சிக்கலான விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான் வாழ்ந்த நகரங்களிலும் எதிர்கொண்ட மனிதர்களை துல்லியமாகவும் அழுத்தமாகவும் எழுத்துகளில் கொண்டு வந்துவிடும் சூட்சுமத்தின் வழியாக கொண்டாட்டத்தை உருவாக்குகிறார். சாமானிய மனிதனின் அப்பட்டமான இந்த அனுபவங்களை வாசிக்கும் போது அவை வண்ணங்களின் கலவையாக மனதுக்குள் இறங்குகிறது – மாறி மாறி ஒளிரும் வண்ணங்களின் மழையாக..
R.P. ராஜநாயஹம், தான்கடந்து வந்த மிகக்
கடுமையானபாதையை தமது நீண்ட பயணத்தின் அனுபவத்திலிருந்து
திரும்பிப்பார்க்கையில் மணல் கோடுகளாய் நீள்கிறது... இரத்தமும் சதையுமான மனிதர்களும், நாம் வியக்கும்
ஆளுமைகளும் Juxtaposition செய்யப்பட்டு ஒரு கண்காட்சி போன்ற நினைவுச் சுவடுகளை சிறிய கேன்வாஸில் வரைந்து
வைத்துள்ளார்.
எல்லா எழுத்திற்கும் பின்னும் ஓர் அழுத்தமான அரசியல் இருக்கும். எழுதுவற்கான காரணம். என்று பொதுமொழியில் சொல்வார்கள்அதை.
இந்த எழுத்தை வாசித்து விட்டு சவூதி அரேபியாவுக்குச் செல்லும் வாய்ப்பை வேண்டாம் என மறுத்த, அந்த நாட்டைப் பற்றிய தவறானகருத்தை மனதில் வைத்திருந்த ஒருவன் அங்கு செல்லத் தயாரானால் நான் இதை எழுதியதன் பயன் அடைந்து விட்டதாய் கருதுவேன்.
மொத்தத்தில் இது கால்களால் எழுதப்பட்ட கதை
மதுர விசாரம்?
ஒரு கேள்விக்குறியுடன் முடியும் தலைப்பு பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு நாவலுக்குள் மூன்று கதைகள், ஒன்றுடன் ஒன்று சம்பந்தப் பட்ட நீட்சியில். இதில் நடுவில் 71 காட்சிகளில் திரைக்கதை ஒன்று நம் மனக் கண்ணில் திரைச் சித்திரமாக விரிகிறது.
ஜீ. முருகன் அவர்கள் எழுதியது
ஆண்-பெண் உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள். பாவனைகள். பிறழ்வுகள்.பயங்கள். மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழயில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடிய தல்ல என்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன.
கனவுகளுடன் அமீரகம் வரும் பல பெண்களை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். வீட்டு வேலை, ஓட்டுனர் வேலை, அழகு நிலைய வேலை என்று கிடைத்த வேலைகளைச் செய்து தனிமையே துணையாக தன் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து பெண்களுக்கும் இம்மராம்பு சமர்ப்பணம் - நசீமா ரசாக்
கடல் கடந்து செல்லும் ஆண்களின் பாடுகளைவிட தன் குடும்பத்திற்காக மொழி தெரியாமல், நிலம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் எதையும் அறியாமல், துணை இல்லாமல் துணிந்து பொருளாதாரச் சுமைகளுக்காக அமீரகம் வரும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதை சவால்கள் நிறைந்தது. எல்லாவற்றையும் சகித்தபடி அயல்தேசத்தின் பிரம்மாண்டங்களுக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ளும் சில பெண்களின் கதைகள் ஒன்றொடொன்று ஊடாடுகிறது.
'மலைகளும் எதிரொலித்தன' எனும் நாவல் 2013 ல் வெளிவந்தது.நாவல் ஒன்பது அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் வெவ்வேறு கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது.
மனசிலாயோ சிறிய கட்டுரைத் தொகுப்பு. நவீனின் கழுத்துவலிக்கு திருவனந்தபுரம் சென்றவர் 21நாள் சிகிச்சையை 14நாட்களில் முடித்து விட்டு மீதி ஏழுநாட்களில் பல இடங்கள் செல்கிறார். பலரை சந்திக்கிறார். (நாம் ஏன் சாராவை, பிரான்ஸூடன் பழகியதை சொல்லிக்கொண்டு!). மோகன்லால் படம் பார்க்கிறார். வாழைப்பழ பஜ்ஜி சாப்பிடுகிறார். அதனால் இந்த நூல், ஆட்டுக்கு ஆடு மேய்த்து அண்ணனுக்குப் பெண் பார்த்த கதையாய் பயணநூலும் ஆகிறது.
நவீனின் மொழிநடை சரளமாக உள்ளதால் இந்த நூலைப் புனைவைப் படிக்கும் அதே உற்சாகத்துடன் (Nonfiction விரும்பிப் படிப்பவர்கள் அல்புனைவின் அதே உற்சாகத்துடன்) படிக்கலாம். எழுத்தாளனுக்கு முக்கிய ஆயுதம் அவதானிப்பு, அப்புறம் தான் பேனா. அது இவரிடம் நிறையவே இருக்கிறது. நுண்தகவல்கள் பலவற்றை போகிறபோக்கில் சொல்லி இருக்கிறார். இரண்டு தொலைக்காட்சி சீரியலைப் பார்க்காவிட்டால் முடித்து விடக்கூடிய நீளம் தான் இந்த புத்தகம். புத்தகத்தின் கடைசிவரி என்னை ஆழ்ந்த யோசனையில் ஆழ்த்தியது.
மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்திய அரசியலையும், அதன் வழியே அவர்களின் சிக்குண்ட வாழ்க்கையையும் நுண்மையாக விவரிக்கிறார். நெருக்கடிகளையெல்லாம் கடந்து, மனிதர்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் மானுடம் வெளிப்படும் இடங்கள் வாசிப்பிலும், வாழ்க்கை குறித்த புரிதலிலும் ஓர் ஆசுவாசத்தை அளிக்கிறது. உடல் மீது செலுத்தப்படும் ஆதிக்கம், மாந்திரீகச் செயல்களை முன்வைத்து நிகழ்த்தப்படும் அதிகார வேட்கை, நம்பிக்கைகளின் மீது கட்டமைக்கப்படும் அரசியல் என்று பல நுட்பமான கதைகளைத் தனித்துவமான பார்வையில முன்வைத்திருக்கிறார்.
ஜா.தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.
அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார்.
“நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது.
இவரது பிற நூல்கள்
1.பெண்ணென்று சொல்வேன்
2.மேதைகளின் குரல்கள்
3.ஒளி வித்தகர்கள் இரண்டு பாகங்கள்
4.மாதர் திரையுலகு
5. கதை to திரைக்கதை
இந்தத் தொடருக்காக தேடித் தேடி பெண் இயக்குனர்களின் படங்களைப் பார்த்தபோது இவர்கள் அனைவரின் இலக்கும் படைப்பின் வழியே ஒன்றையே கோரி நிற்பதை உணர முடிந்தது. அது சகமனிதர்களின் மீதான கருணை.
சீனா, இந்தியா, பிரெஞ்சு, ஜப்பான், ஈரான், நியூசிலாந்து, அமெரிக்கா, துருக்கி என வாழ்கின்ற தேசங்கள் வெவ்வேறானதாய் இருந்தாலும் இவர்கள் அனைவருமே ஒரே உடலின் பல முகங்களாகவே இருக்கின்றனர்.
(முன்னுரையிலிருந்து...)
கொர்த்தஸாரின் படைப்புகளை மட்டும் அறிமுகம் செய்யாமல் அவரது வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் அரசியல்-தத்துவார்த்த நிலைப்பாடுகளையும் இணைத்தே இந்நூல் விவரித்துச் செல்கிறது. மேலும் கொர்த்தஸாரின் சில கிளாஸிக் சிறுகதைகள் விளக்கமான முறையில் அலசப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி கொர்த்தஸாரின் மிகச்சிறந்த சோதனைப் படைப்பான ஹாப்ஸ்காட்ச் நாவலின் வாசிப்பு குறித்து விரிவான விளக்கங்கள் இந்நூலில் உள்ளன.
அறிமுகமற்ற தமிழ்வாசகன் சரியான நோக்கில் கொர்த்தஸார் பற்றிய பார்வையை அமைத்துக் கொள்ள இந்நூல் உதவும் என்பது என் நம்பிக்கை.
– பிரம்மராஜன்
மார்கழி பாவியம்: இனம் நிலம் மொழி இது எனது பதினைந்தாவது கவிதை நூல். இரண்டு இலக்க எண்ணிக்கையில் அச்சாகி வெளிவந்து, நட்புவட்டத்திற்கு வெளியே அறிமுகமாகாத சில தொகுப்புகளிலிருந்து நானே தெரிவுசெய்த கைப்பிடியளவு கவிதைகள்.
கடவுள், இசை, கலை, இலக்கியம் யாவும் செயற்கையானவை. உள்ளம் என்னும் இல்பொருண்மையை மனித உடம்புக்கு ஓர் உறுப்பாக்கிப் பொருத்திக்கொள்ளும் முயற்சி.
இலக்கியத்தின் முதன்மையான நான்கு பெரும் பிரிவுகளான கவிதை, கதை, கட்டுரை, நாடகம் இவற்றின் உள்ளடக்கத்தைக் கலைத்து அடுக்கி ஒன்றாய் ஆக்கிப்பார்க்கும் முயற்சியே கவிதை முதலான எனது படைப்புகள்.
ஒரு படைப்பாளரின் தொகுப்பிலிருந்து தேர்ந்த ஆக்கங்கள் என்பவை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுபடும். நானே எனக்கு முதல் வாசகன் என்பதால் இந்நூல் என் வாசிப்பின் தேர்ந்தெடுப்பில் உருவானது. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வாசிப்பில் நான் வெவ்வேறாகக் கலைத்து அடுக்கித் தேர்ந்துத் தொகுக்கப்படலாம். வாசகர் முகங்களே ஒற்றைப் பனுவலுக்குப் பன் முகங்களாகப் பொருந்தி உதிர்கின்றன. இயற்கை ஒருமையானது; செயற்கை, பன்மையானது. என்னைப்போலவே எனது பனுவல்களும் பன்மையின் விளைவு. இயங்கியல் பொருண்மை பன்மையாலானது.
- ரமேஷ் பிரேதன்