அத்தியாயம் 17
பிரஜாபதி தன் அறையின் ஓரத்தில் நடந்துகொண்டிருந்தார். அறை விசாலமாக, குளுமைப்படுத்தப்பட்டு இருந்தது. ஆலமரம் ஒன்று அறைக்குள் குறுகி விழுது பரப்பிக்கொண்டிருந்து. வண்ண வண்ணப்பூக்கள் செடிகளில் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு பகட்டைக் காட்டிக்கொண்டிருந்தன. அறையின் ஒரு பக்கம் முழு நீள அகலமும் அடைத்த கண்ணாடி ஜன்னல் சாலையைக் காட்டியது. ஒன்றிரண்டு மின்வண்டிகள் மட்டும் ஓடிக்கொண்டிருக்க சில கிழவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். தூரத்தில் இந்தியப்பாராளுமன்றம் மரங்களுக்கிடையில் தெரிந்தது.
”கண்டுபிடித்துவிடுவோம் ஜனாதிபதி அவர்களே. எங்கே போய்விடப்போகிறான்” குரலின் தொனியில் நெருக்கம் தெரிந்தாலும் மரியாதையும் இருந்தது. கையில் எந்தக் கருவியும் இல்லாவிட்டாலும் தொலைபேசிக்கொண்டிருந்தார் என்பதை உணர முடிந்தது. “அவன் ரொம்பதூரம் போய்விட்டிருக்க முடியாது. இண்டெலிஜென்ஸ் அதிகாரிகள்தான் அவன் உடலில் பொருத்தியிருந்த இடம்காட்டியைக் கண்காணித்துக் கொண்டு இருந்தார்கள்.”
கோபத்தில் அவர் நடையின் வேகம் அதிகரித்தது. போன்சாய் மரங்களைத் தள்ளிவிடும் அளவுக்கு அருகில் சென்று விலகிக்கொண்டு நடையை விடாமல் தொடர்ந்தார்.
“சடகோபனுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன், அவரை வளர விடவேண்டாம் என்று. நீங்கள்தான் சட்டப்படி என்ன செய்யமுடியுமோ அது போதும், வேறெதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள்.”
எதிர்முனை பேசியதை அமைதியாகக் கேட்டாலும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
”நான் அந்த அதிகாரிகளைக் கேட்கிறேன். கேட்டுவிட்டு உங்களுக்கும் சொல்கிறேன்.”
”கவலைப்படாதீர்கள். திட்டமிட்டபடி ஆகஸ்ட் பதினைந்தில் புதிய மருத்துவத்திட்டத்தை அமல்படுத்திவிடலாம். இதனால் எல்லாம் அதற்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது.”
”வாழ்க பாரத்” அவசரமாக அழைப்பை முடித்துவிட்டு “சக்ஸேனாவை அழை” என்று அறைக்கணினிக்கு ஆணையிட்டார்.
“பிரவீணிடம்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எல்லாப் பழியையும் நம் மீது போடுகிறார். ஆனால் அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நாம்தானே பொறுப்பு”
திரையில் சக்ஸேனா முகத்தைத் துடைத்துக்கொண்டிருந்தார்.
“நாம் எப்படிப் பொறுப்பாக முடியும்? நமக்கே இந்த டைசன் பற்றிச் சமீபத்தில்தானே தெரியும்?”
”இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னால் விட்டுப்போன சில சில்லறைச் செடிகள் மரங்களாகி இருக்கின்றன. அவற்றை வெட்டுவதும்தான் நம் வேலையின் பகுதி. இல்லையென்று சொல்லமுடியுமா?”
“முளையிலேயே கிள்ளியிருக்கவேண்டியவற்றை வளரவிட்டது யார் தவறு பிரஜாபதி? எத்தனை முறை எடுத்துச் சொன்னோம்? கேட்டாரா உங்கள் ஆள்?”
பிரஜாபதி பெருமூச்சு விட்டார். “நானும் கேட்டேன். அரசியல் முடிவு என்கிறார். அவருக்குத் தெரிந்த அரசியல் அறிவியல் நமக்குத் தெரியாதா என்ன? போகட்டும். அவருக்கும் ஒன்றிரண்டு முடிவுகளை விட்டுவைப்போம் என்று விட்டோம்.” என்றவர், ”காலம் கடந்தாலும் ஆகஸ்ட் பதினைந்து அன்று நாம் சொன்னதுதானே நடக்கப்போகிறது?”
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தனர். “சரி. அந்த கோபி வீட்டு வாசலில்தானே கடைசியாக இருந்தான்? அவனை விசாரிக்கலாமா?”
”கோபி வீட்டு வாசலா? சரிதான்.. உங்களுக்கு விஷயமே தெரியாதா? இல்லை தோன்றவில்லையா? அது கோபி வீடு மட்டுமல்ல. அனந்தன் வீடும்தான். அனந்தனின் மகன்தானே இந்த கோபி..”
பிரஜாபதி சடாலென்று நடையை நிறுத்தினார். “விஷயம் விபரீதமாகிறது..”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அஷோக் தலையை வேக வேகமாக ஆட்டினார். “சடகோபன்.. உளறாதீர்கள். நான் என்ன முட்டாளா? அபிதா உயிரோடுதான் இருக்கிறாள்.”
“பிரசன்னாவும் உயிரோடுதான் இருக்கிறான் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன், போன ஆண்டுவரை. இப்போது உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிறது. ஆனால் பாருங்கள்” சடகோபன் தன் கையை உயர்த்திக்காட்டினார். “இன்னும் நடுக்கம் குறையவில்லை.”
”இதெப்படி சாத்தியம்?” அஷோக் கலக்கம் குறையாத குரலிலேயே கேட்டார்.
“நினைவுகளை மென்பொருளாக்கிவிட்டால் சாத்தியக்கூறுகளுக்கு அளவே கிடையாது. ”
“நீங்கள் சொல்வது புரியவில்லை..”
சடகோபன் தண்ணீரைக் குடித்தார். வார்த்தைகளை அமைப்பது போல யோசித்துக்கொண்டிருந்தார். ஒரு முடிவுக்கு வந்தவராகச் சொல்ல ஆரம்பித்தார். “எனக்கும் புரியவில்லை. அனந்தன் மனைவிக்கு நடந்த நிகழ்வு ஞாபகம் இருக்கிறதா?”
அஷோக் யோசித்தார். ஏதோ நினைவடுக்குகளின் கீழே காணாமல் போயிருந்த சுவடுகளாக இருந்த தகவல்.. “உங்களை அதற்காகக் கைது செய்தார்கள் இல்லையா?”
“ஆமாம். கொஞ்சநாள் சிறையில்கூட இருந்தேன். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாததால் விட்டுவிட்டார்கள்.”
சடகோபன் கதை சொல்லத் தொடங்கினார். “திவ்யா அனந்தனுக்கு ஏற்றவளே இல்லை. கேவலம் தற்செயலோ விதியோ அனந்தனோடு அவளைச் சேர்த்து வைத்துவிட்டது. இப்போது சொல்வதில் என்ன? அவளை நான் கடைசி நொடி வரை விரும்பினேன். ஏன்.. இன்னும்கூட காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்..”
அஷோக்குக்கு ஏதோ போலாகிவிட்டது. அனந்தன் ஒன்றும் நெருக்கமான நண்பர் இல்லைதான். ஆனாலும் அவர் மனைவியை இன்றும் காதலிப்பதாக இன்னொருவர் சொல்வதை ஏற்பதில் ஒரு தார்மிகச் சிக்கல் இருப்பதாகத் தோன்றியது.
சடகோபன் அஷோக்கைக் கவனிக்கவே இல்லை. “அவளை நான் கொன்றிருப்பேன் என்று சந்தேகப்பட்டது போல அநியாயம் உலகத்தில் கிடையாது. புகார் அளித்து, கைது செய்து..”
குரல் திடுமென ஒலி கூடி “மன்னிப்பு.. மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?” யாருக்கோ பதில் சொல்பவர் போலச் சொன்னார்.
“ஒரு மாதம். ஜெயிலில் இருந்து வீட்டுக்குத் திரும்பினால் மகன் இல்லை. திடீரெனக் கிளம்பி வெளிநாடு போய்விட்டதாக தகவல். தொடர்புக்கு ஓர் எண். அவ்வளவுதான். தொடர்பு கொள்ளும்போதெல்லாம் உருவத்தைக் காட்டாமல் கொஞ்சம் நாள் பேசிக்கொண்டிருந்தான். மோசமான கணினி வேலை. ஆனால் அதைக் கேள்விகேட்கக்கூடத் தோன்றவில்லை. கோபம் இல்லை, வருத்தம் இல்லை. துக்கமோ துயரமோ எதுவும் இல்லை.” இப்போதுதான் அஷோக்கைக் கவனித்து ”உங்கள் அபிதா போலவேதான்.”
பேசிக்கொண்டிருந்த சடகோபன் அமைதியானார். திடீரென வெறிச்சிட்டுப் பார்த்தார். அஷோக்கின் அழைப்புக்கு எந்தப்பதிலும் சொல்லவில்லை. அஷோக் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தார்.
ஒரு நிமிடம் கடந்ததும் சடகோபன் அமைதியாக “நான் உங்களுக்கு இனிமேல் ஒன்றும் சொல்லப்போவதில்லை. எல்லாம் உங்களுக்கே புரியும்..” வலது கையில் ஒரு சின்னஞ்சிறிய ஊசி வைத்திருந்தார். “கொஞ்சம் இங்கே வாருங்கள்.” அந்தச் ஊசியை அஷோக்கின் விரல்நுனியில் செலுத்தினார். என்ன செய்கிறார் என்று உணரும் முன்னே ஊசியைச் செலுத்திவிட்ட்தால் அவரால் தடுக்கக்கூட முடியவில்லை. அஷோக்குக்கு வலிக்கக்கூட இல்லை.
அஷோக் ஒரு நிமிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வெறிச்சிட்டுப்பார்த்தார்.
சடகோபன்,”இப்போது எல்லாம் உங்களுக்குப் புரிந்திருக்குமே?” என்றார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கோபி புதருக்குள் இறங்கினான். பார்ப்பதற்குச் சொத சொதவென்று தெரிந்தாலும் சேறு இல்லை. காய்ந்து பட்டை வெடித்திருந்த நிலம். ஷூவைத் துளைத்து உள்ளே நுழைந்த முள்ளை அலட்சியப் படுத்தி முன்னேறினான்.
வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார் பல்வீர். “எதாவது ஹெல்ப் வேணுமா கோபி? நானும் வரட்டுமா?”
“தேவையில்லை பல்வீர்.. என்மனைவி எவ்வளவு ஸ்ட்ராங் பாருங்க.. சட்டையை எவ்வளவு தூரம் வீசி எறிஞ்சிருக்கா!?” தூரத்தில் இருந்து தெரிய வாய்ப்பே இல்லை. முள் செடிக்கும் சட்டை நிறத்துக்கும் அப்படியொரு ஒற்றுமை. சட்டை முள்ளில் இரண்டு மூன்று இடங்களில் ஆழப்பதிந்திருந்தது. மிகப் பொறுமையாக சிடுக்கெடுத்தான்.
பல்வீர் கையில் வைத்திருந்த கணினி சட்டையைத் தூக்கி வந்துகொண்டிருந்த கோபியின் அசைவைக் காட்டியது.
அருகே வந்துவிட்ட கோபி “எனக்கு ஒரு கேள்வி பல்வீர்..”
“எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு..” என்றார் பல்வீர்.
“நான் கேள்வியே இன்னும் கேட்கலை.”
“ஆனால் உன் கேள்வி என்னவா இருக்கும்ன்னு தெரியும். கேவலம் சுலபமாக் கழட்டி வீசிடற மாதிரி சட்டையிலா லொகேட்டரை வைப்பாங்க – இதானே? ”
“அதேதான்.. ஒரு ஊசி போட்டால் எப்படியும் கழட்ட முடியாம ரத்தத்துக்குள்ளயே அனுப்பற மாதிரி நானோ லொகெட்டர்ஸ் எல்லாம் இருக்கறப்ப சட்டையில போய் ஏன்?”
“அப்படித்தான்யா அனுப்பினோம். எப்படி சட்டைக்கு மாறிச்சுன்றதுதான் என்னைப்போட்டுக் குடைஞ்சுகிட்டிருக்கு..”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
டைசன் விழித்தபோது சட்டையில்லாமல் முட்டிபோட்டு நின்றுகொண்டிருந்தான். கையில் ஓரிடத்தில் சிறு ரத்தத்துளி. கட்டப்படவில்லைதான். இருந்தாலும் கைகளைக் கட்டியது போலவே தூக்கி வைத்துக்கொண்டிருந்தான். அசைக்க முயன்றான். முடியவில்லை.
எங்கிருக்கிறோம் என்பதைச் சுற்றுமுற்றும் பார்த்தான். சாம்பல்நிறச் சுவர். நான்குபக்கமும். உத்தரம் மிகக் கீழே இருந்தது. நின்றால் நிச்சயம் தலை இடிக்கும். ஒருபக்கம் முழுக்க இரும்புக்கதவு மாதிரி இருந்தது. திறக்கும் மின்விசை மேலே இருந்தது. கையால் திறக்க முடியாது. எதோ வாகனம் நிறுத்துமிடம் போல. எங்கே வந்திருக்கிறோம்? யார் பிடித்து வைத்திருக்கிறார்கள்? சடகோபன் எங்கே?
திடீரென ஒரு குரல் மட்டும் கேட்டது. “கைகளை அசைக்கலாம் டைசன்..” எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் அறையின் அத்தனை பக்கங்களிலும் இருந்து வந்தது போன்று எதிரொலித்த குரல். இதற்குமுன் கேட்டிராத குரல்.
கைகளை அசைக்க முடிந்தது. எழுந்து நிற்க முடிந்தது. எந்தக் கட்டும் இல்லாமல் எப்படி இவ்வளவு நேரம் அசையாமல் இருந்தோம்?
“மூளை வழிக் கட்டளைகள். தூங்க வைக்க மருந்து விழிக்க வைக்க மருந்து என்று இருக்கும்போது கைகளைக் கட்டவைக்க முடியாதா?” குரல் பதில் அளித்தது. கேள்வியைக் கேட்கவே இல்லை. சரியான பதில் வருகிறது.
”நீ முழுமையாக என் கட்டுப்பாட்டில் இருக்கிறாய். இருந்தாலும் ஒரு சிறு பரிசோதனை. டைசன், நீ யார்?”
“நான் ஒரு அகழ்வாராய்ச்சி மாணவன். பேரசிரியர் சடகோபனுடன் இணைந்து ஆராய்ச்சி செய்வதற்காக கனடாவில் இருந்து வந்திருக்கிறேன்.”
க்ளிக் என்று ஒரு சத்தம் கேட்டது. வெளியேவா மூளைக்கு உள்ளேயா?
“டைசன், நீ யார்?”
“நான் ஒரு வெடிமருந்து நிபுணன். பேராசிரியர் சடகோபன் என்னை கனடாவில் இருந்து வரவழைத்திருக்கிறார்.”
குரல் சிரித்தது. “இரண்டு நினைவுகளும் இருக்கின்றன. இப்போது ஒரு நொடியில் நீ யாராக வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம். ஒரே ஒரு திருத்தம்..”
”என்ன?”
“உன்னை வரவழைத்தது சடகோபன் தான். ஆனால் சடகோபனை வைத்து உன்னை வரவழைத்தது நான் தான்.”
”நீங்கள்… யார்?”
“முடிவில்லாதவன். அறிவியல். சுயலாபத்துக்காக என் அறிவை உபயோகித்த முட்டாள் அரசியல்வாதிகளை அழிக்க மீண்டும் அறிவாய் அவதரித்திருக்கும் சிவம்.”
கதவு திறந்தது. அனந்தன் சிரித்தார்.
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.