கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் கொணர்ந்த தனி மனித சுதந்திரமும் உலகக் குடிமகன் என்ற கருத்துருவாக்கமும் அதன் எதிர்வினையாக பெருகி வரும் தேச இன உணர்வுகளும் வளர்ந்து வரும் நாடுகளில் சிக்கலான வாழ்வியல் சூழல்களை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் பன்னெடுங்காலமாக போர்களையும் மரணங்களையும் தோற்றுவித்து வரும் நிலங்களிலிருந்து மக்கள் வெளியேறி வாழும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. புது நிலங்களில் தங்கள் வாழ்வு வெறும் பிழைத்திருப்பதிலிருந்து ஒரு படியேனும் மேலோங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அடுத்த நிலையில் புலம் பெயர்தல், ஒரு ஆறுதலான அல்ல ஒரு வசதியான சூழ்நிலையில் அது அமைந்திருந்தாலும் அப்புது மண்ணின் மனிதர்களாக மாறுவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும், இழக்கும் உறவுகளும் மொழியும் பண்பாடும் எதிலிருந்து மீண்டும் முளைக்கும்? இந்த விவாதங்களை எழுப்புவதினாலேயே இச்சிறுகதைகள் உலகத்தன்மையுடன் அனைவருக்குமான கதைகளாக மாறுகிறது.