புதிய தலைமுறைச் சிறுகதையாளர்களில் கவனம் கொள்ளப்பட வேண்டியவர்களும் பேசப்பட வேண்டியவர்களுமானவர்களில் ஒருவர் குமாரநந்தன். அவர் கதைகள் ஆரவாரமற்றவை; ஆனால் அடியோட்டங்கள் நிரம்பியவை. எதார்த்தமான நிகழ்வைச் சித்திக்கும்போதே அதற்குள்ளிருக்கும் இன்னொரு எதார்த்தத்தை முன்வைக்க அவர் முனைகிறார். ஒன்று நடைமுறை; மற்றது அதன்மீதான அலசல். இந்தப் பகுப்பாய்வைக் கனவுகளின் வழியாகக் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் கனவே நடைமுறையாகிறது. அந்தக் கணத்தில் விசித்திரமான விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த விளைவுகள்தாம் அவர் கதைகள். இந்தக் கதைகளில் குடும்பத்தின் வன்முறையும் காமத்தின் வீச்சும் துரோகத்தின் சமாளிப்பும் வன்மக் கொலையின் நிர்த்தாட்சண்யமும் பேசப்படுகின்றன. சமூக நியதிகளும் ஒழுக்க மதிப்பீடுகளும் உடைத்து வார்க்கப்படுகின்றன. மனிதர்கள், சன்மார்க்கர்களா துன்மார்க்கர்களா? இரண்டும் இல்லை; இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள்; நம்மைப் போன்றவர்கள். அன்றாட ஒப்பனையிலிருக்கும் நமது அறியப்படாத இன்னொரு முகத்தைக் கொண்டிருப்பவர்கள் என்கின்றன குமாரநந்தன் கதைகள்.