பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்துவந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்ல மெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப்போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம். ‘அம்மாவின் ரகசியம்’ குறு நாவலில் வரும் முத்துலதாவுக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது எப்படி உருவாகியது, அந்த ரகசியத்தை அவள் எப்படித் தாங்கினாள், ஏன், எப்படி அதை வெளியிடத் தீர்மானித்தாள் போன்றவற்றின் ஊடே கதை தன் பாதையை அமைத்துக்கொள்கிறது.