இந்திரிய சுகங்களுக்கு அடிமையான நிலவுடைமைச் சமூகத்தின் கடைசிக் கண்ணியான முஸ்தபாக்கண்ணிடம், சக்கோலி தின்பதற்காகவும் குமரிப் பெண்ணைக் கூடுவதற்காகவும் பெயர்த்து விற்ற கதவுகளையும் கட்டளைகளையும் தவிர எஞ்சியிருப்பது அதபு பிரம்பும் சாய்வு நாற்காலியும்.மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்டவர்மா மகாராஜா; மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்; நிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள்; சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்களை உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சாவளியினர்; பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப, சமூக, வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் நாவல். தமிழ் இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தோப்பில் முஹம்மது மீரானின் இந்த நாவல், 1997ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது. தோப்பில் முஹம்மது மீரான்: தோப்பில் முஹம்மது மீரான் (1944 – 2019) குமரி மாவட்டத்தின் கடற்கரைக் கிராமமான தேங்காப்பட்டணம் இவரின் சொந்த ஊர். தந்தை முஹம்மது அப்துல் காதர். தாயார் முஹம்மது பாத்திமா. தோப்பு என்பது இவரின் வீட்டுப் பெயர். தேங்காப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அம்சி உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழ் தாய்மொழி. கல்வி பயின்றது மலையாளத்தில். தமிழில் ஆறு நாவல்களும் ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், மலையாளத்தில் இரண்டு நாவல்களும் மலையாளச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளி வந்துள்ளன. சாகித்திய அகாதெமி விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Crossword Book Award’க்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தோப்பில் முஹம்மது மீரான் 10.05.2019 அன்று திருநெல்வேலியில் காலமானார். மனைவி: ஜலீலா. மகன்கள்: ஷமிம் அகமது, மிர்ஷாத் அகமது.