
எழுத்தாளர் கௌரி சங்கர் அவர்கள், வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். எழுத்துலகில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதுடன் எங்கு யார் போட்டிகள் நடத்தினாலும் அதை சமூக வலைத்தளம் வழியாக எல்லோருக்கும் கொண்டு போய் சேர்க்கும் பெரும் பணியைத் தொடர்ந்து செய்கிறார். அவரும் கூட தான் சார்ந்த அமைப்பின் வழி சிறுகதைப் போட்டிகளை நடத்துகிறார். எழுத்தின் மீதான காதலால் தொடர்ந்து பயணிக்கும் அவரின் குறுங்கதைகளை எங்களது கேலக்ஸி இணையதளத்தில் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்கிறோம்.
அரைச்ச சந்தனம்
‘தனசேகர் நாட்டு மருந்து கடை’ மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தையொட்டிய பிரதான வீதியில் இருந்தது. சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இருந்து மக்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வேர்கள், கொடிகள், மூலிகைகள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு இங்கு தான் வருவார்கள். வேறு கடைகள் அந்த இடத்தில இல்லாததால், வியாபாரம் செழித்து வளர்ந்தது.
ஆரம்பத்தில் தனசேகர் மதுரை தெற்கு வெளி வீதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் வேலை பார்த்து வந்தார். 30 வருட அனுபவம் அவருக்கு மூலிகைகள் பற்றிய தெளிவான அறிவையும், பல மருத்துவர்களை பற்றிய தகவல்களையும் தந்து இருந்தது. ராசியானவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
“ஐயா, சந்தானம்…” – என்று ஆரம்பித்த அந்த நபருக்கு 45 வயது இருக்கும்.
அவர் கேட்க வந்ததை முடிக்கும் முன்னதாக பதில் சொல்லும் விதமாக, தம்பி, சந்தனம் என்றாலே நம்ம கடை தான். மதுரையில் எங்கு அலைந்தாலும் உங்களுக்கு இப்படி தரமான சந்தனம் கிடைக்காது.கேரளாவில் இருந்து சந்தனக்கட்டையை வாங்கி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை அதன் மீது ஊற்றி, மரப்பலகையில் சந்தனக்கட்டையை தேய் தேய்னு மணிக்கணக்குல தேய்ச்சி அரைத்தால் தான் இரண்டு கரண்டி சந்தனம் கிடைக்கும். வாசம் நாலு தெருவுக்கு தூக்கி அடிக்கும். இப்ப நீங்களே சொல்வீங்க பாருங்க.”
“எனக்கு அந்த சந்தனம் வேண்டாங்க.”
“அப்புறம் ?”
“உங்க கடையிலே வேலை பார்க்குற சந்தானத்தை நான் பார்க்கணும். நான் அவரோட தாய் மாமனுங்க”
***
அழகான மனிதனும் அன்பான நர்ஸும்
அழகான மனிதன் ஒருவன் சிறிய விபத்தொன்றில் காயம்பட்டு ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தான். ஒருவழியாக அவனுடைய காயங்கள் ஆறத்தொடங்கின. நான்கு வாரங்கள் கழிந்தன. இதற்கிடையில் அவனை தினமும் நன்றாக கவனித்துக் கொண்டு இருந்த இளம்வயது நர்ஸை காதலிக்க ஆரம்பித்து இருந்தான்.
அன்று அவன் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நாள்.நர்ஸிடம் மெதுவாக ஒரு கடிதத்தை தந்தான்.
“அன்பே நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னுடைய இதயத்தை திருடி விட்டாய்.”
கடிதத்தை படித்துவிட்டு நர்ஸ் உடனே பதில் தந்தாள்.
“நாங்கள் உங்கள் கிட்னியை தான் திருடியிருக்கிறோம். இதயத்தை தொடவேயில்லை”
***
ஆரோக்கியம்
கணேசனும் ராமனும் நெருங்கிய நண்பர்கள். பூங்காவில் சந்தித்த இருவரும் பேசிக்கொண்டனர்.
“ராமன், நமது உடம்பை ட்ரிம்மாக வைத்துக் கொள்ளுவதற்கு ஒரு நல்ல வழியை சொல்லு என்று எட்டு மாதங்களுக்கு முன்பு நான் உன்னிடம் கேட்டேன். ஏதாவது ஒரு ஜிம்மில் என்னை சேர்ந்து கொள்ள சொன்னாய். நானும் நீ சொன்ன மாதிரி ஒரு ஜிம்மில் ஒரு வருட சந்தா கட்டி விட்டேன். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிவிட்டேன். இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை”
“அப்படியா – தற்போது என்ன செய்வதாக உத்தேசம் ?”
“இன்று மாலை முதன் முதலாக ஜிம்மிற்கு நேரில் சென்று என்ன காரணம் என்று ஜிம்மின் உரிமையாளரை கேட்கப்போகிறேன். அங்கெ என்ன தான் நடக்கிறது என்று நான் தெரிஞ்செயாகணும்.”
ராமன் என்ன சொல்வதெனத் தெரியாமல் வாயடைத்துப் போயிருந்தான்.
***
மூங்கிலில் முடிவு
துபாயிலிருந்து பத்து நாட்கள் முன்பு கடத்தப்பட்டு சென்னை வந்து இறங்கிய 10 கிலோ தங்கத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறை மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தது.
நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பழைய பங்களாவுக்கு அருகில் உள்ள தெருவில் வசித்து வந்த 10 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர் முருகன் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் இரவில் சிலர் பங்களா அருகில் நடமாடுவதை பார்த்ததாக காவல் துறை கமிஷனர் கணேசனிடம்
சொல்லியிருந்தார்.
கடத்தப்பட்ட தங்கம் அந்த பங்களாவில் ஒளித்து வைத்து இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உணர்ந்த கணேசன் ரகசியமாக பிரபல துப்பறியும் நிபுணர் அரவிந்திடம் சொல்ல, அவன் பங்களாவுக்கு தனது உதவியாளர்களுடன் வந்து, பங்களாவின் அணைத்து அறைகளையும், சுற்றுப்புறங்களையும் ஒன்றுவிடாமல் அலசியும் தங்கம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கவில்லை.
களைத்து போன அரவிந்த், விடிகாலை 6.00 மணியளவில், நடைப்பயிற்சி செய்யும் வகையில் பங்களாவை சுற்றி பல முறை வலம் வந்தான். செடிகளில் பூத்துக்குலுங்கும் பலவிதமான மலர்கள் அவனை குளிர்ச்சியடைய செய்தன.
சமீபத்தில் பெய்த மழையால், பங்களாவின் பின்புறம் உள்ள பல மூங்கில் மரங்கள் அனைத்தும் சாய்ந்து தரையை தொட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், ஒரு மரம் மட்டும் கம்பீரமாக நின்று கொண்டு இருந்தது.
சட்டென்று உள்ளுணர்வு முடுக்கிவிட, அரவிந்த் கையில் ஒரு கல்லை எடுத்து மூங்கிலை தட்ட மூங்கில் பொருத்தமற்ற ஒலியை தரவும், அவனுடைய கையசைப்பின் பேரில் உதவியாளர்கள் மூங்கிலை உடைத்து பார்க்க, உள்ளே பதுங்கியிருந்த தங்கம் தன்னை நன்றாகக்காட்டிக்கொடுத்தது.
***
Add comment
You must be logged in to post a comment.