அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நடைக்குப் பேர்போனவை. ‘காலச்சுவடு’, ‘காலம்’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த அவரது பத்திகள் அடங்கிய தொகுப்பு இது. சுஜாதா, அசோகமித்திரன் முதலியோரின் படைப்புகள், ஆளுமைச் சித்திரங்களில் தொடங்கி, ஜப்பான் அரசு நடைமுறைப்படுத்திய ‘ஆறுதல் அணங்குகள்’ குறித்த நூல்கள், சதாம் ஹுசைன் போன்ற சர்வாதிகாரிகளின் நாவல்கள், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி முதலியவை உருவான விதம், அகராதி, சொற்களஞ்சிய உருவாக்கங்களில் மறைக்கப்பட்ட பெண் பங்களிப்பு, பிரசித்திபெற்ற மேற்கத்திய நூலகங்கள் பற்றிய அனுபவம், எழுத்துத் திருட்டு, ஆசிரியர் வாசித்த நாவல்கள், அ-புனைவுகள், புத்தகம் பற்றிய புத்தகங்கள், உலக அளவில் பரிசுகளை வென்ற, வெல்லாத நூல்கள் குறித்த அறிமுகங்கள் எனப் பல்வேறு நதிகளில் நீந்திக் கரையேறுகிறது இந்நூல். புத்தகத்தின் மீதான தன் தீராக் காதலை வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி வாசகரிடத்தில் வெகு சுவாரசியமாகக் கடத்துகிறார் சுகிர்தராஜா