நவீனக்கவிஞர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு ‘பென்னம் பெரிய’நூல் இதற்குமுன் வந்ததில்லை. சில கவிதைகளின் பொருளைக் கல்யாணராமன் விவரித்துச் செல்லும்போது உடன் பயணப்பட்டு வெவ்வேறு தளங்களையும் சென்றடைந்துவிடுகிறோம். சமகால இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளின் தேவையான பகுதிகளை எல்லாம் கவிதை விளக்கத்திற்குப் பயன்கொண்டிருக்கிறார். ஆத்மாநாம் கவிதைகள் எழுதப்பட்ட காலத்தைவிடவும் இன்று ஒளிபெற்றுத் துலங்குவதை விளக்குவதே ராமனின் நோக்கமாக இருக்கிறது. கவிதையில் நயங்களைப் பேசுவது என்னும் பழைய அணுகுமுறையை லாவகமாகக் கடந்து நுட்பங்களைப் பேசும் அணுகுமுறை ராமனுடையது. ஆகவே ராமனின் தர்க்கத்தோடு உடன்பட்டு அவரது முடிவை நோக்கி நாமும் இயல்பாகச் செல்ல இயல்கிறது. விமர்சனத்தின் ஒருபகுதியாகப் பாட வேறுபாட்டு ஆய்வுக்குள்ளும் நுழைந்தார். இயல்பில் அவர் நூலின் மிகச்சிறுபகுதிதான் இவ்வாய்வு. ஆனால் பொருட்படுத்தத்தக்கவிதத்தில் இப்பகுதி விளங்குகிறது, ராமனின் கருத்துகளோடு உடன்படலாம்; முரண்படலாம். அது பிரச்சனையில்லை. நவீனக் கவிதை பற்றி இப்படி ஒரு நூலை எழுதி முன்கை எடுத்திருக்கிறார். கவிதை கற்கவும் கவிஞனைப் போற்றவும் ‘ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம்’ காட்டும் இந்நூல் நிச்சயம் உதவும். பெருமாள்முருகன்