண்டும் பார்த்தாள். “ரிச்சர்டிடம் சம்பள உயர்வு கேள்” இப்படி எழுதிய ஞாபகமே இல்லையே. சம்பளத்தில் பெரிய அளவு வருத்தமெல்லாம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை ஏன் ஹூபர்ட்டிடம் பேசும்போது எழுதப்போகிறேன். கையெழுத்திலும் கொஞ்சம் வித்தியாசம் தென்பட்டது.
பாவ்னாவுக்கு யோசிக்க யோசிக்க குழப்பம்தான் அதிகமானது . ஒருவேளை அப்படியும் இருக்குமோ? ஏன் இருக்கக்கூடாது? கௌஷிக்கைக் கேட்கலாமா? நேரில் போய்ப் பேசிவிடலாம். அழைப்பெல்லாம் வேலைக்காகாது. என் சந்தேகம் உண்மையென்றால் அழைப்புகளும் கண்காணிக்கப்படலாம்.
கௌஷிக்கை அழைத்து அலுவலகத்துக்கு வெளியே இருக்கும் பூங்காவுக்கு வரச்சொன்னாள். அங்கேயும் காமெராக்கள் இருக்கலாம்தான். ஆனால் குரல் பதிவுக்கு வாய்ப்பு குறைவு. கௌஷிக்கையாவது நம்பலாமா? வேறு வழியில்லை. யாரையாவது நம்பித்தான் ஆகவேண்டும். விஷயம் தெரிந்தவர்களே குறைவு, அதிலும் உள்ளூரில் இருப்பவர்களில் இவரை விட்டால் என் சந்தேகங்களுக்குப் பதில் சொல்ல ஆளில்லை.
கௌஷிக் சொன்னது போலவே பூங்காவின் வாசலில் காத்துக்கொண்டிருந்தான். “என்ன இவ்வளவு மர்மமாக நடந்துகொள்கிறாய்?”
“மர்மம் எல்லாம் ஒன்றும் இல்லை. நடந்துகொண்டே பேசலாமா?” பாவ்னா வீட்டில் இருந்து ஒத்திகை பார்த்தது போலவே வேறோரு ஆளுக்கு நடந்ததாக இந்த மறதி விஷயத்தைச் சொன்னாள்.
கௌஷிக் எல்லாவற்றையும் குறுக்கிடாமல் கேட்டவன், “இந்த நாற்காலியில் அமரலாம்” என்று பூங்காவின் நட்ட நடுவில் நீரூற்றுக்கு அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினான். பாவ்னாவின் புருவம் உயர்த்தலுக்கு “எனக்கு இந்தப் பூங்காவில் எங்கெங்கு ஒலிப்பதிவுச் சாதனங்கள் இருக்கின்றன என்று தெரியும். இந்த இடத்தில் பேசினால் நீரூற்றின் சத்தத்தில் குரல் ஒழுங்காகப் பதியாது” என்று பதில் சொன்னான்.
பாவ்னாவுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இவனுக்கு நான் சொன்ன கதை கற்பனையாகத் தோன்றவில்லை. உதவ நினைக்கிறான்.
அமர்ந்ததும் “முதலில் வேறு ஆளைக் கதையில் இருந்து அனுப்பி விடலாம். நீதானே அது?” என்று அதிரவைத்தான்.
“இல்லை..” என்று தொடங்கிய பாவ்னாவைக் கையமர்த்தி, ”நீ ஹூபர்ட்டிடம் பேசியது, அவர் ஒரு துண்டுச்சீட்டு காட்டியது – இதெல்லாம் நடந்தபோது நானும் அங்கிருந்தேன் என்பதை மறந்துவிட்டாயா?”
பாவ்னா வாயடைத்துப் போனாள். “சரி விடு..” தொடர்ந்த கௌஷிக், “நீ சொல்வதெல்லாம் நடக்கக்கூடியவைதான். ஆனால் சுலபமாக அல்ல.”
“மூளைவழி மருத்துவமா?”
“அதற்கெல்லாம் இந்த அளவுக்குச் சக்தி கிடையாது. சின்னச் சின்னக் கட்டளைகளைத்தான் பார்மா கம்பெனிக்காரர்கள் பிரயோகிப்பார்கள். இது ஒரு குறியீட்டு வார்த்தை சம்பந்தப்பட்டது என்று தோன்றுகிறது. உன் மூளையில், எண்ணங்களில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையைத் தேடி, அது சம்பந்தப்பட்ட நினைவுகளை மட்டும் அழிப்பது. இந்த அளவுக்குத் துல்லியமான சிகிச்சை, வேறு யாருக்கும் சாத்தியமில்லை..”
“யாருக்குச் சாத்தியம்?”
“இதைச் செயல்படுத்த அசாத்திய வேகம் கொண்ட கணினிகளும், தேடுபொறிகளும் வேண்டும். இந்த அளவுக்குச் செயல்படுத்த ஒரே ஓர் ஆளிடம்தான் சக்தி இருக்கிறது..”
பாவ்னா காத்திருந்தாள்.
“உன் ஃப்ரெண்டுதான். பிரவீண் குமார் பாரத்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
திரையில் பெரியதாகச் சென்னையின் வரைபடம் காட்டிக்கொண்டிருந்தது. ஒரு சிவப்புப்புள்ளி மெதுவாக நகர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் கோபியும் பல்வீரும்.
“இதையே எவ்ளோ நேரம்தான் பார்த்துகிட்டிருக்கிறது? இதால எதாச்சும் யூஸ் இருக்கான்னுகூட்த் தெரியலை.”
“என்ன செய்யறது கோபி.. நீயும்தானே கேட்டுக்கிட்டிருந்தே? இவ்வளவுதான் கொடுப்பேன்னு சொல்லிட்டாங்க. பவர்ஸ் தட் பீ!” பல்வீர் காபியை உறிஞ்சினார்.
“அதைச் சொல்லலை. சில கமாண்ட்ஸ் கொடுத்துரலாம்.. ஒரே இடத்துல 5 நிமிஷத்துக்கு மேல நின்னா வார்னிங் தரா மாதிரி. அந்த நேரத்துல நாம வேற வேலையைக் கவனிக்கலாமில்ல?” பதிலுக்குக் காத்திராமல் சில பொத்தான்களை அமுக்கினான்.
“ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன். இந்த டைசனைத் துரத்தறதுக்கு முக்கியமான காரணம் என்ன?” கோபி அதைப்பார்த்துக்கொண்டே கேட்டான்.
“சரிதான். அதுகூடத் தெரியாமயா சிவப்புப்புள்ளியைத் துரத்திக் கிட்டிருக்கே?”
“அட.. கேள்விய அப்படி ஆரம்பிச்சேன். அவனும் அவன் ப்ரொபஸர் சடகோபனும் விலங்குப்பண்ணைக்குப் போனாங்கன்னுதானே டவுட் ஆரம்பிச்சுது? அதே நேரத்துல அதே இடத்துல ஒரு ட்ரோன்.. அதுவும் சுலபமாக் கிடைக்காத ஒரு ட்ரோன் பறந்த்து.. அதானே ஆரம்பம்?”
“ஆமாம். நம்ம லைன்ல முக்கியமான வாசகம் என்ன? Don’t believe in coincidences.”
“நம் விசாரணையில பெரிசா ஒண்ணும் மாட்டலை. அவங்க பேசினது, வாக்குமூலம் இதுலயும் டவுட் வரத்துக்கு மேட்டர் இல்லை. உங்க கட் ஃபீலிங் மட்டும்தான்..”
பல்வீர் யோசித்தார். “கட் ஃபீலிங்தான். ஆனா அதை அப்படியே விட்டுட்டுப் போக முடியலை கோபி. டைசன் ஒண்ணு ரெண்டு கேள்விக்கு முழிச்சான், அது நார்மல் விஷயம்தான். ஆனா அவன் முழி.. அந்த வார்த்தையையே கேள்விப் பட்ட்தில்லைன்றாப்போல. அதை அப்படியே விட்டுட்டுப் போக என்னல முடியலை. சம்திங் வெரி ஸ்ட்ரேஞ்ச்.” பெருமூச்சு விட்டார். “ஒரு செகண்ட். அவன் மெமரியை அனலைஸ் பண்ணியிருந்தா க்ளீனாக் கண்டுபிடிச்சிட்டிருக்கலாம். அரசாங்க இயந்திரம்!” அவர் குரலில் ஒரு இயலாமை தெரிந்தது.
“சரி, அவனை இப்ப ஃபாலோ பண்ணிகிட்டிருக்கோம். என்ன மாதிரி ஆதாரம் கிடைச்சா பிடிப்போம்? என்ன எதிர்பார்க்கிறோம்?”
“தெரியலை. இப்பத்திக்குத் தொடர்றோம். அவ்ளோதான்.”
கோபி எதோ தயங்குவது போலிருந்தது. “சொல்லு கோபி. எதைக் கேட்கத் தயங்கறே?”
“நம் சந்தேகம் என்ன? டைசன்றவன் வெடிமருந்து எக்ஸ்பர்ட். கனடாவில் இருந்து வந்தான். அவனை இங்கைக்குக் கொண்டு வர இரண்டு வகைல வேலை செஞ்சிருக்காங்க. வேறு ஒரு ஸ்டூடண்டோட நினைவுகளை அவன் மேல் ஏத்திட்டுக் கொண்டுவந்திருக்காங்க. இங்க அவனை வச்சு எதோ தீவிரமான திட்டம் ஓடுது. இதானே திரைக்கதை?”
“ஏறத்தாழ இப்படித்தான் எனக்குத் தோணுது”
“எனக்கு அடியாரம்பத்தில ஒரு சந்தேகம். எக்ஸ்ப்ளோஸிவ் எக்ஸ்பர்ட்டோட வித்தை, மெமரி, எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் வேறு வழில வந்துட்டா, எதாச்சும் ஒரு சப்பை ஆசாமிக்கு அந்த மெமரியை ஏத்தி எக்ஸ்பர்ட் ஆக்கிரலாம் இல்ல? எதுக்கு தலையைச் சுத்தி மூக்கைத் தொடணும்?”
”சிம்பிள். எக்ஸ்ப்ளோஸிவ் எக்ஸ்பர்ட் கத்துக்கிட்ட அத்தனை விஷயம் அவனோட உடம்போட அளவுகளோட கனெக்ட் ஆயிருக்கு. கையத் தூக்க எவ்ளோ சக்தி கொடுக்கணும், எழுந்துக்க எவ்ளோ ரத்தத்தைக் காலுக்கு அனுப்பணும், ஓடறது எப்படி, பாயறது எப்படி.. எல்லாம் அவன் உடம்போட சைஸ், வெயிட் – இதோட சம்பந்தப்பட்ட்து. அவன் உடம்பு வேற மாதிரியும் நினைவு வேற மாதிரியும் இருந்தா அவனால செயல்பட முடியாது. அக்யூரேட்டா இருக்கணும்.”
“இவங்க எப்படியோ நினைவுகளை அரசாங்கத் தயவின்றி ஊர விட்டு ஊர் கடத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால் உடல்களை மாத்த முடியாதே? அதுக்கு ஸ்பெஷல் கம்ப்யூட்டர்கள், எலும்பு சதையை கார்ட்ரிட்ஜ்கள், பிரிண்ட் பண்ண 3டி பிரிண்டர் எல்லாம் தேவை.. இல்லையா?”
கோபிக்குக் கொஞ்சம் புரிந்தது. கணினி எச்சரிக்கை தர “டைசன் என் வீட்டு வாசல்ல என்ன பண்ணிகிட்டிருக்கான்?” அதிர்ச்சியுடன் வரைபடத்தைப் பெரிதாக்கினான்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அஷோக் சடகோபனை வரவேற்றார். “வருவதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே தவிர தரிசனம் கிடைக்க இவ்வளவு நாள் ஆகிவிட்டது..”
வரவேற்பறை மிகப்பெரியதாக இருந்தது. கண்ணாடிப்பேழைக்குள் ஒரு சுரங்கத்தின் சுருக்கம் தெரிந்தது. “மாமலையும் ஓர் கடுகாம்” என்று எழுதியிருந்தது. சடகோபன் சிரித்தார். “பேனைப் பெருமாளாக்குவதற்கு எதிர்ப்பதமா இது?”
அஷோக்கும் சிரித்தார். “இல்லை. ஆங்கிலம். Making mountains out of molehills என்பார்களே, அதற்கு எதிர்.”
“என்ன ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறீர்கள் அஷோக்?”
“எங்கே.. பழைய மாதிரி ஒன்றும் முடிவதில்லை. எல்லாம் செய்து வைத்த ஆராய்ச்சிகளின் மேம்படுத்தல்களைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்..”
“என் மாணவன் வந்தானா?” காபி வரும்வரை கஷ்டப்பட்டு அடக்கிவைத்திருந்த கேள்வியைக் கேட்டார் சடகோபன்.
“இல்லையே.. வருவான் என்று சொன்னீர்கள். ஆனால் யாரும் வரவில்லையே.”
எங்கேதான் போயிருப்பான்? இண்டெலிஜன்ஸ் ஆட்கள் அவனை விடவில்லை என்பதுதான் பொருத்தமான விடையாகத் தோன்றியது.
மௌனம் நீண்டுகொண்டு போனதை உணர்ந்த அஷோக், “சொல்லுங்கள்.. என் நினைவு எப்படி வந்தது?”
சடகோபன் மெதுவாக ஆரம்பித்தார். “ஒரு நான்கு அங்குலம் தடிமனுள்ள கம்பியை உடைக்கவேண்டும். வெடிமருந்து போட்டால் வேலைக்காகுமா?”
அஷோக் அதிர்ச்சியாகிவிட்டார். “என்ன சடகோபன்? கிருஷ்ண தேவ ராயர் காலத்துக்குப் போகவேண்டிய ஆள் சுரங்கம் பக்கம் போகிறீர்கள்? உங்களுக்கு எதற்கு இந்த வெடிமருந்து வேலை எல்லாம்?”
“ஆராய்ச்சி எல்லாம் விட்டுப் பலகாலம் ஆகிவிட்டது அஷோக். சரியாகச் சொல்லப்போனால் பதினெட்டு வருடங்கள். உங்களுக்கு என் மகன் நினைவிருக்கிறதா?” சடாரென எங்கிருந்தோ எங்கோ போன இந்தப் பேச்சின் மாற்றத்தை அஷோக் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவர் முகம் சொன்னது. உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. மேஜையில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடித்தார்.
குடித்துவிட்டு, “ஓ.. நினைவிருக்கிறதே பிரசன்னாதானே பெயர்?”
“நல்ல நினைவாற்றல் அஷோக் உங்களுக்கு. உங்கள் மகள் அபிதா, பிரசன்னா, அந்த அனந்தன் மகன் கோபி – அந்தக்காலத்தில் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள்? “சடகோபன் கண்களில் லேசாக ஈரம் தெரிந்தது.
“ஆம்.. அபிதா ஊருக்குப் போவதற்கு முன்..”
ஊருக்குப் போயிருக்கிறாளா? சரிதான். இவர் எல்லாவற்றையும் மறந்தே விட்டிருக்கிறார். “இன்னொரு கேள்வி அஷோக்.. நீங்கள் கடைசியாக எப்போது டெலிபோர்ட்டிங் உபயோகித்தீர்கள்?”
“இப்போதெல்லாம் பயணத்துக்கு என்ன தேவை இருக்கிறது? ஏழெட்டு வருடம் முன்னாடிவரை வாரம் இருமுறை சுற்றிக்கொண்டே இருப்பேன். “
சடகோபன் உஷாரானார். அப்போது பல மூளைச்சலவைகள் நடந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வழிக்குக் கொண்டு வர வேண்டும்.
“அபிதாவுடன் கடைசியாக எப்போது பேசினீர்கள்?” இப்படிப்போய்ப் பார்க்கலாம்.
“எங்கே? எப்போது கேட்டாலும் எதாவது வேலை என்கிறாள். முகத்தைக் காட்டுவதே இல்லை. குழந்தைகள் எப்போதும் தொந்தரவு செய்வதாக அலுத்துக்கொள்வாள்.”
“பேரக்குழந்தைகளையாவது பார்த்தீர்களா? எப்போதாவது ஒருமுறையாவது?”
அஷோக் எதோ கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டவர் போல அதிர்ச்சியானார். “இல்லை!” முகம் கறுத்தது.
“உங்கள் மகளைப்பார்த்து பதினெட்டு வருடமாகிறது. மருமகன் கையைக் குலுக்கியதில்லை. பேரப்பிள்ளைகளைப் பார்த்ததே இல்லை. இது உங்களுக்கு விசித்திரமாகக்கூடத் தோன்றவில்லை?”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“உங்கள் மகள் அபிதா இப்போது உயிருடன் இல்லை. கணினிக்கோப்பாக உங்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறாள் என்கிறேன்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
“என்ன சொல்றே கோபி? நம்ம வீட்டு வாசல்லயா?” அஸ்வினியின் குரலில் பயம் தெரிந்தது.
“பயப்படாதே.. நான் ஆளை அனுப்பறேன். நீ கொஞ்சம் வெளியே வந்து சுற்றிப்பார். இப்ப மட்டும் அவன் மாட்டினான்னா எப்படி வேணும்னாலும் விசாரிக்கலாம்.” கோபி அஸ்வினியின் பயத்தைச் சட்டையே செய்யவில்லை. உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
அஸ்வினி வீட்டுக்கு வெளியே வந்தாள். வீடு பிரம்மாண்டமாகத் தெரிந்தது. தீவிரவாதியைத் தேடி, இவ்வளவு பெரிய வீட்டைச் சுற்றிவரச் சொல்கிறான். வேறு வேலை இல்லையா எனக்கு? அனந்தனின் பழைய கார் வீட்டுக்கு உள்ளே தூரத்தில் தெரிந்தது. யாரும் ஆட்கள் கண்ணில் படவில்லை. சுலபத்தில் எகிறிக்குதிக்க முடியாத உயரமான சுற்றுச்சுவர். உள்ளும் புறமும் விதவிதமான மரங்கள். இந்த மரங்களுக்கு நடுவே எவனாவது மறைந்துகொண்டிருந்தால் என்ன செய்வது? கேட்டுவிட்டாள் போல.
“அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. உன்னையே ரெண்டு காமரா போகஸ் பண்ணிகிட்டிருக்கு.” என்றான் கோபி.
”அப்ப கேமராவிலேயே பார்த்துக்கவேண்டியதுதானே? நான் ஏன் போகணும்?” அஸ்வினி அலுத்துக்கொண்டே சுற்றினாள்.
“கேமராவால புதருக்கு உள்ளே எல்லாம் க்ளியராபார்க்கமுடியலை.. சும்மாவா சொல்லப்போறேன்?”
ஒருவழியாக ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தாள். “ஒருத்தருமே கண்ல படலையே..”
“கேட் ஸ்பீக்கர்க்கு கீழே என்ன இருக்கு பாரு.. பச்சைக்கலர்லே” கோபி மீண்டும் விரட்டினான்.
அஸ்வினி போய்ப்பார்த்தாள்.. “எதோ கிழிஞ்ச சட்டை..” என்றாள். தூக்கி வீசினாள்.
கோபியின் கணினித்திரை சிவப்புப்புள்ளி அதனுடன் சேர்ந்து பறந்தது.
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.