அரேபியர் அல்லாதவர் மொழியற்றவர் என்று கருதுகிற அளவுக்குத் தங்கள் கவித்துவம் குறித்தும், உணர்வாற்றல் மிக்க மொழித்திறன் குறித்தும், நினைப்பதைக் கவிதையாகப் பாடும் திறன் குறித்தும் பெருமிதம் கொண்டிருந்த அரேபியர், கலைகள் பூத்துக் குலுங்கிய பாரசீக மண்ணை கிபி. ஏழாம் நூற்றாண்டில் வெற்றிகொண்டனர். பாரசீகப் பண்பாடுகளும் நாடோடிக்கதைகளும், கலைத்திறனும், அரபிகளின் புனைவாற்றலுடன் ஒன்றிணைய உலக இலக்கியம் மீதான புதிய ஒளியுடன் வெளிப்பட்டது பாரசீக இலக்கியம்.