கொங்குமண்டலம் என்று சொல்லப்படும் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் தர்மபுரி ஆகிய பகுதிகளில் எல்லை தெய்வங்களாக இன்றளவும் வழிபடும் குல தெய்வங்களாக இருப்பவர்களே பொன்னர் சங்கர் .
கதையானது பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், கதையின் முக்கிய பாத்திரங்கள் இரண்டு இனங்களை சேர்ந்தவர்களாகவும் (வெள்ளாளர் மற்றும் வேட்டுவ இனத்தார்) பரம்பரைக் கதைகளாக சொல் வழக்கில் கூறப்பட்டு பின்னர் தமிழக கலைகளில் ஒன்றாகிய உடுக்கையடிப்பாடல் மூலம் பிரபலப்படுதப்பட்டு (முக்கியமாக அழியாமல் தொடர்ந்து வழக்கில் இருக்க வகை செய்து) வந்த கதையே இது.
உடுக்கையடிப்பாடல் மூலம் இந்த கதையானது பரம்பரை பரம்பரையாக பயணம் செய்து வந்தது. ஒரு காலகட்டத்தில் எங்கே வெறும் சொல் வழக்கில் இருந்தே அழிந்து விடுமோ என்ற சிந்தனை தலைதூக்க ஆரம்பித்த நேரத்தில் இந்த கதையை எழுத்துருவாக்க பலரும் நினைத்தனர். அவ்வாறே திரு பிச்சை அவர்கள் முன்வந்தார். இவரே இந்த கதையை அண்ணன்மார் கதை என்ற பெயரில் எழுதினார். இவருடைய கதை வடிவை ஒட்டியே இன்றளவும் பலராலும் பொன்னர் சங்கர் கதைகள் எழுதப்படுகின்றன.
கலைஞரின் பொன்னர் சங்கர் தொடர்கதை
எண்பதுகளின் மத்திமத்தில் (17-07-87) குங்குமம் இதழில் கலைஞரின் கைவண்ணத்தில் தொடர்கதையாக வாராவாரம் வந்து (62 வாரங்கள்) கலைஞர் ரசிகர்களால் சிறப்பாக பேசப்பட்ட தொடர்கதை இந்த பொன்னர் சங்கர். தொடர்கதைக்கு கோட்டோவியங்கள் வரைந்தவர் கோபுலு. முதல் வாரம் கலைஞர் கருணாநிதி அவர்கள் பொன்னர் சங்கர் பற்றி ஒரு முன்னுரையை எழுதி இருப்பார். மொத்தம் எட்டு பக்கங்களுக்கு வந்த அந்த முன்னுரை ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல. இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்து அறுவது வாரங்கள் கதை விறுவிறுப்பாக சென்றது. கதை முடிந்த பின்னர் ஒரு முடிவுரையை எழுதி சில விளக்கங்களையும் அளித்தார் கருணாநிதி. ஆக மொத்தம் அறுபத்தி இரண்டு வாரங்கள் வந்த இந்த பொன்னர் சங்கர் தொடர் சிறந்த வரவேற்ப்பை பெற்றது என்பதை கதை முடிந்த பின்னர் வந்த வாசகர் கடிதங்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.