“உண்மையே எழுத்தாளனின் தேடல்” எனும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தையை அகத்தில் நிறுத்திக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இந்த “தொன்ம அறம்”.
“தோட்ட விசாவில்” மலேசியா மண்ணில் நான் கால் பதித்தது 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தின் 3-ஆம் தேதி. மலேசிய வாழ்கை முடிவடைந்து ‘கிரீன் ப்ளாண்டேசன் சர்வீஷ்” விசாவில் தாயகம் திரும்பியது, 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி. இக்காலகட்டத்தில், மலேசிய இலக்கிய உலகுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது அங்கிருந்த இறுதி ஆண்டுகளில்தான்.
2017-ல் “வல்லினம்” சிற்றிதழ் நண்பர்களுடன் எனக்கு ஏற்பட்ட நெருக்கம் மூலமாக, “சீ.முத்துச்சாமி” அவர்களை ஒரு இலக்கிய விழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ச்சியாக கித்தா காட்டின் மண் வாசனைக்குள் என்னை மண்புழுவாக புதைத்துக்கொண்டு அம்மண்ணின் அடித்தளமாக உழன்று கொண்டிருந்த அடித்தட்டு மக்களின் மன உணர்வை வாழ்வியல் முறையைத் தேடிப் பயணித்தேன். மண்ணோடு கலந்த தனித்துவ மொழி, பண்பாட்டு விழுமியங்கள் என ஈர வாசம் கொண்ட வேர் மொழி ஒரு அக உலகம்; காட்டு வேலை, வேலையோடு ஏற்படும் உறவு முறைகள், மண்ணுக்கு வெளியேயான நெருக்கடி சூழ்ந்த வாழ்க்கை முறை என புற உலகம்; இப்படியான இருவேறு வாழ்வியல் முறை அவர்களுடையது.
கித்தா காட்டின் மொழி அடர்த்தி கொண்ட எழுத்துக்களுடன் என் மலேசிய வாழ் நாட்களை பதிவு செய்ய வேண்டும் என்ற அகவெழுச்சி இந்த நாவலின் மூலம் நிறைவேறி இருப்பதாக நம்புகிறேன். அம்மண்ணின் வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்த நாவல் என்பதால் மலேயா வார்த்தைகள் கதைக் களத்தில் தவிர்க்க முடியாமல் இடம் பெற்றுள்ளன.
சுதந்திரத்துக்குப் பின்னான மலேசிய வாழ்க்கை நகரத் தொடங்கிவிட்ட மாற்றத்தோடு, பாரம்பரிய தோட்டத்து வாழ்க்கையும் மாறுதல் காண ஆரம்பித்துவிட்ட மாற்றப் பின்னணியுடன் உருப்பெற்றுள்ளது நாவல்.
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோட்ட வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மக்கள் அனுபவித்த அல்லல் என்பது அளவிட்டுச் சொல்ல முடியாதது. ரப்பர் தோட்ட வேலையிலும், கரும்புக் காட்டு வேலையிலும், இரயில் பாதை போடும் வேலையிலும். இரத்தம் சுண்ட வேலை பார்த்தார்கள் அக்காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் ‘சஞ்சிக் கூலிகளாக’ (ஒப்பந்தத் தொழிலாளர்களாக) அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இந்த வரலாற்றுப் பின்னணியையும் கதை களத்தில் இழையோட இந்த நாவலை கட்டமைத்துள்ளேன்.
மலேசியா மண்ணின் தொன்ம நம்பிக்கைகளையும் இந்நாவலில் இழையோட விட்டிருக்கிறேன். தூய யதார்த்தவாதத்தில் அமைந்த கதை என்று இக்குறுநாவலை சொல்ல முடியாது என்றே நம்புகிறேன். அறத்தின் மீதான மனித நம்பிக்கையை மெய்ப்படுத்தும் சில காரணிகள் கதைக்குள் பேசப்பட்டுள்ளன. அக்காரணிகளை கதைக் களத்தின் நிலத்துக்குரிய யதார்த்தத்துடன் புனைவுக் கட்டமைப்பாக வடிவமைக்க முயற்சி செய்துள்ளேன்.
“உணர்ச்சிதான் கலையின் அடிப்படை. உணர்ச்சிப்பெருக்கை ஒதுக்கித் தள்ளிய எழுத்துக்கள் வறட்டுக் கட்டுரைத்தனமாகவே காட்சி பெறுகிறது. உணர்ச்சி இன்றி கலையும் இல்லை, வாழ்வும் இல்லை” என்பார் எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்கள். மகத்தான ஆளுமையான அவரது வார்த்தைகளை இக்குறுநாவல் பூர்த்தி செய்திருந்தால் அதுவே என் நிறைவு.
எழுத்தாளர் துரை.அறிவழகன்
Reviews
There are no reviews yet.