ஒரு கதையில் கனவுக்கான மொழி நம்மிடம் இல்லாததாலேயே அதை எழுத முடிவதில்லை என்கிறார் ஆசிரியர். ஆனால் தொகுப்பின் பல கதைகள் கனவில் நிகழ்வது போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்குகின்றன. வாழ்வின் சாபங்களையும் மனிதர்களின் அவலங்களையும் பூடக மொழியில் எழுதிச் செல்கிறார் ஜீ.முருகன். எந்தக் கதையின் முடிவும் இன்னொரு தொடக்கத்தை வேண்டி நிற்பதே இதற்குச் சான்று. சமகால அரசியலைப் பகடி செய்யும் நடையில் சித்திரப்படுத்தியிருக்கும் ‘கைவிடப்பட்ட கதை’யும், ஆவணக் கொலைகளை விவரிக்கும் ‘பாம்பு’ கதையும் தொகுப்பில் இருவேறு நடையில் புதிய அனுபவத்தைத் தருகின்றன. ஏழு ஆண்டுகளாக எழுத்திலிருந்து விலகி இருந்த ஜி.முருகன், அந்த இடைவெளியை ‘கண்ணாடி’ சிறுகதை தொகுப்பு மூலம் பூர்த்திசெய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
-விகடன் ’தடம்’