கேலக்ஸியின் ‘கதைப்போமா’ நிகழ்வின் மே மாதக் கூட்டம் கடந்த 17-ம் தேதி துபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்போதெல்லாம் பெரியவர்களை விட குழந்தைகளே வாசித்தலைப் பகிர்ந்து கொள்வதில் – குறிப்பாக கதை சொல்வதில் – மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். தாங்கள் வாசித்த ஆங்கிலக் கதைகளை மழலைத் தமிழில் – அவ்வப்போது ஆங்கிலமும் கலந்து – அவர்கள் சொல்வது அழகு, அதைக் கேட்பது ஆனந்தம்.

இந்த மாதம் முதல் சில புத்தகங்களை வாசிப்பிற்கெனக் கொடுக்கலாம் என முடிவெடுத்து ‘புத்தகப் பூங்கா’ ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம். இது பெரிய பூங்கா இல்லை என்றாலும் அழகான சிறிய பூச்செடிகளை இப்போதுதான் நட்டிருக்கிறோம். இதன் மூலம் ஒருவர் ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று – விபரக்குறிப்பில் எழுதிவிட்டு – வாசித்து, அடுத்த மாதக் கூட்டத்தின் போது திருப்பிக் கொடுக்க வேண்டும். வந்திருந்தவர்கள் அனைவரும் ஆளுக்கொரு புத்தகமென எடுத்துச் சென்றார்கள். எனது ‘வேரும் விழுதுகளும்’ நாவலைப் பெரிய புத்தகம் என்று சொன்னபோது ‘திருவிழா’ என் ஞாபகத்துக்கு வந்து போனது. நல்லவேளை அது புத்தகப் பூங்காவில் இல்லை.
முதலில் கதை சொல்ல வந்த அரூஷ் முஹம்மத், Sister Showdoan (Dork Diaries) என்னும் கதையைச் சொல்லி முடிக்கும் வரை சிரித்துக் கொண்டே அழகாகச் சொன்னார். இறுதியில் இந்தக் கதையின் மூலம் நாம் அறிவதென தன் வீட்டாரை வைத்தே அவர் சொல்லி முடித்தபோது சிரிப்பொலி அடங்க அதிக நேரமானது. இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
அர்ஸூ மஹ்தியா Fred and the Monster Under the Bed என்னும் கதையினை மிகச் சிறப்பாகச் சொல்லி, தன் தம்பியைப் போல் தானும் தன் குடும்பத்தாரை – குறிப்பாக தம்பியை – வைத்தே கதைக்கான நீதியையும் சொல்லி முடித்தார். இவருக்குச் சகோதரி இலக்கியா பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
மஹதி பாலாஜி ‘நண்பர்கள்’ என்னும் கதையை மிக அழகாகச் சொன்னார். எதிரே இருப்பவர்களைப் பற்றி எனக்கு என்ன கவலை என்பதாய் கேமராவைப் பார்த்தபடி பேசி முடித்தார். இவருக்கு ஜெசிலா மேடம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

விகத் ரக்சன் தான் எழுதிய ‘The Portal Apartment’ என்னும் கதையின் முதல் பகுதியை ஒரு திரைக்கதை போல் அவ்வளவு அழகாக விவரித்தார். இவருக்குச் சகோதரர் அபுல் பைஸ் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து எழுத்தாளர் பிரேம ராகவி அவர்கள் ‘இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்’ என்னும் நூல் குறித்து மிக விரிவானதொரு உரையை நிகழ்த்தினார். கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் பேசிய அவர், ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசியது வியப்பாக இருந்தது.
சகோதரர் அபுல் பைஸ் அவர்கள் ‘1948 by George Orwell’ என்னும் நூல் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார். இக்கால அரசியலுக்கு அது எந்த வகையில் ஒத்துப் போகிறது என்பதையும் விளக்கினார்.
பாலாஜி அண்ணன் ‘அத்தினி’ நாவல் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார். அதுவும் மதுரை வட்டார வழக்கு என்பதால் ரசித்துப் பேசினார்.

எழுத்தாளர் ஜெசிலா பானு அவர்கள் ‘சுரமுள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு குறித்துப் பேசினார். குறிப்பாக சுரமுள் என்னும் கதை பற்றிப் பேசி, இதைக் குறும்படமாக எடுக்கலாம் என்று சொன்னார்.
சகோதரர் கலைஞன் நாஷ் அவர்கள் எனது வாத்தியார் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ‘தாய்முகம்’ என்னும் சிறுகதையை, தனது வாழ்வோடு இணைத்துப் பேசினார். நிகழ்வையும் இவரே தொகுத்து வழங்கினார். மிகச் சிறப்பாக, நகச்சுவையாக நிகழ்வைக் கொண்டு சென்றார். சிறப்பு.
சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகள், விதிமுறைகளின் படி முதல் சுற்றுக்குத் தேர்வான கதைகள் குறித்த விபரங்களை பாலாஜி அண்ணன் மேடையில் அறிவித்தபோது நானும் அருகில் நின்றேன். எனக்குப் பொன்னாடை போர்த்தி, நட்டத்திரவாசிகள் நாவலையும் ஒரு அன்புப் பரிசையும் அளித்தார். என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு அங்கீகரத்துக்காகவும் எதையும் செய்வதில்லை, என்னால் முடிந்தால் செய்வேன் இல்லையென்றால் முடியாதெனச் சொல்லி விடுவேன். கேலக்ஸியைப் பொறுத்தவரை அவரின் நம்பிக்கையே என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. இரண்டு போட்டிகளை வெற்றிகரமாக முடித்த நம்பிக்கையில்தான் இதிலும் இறங்கினேன். நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. அவர் இப்படி எதாவது செய்வார் என்பதால்தான் நீங்க அறிவிச்சிருங்கண்ணே என ஒதுங்கினேன் என்றாலும் மேடையில் எனக்கும் துண்டு போட்டு வச்சிட்டார்.

புத்தகப் பூங்காவில் இருந்து எனக்கு ‘அத்தினி’ நாவலைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார் பாலாஜி அண்ணன். அதையும் வாசித்து முடித்து விட்டேன்.
எப்பவும் போல் இரவு உணவுக்குப் பின் கொஞ்சம் மகிழ்வான உரையாடல்களுடன் நிகழ்வு சிறப்பாக முடிந்தது.
எப்பவும் போல் நிகழ்வு முடிந்த மறுநாள் எழுத வாய்த்திருந்தால் மிக விரிவாக எழுதியிருக்கலாம். நிகழ்வு முடிந்து பனிரெண்டு நாட்களுக்குப் பிறகு எழுதும் போது, கேலக்ஸி யுடியூப் சேனலில் எல்லோரும் நிகழ்வின் வீடியோக்களைப் பார்த்திருக்க வாய்ப்பிருப்பதால் விரிவாக எழுதவில்லை.
நிகழ்வின் வீடியோவை சகோதரர் ஹரீஸ், புகைப்படத்தை சகோதரர் பால்கரசு ஆகியோர் மிகச் சிறப்பாக எடுத்திருந்தார்கள்.
கதைப்போமா நிகழ்வினை கேலக்ஸி யுடியூப் சேனலான ‘Galaxy Books’- ல் கண்டு ரசிக்கலாம்.
கதைப்போமா தொடர்ந்து நடைபெறுவதில் மகிழ்ச்சி.
படங்கள் : பால்கரசு
-பரிவை சே.குமார்.
Add comment
You must be logged in to post a comment.