புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது, அதன் கருதுகோள்கள், சரிநிலைகள், பண்பாடு, பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும். எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங்களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. அவற்றில் முதன்மையானதாக வேலை, குடும்பம், சமூகம் எனச் சகல இடங்களிலும் வியாபித்திருக்கும் நிச்சயமற்ற தன்மையையும், அதன் உபவிளைவாகக் கிளர்ந்தெழும் தனிமையையும் குறிப்பிடலாம். திடும்மென முளைத்த இக்கண்ணாடித் தீவுகளுக்குள் குடிபெயர்ந்த நம்மவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நம் நிலம் சார்ந்தவை. அவ்வகையில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வெளியே இருப்பவர்கள் தங்கள் ஜன்னல்கள் வழியே வேடிக்கைபார்த்து உலவவிட்ட கதைகளை இந்த ‘நட்சத்திரவாசிகள்’ மறுக்கிறார்கள். மனிதன் எத்தனை அதி நவீனமடைந்துவிட்டான் என இந்த நூற்றாண்டு வரைந்துகாட்டும்போதே அவன் உள்ளே எத்தனை பழைமையானவன் என்பதை நோக்கியும் ‘நட்சத்திரவாசிகளின்’ ஒளி சுழல்கிறது. கார்த்திக் பாலசுப்ரமணியன்: கார்த்திக் பாலசுப்ரமணியன் (பி. 1987) இவர் 1987ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை கோவையில் முடித்தவர், பணியின் நிமித்தம் நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி போன்ற நகரங்களில் வசித்திருக்கிறார். தற்போது சென்னையில் மனைவி, மகனுடன் வசித்துவருகிறார். ஒரு மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகின்றார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. மின்னஞ்சல்: karthikgurumuruganb@gmail.com