மேற்கத்திய நாடுகளில் பிரபலமான சயின்ஸ் ஃபிக் ஷனைத் தமிழுக்கு புது அறிமுகம் செய்து வைத்தவர் சுஜாதா. அறிவியலும் கற்பனையும் சுஜாதாவும் ஒன்று கலக்கும் போது சுவாரஸ்யங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் பரவசங்களுக்கும் பஞ்சம் இருக்குமா? ஒவ்வொரு கதையைத் தொடங்கும் போதும், விமானம் பறக்கத் தொடங்கும் பரவச உணர்வு! முற்றிலும் எதிர்பாராத இடத்தில் கதை முடிவடையும் போது, சட்டென்று விமானம் தரையிறங்கும் பய உணர்வு படர்கிறது. சுஜாதாவின் அக்மார்க் அறிவியல் சிறுகதை தொகுப்பு. கதை சொல்லும் பாணி மட்டுமல்ல இதிலுள்ள ஒவ்வொரு கதைக் களமும் சூழலும்கூட புதிதுதான். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள், சுஜாதா எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்து 1963லிருந்து 1972 வரை அவர் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இவை வருஷ ரீதியில் வரிசை அமைந்திருப்பதால் அவர் எழுதிய பாணியிலும் விஷயத்திலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தொகுதியில் உள்ள, ‘சசி காத்திருக்கிறாள்’ என்கிற 1966ல் வெளிவந்த கதையை பலர் 2000 ஆண்டுகளிலும் ஞாபகம் வைத்துக்கொண்டு சுஜாதாவிடம் குறிப்பிட்டு சிலாகித்திருக்கிறார்கள்.