பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானதில்லை. அதுவும் தகுந்த வழிகாட்டுதலின்றி துணையின்றி இருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு அப் பருவம் தரும் அலைக்கழிப்பும் அதிர்ச்சியும் ஆழமானவை. சிக்கலான இக்காலகட்டத்தில் அச்சிறுமி எதிர்கொள்ளும் மனக் குழப்பங்கள், அவளது உடலில் ஏற்படும் கிளர்ச்சியும் குதூகலமுமான மாற்றங்கள், அவளைச் சுற்றியுள்ள மனிதர்களின் புதிரான உலகம், எப்போதும் புகைமூட்டமானதாகவே வெளிப்படும் உறவுகள், ஆசைகள், துயரங்கள், அச்சங்கள் என யாவற்றையும் எளிய மொழியில் சித்தரிக்கிறது இந் நாவல். நிர்மல் வர்மா: நிர்மல் வர்மா (1929-2005) சிம்லாவில் பிறந்து வளர்ந்து தில்லியில் வாழ்ந்தவர். வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இந்தி இலக்கியத்தின் நயி கஹானி (புதிய சிறுகதை) மரபின் முன்னோடி. நவீன இந்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளரான இவர் பன்முக ஆளுமை மிக்கவர். நாவல், சிறுகதை, கட்டுரை, பயணக் கட்டுரை, மொழியாக்கம் என அனைத்துத் துறைகளிலும் அழுத்தமான முத்திரை பதித்தவர். செக்கோஸ்லாவாக்கியாவின் பிராக் நகரில் இலக்கியப் பணிக்காகப் பத்தாண்டுகள் தங்கியிருந்தார். போபாலில் உள்ள நிராலா படைப்பிலக்கிய மையத்திற்கும் சிம்லாவில் உள்ள யஷ்பால் படைப்பிலக்கிய மையத் திற்கும் தலைவராகப் பணியாற்றினார். சாகித்திய அகாதெமி பரிசையும் (1985), ஞானபீடப் பரிசையும் (1997), பத்மபூஷன் விருதையும் (2002) பெற்றார். கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, சமூக அக்கறை எனப் பல்வேறு தளங்கள் சார்ந்து அவரது கருத்துக்கள், ஐம்பதாண்டுகால இந்தி அறிவுத் தளத்தில் பெரிதும் மதிக்கப்பட்டிருந்தன.