1971முதல் 1976வரை அம்பை எழுதிய கதைகள் இதில் உள்ளவை. ‘சிறகுகள் முறியும்’ தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும் கதைகள் இவை. 1967இல் சென்னையில் தொடங்கி 1976இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய கற்பனைப் பதிவுகள். இந்தக் காலகட்டத்திற்குரிய கேள்விகள், பதில்கள், ஐயங்கள், உறவுச் சிக்கல்கள், சமரசங்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், தெளிவு, பிரக்ஞை, தனிமைப்படுதல் இவையெல்லாவற்றிலும் கட்டப்பட்ட கதைகள். அம்பை: அம்பை (பி. 1944) இயற்பெயர் டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி. வரலாற்றாசிரியர்; புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் ‘The Face Behind the Mask’, ‘The Singer and the Song’, ‘Mirrors and Gestures’ என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுதிகள் ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013), அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014). இவரின் கதைகள் ஆங்கிலத்தில் ‘A Purple Sea’, ‘In a Forest, A Deer’, ‘Fish in a Dwindling Lake’, A Night With a Black Spider, A Meeting On the Andheri Over Bridge என ஐந்து தொகுதிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிலாவின் ‘Fragrance of Peace’ கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார். விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011) முதலானவற்றைப் பெற்றிருக்கிறார். SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார்.