சமகால நவீன கவிதையின் குறிப்பிடுவதற்குரிய சுய முகங்களில் ஒன்று பா. தேவேந்திரபூபதியினுடையது. பத்துப்பதினைந்து கவிஞர்கள் சமகால தமிழ்க்கவிதையை உள்ளடக்கத்தின் பழம்பாசியிலிருந்து அகற்றி, அதேசமயம் தொன்மரபின் தொடர்ச்சி கெடாமல் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இது ஒரு கவிதை இயக்கமாகத் தமிழில் நடந்தது. உலகின் எந்தச் சிகரத்திலிருக்கும் கவிஞனோடும் சம அந்தஸ்துக்கும் மேலே உறவுகொள்ளும் தகுதி கொண்டது சமகாலத்தின் இந்த மாற்றம். இதன் சுவடுகளால் நிறைந்தவை தேவேந்திரபூபதியின் கவிதைகள். அன்றாட நிகழ்வுகளில் சகலவிதமான அனுபவங்களையும் ஆன்மீகத் தளத்திற்கு நகர்த்த இக்கவிதைகள் முயற்சி செய்கின்றன. புற தளங்களின், அலங்காரங்களின் பாசாங்குகளைக் கடக்கவும், அன்பின் ஸ்தூல வடிவை முன் நகர்த்தவும் எத்தனிக்கும் இவரது கவிதைகள்; ‘அன்பு வெகு தூரத்திலிருப்பது! வழியெங்கும் தடைகள்’ என்பதைக் கண்டுபிடிக்கவும் செய்கின்றன. புற உலகின் பற்றுதல்களை அன்பின் கரத்தால் புறந்தள்ளுதலின் மொழி உருவமே இந்த ‘நடுக்கடல் மௌனம்.’ லக்ஷ்மி மணிவண்ணன்