அத்தியாயம் 18
கௌஷிக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள் பாவ்னா. பேச இரண்டு மூன்று முறை முயற்சி செய்து வாயில் இருந்து வார்த்தை வெளிவருவதற்கு முன்பாகவே அழித்துக்கொண்டிருந்தாள்.
”ஜனாதிபதிக்கு அந்த சக்தி இருக்கிறது என்று சொன்னேனே ஒழிய, அவர் செய்திருப்பார் என்று சொல்லவில்லை. கொஞ்சம் யோசித்தால், அவர் ஏன் இப்படி ஒரு சிகிச்சையை உங்களுக்கும் ரிச்சர்டுக்கும் செய்ய உத்தரவிட வேண்டும்? அவர் சொன்னதைச் செய்ய நியமிக்கப் பட்டவர்கள்தானே நீங்கள்?” கௌஷிக் குரல் பின்வாங்கத் தொடங்கிவிட்டது.
“உண்மை. அவருக்கு அந்தத் தேவை இல்லைதான். ஆனாலும் குழப்பமாகத்தான் இருக்கிறது. இங்கே ஊகங்களைக் கழட்டிவிட்டு, நடந்தவற்றை மட்டும் பார்த்தால் – எனக்கும் ரிச்சர்டுக்கும் நினைவுகளில் கொஞ்சம் தாவல்கள் இருக்கிறது என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உண்மை. நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தக் குழப்பத்தைச் செய்யக்கூடிய சக்தி மிக உயர்ந்த இடத்தில் இருந்துதான் வந்திருக்கவேண்டும். ஆனால் அவர் ஏன் செய்ய வேண்டும்? மீண்டும் ஆரம்பத்துக்கே வந்துவிட்டோம்..” பாவ்னா யோசித்து யோசித்துப் பேசியதில் அவளுடைய சிறுவயதுத் திக்குவாய் நினைவுகள் வந்தன.
”ஆச்சரியம் கௌஷிக். இப்போது ஒரு நொடிக்கு என் சின்ன வயது ஞாபகம் வந்து சென்றது. பள்ளியில் எனக்கு இருந்த திக்குவாய், என் தாய் பொறுமையாக எனக்குப் பயிற்சி தந்து அதைப் போக்கியது, அப்போது சாப்பிட்ட பழத்தின் வாசனை, அன்று அம்மா கட்டியிருந்த புடவையில் காப்பிக்கறை – எல்லாமே ஒரு நொடியின் பாகத்தில் நினைவுக்கு வந்துவிட்டன..”
“இதிலென்ன ஆச்சரியம்? எல்லாருக்கும் நடப்பதுதானே?”
”எத்தனையோ முறை மின்வழிப்பயணம் செய்திருக்கிறேன். எல்லா முறையும் என் நினைவுகளைக் கழட்டி வேறு இடத்தில் மாட்டியிருக்கிறார்கள். இந்தச் சின்னச் சின்ன நினைவுகள், ஏன் தேவையற்ற நினைவுகள் எல்லாம் கொஞ்சம்கூடப் பாதிப்படையாமல் என்னுடனேயே இருக்கின்றன. ஆனால் போன வாரம் நடந்த நிகழ்வுகள் மட்டும், அதிலும் ஒரு சிறு பாகம் மட்டும் காணாமல் போயிருப்பது நிச்சயமாக விபத்தாக இருக்க முடியாது, அல்லவா?”
”அதுதான் சொன்னேனே.. இப்படிச் செய்வது அரசாங்கத்துக்கு சாத்தியமான ஒன்றுதான்..”
“சாத்தியம். ஆனால் அரசாங்கத்துக்குத் தேவையில்லாத வேலை. கீழ் மட்டத்தில் காசுக்கு வேலை செய்யும் கூலிக்கு என்ன நினைவுகள் இருந்தால்தான் என்ன?”
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் பாவ்னா?”
“டெலிபோர்ட்டிங், அரசாங்கம் மூலம் மட்டும்தான் சாத்தியமா?”
“ஆமாம். அதை வேறு யாராலும் செய்ய முடியாது. பலவிதமான மூலப்பொருள்கள் தேவைப்படுகின்றன. மிருகங்கள், சக்திவாய்ந்த முப்பரிமாண அச்சுக்கருவிகள்..”
“அவை உடலுக்குதானே தேவை. நினைவுகளுக்கு இல்லையே?”
“நினைவுகளையும் ஆராய்ந்து அவதானித்துத்தான் வேறிடத்துக்கு அனுப்ப முடியும். அதற்கான சக்தி சாதாரணக் கணினிகளுக்குக் கிடை..” திடீரெனப் பாதியில் நிறுத்தினான்.
பாவ்னா கௌஷிக்கையே பார்த்துக்கொண்டிருந்தாள். என்னவோ சொல்ல வருகிறான். காத்திருப்போம்.
“பழைய கதை ஒன்றில் படித்தது. உலகத்தில் அணு ஆயுதப் பெருக்கம் நடந்துகொண்டிருந்தபோது, மூலப்பொருளைச் சுத்திகரிக்க, ஆதிகாலத்தில் – 1930-40களில் டிஃப்யூஸர்களை உபயோகித்தார்கள். ஒருகிலோ மூலப்பொருளைச் சுத்திகரிக்க மாதக்கணக்கில் ஆகும். பின்னாளில் வேகமாக வேலை செய்யும் செண்ட்ரிஃப்யூஜ்கள் வந்து இந்த வேலை நிமிடங்களில் முடிந்தன.”
இதென்ன சம்பந்தமே இல்லாமல் ஒரு கதை சொல்கிறான்? பாவ்னா பொறுமையாகக் கவனித்தாள்.
“1990களில், செண்ட்ரிஃப்யூஜ்களை யாராலும் சுலபமாகத் தயார் செய்யமுடியாது, வல்லரசுகளுக்கு மட்டுமே அதில் கை இருந்தது. எளிய நாடுகளால் அணு ஆயுதம் தயார் செய்யமுடியாது என்று நினைத்திருந்தார்கள். ஆனால், கொரியாவில் 1950களில் வழக்கொழிந்துபோன டிஃப்யூஸர்களை வைத்து மாதக்கணக்கில் ஆனாலும் பரவாயில்லை என்று அணு ஆயுதம் தயார் செய்திருந்தார்கள். பழைய தொழில்நுட்பம் என்று கைவிட்டதை வைத்து வல்லரசுகளை ஏமாற்றியது கொரியா..”
“எனக்கு இதை ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.”
“இந்த டெலிபோர்ட்டிங் இப்போது வேகமாக நடக்கிறது. புதிய தொழில்நுட்பம் வழியாக. ஆனால், இந்த நினைவுகளைக் கடத்துதல் பழைய தொழில்நுட்பம் வழியாக இன்னும்கூட சாத்தியம்தான், அல்லவா?” கௌஷிக் படபடப்பாகவே பேசினார்.
“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் – என் நினைவுகளை வைத்து யாரோ தனிநபர்கள் விளையாடுகிறார்கள், பழைய தொழில்நுட்பம் வைத்து – என்று புரிந்துகொள்ளவேண்டுமா?”
“அதுவும் புரியவில்லை. உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதனால் யாருக்கு என்ன பயன் என்றும் தெரியவில்லை. வேண்டுமானால்..”
கொஞ்சம் நிதானித்துத் தொடர்ந்தார். “அஸ்வினியிடம் பேசிப்பார்க்கலாம். அவளுக்கு இதன் சாத்தியங்கள் தெரிய வாய்ப்பிருக்கிறது.”
“நாளை காலை கிளம்பலாமா?”
“வேண்டாம். நமது எண்ணங்கள் கடந்த ஒரு மணிநேரத்தில் எப்படி எப்படியோ போயிருக்கின்றன. வேறு வழியில் பேசலாம்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பல்வீர் சிங் தன் அலுவலகத்தில் நடந்துகொண்டிருந்தார். மேஜை மேல் உட்கார்ந்திருந்த கோபி கவலையுடன் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இப்போது யார் கால்ல வரப்போறாங்க? முன்ன பேசினோமே சுப்ரீம் கோர்ட் நீதிபதி சக்ஸேனா.. அவரேதான?”
“அவரும்தான். ஆனா இப்ப அவர் இன்னொருத்தரோட வரப்போறாராம். அந்த இன்னொருவர் யார்ன்னு கேட்டா பதில் இல்லை” பல்வீர் தன் அனுபவத்தில் இப்படி ஒரு பிரச்சினையைச் சந்தித்ததில்லை என்பது அவர் குரல் நடுக்கத்தில் தெரிந்தது.
கோபி மேஜையில் இருந்த சிறிய சிப்பை எடுத்து அதன் பின்னட்டையைப் படித்தான். “வழக்கமா உபயோகிக்கற நானோசிப்தானே. எத்தனையோ முறை லொகேட்டரா யூஸ் பண்ணியிருக்கோம். ஒரு முறை கூட இப்படி ஆனதில்லயே..”
“டைசன் உடம்புல இருந்து இந்த சிப்பைப் பிரிச்செடுத்து, சட்டையில வச்சுச் சுத்தித் தூர வீசி எறிஞ்சிருக்காங்க. உடம்புக்குள்ள இன்ஜெக்ட் பண்ணியிருக்க சிப். எடுக்கறது அவ்ளோ சுலபம் இல்லை. விஷயம் தெரியாதவங்க இதைச் செய்ய முடியாது. ஏறத்தாழ ஒரு மினி ஆபரேஷன். அந்த சர்ஜிகல் ப்ரொசிஜருக்கு குறைந்தபட்சம் ஒரு மயக்க மருந்தாச்சும் தேவை. எதுவும் வெளியில் சுலபமாக் கிடைக்காது.” பல்வீர் பேசும்போதே பலவிதச் சாத்தியங்களையும் யோசித்துக்கொண்டிருந்தார்.
திரை உயிர் பெற்றது. சக்ஸேனாவின் மேஜை தெரிந்தது. அவர் இல்லை.
“வாழ்க பாரத். நீதிபதி அவர்களே” பல்வீர் சிங் மரியாதையாக விளிக்க, பின்புறமிருந்து குரல் கேட்டது “இதோ வந்துவிட்டேன். “ என்று சக்ஸேனா தன் நாற்காலியில் அமர்ந்தார். “அவர் வந்துவிட்டாரா?” யார் அவர்?
திரை பாதியாகி இன்னொரு உருவம் தெரிந்தது. பெரிய அறையின் முழு கண்ணாடி ஜன்னலின் பின்புலத்தில் பாராளுமன்றம் தெரிந்தது. அறையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பிரஜாபதி இவர்களைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“நான் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். என் பெயர் பிரஜாபதி. நான் இந்திய ஜனாதிபதிக்குத் தொழில்நுட்ப ஆலோசகன்.”
கோபிக்கு இப்படி ஒரு பதவி இருப்பதுகூடத் தெரிந்திருக்கவில்லை. மரியாதையாக வணக்கம் வைத்தான்.
“கோபி.. இதுதானே உங்கள் பெயர்?” பிரஜாபதி கேட்ட விதத்தில் குற்றவாளியை விசாரிப்பது போல உணர்ந்தான். “ஆமாம் சார்.”
“நான் விசாரித்த வரையில் உங்கள் மேல்தான் எல்லாச் சந்தேகங்களும் இருக்கின்றன என்பது புரிகிறதா?”
என்ன! கோபி விழித்தான்.
“டைசன் உடலில் இடம்காட்டும் கருவியைப் பொருத்தியது உங்கள் துறை. இப்போது அவனைக் காணவில்லை. அவன் கருவி காட்டிய கடைசி இடம் உங்கள் வீட்டு வாயில். இன்னும் விளக்க வேண்டுமா?”
கோபிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
பிரஜாபதி தொடர்ந்தார். “அந்தக் கருவியை எடுக்க கொஞ்சமாவது மருத்துவ அறிவு வேண்டும். உங்கள் மனைவி வேலை செய்வது மருந்தியல் துறையில். அந்தச் சட்டையைக் கண்டுபிடித்ததும் உங்கள் மனைவிதான். இதெல்லாம் தற்செயல் நிகழ்வு என்று நம்ப நானோ சக்ஸேனாவோ தயாரில்லை.”
எச்சில் விழுங்கிய கோபி “நாங்கள் இங்கேயேதான் இருக்கிறோம். என்னை விசாரிப்பது மிகவும் சுலபம். ஒரு நொடியில் பல்வீர் சிங் என் நினைவுகளை ஆராய்ச்சி செய்தால் இதற்கெல்லாம் நான் காரணமில்லை என்று தெரிந்துவிடும்..”
பிரஜாபதி குரலின் கடுமையைக் குறைக்காமல் “பல்வீர் சிங்கை யார் ஆராய்ச்சி செய்வது?” என்றார்.
பல்வீர் “நாங்கள்தான் அந்த டைசனை விசாரிக்க மனுவே போட்டோம். இப்போது நாங்களே அவனை ஏன் காணாமல் ஆக்க வேண்டும்?”
“அந்தக் காரணத்தினால்தான் உங்களை இன்னும் கைது செய்யாமல் பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
“டைசன் இங்கிருந்து கிளம்பியது முதல் ஒரு மணிநேரத்துக்கு அவன் முகம் ஏதோ ஓரிடத்தில் ஒளிப்பதிவாகியிருக்கின்றது. ஒரு அடுக்குமாடிக் கட்டடத்துக்குள் நுழைந்த வரை. அதற்குப் பிறகுதான் அவன் முகம் பதிவாகாமல் கருவி மட்டும் இடம் மாறிக்கொண்டிருந்தது. அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறோம்.”
சக்ஸேனா இதுவரை பேசாமல் இருந்தவர்,”அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில்தான் அவன் கருவியை அகற்றும் சிகிச்சை நடந்திருக்க வேண்டும்..” என்றார்.
“இதைக் கண்டுபிடிக்க துப்பறிவாளனா வேண்டும்? டைசனைக் கொல்லாமல் கருவியை அகற்ற வேண்டுமென்றால் மயக்க மருந்து வேண்டும். அது யாருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று தேடுங்கள். வாழ்க பாரத்.” திரை அணைந்துவிட்டது.
கோபி வியர்வையைத் துடைத்துக் கொண்டான். “என்ன மருந்துகள் தேவைப்பட்டிருக்கும்?” தேடத் தொடங்கினான்.
கணினி காட்டிய பட்டியலின் ஆரம்பத்தில் இருந்த மாத்திரை “ஆம்பியன்.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அஷோக் ஒன்றும் பேசாமல் வெறித்தபடி இருந்தார். திடீரென்று உயிர் பெற்றவர்போல, “வாருங்கள் போகலாம்.” என்றார் சடகோபனைப் பார்த்து.
“எங்கே?”
“உங்களுக்கும் தெரியும். இடமும் தெரியும். நடக்கும் தூரத்தில்தான் என்றும் தெரியும்.” அஷோக் செலுத்தப்பட்டவர் போல வெளியே வந்தார். கதவைப் பூட்டினார்.
ஒரு வார்த்தையும் பேசாமல் இருவரும் நடந்தனர்.
நகரத்தின் கட்டடங்களுக்கு நடுவே எப்படியோ தப்பிப் பிழைத்திருந்தது அந்தச் சிறு காடு. எளிதில் கண்ணுக்குத் தெரியாத ஒற்றையடிப்பாதையில் சென்றார் அஷோக். மரங்களின் அடர்த்தியில் மறைந்திருந்தது ஒரு சிறு கட்டடம். பழங்காலக் கட்டடம். ஓரிரு அறைகள்தான் இருக்கும். மாடியெல்லாம் இல்லை. இலைச் சருகுகள் படபடக்க வாசலுக்கு வந்தார்கள். அஷோக், துருபிடித்திருந்த கம்பிகள் உள்ளே கையைவிட்டுத் திறந்தார். “வாருங்கள்” என்றார் சடகோபனிடம்.
அறைக்குள் இருந்த அனந்தன் அஷோக்கைப் பார்த்துச் சிரித்தார். கை குலுக்கினார். “நேரில் பார்த்துப் பல வருஷம் இருக்கும், இல்லையா?”
சடகோபன் டைசனைப் பார்த்தார். அவன் கையில் இருந்த கட்டைக் கேள்விக்குறியாகப் பார்க்க அனந்தன் பதிலளித்தார்.
“டைசனை இண்டெலிஜன்ஸில் விட்டுவிட்டாலும் இடம் காட்டும் கருவியைச் சொருகி அனுப்பியிருந்தார்கள்.. அதை வெட்டி எடுக்கவேண்டியதாகிவிட்டது. ஜோன்ஸுடன் கூட இருந்தபோது பழகிய சர்ஜரி.”
“இண்டெலிஜென்ஸ் மட்டுமில்லை. நான் யூகித்தது போலவே இதில் இன்னும் மேலே மேலே ஆட்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். டைசனும் சடகோபனும் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நானும் அஷோக்கும் மட்டும்தான் இன்னும் அவர்கள் சந்தேக வலைக்குள் விழவில்லை. “ அனந்தன் சொல்லி வாய்மூடுவதற்குள் அவருக்கு அழைப்பு வந்தது. கோபி.
“அப்பா.. அந்த டாக்டரிடம் மாத்திரை வாங்கினீர்களே, ஆம்பியன்தானே? வைத்திருக்கிறீர்களா?”
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.