பல்வேறு நாடுகளின் பண்பாட்டுப் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் பதின்மூன்று சிறுகதைகள் அடங்கியது இத்தொகுப்பு. அறிவும் அனுபவமும் ஒன்றையொன்று நிறைவுசெய்யும் விதமாகப் புனையப்பட்டிருக்கும் இக்கதைகளில் எழுத்தாளனுக்குரிய நுண்ணுணர்வோடு ஓர் அறிவியலாளனுக்குரிய கூர்நோக்கும் ஒருங்கே வெளிப்படுவதைக் காணலாம். இக்கதைகளினூடே மிக மெலிதாகத் தொனிக்கும் அங்கதம் மேலெழுந்தவாரியான நமது நாகரிக நடத்தைகளைப் பரிகசிக்கும் அதே வேளையில், உள்ளார்ந்த மனநெகிழ்வை மனிதாபிமானத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. சொல்லியவிதத்தால் புனைவின் வசீகரத்தைப் பெறும் அறிவியல் உண்மைகளை இத்தொகுப்பின் தனித்தன்மை எனச் சுட்டலாம். ஆசி. கந்தராஜா: ஆசி. கந்தராஜா (பி. 1950) ஆசி கந்தராஜா, ஆஸ்திரேலிய ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர், பூங்கனியியல், உயிரியல் தொழில் நுட்பத்துறைப் பேராசிரியர். யாழ்ப்பாணத்திலுள்ள கைதடி கிராமத்தில் 25ஆம் திகதி தை மாதம் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையார் ஆ. சின்னத்தம்பி, புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ் ஆசான். ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்தவர், பணிபுரிந்தவர். தற்போது ஓய்வுபெற்று முழுநேரமாக எழுதிக்கொண்டிருக்கிறார். ஜெர்மன் அரசின் புலமைப் பரிசில் பெற்று இலங்கையிலிருந்து 1974ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டுக்கு உயர் கல்வி கற்கச் சென்றவர், கிழக்கிலும் மேற்கிலுமாக மொத்தம் பதின்மூன்று ஆண்டுகள் வாழ்ந்தவர். இப்பொழுது ஆஸ்திரேலியாவில் முப்பது ஆண்டுகளாக (2017) வாழ்ந்து வருகிறார். யப்பான், சீனா, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், வியட்நாம், தென்கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், யுகண்டா, கென்யா, தன்சானியா, எத்தியோப்பியா, தென்ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு வருகைதரு பேராசிரியராகச் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சிறப்பு விரிவுரைகளும் பயிற்சி வகுப்புகளும் நடத்தியவர். அங்கு அவர் கண்ட தரிசனங்களே சிறுகதைகளாகவும் குறுநாவல்களாகவும் புனைவுக் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளன. இலங்கை சாகித்திய விருது உட்பட இலங்கை இந்திய நாடுகளில் பல விருதுகள் பெற்றவர்.