மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார். தமிழின் நவீனத் திறனாய்வுவரலாற்றுப் போக்குகளை வகைப்படுத்தி, அவற்றின் வன்மை மென்மைகளைக் காட்டுகிறார். மாணவர்கள் அக்கருத்துகளைப் பொருத்திப் பயில்வதற்காகப் பிற்சேர்க்கையாகச் சில கவிதைப் பகுதிகளையும் தந்துள்ளார். இந்த நூல் வெளிவந்ததற்குப் பின்னான அரை நூற்றாண்டில் தமிழில் வெவ்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் எழுச்சி பெற்றுள்ளன. இந்தப் போக்குகளை விளங்கிக்கொள்ள வழிகாட்டியாகவும் ‘இலக்கியமும் திறனாய்வும்’ திகழ்கிறது. பொருள் ஆழங்குன்றாமல் விளங்க வைக்கிறது கைலாசபதியின் தமிழ் நடை.