Description
தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
வாழ்வின் தீரா ஆச்சரியங்களும் முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக ப்ரகாஷ் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்களில் பொதிந்து கிடக்கிற காமத்தின் மூர்க்கத்தனமும், வன்மமும் தெறிக்கத் தெறிக்க, அதன்பொருட்டெழுகிற பகையுணர்ச்சி என அவர் காட்டுகிற உலகம் என்றென்றைக்குமானது. பாலுணர்ச்சியின் எல்லையற்ற கற்பனைகள், உள்மன விகாரங்கள், அதன்மீதான சுய பகடிகள் என கதைகளில் இழையோடுகின்றன.
ப்ரகாஷ் கதைகளில் வீழ்ச்சியுற்ற, தோல்வியடைந்த மனிதர்களை நாம் நிறைய சந்திக்கலாம். தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்துகொள்கிறோம். நன்றாக வாழ்ந்தவர்கள், காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச் சவாலுக்குரிய ஒன்று. துரோகங்கள், காயங்கள், புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள் என எல்லாச் சோதனைகளையும் சந்தித்து இடிபாடடைந்து, கைவிடப்பட்ட பழைய வீட்டைப் பார்ப்பதற்கொப்பானது. அதிலிருந்து மனதைச் சுத்திகரித்து மீள்வதற்கு, கடும் பிரயத்தனமும், அசாத்திய நம்பிக்கையும் தேவை. வாழ்க்கையின் பிரம்மாண்டமான பகாசுரச் சக்கரங்களின்கீழ் நசுங்கி வதைபடும் மனித மனங்களில் உறவுகளுக்கிடையே ஏற்படுகிற சிக்கல்களால் கீழ், மேல் நிலைகளுக்கு நாம் தள்ளப்படுகிறோம். ப்ரகாஷ் தன் கதைகளின் வழியே அறியத் தருகிற மன அமைப்புகளை உள்வாங்கி அவதானித்தோமென்றால், எதன்பொருட்டு இச்சிக்கல்கள் நம்மை அலைக்கழிக்கின்றன என்ற ஒரு இழையை உணர முடிகிறது. முடிவற்று எழுகிற காமம், ஒளிக்கப்படுகிற, அடக்கப்படுகிற அந்தரங்க உடலெழுச்சிகள், அதனால் ஏற்படுகிற குழப்பமும் சோர்வும் அலைக்கழிப்புகளும் முடிவற்ற நெடுங்கதையாக காலங்காலமாகத் தொடர்வதைப் புரிந்து கொள்ளலாம்.

















Reviews
There are no reviews yet.