எழுதி எழுதி என்னத்த நிகழப்போகிறது என்ற எண்ணமும், இதை கண்டிப்பாக எழுதியே தீரவேண்டுமென்ற முரணும் ஒருங்கே கலந்துதான் எழுத்துலகில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். யாரோ, எங்கோ, எப்பொழுதோ நம்மை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பு தரும் “நிறைவு” மட்டும் மனதிற்குள் எப்போதுமுண்டு. அந்த நிறைவின் வெளிப்பாடே “தாச்சி” என்ற இந்த மற்றொரு சிறுகதைத் தொகுப்பு.
பெரும்பாலும் பெண்களைப் பற்றிய சிறுகதைகள். இக்கதைகளினூடே முகம் காட்ட மறுக்கும் பெண்கள் சில பேரை, வாசிப்பில் நீங்கள் அடையாளம் காணக் கூடும். யாரிவர்கள்? எப்படி இக்கதைகளில் உறைந்தார்கள் என்பதும் விளங்க முடியாத கவிதையைப் போன்றது. தேடிக் கண்டடைதல் தானே வாழ்வின் பயன். நான் தேட முயன்ற சில மனிதர்களின் “வாழ்வியல்களே”, உங்கள் கைகளில் புத்தகமாய். நான் என்பது யாரோ… ஆனால் இக்கதைகளில் விவாதிக்கப்படும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு ரூபத்தில் அல்லது அருபத்தில் உங்கள் வாழ்வில் இருப்பவர்கள்தாம்.
– தெரிசை சிவா
கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கையில் “வெட்டிக் கதை”. யாய் நகர்ந்த பொழுதுகள், இன்று இலக்கிய உலகிற்கு எத்தனை படைப்புகளைக் கொடுத்திருக்கிறது. இன்னும் எத்தனை படைப்புகளை கொடுக்கப் போகிறது. இரண்டு சிறுகதை தொகுப்புகள் குட்டிக்கோரா, திமில் மற்றும் தாவல் ருபினி வரிசையில் தம்பியின் அடுத்த சிறுகதை தொகுப்பு “தாச்சி”. இத்தொகுப்பிற்கு இதுதான் தலைப்பு என்று வழிமொழிந்தது நான்தான். படித்தவுடன் அக்கதை ஏற்படுத்திய தாக்கம் அல்லது அது விவரித்த வெகுவான பெண்களின் உலகம் அதற்கு காரணமாக இருக்கலாம். இதற்கெல்லாம் மேலாய் சமூகத்திடம் அக்கதை எழுப்பிய கேள்வியும் காரணமாக இருக்கலாம்.
ஆழ்ந்து படிக்க வைக்கும், சிறப்பாக சிந்திக்க வைக்கும் புத்தகங்கள் அருகிவரும் நிலையில் மண்மணத்தோடு சிவா எழுதும் கதைகள் மனதை பலநிலைகளில் மெல்லிறகால் வருடி விடுகின்றன. சிலகதைகள் தேம்பி அழவும், சிலகதைகள் வெடித்துச் சிரிக்கவும், சிலகதைகள் சுய எள்ளலையும் தானாகவே வெளிப்படுத்துகின்றன. அந்தன அம்பேத்கர், கசம், சன்னதம் போன்ற கதைகள் இச்சமூகத்தில் எழுப்பப் போகும் வினாக்களுக்காக காத்திருக்கிறேன்.
– கோதை சிவக்கண்ணன்
Reviews
There are no reviews yet.