நோம் சோம்ஸ்கி என்னும் உலகம் போற்றும் அமெரிக்க அறிஞர் தத்துவம், உளவியல், சமூகவியல், மொழியியல், கணினியியல், அரசியல் விஞ்ஞானம் என எந்தவொரு தளத்திலும் அறிமுகத்திற்கு அப்பாற்பட்டவரல்லர். அவரைப் பற்றியும், ஒரு மாமனிதராக உருவான பின்புலம் பற்றியும் இன்னும் கூடுதலாக அறிந்துகொள்ள ஆர்வப்படுவோருக்கு இந்நூல் அறிமுகத்திற்கு அப்பாற்பட்ட செய்திகள் அடங்கியது. ஐம்பதுகளில் நடந்த மொழியியல் போர்களும், தாமஸ் கூனின் வார்த்தைகளில் கூறினால் சோம்ஸ்கிய மொழியியல் என்னும் அறிவியல் புரட்சியும், சோம்ஸ்கிய மொழியியல் கோட்பாட்டுக் கருத்தியல்கள் பற்றிய விரிவான விளக்கங்களும், விமர்சனங்களை உள்வாங்கி மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் அவரின் இலக்கணக் கோட்பாட்டு முன்மாதிரிகளின் வரிசையும் இந்நூலின் ஆறு அத்தியாயங்களின் உள்ளடக்கம். தம் சமகாலச் சமூக, அரசியல் பிரச்சனைகளுக்குக் கூருணர்ச்சிமிக்க அரசியல் விஞ்ஞானியாய்க் கொள்கை மறுப்பாளராகவும், அறப் போராளியாகவும் சோம்ஸ்கி விஸ்வரூபம் எடுக்கும் தளங்கள் இந்நூலின் இறுதிப்பகுதி. மொழியியல் அறிஞராக ஒற்றைப் பரிமாணத்தில் அறியப்படும் சோம்ஸ்கியின் பன்முகத்தை இந்நூல் முழுமையாகக் காட்டுகிறது.