இலங்கையில் 2009 அழிவிற்குப் பின்னான, மீந்துபோன மனிதர்களின் வாழ்வைக் குறித்துப் பெரும் ஏக்கத்துடன் கவிதைகளை முன்னிறுத்துகிறார் கருணாகரன். இயக்கங்களின், மனிதர்களின் வீழ்ச்சியைக் கவிதைகளில் முக்கியப் பேசுபொருளாக்கியிருக்கிறார். போரும் அவற்றின் உற்பத்திகளும் சாட்சியங்களும் அவரிடம் கவிதைகளாக உருப்பெறுகின்றன. இக்கவிதைகள் உயிர்ப்பானவையாய், தன்னிலை இழந்தவையாய் அமைதியின் நறுமணத்துக்கு ஏங்குபவையாய் விரிகின்றன. கருணாகரனிடம் பெரும் சலிப்பும் வாழ்வைக் கண்டடையத் துடிக்கிற ஏக்கமும் உண்டு. இந்த முரண் அவரின் கவிதை உலகில் இயக்குகிறது. வாழ்வின் வழிநெடுக விரவிக் கிடக்கிற நினைவுகளைத் தன் கவிதைகளில் மீளுருவாக்கம் செய்கிறார். அவை விடுபட்டுப்போன காட்சிகள் அல்லது ஒரு காலத்தின் தவிர்க்கப்பட்ட காட்சிகள். அவரின் வார்த்தைகளில், ‘திறக்கப்படாத கதவுகளின் முன் என்றென்றைக்குமாக மனிதர்கள் படுத்திருக்கிறார்கள். அந்தச் சாலைகள் மனிதர்களுக்காய்க் காத்திருக்கின்றன.’ வரலாறு அவரது மொழியில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நிகழ்ந்தவைகள் கவிதைகளில் உருவம்கொண்டு எழுந்தாடுகின்றன, ஆர்ப்பரிப்பாய். உயிர்ப்பற்ற வெற்றியின்முன் மௌனப்படுத்தப்பட்ட மனிதர்கள் தலைகுனிந்து அமர்ந்திருக்கின்றனர். மீண்டெழும் வாழ்வொன்றைக் கவிதைகளில் உருவாக்க நினைக்கிறவருக்கு கவிதைகள் மீட்சிக்கான வழியைத் தருகின்றன. தொலைந்துபோன – காணாமலடிக்கப்பட்ட மனிதர்கள், நிழலுருக்களாய், பட்டுத்தெறிக்கும் வார்த்தைகளில் ஏக்கங்கொண்டு வாழ்வு தேடி அலைகிறார்கள்.