அத்தனையும் என் மண்ணின் எழுத்து. என் வீட்டில், என் ஊரில், நான் பேசுவதை, நான் வாழ்வதை, என் வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் எழுத்து. வாசிக்க வாசிக்க கதையும், அதன் காட்சியமைப்பும் அதில் சொல்லிவரும் விவரங்களும் எனக்குப் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல இருக்கும். புதிய வாசகர்களுக்கு எங்கள் மண்ணின் பழக்கவழக்கங்களும் வட்டார வழக்கும் அறிமுகமாகும். இவரது படைப்புகளில் குறிப்பிடத்தகுந்ததாக நான் கருதுவது கதை மாந்தர்களின் பெயர்கள், புழக்கத்தில் இல்லாத அல்லது இப்போது ஆங்கிலப் பெயர்களைக் கொண்டு மட்டும் அறியப்படும் பொருட்களின் உண்மையான தமிழ்ப் பெயர்கள், கிராமப் பழக்க வழக்கங்கள் மற்றும் காட்சியமைப்பு ஆகியனவாகும். பரிவை. சே. குமாரின் ஐந்தாவது நூலாக ”வாத்தியார்” சிறுகதைத் தொகுப்பை பதிப்பிப்பதில் கேலக்ஸி பதிப்பகம் பெருமை கொள்கிறது. நம் மண்ணின் எழுத்தைத் தொடர்ந்து எழுதி அனைவரிடமும் சென்று சேர்க்கவும், இன்னும் மென்மேலும் உயரவும் பரிவை. சே. குமார்க்கு எமது வாழ்த்துகள்.
மகிழ்ச்சி, பாலாஜி பாஸ்கரன்