மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களுடனும் வாழும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றவர் அரவிந்த் குமார். இதன் பிரதிபலிப்பை இக்கதைகளில் காணலாம். எங்கிருந்தாலும் மனிதர்களின் தேட்டமும் ஆர்வமும் என்னென்னவாய் இருக்கின்றனவென்பதை இக்கதைகள் பேசுகின்றன. ஒவ்வொரு வாழ்க்கை முயற்சியிலும் கண்டடைகின்ற உண்மைகளுக்கு விசுவாசமாய் இருக்க முனைகிற பாத்திரங்கள் இங்கே நிறைய! அன்பையும் உறவையும் மாத்திரமல்ல, வக்கிரங்களையும் கைமாற்றிக் கொடுக்கின்றவர்களோடும் நாம் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறோம்; அத்தகைய நிர்ப்பந்தங்களைக் கதைகளாக்கியிருக்கிறார் ஆசிரியர். மீற முயலாமலே மீறிச் செல்வதும் மீறிச் செல்ல முயன்றாலும் மடங்கி விழுவதுமென நம்மிடையே நிகழ்கிற ரசவாதங்களே ‘தேசம்மா’. க. அரவிந்த் குமார்: க. அரவிந்த் குமார் (பி. 1980) வடசென்னையின் புதுவண்ணாரப்பேட்டையில் பிறந்தார். பள்ளிப்படிப்பை வடசென்னையிலும் கல்லூரிப் படிப்பை மீனம்பாக்கத்திலும் முடித்தார். தற்போது குரோம்பேட்டையில் வசித்துவருகிறார். அச்சு ஊடகத் துறையில் செய்தியாளராக வாழ்க்கையைத் தொடங்கிப் பல செய்தித் தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராகவும் இருந்துள்ளார். ‘வனம், வானம், வாழ்க்கை’ என்ற கட்டுரைத் தொகுதி இவருடையது. முன்னணி இதழ்களில் சிறுகதைகளை எழுதிவருகிறார். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.