அத்தியாயம் 19
கோபி காலை நேர அவசரத்தில் இருந்தான். குளியலறையில் இருந்து நேரடியாக அலுவலறைக்கு வந்து கணினிப்பொத்தானை அமுக்கிவிட்டு உடை தேட ஆரம்பித்தான். அது உயிர்பெறுவதற்குள் காபியை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தான்.
அஸ்வினியின் குரல் கேட்டது..”நான் கிளம்பறேன்..”
கோபிக்கு அவள் எங்கே போவதாகச் சொன்னாள் என்பது மறந்துவிட்டிருந்தது. கேட்டால் பிரச்சினையாகுமோ என்று எதுவும் சொல்லவில்லை. “எனக்குத் தெரியும் நேத்து நான் பேசினதை நீ கவனிக்கலை.” உள்ளே வந்துவிட்டாள். “எதுவும் கால்ல இல்லையே?”
“எப்படி கண்டுபிடிச்சே?”
“உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? மாஸ்மைண்டர்ஸ் ஆஃபீஸ் போறேன். நேத்துச் சொன்னேனே. கவனிக்கலையா?”
சொன்னாளா? இனிமேல் கொஞ்சம் கவனிக்க வேண்டும். “டெல்லியா போறே?”
“இல்லை. இங்கேதான். மாஸ்மைண்டர்ஸ். நடந்துதான் போகப்போறேன். கௌஷிக் வரச்சொல்லியிருக்கான். சுத்தமா கவனிக்கலையா?”
“ஆமாம். கொஞ்சம் டென்ஷன். சரியா கவனிக்கலை. பிரஜாபதின்னு ஒரு புது கேரக்டர். பல்வீருக்கு ஏழெட்டு ஸ்டெப் மேலேயாம். திடுதிப்புன்னு இந்தக் கேஸ்ல உள்ள நுழைஞ்சு என்னை மிரட்டறார்” மன்னிப்புத் தொனியில் சொன்னான்.
”பிரஜாபதியா? பேர் கேள்விப்பட்டாப்பல இருக்கு. மருந்து பேட்ச் புதுசா கண்டுபிடிச்சா அப்ரூவல் அதாரிட்டிக்குப் போகும் இல்ல? அந்த அதாரிட்டில எதோ டாப் பொசிஷன்ல இருக்காருன்னு நினைக்கறேன். “
”மெடிகல் ரிசர்ச் அதாரிட்டியா? அவரு ஏன் என் வேலைல தலையிடறாரு?” அஸ்வினி கிளம்பியதைக் கவனிக்காமல் கொஞ்சம் நேரம் கழித்து.
வழக்கம்போல அலுவலகத் தகவல்களைப் பரிசீலித்துக் கொண்டிருந்தபோது பல்வீரின் அழைப்பு வந்தது.
“போலீஸ் அந்த அபார்ட்மெண்ட் ப்ளாக்கைக் கம்ப்ளீட்டா ஸ்கிரீன் செஞ்சுட்டாங்க. ஒண்ணும் கிடைக்கலை. இது ஒரு மினி சர்ஜரி – கொஞ்சம் பஞ்சு கொஞ்சம் ரத்தமாச்சும் இருக்கணுமில்ல? ஒண்ணுமே இல்லை”
கோபி யோசித்தான். “ஒழுங்கா செக் பண்ணியிருப்பாங்களா? ரொட்டீன் செக்ன்னு மாடி, எலிவேட்டர் மட்டும் பார்த்திருக்கப் போறாங்க. நான் போய் தரோவா செக் பண்ணிடட்டுமா?”
“அதைத்தான் நானும் சொல்லலாம்னு வந்தேன். நானும் வரேன். உங்க வீட்டுக்குப் பக்கத்துலதான். அங்கேயே வந்துடறேன்.”
கோபி பல்வீருக்காகக் காத்திருந்தபோதுதான் அவர் சொன்ன “உங்கள் வீடு” உரைத்தது. என்ன சொல்ல வருகிறார்? உன் வீடு இல்லை. உன், அஸ்வினியின் வீடு என்கிறாரா? பிரஜாபதி போலவே பல்வீரும் நம்மைச் சந்தேகிக்கிறாரா?
கதவு சீராகத் தட்டப்பட்டது. அப்பா. அவருடைய ஒழுக்கம் எப்போதுமே ஆச்சரியம் ஏற்படுத்துவது. “எதாவது வேணுமாப்பா?”
“உனக்குதான் எதோ வேணும் போலிருக்கு..”
கையில் ஒரு பை வைத்திருந்தார். அதைப்பிரித்து கவரைக் காட்டினார். “இதோ பார், நான் டாக்டரைப் பார்த்து வாங்கிகிட்ட ஆம்பியன். இன்னும் போடலை. நேத்து போன்ல கேட்டியே. உனக்கு வேணுமா என்ன?”
கோபி சிறுபிள்ளைத்தனமாக உணர்ந்தான். ஆம்பியன் என்றவுடன் அப்பா ஞாபகம் வந்ததும் அவரிடம் இருக்கிறதா என்று கேட்டதும் பைத்தியக்காரத்தனம். ஊரில் வேறு யாருக்கும் அந்த மருந்து கிடைக்காதா என்ன?
“சும்மாதான்ப்பா கேட்டேன். ஒழுங்காத் தூங்கறீங்களான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கக் கேட்டேன்” சமாளித்தான்.
“சரி. உனக்கு ஆயிரம் வேலை. நான் சும்மா கீழதானே உக்காந்திருக்கேன்.. ஒரு வாக் போயிட்டு வரலாம்னு பார்க்கறேன்.”
பல்வீர் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. “ஓக்கேப்பா. நீங்க போயிட்டு வாங்க. நான் கிளம்பறேன்.”
பல்வீர் உள்ளே வந்துவிட்டார். “ஹலோ அனந்தன் சார். நலமா?”
அவர் கீழே இறங்கியதும் “அவர் கடைசியா டெலிபோர்ட் செஞ்சு உடம்பு சேஞ்ச் பண்ணி பதினஞ்சு இருபது வருஷம் இருக்குமா? எழுபத்தஞ்சு வயதுக்கு நல்ல ஹெல்த்தியாத்தான் இருக்கார்.” பல்வீர் கோபியிடம் சொன்னார்.
”திருஷ்டி வைக்காதீங்க. அவருக்கு உடம்புல எப்பவுமே பிரச்சினை இல்லை. அம்மா போனப்ப எடுத்துகிட்ட மனமாற்றச் சிகிச்சை கொஞ்சம் தொந்தரவு செஞ்சுது. அதுவும் இப்போது சரியாகிட்டு வருது”
”நல்லது. கிளம்பலாமா?”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
குறுகிய அறையின் உயரத்தில் ஜன்னலில் மரங்கள் மட்டுமே தெரிந்தன. வெளிச்சம் அவ்வளவாக இல்லை. விளக்கு போடவேண்டாம் என்று அனந்தன் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். டைசன் சடகோபனிடம் இருந்து தன் கணினியை வாங்கிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அஷோக் சடகோபனிடம் கேட்டார். “அனந்தன் எங்கே போயிருக்கிறார்?”
“வீட்டுக்கு. அவர் மகனுக்கு எதோ சந்தேகம் வந்ததாகத் தெரிகிறது. அதைச் சரி செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.”
“எனக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி அனந்தனின் நினைவுகள் எனக்குள் வந்தன? அவர் நினைப்பது போல நான் ஏன் செய்கிறேன்?”
சடகோபன் மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டார். “அனந்தனுடைய அத்தனை நினைவுகளும் நமக்கு வந்துவிடவில்லை. அவர் என்ன செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்பது எனக்கும் தெரியாது. ஆறு மாதங்கள் இருக்கும். ஒருநாள் திடீரென்று ஒரு நாள் அவரைச் சந்தித்தேன். உங்களுக்கு நான் செய்தது போலவே அவர் என் மேல் ஒரு ஊசியைப் போட்டார். ஒரே நொடிதான். அவர் குரல் எனக்குள் கேட்க ஆரம்பித்துவிட்டது. மெமரி ஷேரிங் என்று எதோ சொன்னார். சாதாரண நாட்களில் நான் நானாகத்தான் இருப்பேன். திடுதிப்பென்று கட்டளைகள் கொடுப்பார். அவர்தான் டைசன் பெயரைச் சொல்லி வரவழைக்கச் சொன்னார். அவர் சொன்னதுபோலத்தான் டைசன் ஞாபகங்களை மாற்றியமைத்தேன். நான் ஒரு சாதாரண வரலாற்று ஆராய்ச்சியாளன். எனக்கு இதெல்லாம் தெரியாது, ஏன் சொன்னாலும்கூடப் புரியாது.”
“ஆனால் அஷோக் அடிப்படையில் ஒரு பொறியியலாளர். அவருக்குச் சொன்னால் புரியும்” அனந்தன் குரல் கேட்டது. எப்போது வந்தார்? கதவு மணிச்சத்தமோ திறக்கும் சத்தமோ கேட்கவில்லையே?
அஷோக் அனந்தனைப் பார்த்தார். “நீங்கள் எனக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். என்னதான் நடக்கிறது இங்கே?”
“சொல்ல மாட்டேன் என்று சொல்லவில்லையே. ஆனால் எனக்கே பல விஷயங்கள் தெரியாது. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் இந்த விளையாட்டை ஆரம்பித்திருக்கிறேன்.”அனந்தன் சுவாதீனமாக பெரிய நாற்காலியில் அமர்ந்தார். அங்கே அவர்தான் தலைவர் என்பது சொல்லாமலேயே எல்லாருக்கும் புரிந்தது.
“முதலில் இதைச் சொல்லுங்கள். நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்தவன் நான். என்னை ஏன் இங்கே இழுத்தீர்கள்?”
“உங்களுக்கும் பாரத ரத்னா உண்டுதானே அஷோக்?” இந்தக்கேள்விக்கு இதுவா விடை?
“பாரத ரத்னா இல்லை பத்மபூஷண்.”
“ஆகஸ்ட் ஒன்றாந்தேதி விழாவா?”
“இல்லை. ஒன்றாம் தேதி பாரதரத்னா விழா. இது ஆகஸ்ட் மூன்று.”
“என் கணிப்பு சரியானால், உங்கள் விழா நடக்கப்போவதில்லை. ஆகஸ்ட் ஒன்று அன்று நடக்கப்போகும் விபரீதத்தால் தள்ளிவைக்கப்படும். ”
“என்ன சொல்கிறீர்கள் அனந்தன்?” அஷோக் அதிர்ச்சியானார்.
அதற்கு முற்றிலும் மாறாக, அனந்தன் அமைதியாகப் பேசினார்,“நாம் ஒரு பெரிய போருக்குத் தயாராக வேண்டும். அதற்கான படைத்தளபதிகள்தான் நீங்கள்.”
”என்ன போர்?” தற்போதைய நாகரிக உலகத்தில் எங்கே போர் எல்லாம் நடக்கிறது? குழப்பமாகக் கேட்டார் அஷோக்.
”மனித வரலாற்றில் தொடர்ச்சியாக நடக்கும் ஒரே போர். மனிதனின் பேராசைக்கும் அறிவுக்கும் நடக்கும் போர். மனித நாகரிகத்தின் ஆரம்பமே அறிவைக்கொண்டு மனிதன் படைத்த ஆயுதங்கள்தான். ஒரு குரங்கோ புலியோ மானோ கல்லை எடுத்து எறியாது. அதைச் செய்யத் தொடங்கிய மனிதன் தொடர்ச்சியாக ஆயுதங்களைப் படைத்துக்கொண்டே இருக்கிறான். கல்லை வேகமாக எறிய கவண், ஈட்டி, வில், துப்பாக்கி, பீரங்கி.. ஏன் அணு ஆயுதம் வரை. பலமான ஆயுதம்தான் எப்போதும் போரை வெல்லும். இதுதான் வரலாறு..”
வழக்கமாக வகுப்பெடுப்பது போல கேள்விகளுக்காக ஒரு நொடி தாமதித்து, கேள்வி வராததால் தொடர்ந்தார்.
“அந்த வரலாற்றிலும், ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள் யார்? உங்களைப்போன்ற, என்னைப்போன்ற விஞ்ஞானிகள். பிரயோகிப்பவர்கள்? பேராசைக்கார அரசர்கள், அரசியல்வாதிகள். வரலாறு அந்த அரசர்களை மன்னித்துவிடுகிறது. நம்மை?”
மீண்டும் ஒரு நொடி நிறுத்தி,” இப்போது நடக்கும் யுத்தம் மனித மூளைக்கான யுத்தம். எழுநூறு கோடி மனித மூளைகள். இந்த மூளைகளைக் கட்டுப்படுத்துபவன் எதையும் கட்டுப்படுத்தலாம். எந்தப் போரையும் கத்தியின்றி ரத்தமின்றி வெல்லலாம். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறான் இந்த பிரவீண்”
“ஜனாதிபதியையா சொல்கிறீர்கள்? அவர் எங்கே இருந்த நாட்டை எப்படி முன்னேற்றியிருக்கிறார் தெரியுமில்லையா?”
அனந்தன் விரக்தியாகச் சிரித்தார். “முன்னேற்றம். அப்படி என்றால் என்ன? முன்னேற்றத்துக்காகச் சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பவன் இரண்டையும் விட்டுக்கொடுக்கிறான் என்று ஒரு பழமொழி இருக்கிறது. தெரியுமில்லையா?”
“நான் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கவில்லையே?” அஷோக் விடாப்பிடியாகக் கேட்டார்.
“உங்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் போயிருக்கிறது. அதைப்பற்றிச் சிந்திக்கும் மூளையை விட்டுக்கொடுத்திருக்கிறீர்கள். முன்னேற்றத்தையும் சுதந்திரத்தையும் மட்டுமல்ல, மூளையையும் விட்டுக்கொடுத்திருக்கிறீர்கள். சிறுகச் சிறுகத் தெரியாமல் நாம் அனைவரும் கடந்த இருபது ஆண்டுகளாக அடிமைப்பட்டிருக்கிறோம்.”
சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு சத்தம் கேட்டது. அனந்தன் கணினியைப் பார்த்தார்.
“இங்கேயேதான் இருப்பேன். உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன். ஆனால் முதலில் சில விஷயங்களைச் செய்து முடிக்க வேண்டும். டைசன் எங்கே?”
”இதோ இங்கே” என்றான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே நின்றிருந்த டைசன்.
அனந்தன் சடகோபனைப் பார்த்தார்.
புரிந்துகொண்ட சடகோபன் டைசனைப் பார்த்து “கிளம்பு, நமக்கு வேலை இருக்கிறது”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பிரஜாபதி திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார். “நானூறு பேருக்கும் அழைப்பு சென்று சேர்ந்துவிட்டதா?”
“அனந்தன் வரமாட்டார், தெரியும். மிச்சம் அனைவரும்?”
“எல்லாருக்கும் பயண ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும்.” முடிக்க வேண்டும் என்பதில் ஒரு அழுத்தம் அவரையும் மீறி வந்துவிட்டது. ஏற்பாடுகளின் பட்டியலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதே திரை மினுக்கியது. பல்வீர் என்றது. வாயெல்லாம் பல்லாக “அந்த டைசனைப் பிடித்துவிட்டோம்.” என்றார் பல்வீர்.
“எங்கிருந்தான்?”
“அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில்தான் தேடப்போயிருந்தோம், நானும் கோபியும். எந்த ஒளிப்பதிவுக்கருவியும் இல்லாத இடத்தில் ஜெனரேட்டர் அறையில் கையில் ரத்தம் சொட்ட மயங்கியிருக்கிறான். “
“நல்ல வேலை. வாழ்த்துகள். அவனை டெல்லிக்கு அனுப்பிவிடுங்கள், இங்கே விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றவர் யோசித்து,”அவனே அறுவை சிகிச்சை செய்துகொண்டானா என்ன?”
“இல்லை. அவனுக்கு அறுவை சிகிச்சை செய்த ஆளும் சேர்த்தே மாட்டிக்கொண்டார்”
“…?”
“பேராசிரியர் சடகோபன். நாங்கள் போன நேரம் அங்கே எங்களை எதிர்பார்க்கவில்லை. எங்கேயோ வெளியே போய்விட்டு அறைக்குள் வந்தார். அவரையும் கைது செய்துவிட்டோம்”
பிரஜாபதி புன்னகை விரிந்தது.
தொடரும்…
Leave a reply
You must be logged in to post a comment.