எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘நாலுகெட்டு’ நாவல் வெளியான அறுபதாம் ஆண்டு இது. எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசக ஏற்புக்கு உரியதாகவும் இலக்கிய விவாதங்களில் எடுத்துக் காட்டப்படும் முன்னுதாரணப் படைப்பாகவும் ஆய்வுக்குக் கொள்ளப்படும் இலக்கிய ஆவனமாகவும் திகழ்கிறது. அப்புண்ணி என்ற மையப்பாத்திரத்தின் அக, புற சஞ்சாரங்கள்தாம் நாவலின் கதையோட்டம். மருமக்கள்தாய முறையின் தூல வடிவமான நாலுகெட்டுத் தறவாட்டுக்குள் – கூட்டுக் குடும்பத்துக்குள் – நிகழும் உறவு மோதல்களையும் அதிகாரச் சிக்கல்களையும் பின்புலமாகக் கொள்கிறது. அதன் விரிவாக நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் அடையாளம் காட்டுகிறது. இந்த இயல்புகளால் கேரளத்தின் ஒரு பகுதியின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது. ‘நாலுகெட்டு’ சமகால மலையாள நாவல் கலையின் செவ்வியல் ஆக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானதுடன் பதினான்கு மொழிகளில் பெயர்க்கவும் பட்டுள்ளது. எம்.டி. வாசுதேவன் நாயர்: எம்.டி. வாசுதேவன் நாயர் (பி. 1933) எம்.டி. என்று கேரள சமூகம் நேசத்துடன் அழைக்கும் மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர், அன்றைய மலபார் மாவட்டம் பொன்னானி வட்டத்தைத் சேர்ந்த கூடலூர் கிராமத்தில் பிறந்தார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் வேதியியல் பயின்று பட்டம் பெற்றார். ‘மாத்ருபூமி’ இதழின் துணையாசிரியராகவும் பின்னர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பல துறைகளிலும் இயங்கிப் புகழ்பெற்றவர். நாவல்கள் (9), சிறுகதைகள் (16 தொகுப்புகள்), நாடகம் (1), சிறார் இலக்கியம் (2), பயணக் கதை (1), நினைவுக் குறிப்புகள் (2), இலக்கிய, பண்பாட்டுக் கட்டுரைகள் (5) ஆகிய இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்துள்ளவர். கேரள சாகித்திய அக்காதெமி, சாகித்திய அக்காதெமி, ஞானபீடம் போன்ற அமைப்புகளின் உயர்ந்த விருதுகள் உட்பட 25க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். 2005இல் இந்திய அரசின் பத்மபூஷண் விருது எம்.டி.க்கு அளிக்கப்பட்டது. எம்.டி. அவரே இயக்கிய எட்டுப் படங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். சிறந்த திரைப்பட இயக்குநராக மூன்று முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றதுடன் கதை, திரைக்கதைக்காகவும் இருபது முறை விருதுகள் பெற்றிருக்கிறார். ஏழு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். திரைத்துறைச் சாதனையாளர்களுக்கான கேரள மாநில அரசின் உயர்ந்த விருதான ஜே.சி. டானியல் விருது இவருக்கு 2013இல் வழங்கப்பட்டது. தற்போது கோழிக்கோட்டில் வசிக்கிறார்.