உன் அம்மாவிடமிருந்து நான் பிரிந்ததில் என்ன தவறைக் கண்டாய் மகளே? நான் ஏன் இந்த நாவலை அணங்கிலிருந்து தொடங்கவேண்டும்? ஏன் ஓர் ஐஸ்கிரீமால் மதுரையை எரிக்க முடியாதா? வலியாக இருக்கிறது. தமிழர்கள் நெருப்பாலும் கொத்துக்குண்டுகளாலும் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏன் உன் நாவலை கண்ணகியிலிருந்துத் தொடங்குகிறாய்? தமிழ்த் தேசியத்தைக் கட்டமைத்த முதலும் கடைசியுமான ஒரே வேந்தன் மற்றும் பாவலன் இளங்கோதானே? அதிகாரத்தின் கொடுங்கோண்மையை எதிர்த்த முதல் குரல் கண்ணகியின் குரல்தானே? அதனால் கண்ணகியிலிருந்துத் தொடங்குகிறேன்.
உனது உதடுகளைத் தின்று தீர்ப்பது எப்படி மாதவி? கடல் அலைகள் எதிர்கொண்டு ஒன்றோடொன்று மோதிக்கொள்வதுபோல உனது மேல் கீழுதடுகள். உப்புச் சொற்களாக தமிழ் வெளியெல்லாம், புகாரின் கடல் வெளியெல்லாம் மிதக்கின்றன நம் முத்தங்கள். முத்தங்களை ஒன்றுகூட்டி செய்யப்பட்டவள் மாதவி. அணங்கே கொஞ்சம் வழிவிடு, என் நாவலை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.