அறிஞர் தொ. பரமசிவனின் ‘அழகர் கோயில்’ தமிழில் கோயில்சார் பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டான முழுமுதல் நூல். கல்விப் புலத்தில் உயராய்வு நிலையில் அதன் தாக்கம் உணரப்பட்டது. கல்விப்புலக் கோட்பாடுகளின் குறுக்க மற்ற உரையாடல் மரபிலான ஒரு முறையியலையும் திராவிடவியப் பார்வையையும் தமக்கென வகுத்துக் கொண்டவர் தொ.ப. அம்முறையும் பார்வையும் கொண்டு சங்க காலத்திற்கு முந்தைய சமூகத்திலிருந்து சமகால அரசியல் வரை அவரால் விளக்க முடியும்; விளக்கினார். அவரது ‘அறியப்படாத தமிழக’த்தின் மூலமே அவர் தமிழ்கூறு நல்லுலகெங்கும் அறியப்பட்ட அறிஞரானார். அவரை மேலும் அறிந்துகொள்ளவும், அவ்வப்போதைய அவரது விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டதன் விளைவுகள்தாம் இந்த நேர்காணல்கள்.நாட்டார் தெய்வங்கள் x ‘பெருந்’ தெய்வங்கள், சாத்திரங்கள் சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், பண்பாடு இழையோடும் அன்றாட நடைமுறைகள், கலை, இலக்கியம், கல்வி, சாதியம், திராவிடக் கருத்தியல், ஆளுமைகள் என அனைத்தையும் பற்றிய பார்வைகள் இயல்பான உரையாடலில் சுவையாக வெளிப்படுவதை இந்நேர்காணல்களில் அனுபவிக்கலாம்.