இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல. உண்மைக்கும் பொய்க்குமிடையே அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை. நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்ற உருவாக மாற்றியிருக்கிறது. நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள். அப்படித்தான் கிருஷ்ணமூர்த்தியின் கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற
முறையில் ஊடுறுவ முற்படுகிறது.
– தேவி பாரதி
காப்டன் மகள் புஷ்கின் எழுதிய கடைசி புதினம் 1836 இல் எழுதப்பட்டது. 1744-1775 ஆண்டுகளில் புகச்சோவ் தலைமை தாங்கிய விவசாய எழுச்சியை பின்னணியாகக் கொண்ட நாவலிது.
1774 களில் விவசாயிகளின் நலனுக்காக கலகம் செய்த புகச்சோவ் என்கிற கலகப்படை தலைவனை பற்றிய படைப்பு வரலாற்றின் மீதான புனைவு இந்தப் புதினம், நம் காலத்து சந்தனக்காடு வீரப்பனை நினைவுபடுத்த கூடியது.
புதினத்தில் நாயகன் பணியில் உள்ள கோட்டை கலகக்காரன் புகச்சோவால் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் எல்லாம் தூக்கிலிடப்பட நம் நாயகனுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக தூக்கில் இருந்து தப்பி சுதந்திரமாக இடத்துக்கு போக அனுமதி கிடைக்கிறது. ஆனால் அவனுக்குள்ள நெருக்கடி கோட்டையில் சிக்கி இருக்கும் தன் காதலியை மீட்பது அவளை தன் தாய் தந்தையரிடம் அழைத்து சென்று கடுமையான கண்டிப்புள்ள பெற்றோரிடம் அவளை மணக்க சம்மதம் பெறுவது, இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இதனிடையே கலக்காரன் கோட்டையிலிருந்த எல்லோரையும் தூக்கிலிட உன்னைமட்டும் தப்ப விட்டதேன் என்று ருஷ்ய அரசு கேள்வியெழுப்பி சந்தேகத்தில் தேச துரோக குற்றம்சாட்டி பியோதரை கைது செய்கிறார்கள். பிறகு அதிலிருந்து அவன் தப்பி கேப்டன் மகளை எப்படி அடைகிறான் என்கிற பதட்டமும் விறுவிறுப்புமான கலையழகுமிக்க இந்த நாவலை நீங்கள் வாசிக்க வேண்டும்.
பிழைப்புக்காக சொகுசான அழுகிய வாழ்க்கைக்காக யார் காலிலும் மண்டியிடும் பிறவிகள் உலகமெங்கும் இருக்கிறார்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்பதை அலெக்சாந்தர் புஷ்கின் எவ்வளவு கலாபூர்வமாக சொல்கிறார் என்பதை நீங்கள் வாசிக்க வேண்டும் மிக அற்புதமான கலை படைப்பு.
பின்நவீன வாழ்வின் மீதான மனநிலையை இக்கவிதைகள் பேசுகின்றன. அதிகாரம் வெளிக்காட்ட விரும்பாத அதன்
கோமாளிமுகத்தின்முன் இவை தீக்குச்சியைக் கொளுத்துகின்றன.
மிக நவீனமாகவும் அதேநேரம் ஆதித் தமிழ்க்கவிதை மரபின்நாடகவடிவோடும் இயங்கும் தொகுப்பு இது. கலைஞனாக, சுய
சிந்தனை கொண்டவனாக இருப்பதன் தைரியமும் அதிகாரத்திற்கு நேரெதிர்த் திசையில் நிற்கவேண்டியிருப்பதன் பாதுகாப்பின்மையும் இக்கவிதைகளின் தொனியாக இருக்கின்றன. நவீன தனிமனித வாழ்வின் அகநெருக்கடிகளையும் சமூக மனித வாழ்வின்அபத்தங்களையும் மென் பகடியோடும் சுயகழிவிரக்கத்தோடும்
பேசும் கவிதைகளாகவும் இருக்கின்றன.
தமிழில் ஊடுபிரதித் தன்மை கொண்ட கவிதைகள் எழுதும் வெகுசொற்பமான கவிகளில் ஒருவர் இளங்கோ கிருஷ்ணன். இந்தத் தொகுப்பில் மிகையறிவிற்கும் பித்துநிலைக்கும் இடையிலொரு கால்பந்து விளையாட்டைக் காண்பீர்கள். போகிறபோக்கில் அந்தவிளையாட்டு மைதானத்திற்குள் பந்தை உதைத்துக் கொண்டு ஓடுகிறவர்களாக நீங்களே மாறிப்போவீர்கள்.
- மனோ மோகன்
ஓவியனாக இருந்தும் கதைகளை எழுதும்பொழுது காட்சிகளைக் காட்டிலும் களமும் கருப்பொருளையும் பிரதானமாகப் பார்க்கும் இவரது சில கதைகள் அதிகாரத்திற்கு பக்கம் நின்றபடி நேரெதிர் திசையின் மற்றொரு முனைக்குப் பிரதிநிதியாக வாதிடும் மனம் கொண்டவை. அவரது கதை மாந்தர்களின் தனிப்பட்ட அகச்சிக்கல்களைப் பேசுகின்ற கதைகள், தனிமனிதன் என்கிற அடையாளத்தின் முக்கியத்துவத்தைக் கோருபவை. யதார்த்த தொனியில் ஆரம்பிக்கின்ற அவரது கதைகள், வடிவங்கள் மீதும் கருப்பொருளில் நடத்தும் விசாரணைகளாக மாறும் ஒரு ஓவியனின் பிரத்யேகக் கதையாக மாறும் பயணம்.
திரைப்படத் துறையில் மிகத் தீவிரமாக இயங்கிய இயக்குனர்களின் வாழ்வை அறிவதன் மூலமாக,அவர்களது படைப்புகளை புரிந்துகொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருந்த நேர்காணல்களும்,கட்டுரைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தில் திரைப்படங்களைஆன்மிக மற்றும் தத்துவார்த்த ரீதியிலான கண்ணோட்டம் கொண்ட இயக்குனர் முதல் பகுதியிலும், அரசியல் ரீதியிலாக தங்களது திரைப்படங்களை இயக்கியவர்கள் இரண்டாவது பகுதியிலும்,சமகாலத்தில் அதிக கவனிக்கப்படுகின்ற அதே தருணத்தில் வழக்கமான திரைப்பாணியை கையாளாத நவயுக திரைப்பட இயக்குனர்கள் மூன்றாவது பகுதியிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
வங்க கிராமமொன்றின் அந்திப்பொழுதில் நிலவக்கூடிய பேரமைதியை பதிவு செய்வதற்கான முறைமையை நீங்கள் சுயமாக கண்டடைய வேண்டும். சருகுகளால் மூடப்பட்டிருக்கும் கண்ணாடி தாள்களை போலிருக்கும் நீர் நிலைகளின் மீது உராய்ந்து செல்லும் காற்றலைகளையும், அடுப்புகளில் கனன்றுகொண்டிருக்கும் தீ ஜூவாலைகளிலிருந்து நிலவெளி முழுவதிலும் பறந்தலைந்து மேகங்கள் வரை நீள்கின்ற புகையுருக்களையும், வீடுகளில் வடித்தெடுக்கப்படும் சோற்று கட்டிகளையும், இரவின் திண்மை அதிகரிக்க அதிகரிக்க பேரரவம் எழுப்புகின்ற விட்டில்களையும் பதிவு செய்ய நாம் சுயமாக காட்சிமொழி ஒன்றினை கண்டடைய வேண்டும்
– பதேர் பாஞ்சாலி உருவாக்கம் குறித்து சத்யஜித் ரே
மிகுந்த துயரம் கொண்ட காயப்பட்ட ஒரு ஆத்மாவை இக்கதைகளில் என்னால் அடையாளம் காணமுடிந்தது. இதை எழுதிய மனுஷியை அறிந்தவன் என்பதால், என்னால் அந்தத் துயரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பங்கு கொள்ளவும் முடிகிறது. என்றாலும், இதயத்திலிருந்து வழியும் குருதியை ஒற்றை விரலால் துடைத்துவிட முடியாது. ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டு நிலைமை சீர்பெறும் வரைக்கும், தமயந்தியும் என்னை உள்ளிட்ட வாசகர்கள் யாவரும் ரத்த சாட்சிகளாக மட்டுமே இருக்க முடியும்.
வாசகர்கள் ஒரு முக்கியமான எழுத்துக் கலைஞரோடு கைகுலுக்கப் போகிறார்கள். மிகவும் அருமையான தருணங்களை அவர்கள் சந்திக்கப் போகிறார்கள்.
தனக்குள் தானே என்னும் உணர்வுகளுடன் உரையாடும் சக கவிஞர்களுடன் நிம்மி சிவா இணைந்துக் கொள்கிறார் அவருடைய வட்டம் அவருக்கேற்றாற் போல் நெளிந்துக் கொடுக்கிறது சில சமயம் சதுரமாகவும்.
நட்பு துரோகம் பிரிவு பசி துயரம் என அனைத்தையும் சாடியிருக்கிறார். ஓர்
அறிமுக உரையில் வாசிப்பவர்களுக்கென பெரும்பகுதியை மிச்சம்
வைப்பதே எழுத்தாளருக்கு செய்யும் நியாயம் என்பதால் வாசிப்பாளர்களுக்கு
வழிவிட்டு வாழ்த்துகிறேன்.
கவிஞர் நிம்மி சிவாவிற்கு எனது அன்பும் முத்தங்களும்
- பாலைவன லாந்தர்
“நாவுக்கடியில் ஒளித்து வைக்கப்படும் இனிப்புபோலத் தான் இக்கதைகள் என் மனதில் இருந்தன. கதைகளை கண்டடைவதும் வெளிப்படுத்துவதும் சிறந்த மனப்பயிற்சியாக இருந்தது அப்போது. இந்தக் கதைகள் இனிய மனநிறைவோடு எழுதியவை என்றே நினைக்கிறேன். தொகுப்பிற்காக மீண்டும் வாசித்தபோது ஆழ்மனதை சென்றடைந்த அதே பரவசத்தை இப்போதும் உணர்ந்தேன். கதைகளை வேறுஒரு தளத்தில் நின்று பார்க்கும்போது நான் அடையும் பெருமிதம் மற்ற உலகியல் பெருமிதங்களுக்கு பலபடிகள் மேலானதாக இருந்தது. தொடர்ந்து எழுதிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்க இதைத்தான் காரணமாக சொல்லமுடியும்.”
அவனுக்கு இந்தக் கணம் மழையில் நனைய ஆவலானது. கண்கூசும் வெளிச்சத்தை உதறி இறுக்கமாய்க் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு மாத்திரம் மழை கொட்டத் தொடங்கிற்று. அடைமழையில் நனைகிறாற்போல் உடலெல்லாம் சிலிர்த்தது. லேசாய்க் குளிரில் நடுங்கினான். மழையின் ஆக்ரமிப்பு சற்றே குறைந்தாற்போல் தோன்றியது. கண்களைத் திறக்கவே இல்லை. இன்னும் வந்த வழியிலேயே மழை தீர்ந்து போகும் வரை அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தான். மழையின் கட்டுப்பாட்டிற்குள் சகலமும் வந்து விட்டாற்போல் தோன்றியது கண் திறந்தான்.கொட்டுமேளச் சத்தத்தோடு உற்சவர் வந்துகொண்டிருந்தார்.
இத்தொகுப்பிலுள்ள கதைகள் பலவும் சிறுகதைக்கான இலக்கணத்துக்குள் பொருந்திவரக்கூடியவை. சொல்லாது மறைத்த பகுதிகளால் மேலும் கனம் கூடியவை. வெவ்வேறு புதிய நிலக்காட்சிகளையும் காடுகளின் வசீகரமான சித்திரங்களையும் கொண்டிருப்பவை. மனித வாழ்வின், உறவுகளின் தீராத புதிர்களும் அவற்றில் எஞ்சி நிற்கும் நம்பிக்கையுமே இந்தக் கதைகளுக்கு ஆதாரமாய் அமைந்திருக்கின்றன. எண்ணிக்கையிலும் எடுத்துக்கொள்ளும் களங்களிலும் சொல்கிற உத்திகளிலும் கலைச்செல்வி காட்டும் முனைப்பும் தீவிரமும் வியப்பைத் தருகின்றன. இந்த முனைப்பும் தீவிரமும் தொடரும்போது அவரது படைப்புகளின் எண்ணிக்கையும் கனமும் கூடும். வாசகர்களிடத்தில் அதிக கவனம் பெறும். தன்னை கண்டடைய எழுதிய கதைகள் பிறருக்கும் அவ்வாறே உதவிடக்கூடும். அதுவே அவரது எழுத்துக்கு அர்த்தம் சேர்க்கும்.
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்